எனது நோக்கில்.......

அறிவும் திறனும் இணைந்து தொழிற்படும் அற்புதமான ஒரு துறையாகக் கருதப்படுவது நூலக, தகவல் அறிவியல் துறை. உரு,வரி,வரைபு, அலை ஆகிய தகவல் வெளிப்பாட்டு வடிவங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட பதிவேடுகளின் உருவமைப்பில் அதிக கவனம்செலுத்தி அவற்றின் சேகரிப்பு,ஒழுங்கமைப்பு,சேமிப்பு, பகிர்வு, பராமரிப்புபோன்ற செய்முறைகள் ஊடாக வாசகனின் தகவல் தேவையைப் பூர்த்தி செய்கின்ற நூலகஅறிவியல் துறையும், இப்பதிவேடுகளின் உள்ளடக்கத்தில் மட்டும் அதிக கவனம் எடுத்து தகவல் உருவாக்கம், தகவல் பரவலாக்கம்,சேகரிப்பு, ஒழுங்கமைப்பு,மீள்பெறுகை, பொருள் விளக்கமளிப்பு, பயன்பாடு போன்ற செய்முறைகளினூடாக பயனரின் தகவல் தேவையைப் பூர்த்தி செய்கின்ற தகவல் அறிவியல் என்ற துறையும் இணைந்து உருவான இத்துறையானது தகவலின் பண்புகளும் நடத்தையும், தகவல் பாய்ச்சலை கட்டுப்படுத்தும் சக்திகள், தகவலிலிருந்து உச்ச அணுகுகையையும், பயன்பாட்டையும் பெறும்பொருட்டு தகவலைச் செய்முறைப்படுத்துவதற்கானவழிவகைகள்,தகவல் கையாள்கை மற்றும்பரவலாக்கம் போன்றவற்றில் நூலகங்கள்மற்றும் தகவல் நிலையங்கள் ஆகியவற்றின் பங்களிப்பு ஆகியவற்றைக் கூர்ந்து ஆராயும் ஒரு அறிவியலாக மட்டுமன்றிகணிதவியல்,தருக்கவியல், மொழியியல்,உளவியல், கணினித் தொழினுட்பம்;,நூலகவியல், தகவலியல்,முகாமைத்துவம் போன்ற துறைகளிலிருந்து பெறுவிக்கப்பட்டதாக அல்லது அவற்றுடன்தொடர்புடையதொன்றாகவும் உள்ள பெருமைக்குரியது.

யாழ்ப்பாணப் பிரதேசத்தில் நூலக அபிவிருத்தியை மையமாகக்கொண்டு இயங்கும்ஒரேயொரு அரசசார்பற்ற அமைப்பான'நூலக விழிப்புணர்வு நிறுவனம்' என்ற அமைப்பின் ஊடாக நடத்தப்பட்ட பொது நூலகர்கள், மற்றும் பாடசாலை நூலகர்களுக்கான கருத்தரங்குகள்,பயிற்சிப் பட்டறைகளில் இனங்காணப்பட்ட நூலகர்களின்தேவையும், கிராமம் தோறும் தனிநபர் நூலகங்களாகவோ, அமைப்பு சார்நூலகங்களாகவோ, கிராமிய நூலகங்களாகவோ இயங்கக் கூடிய வகையில் புதிய நூலக உருவாக்கத்தில் ஆலோசனை கோரி அணுகியவர்களின் தேவையும் இணைந்து உருவானதே இந்தவலைத்தளம்எனில் மிகையல்ல.

இந்த வலைத்தளத்தின் தேவையைத் திரும்பத்திரும்ப வலியுறுத்தி அதற்கான உந்துசக்தியைத் தந்த அனைவருக்கும் எனது நன்றிகள். வீட்டு நூலகம் முதற்கொண்டுசனசமூக நிலைய நூலகங்கள்,பாடசாலை நூலகங்கள் போன்ற கல்விநிறுவன நூலகங்கள், பொதுசன நூலகங்கள், சிறப்பு நூலகங்கள் அனைத்திற்கும் ஒரு அடிப்படையைத் தரவும், தாய்மொழி மூல கல்விமூலம் நூலகத்துறையைவளர்த்தெடுத்தல்,தமிழில் நூலகவியல் துறை சார்ந்த ஆய்வுகளை ஊக்குவித்தல் ஆகிய இரு இலக்குகளை முன்வைத்தும் இந்த வலைத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. அபிவிருத்தியின் அச்சாணி நூலகம் என்ற கருத்துநிலையையும் செயலுருப்பெற உதவுமெனில் அது நான் பிறந்த இந்த மண்ணுக்கும் நான் பேசும் மொழிக்கும்செலுத்துகின்ற நன்றிக்கடனாகும்.


அருளானந்தம் ஸ்ரீகாந்தலட்சுமி,
கல்விசார் நூலகர்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

13-09-2014


Saturday, September 13, 2014

இணுவில் பொது நூலகம்

இணுவில் பொது நூலகம்
தகவல் யுகமொன்றில் சுடர்விடும் நம்பிக்கை ஒளி



[Cirunuvaith thiruvur. Compiled by M.Sivalingam.
Inuvil: Saivath thirunerik kkalakam, 2004.]

ஜஅன்பும் அறநெறியும் ஆன்மீக வாழ்வும் இணைந்ததோர் அற்புதமான ஊர் இணுவையூர். உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லைக் கண்டீர், எழுத்தறிவித்தவன் இறைவனாவான், என்ற இரு வாக்குகளுக்கும் ஏற்ப உழவுத்தொழிலையும் கற்பித்தல் பணியையும் பிரதான தொழிலாகக் கொண்டவர்கள் இம் மக்கள். படிப்பறிவை விட பட்டறிவிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் இம்மக்கள் நூலுண்ர்வு மிக நிரம்பப் பெற்றவர்கள். இவர்களது நூலுணர்வுக்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாக கோவில்கள் மட்டுமன்றி சுருட்டுக் கொட்டில்கள் கூட இருந்திருக்;கின்றன என்பதை நடமாடும் எடுத்துக்காட்டுகளாக  விளங்கும் சமூகத்தின் மூத்த உறுப்பினர்களைப் பார்த்து அறிந்து கொள்ள முடியும். பாடசாலைப் பக்கம் எட்டிப்பார்க்காதவர்கள் அல்லது எட்டிப்பார்க்கும் வசதியற்றவர்கள் கூட திருக்குறள் போன்ற நீதி நூல்களையும் பாரதம் போன்ற காப்பியங்களையும் கந்த புராணம் போன்ற சமய நூல்களையும் செவி வழி பெறுவதற்கான சிறந்த சொற்பொழிவுக் கூடங்களாக சுருட்டுக் கொட்டில்கள்களை மாற்றிமையை வாய்மொழி வரலாறு எமக்கு எடுத்தியம்புகிறது. மாறிவரும் சமுதாயமானது ஆற அமர இருந்து நல்லவை தீயவற்றை விலக்கக்கூடிய அறிவையோ அதற்கான நேர அவகாசத்தையோ கொடுக்கமுடியாதளவிற்கு பரபரப்பு மிக்கதாகவும் இயந்திரமயப்பட்டதாகவும்; இருப்பதானது புதிய தலைமுறையினரின் அறிவுத்தேடலிலும் கணிசமான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது நூலுணர்வு மிக்க எமது சமூகத்தின் பதிய தலைமுறையின் தேடலுணர்வையும் கணிசமானளவு பாதித்துள்ளதை மறுக்க முடியாது. இம்மண்ணில் உருவாகும் பொதுநூலகமானது இத்தேடலுணர்வை அதிகரிக்கும் பிரதான களமாக  மாறும் என்ற பேரவாவின் வெளிப்பாடே இக்கட்டுரையாகும் ஸ. 
நூலகங்களை பொதுநூலகங்கள் கல்வி சார் நூலகங்கள், சிறப்பு நூலகங்கள் என மூன்று பெரும் பிரிவாக வகைப்படுத்த முடியும். இதில் மக்களுக்காக மக்களால் மக்களே முன்னின்று நடத்துவது பொது நூலகங்கள் எனப்படும்.. இலங்கையில் உள்ளுராட்சித் திணைக்களத்தின் நிதியினைப் பெற்று மாநகர சபை; நகர சபை, பிரதேச சபை  மட்டத்தில் இயங்கும் நூலகங்கள்;, கிராம மட்டத்தில கிராம மக்களின் ஒன்றிணைந்த முயற்சியினால்; உருவாக்கப்பட்டு அவற்றின் தனிப்பட்ட நிதியினால் இயங்கும்  நூலகங்கள், சனசமூக நிலையங்களின் ஒரு பிரிவாக இயங்கும் நூலகங்கள் என்பன பொது நூலகங்கள் என்ற வரையறைக்குள் வருகின்றன.  நவீன சமுதாயத்தின் முக்கிய அம்சமாக கருதப்படும்  பொது நூலகங்கள் சமூகத்தின் நாளாந்த செயற்பாடுகளில் மிக முக்கியத்துவம் வகிக்கின்ற ஒரு சமூக நிறுவனமாகும்.  சமூகத்தின் கலாச்சார நிலையங்களாகச் சேவையாற்றும் இந் நிறுவனங்கள் சமூக அங்கத்தவர்களை இன, வயது, மொழி, மத  வேறுபாடின்றி ஒன்றிணைக்கும் நிலையங்களாகக் காணப்படுகின்றன. இவை ஏனைய கல்விசார்,விசேட நூலகங்கள் போன்று குறிப்பிட்ட வாசகர் பிரிவுக்கு சேவை செய்வன அல்ல. சிறுவர், மாணவர், முதியவர், பெண்கள், வலுக்குன்றியோர், ஆசிரியர், ஆராய்ச்சியாளர் போன்ற சமூகத்தின் அனைத்து மட்டத்தினருக்கும் சேவை செய்யவேண்டிய கடமைப்பாடு உடையது பொது நூலகமாகும். 
சர்வதேச நூலகச் சங்கங்களின் சம்மேளனத்தினால்ஜஐகுடுயுஸ் மீளாய்வு செய்யப்பட்ட யுனெஸ்கோவின்  அறிக்கைப்படி பொதுசன நூலகங்களின் குறிக்கோள்களும் இலக்குகளும் பின்வருமாறு அமைகிறது.
1.    கல்வி சார்ந்தவை
எந்தவொரு கல்வி மட்டத்திலும் தனிப்பட்டவர்களதும் குழுவினதும் சுய முன்னேற்றத்;தை ஊக்குவிப்பதற்கான வழிவகைகளைக் கண்டறிவதன் மூலம் தனிநபருக்கும் அறிவிற்கும் இடையிலான இடைவெளியை இல்லாமல் செய்தல், தனிநபர் ஒருவருக்கான கல்வி நிலையமாக பொதுநூலகங்களின் பயன்பாட்டை மேம்படுத்தல், முறைசார்ந்த கல்விச் செயற்திட்டங்களுக்கு உதவுதல், சிறப்புத் தகவல் வளங்களின் உருவாக்கத்தை மேம்படுத்தல்

2.    தகவல் சார்ந்தவை
தனிநபருக்கு அல்லது குழுவிற்கு சரியான தகவலை வேகமாகவும் நடப்பு விவகாரங்களுடன் சம்பந்தப்பட்ட தகவல்களை மிக விரிவாகவும் வழங்குதல், பொதுநூலகங்களின் பயன்பாட்டை தகவல் நிலையங்களின் தரத்துக்கு உயர்த்துதல். சிறப்புத் தகவல் வளங்களுக்;கான ஆற்றுப்படுத்தும் நிலையங்களாக பொதுநூலகங்களின் பயன்பாட்டை மேம்படுத்தல். கலாச்சார வாழ்வின் ஆதார நிலையங்களில் ஒன்றாக வளர்த்தெடுத்தல்,; அனைத்துக் கலைகளிலும் பங்கெடுத்தலும் அவற்றைப் போற்றுதலும்
3.    கலாச்சாரம் சார்ந்தவை
தனிநபர் ஒருவர் கலைகளில் பங்கெடுக்கக்கூடிய வகையிலான நிலையங்களாக பொதுநூலகங்களின் பயன்பாட்டை மேம்படுத்தலும் ஊக்குவித்தலும், கலாச்சார நிகழ்வுகளை ஆரம்பித்து வைப்பவர்களாகவும் அவற்றின் ஒழுங்கமைப்பாளர்களாகவும் பொது நூலகங்களின் பங்கை ஊக்குவித்தல், ஓய்வு நேரத்தை பயனுள்ள வகையில் கழிக்கும் விதத்தில் உள்ளுர் சமூகங்களுக்கும் கலாச்சார நிறுவனங்களுக்கும் இடையில் இணைத்து வைக்கும் பொறுப்பு மிக்கவர்களாக பொதுநூலகங்களை ஊக்குவித்தல், உள்ளுர் நிறுவனங்களுக்கும் கலாச்சார நிறுவனங்களுக்கும் ஒரு சிறப்பு நூலகமாக  பொது நூலகங்களின் பாவனையை மேம்படுத்தலும் ஊக்குவித்தலும் ,கலாச்சார தகவல் நிலையங்களாக பொது நூலகங்களின் பயன்பாட்டை மேம்படுத்தலும் ஊக்குவித்தலும் என்பன
4.    ஓய்வு
ஓய்வு நேரத்தைப் பயனுள்ள வகையில் கழிப்பதை ஊக்குவித்தலும் புத்தாக்கத்துக்காக தகவல் வளங்களை வழங்குதலும், தனிப்பட்டவருக்கும் தனிநபருக்கும் தேவைப்படும் பொழுதுபோக்கு சாதனங்களின் வழங்கலை மேம்படுத்தல். சமூகத்திலுள்ள சிறப்புக் குழுக்களின் ஓய்வுக்கால தகவல் வழங்களை மேம்படுத்தல் போன்றவை
பொது நூலகத்தின் குறிக்கோள்களை நிறைவேற்றுவதற்கு பின்வரும் முக்கிய தொழிற்பாடுகளை ஆற்ற வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
•    முறை சாராத வளர்ந்தோர் கல்விக்கான முகவர் நிலையங்களாக செயற்படல்
•    சுய கல்விக்கான முகவர் நிலையங்களாகத் தொழிற்படல்
•    கூட்டுறவு முறையில்; கலாச்சார அனுபவங்களையும் ஜனநாயக வாழ்வையும் விருத்தி செய்தல்
•    தற்காலத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற அனைத்து விவகாரங்கள் நெருக்கடிகள் தொடர்பான தகவல்களை வழங்குதல்
•    சனசமூக நிலையங்களாகத் தொழிற்படல்
•    சமூகரீதியில் பயனுள்ள ஒரு நிறுவனமாகவும் கலாச்சார நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நிறுவனமாகவும் தற்கால உலகியல் மாற்றங்களை அலசும் இடமாகவும் இருத்தல்
•    பொதுமக்கள் சார்ந்த நிகழ்வுகளை நினைவுகூரும் வகையில் ஒரு சந்திப்பிடமாக தொழிற்படல்
•    பொது திறப்பு நிகழ்வுகள் தொடர்பான நூல்களின் பட்டியல்களை காட்சிக்கு வைத்தல்
•    பிரபலமான நபர்களின் பேச்சுகள், விரிவுரைகள், தரைப்படக்காட்சிகள் போன்றவற்றை ஒழுங்குபடுத்துவதனூடாக வரிவாக்க நிலையமாக தொழிற்படல்
•    உசாத்துணை சேவைகள், சிறுவர்க்கான சேவைகள் நூலுருவற்ற சாதனங்களின் சேவைகள் போன்றவற்றை ஒழுங்குபடுத்தல்
•    பௌதிக ரீதியிலான அனைத்து தடைகளையும் உடைத்து அனைத்துத் தகவல் வளங்களையும் வாசகர் அணுகக்கூடிய வாறு வழிசமைத்தல்
•    சமூகத்தின் நிகழ்காலத்தேவைகளையும் இனித் தேவைப்படும் என எதிர்பார்க்கப்படும் தேவைகளையும் பிரதிபலிக்கும் நிலையமாக தொழிற்படல்
•    ஒவ்வொரு தனிமனிதனும் தனது தேவைகளுக்கும் ஆர்வங்களுக்கும் ஆற்றல்களுக்கும் ஈடு கொடுக்கும் வகையில் ஆய்வு, தனிநபர் கலாச்சாரம் என்பவற்றுக்கான நிலையமாக தொழிற்படல்
•    உயிரூட்டமிக்க, சமூகரீதியில் ஒருங்கிணைக்கப்பட்ட உத்திகளின் உருவாக்க சக்தியாக தொழிற்படல்
•    பாடசாலைகள் கல்லூரிகள் என்பவற்றின் முறைசார்ந்த கல்விக்கு உதவும் நிலையமாக இருத்தல்
•    வாசிப்புப் பழக்கத்தை விருத்தி செய்யும் நிலையமாக தொழிற்படல்

.ஒரு கிராம பொது நூலகமாக தோற்றம் பெறும் இணுவில் பொது நூலகமானது முழுக்க முழுக்க கிராமத்தின் வளர்ச்சிக்காக அயராது பாடுபடும் சமூக ஊறுப்பினர்களின் ஆதரவுடன் இயங்கப்போகும் ஒரு சமூக நிறுவனம் என்ற பெருமையைப் பெறுகிறது. மேலே குறிப்பிட்ட தொழிற்பாடுகளின் அடிப்படையில் இந்நூலகம் தனது மக்களுக்கு ஆற்ற கூடிய பணிகளை கீழைத்தேய நூலகவியலின் தந்தை எனப் போற்றப்படுகின்ற பேராசிரியர் எஸ். ஆர் இரங்கநாதனின் சிந்தனையில் உதித்து உலகம் முழுவதும் போற்றப்பட்டு பின்பற்றப்பட்டு வரும் நூலகவியலின் தலைசிறந்த விதிகளின் அடிப்படையில் ஆராய்வது பொருத்தமானதாகும்.

நூல்கள் பாவனைக்கே

புகழ் பெற்ற இந்த முதலாவது விதி பரந்துபட்ட கருத்துநிலைகளைக் கொண்டது மட்டுமன்றி பின்னால் வருகின்ற நான்கு விதிகளுக்குமான அடிப்படையாகவும் விளங்குகின்றது. நூல்கள் படிப்பதற்கேயன்றி பத்திரமாய் அலுமாரிகளில் பூட்டிப் பாதுகாப்பதற்கு அல்ல என்பதே இவ் விதியின் அடிப்படை வேதம் ஆகும். இதற்கு காரணம் உண்டு . எம்மவர் மத்தியில் ஏனைய அலங்காரப்பொருட்களைப் போன்றே நூல்களை அழகாக அடுக்கி வைக்கும் மனப்பான்மையும் படித்தவர் நாம் என்ற அந்தஸ்தை வெளிப்படுத்துவதற்கான குறியீடாக நூல்களைக் கருதும் தன்மையும் உண்டு. மட்டுப்படுத்தப்பட்ட நிதி, நூல்கள் பழுதடைந்துவிட்டால் ஏற்படும் நிர்வாகச் சிக்கல்கள், நூலுணர்வு சிறிதுமற்ற நூலகப்பணியை சேவையாகக் கருதாத, தொழிலாக மட்டுமே பார்க்கின்ற நூலக அலுவலர்களின் மனப்பான்மை போன்ற அம்சங்கள் நூல்கள் பயன்படுத்த அல்ல பாதுகாப்பதற்கே என்ற மனப்பான்மை தோன்ற காரணமாக உள்ளன. கண்ணாடி அலுமாரிகளிலும் இரும்பு அலுமாரிகளிலும் பத்திரமாய் பூட்டி வைக்கும் இத்தன்மையின் சாட்சிகளாக எம் கண்முன்னே காணும் பெரும்பாலான பாடசாலை நூலகங்களும்  பொது நூலகங்களும் இருப்பது கண்கூடு. ஷபெரிய நூலகமென்பது நூலகத்தின் கட்டிடத்தின் அளவாலோ அங்குள்ள நூல்களின் எண்ணிக்கையினாலோ கணிப்பிடப்படுவதில்லை. அந்த நூலகத்தில் எத்தனை நூல்கள் அதிகம் பயன்பட்டிருக்கின்றன என்பதன் அடிப்படையிலேயே நூலகத்தின் பருமன் அளவிடப்படுகிறதுஷ என்ற கவி தாகூரின் கருத்து இங்கு கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதொன்றாகும். நூல்கள் சரியான பயனபாட்டைப் பெறுவதற்கு பின்வரும் அம்சங்கள் முக்கியமானவை

•    நூலகத்தை அணுகுவதற்கான சூழல்
கிராமத்து மக்கள் அனைவரும் பாரபட்சமின்றி இலகுவாக அணுகத்தக்க வகையில் மத்திய அமைவிடம் ஒன்றில் நூலகம் அமைந்திருத்தல் மிக முக்கியமானதாகும். கட்டிடம் சிறிதெனினும் கவர்ச்சி அதிகம் நிரம்பியவை கண்களுக்கு ஈர்ப்பைக் கொடுக்கும். திறந்த இறாக்கைகளில் தமக்கு வேண்டியவற்றை அவசர அவசரமாக தேடும் வாசகர்கள், பத்திரிகையில் மூழ்கியிருப்போர், நூல்களை இரவல் பெற முகப்பு மேசையில் காத்திருப்போர், நூல்;களுக்குள் தம்மை மறந்திருப்போர்; என்று நூலகத்தின் உட்பகுதியில் காணும் சுறுசுறுப்பான சூழல் ஒன்றை வெளிக்காட்டக்கூடிய வகையில் நூலகத்தின முகப்புப் பகுதியில் கண்ணாடி யன்னல்கள் பொருத்தப்பட்டிருப்பின் நூலகத்துக்குள் நுழைவதற்கான ஒரு தூண்டலை அது ஏற்படுத்தும். நூலகம் என்பது படித்த மேதாவிகளுக்கு மட்டுமே உரியது என்ற எண்ணப்பாங்கு எம்மவர் மத்தியில் இருப்பதனால் நூலகத்தில் நுழைவதற்கு பெரும்பாலானோருக்கு தயக்கம் இருபடபது இங்கு கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாகும்.

•    நூலை அணுகுவதற்கான சூழல்
திறந்த இறாக்கைகளில் நூல்களை ஒழுங்குபடுத்தி வைத்தல், நூல்கள் வைத்திருக்கும் பகுதிக்கு வாசகரை அனுமதித்தல், சுதந்திரமான முறையில் அவர்கள் விரும்பிய நூல்களை தேடி எடுக்க அனுமதித்தல், உதவி தேவைப்படுமிடத்து வழிகாட்டல் வாசிப்பு அறைக்கு எடுத்துச் சென்று வாசிக்கவோ அல்லது இரவல் பெற்றுச் சென்று படிக்கவோ உரிமையளித்தல் என்பவற்றை கவனத்தில் கொள்வதன் மூலம் இதற்கான சூழலை ஏற்படுத்தலாம். மிக விலையுயர்ந்த நூல்கள், கிடைத்தற்கரிதான நூல்கள், சிறுநூல்கள், புகைப்படங்களை உள்ளடக்கிய நூல்கள் போன்றவற்றை மூடிய இறாக்கைகளில் பேணலாம்.

•    படிப்பதற்கான சூழல்
ஒரு பொது நூலகமானது ஆகக் குறைந்தது ஆற அமர்ந்து படிப்பதற்கான ஒரு பகுதி, இரவல் பெற்றுச் செல்லும் நூல்களை அடுக்கி வைப்பதற்கான ஒரு பகுதி, வாசகர்களுக்கு வேண்டிய நூல்களைப் பெற்று அவர்கள் அவற்றை இலகுவாக பயன்படுத்தும் வகையில் அவற்றை ஒழுங்கமைப்பதற்கான நிர்வாக அலுவல்களை மேற் கொள்வதற்கான ஒரு அறை, நூல்களை இரவல் பெற்றுச் செல்வதற்கான ஒரு முகப்பு மேசைப் பகுதி என்பவற்றைக் கொண்டிருத்தல் அவசியமாகும்.. நின்;ற நிலையில் கையை உயர்த்தி எடுக்கக்கூடிய வகையில் நூல் இறாக்கைகளும் முதுகு வலியை ஏற்படுத்தாத வசதியான கதிரைகளும் படிப்பதற்கு வசதியான மேசைகளும் நூலகத்துக்குள் அமர்ந்து படிக்கும் ஆர்வத்தைத் தரும். செயற்கையான ஒளியையும் காற்றோட்ட வசதியையும் விட கண்களை உறுத்தாத இயற்கை ஒளியும் உஷ்ண நேரங்களில் தேவைப்படும் இயற்கையான காற்றோட்ட வசதியும் வாசகனின் படிக்கும் மனேநிலையை மேலும் அதிகரிக்;கும் வல்லமை பெற்றவை. கண்களை உறுத்தாத மெல்லிய சுவர்ப்பூச்சு வாசகனது சிந்தனைக்கு இடையூறை ஏற்படுத்தாது. சமூக உறுப்பினர்களின் முக்கிய ஒன்றுகூடல்கள் கூட்டங்கள் கருத்தரங்குகள் வாசிப்பு வட்டங்கள் என்பவற்றை நூலகமே ஒழுங்குபடுத்தக் கூடிய வகையில் கருத்தரங்கு மண்டபம் ஒன்றும்; இருக்குமாயின் சமூக உறுப்பினர்களின் நூலுணர்வைக் கூட்டுவதற்கான மிகச் சிறந்த வாய்ப்பு இதைவிட வேறொன்றும் இல்;லை.

ஒவ்வொரு வாசகனுக்குமுரிய நூல்;

முதலாவது விதியானது நூல்களின் பயன்பாட்டை முக்கியத்துவப்படுத்தும்; அதேசமயம் இரண்டாவது விதியானது நூலகத்தின் வாசகனை மையப்படுத்துகிறது. நூலகத்தினை தற்போது பயன்படுத்தும் வாசகனை மட்டுமன்றி இணுவில் கிராமத்தில் உள்ள ஒவவொரு அங்கத்தவரதும் வயது பால் கல்வித்தரம் அவர்களின் ஆர்வத்துறை என்பவற்றை ஆய்வு செய்து பெறப்படும் தகவல்களினூடாக இனி வரலாம் என எதிர்பார்க்கப்படும் வாசகனையும் இலக்கு வைத்து நூலகத்துக்கு கொள்வனவு செய்யப்பட வேண்டிய நூல்களைப்பற்றி  விளக்குகிறது.

•    வாசகர் தரம்
பொதுவாகவே நூல்கள் தகவலைத் தருபவை, புத்துயிர் தருபவை உயிர்ப்பூட்டுபவை என மூனறு வகைப்படும் பொது நூலகத்தின் வாசக பிரிவினர் சிறுவர் முதல் முதியோர் வரை பலதரப்பட்டவர்களாக இருப்பதனால் இம்மூன்று வகை நூல்களும் இங்கு இடம் பெறுதல் அவசியமாகும்.;. சமூக உறுப்பினர்களால் எமுதப்பட்டு பதிப்பிக்கப்படாத கையெழுத்துப் பிரதிகள் முதற் கொண்டு இன்றைய கணினி உலகில் நின்று பிடிக்கத் தக்க இணையத் தகவல் வரை நூலகம் உள்ளடக்குவதன் மூலமே அனைத்து மட்ட வாசகருக்குமான சேவையை வழங்க முடியும்.

•    நூல் தெரிவு
நூலின் தலைவிதியானது அதைப் பயன்படுத்தும் வாசகனது கரங்களிலேயே ஒப்படைக்கப்பட்டிருக்கிறது என்பதை வலியுறுத்தும் இவ்விதியானது வாசகனுக்கு பொருத்தமற்ற நூல்களை தேவையற்ற முறையில் பணத்தைக் கொட்டி தெரிவு செய்வதை வன்மையாக எதிர்க்கிறது. வாசகனுக்கு பொருத்தமற்ற நூல்கள் அன்பளிப்பாக கொடுத்தால் கூட வாங்குவது தவிர்க்கப்படல் வேண்டும் அதுபோல் ஏற்கனவே நூலகத்தில் இருக்கும் நூல்களும் பொருத்;தமற்றது எனக் கண்டால் அவற்றை உடனே அதற்கு பொருத்தமான இடத்திற்கு கொடுத்து அங்கிருந்து பெறக்கூடிய பொருத்தமான நூல்களை பரிமாற்று அடிப்படையில் பெறுவதை இவ்விதி ஊக்குவிக்கிறது. எனவே இங்கு நூல் தெரிவு நூல் நீக்கம் என்ற அறிவு சார் செயற்பாடுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. இணுவில் பொது நூலகத்துக்கு நூல்களை தெரிவு செய்யும்போது
    இணுவில் கிராமம் பற்றியும் அதன் தகவல் தேவை பற்றியும் அறிந்து கொள்ளல்.
    சிறுவர்க்குத் தேவையான பொது அறிவு நூல்கள் கதைப்புத்தகங்கள், குடும்பத் தலைவியருக்குத் தேவைப்படும் மனைப் பொருளியல் சார்ந்த நூல்கள் மாணவர்க்கு தேவைப்படும் பாடவிதானம் சம்பந்தப்பட்ட நூல்கள், என்பவற்றுடன் புத்துயிரூட்டக்கூடிய நூல்கள், கலைக்களஞசியங்கள், அகராதிகள், ஆண்டு நூல்கள் போன்ற பொது உசாத்துணை சாதனங்கள்; போன்ற வாசகனின் தகவல் தேவை தொடர்பான அனைத்துப் பொருட்துறைகளும் சேகரிப்பில் உள்ளடக்கப்படல்.
    உள்ளுர் வரலாறு தொடர்பான நூல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தல்;.
    தெரிவில் பாரபட்ச நிலை பேணப்படுவதை தவிர்த்தல்.
    தாய்மொழியில் எழுதப்பட்ட நூல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தல்.
    புனைகதை, வாழ்க்;கை வரலாறு ,பிரயாணங்கள் நாடகம் ,கவிதை, நுண்கலைகள் சமயம் போன்ற உணர்வு சார் பொருள்துறைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படல்.
    நூல்களைத் தவிர பருவ இதழ்கள் சிறுநூல்கள் உசாத்துணை சாதனங்கள் அரசாங்க வெளியீடுகள் அறிக்கைகள் நூலுருவற்ற சாதனங்கள் என்பவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படல்.
    கிராமம் தொடர்பாக வெளிவந்த செய்திகள் கட்டுரைகளை சேகரித்தல்.
    நூலகக்குழு, அலுவலர்கள் என்போருடன் வாசகரது ஆலோசனைகளும் கருத்தில் எடுக்கப்படல் என்பன கவனத்தில் கொள்ளப்படல் வேண்டும்.

ஒவ்வொரு நூலுக்குமான வாசகன்
இவ்விதியானது பொது நூலகம் ஒன்று ஆற்றவேண்டிய சேவைகளின் மூலம் நூலகத்தில் உள்ள நூல்கள் ஒவ்வொன்றுக்குமான வாசகரை தேடிப்பிடிப்பதன் அவசியத்தை வலியுறுத்துகிறது.  வயது பால் தொழில் கல்வித்தரம் அந்தஸ்து போன்ற எந்த வேறுபாடுமின்றி பொது நூலகமானது சமூகத்தின் அனைத்து மட்டத்தினருக்கும் சேவை செய்ய வேண்டுமாயின் வாசகர் நூலகம் நோக்கி நகர்வதற்கு பதிலாக நூலகம் வாசகரை நோக்கி நகர்தல் அவசியமாகும்.

•    சமூக உறுப்பினர் ஒவ்வொருவரிடையேயும் வாசிப்புப் பழக்கத்தை உருவாக்குதல். இன்றைய உலகில் ஒரு நூலுக்கு பல வாசகர் என்றால் அது களிப்பூட்டும் கதைப்புத்தகங்களாகவே இருக்க முடியும். பொது நூலகங்களும் கூட வாசகர் தொகையை அதிகரிப்பதற்கான சிறந்த உத்தியாக இதை பயனபடுத்துகின்றன. ஆனாலும் சரியான அறிவுத்தேடலை நோக்கி ஒரு சமூகத்தை வழிநடத்துவதற்கு கல்வி பெற, தகவலைப் பெற, அகத்தூண்டலை ஏற்படுத்த புத்துயிருட்ட உதவக்கூடிய வகையில் வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்துவது அவசியமாகும். எங்கிருந்து இதைத் தொடங்கலாம் என்ற வினா எழும்பும் போது மனித வாழ்வின் ஆராய்வுக்கம் மிக அதிகமாக இருக்கும் குழந்தைப்பருவமே அறிவுத் தேடலை சரியாக வழிப்படுத்துவதற்கான பிரதான களமாக இருக்க முடியும்; சமூக மேம்பாட்டுக்கு அத்தியாவசியமானது சுயமாகக் கற்றல். சிறுவர்கள் மூலமே இதனை செயற்படுத்திக்காட்ட முடியும் இந்த வாய்ப்பை வழங்கக்கூடிய ஒரே நிறுவனம் பொதுநூலகம் மட்டுமே.
•    சிறுவர்க்கான கதைநேரங்களை ஒழுங்குபடுத்தல். படிப்பதைவிட கதை கேட்பதில் அதிக நாட்டமுடையவர்கள் சிறுவர்கள் எனவே சிறுவர்க்கான கதைப்புத்தகங்கள் பொழுதுபோக்கு நூல்களை வாங்குவது மட்டுமன்றி அதை அவர்கள் பயனபடுத்துவதற்கான தூண்டலை ஏற்படுத்துவது முக்கியமானதாகும். இதற்கு சிறுவர்க்கான கதைநேரங்களை ஒழுங்குபடுத்தல் மிகச் சிறந்த வழிமுறையாகும
•    சமூக உறுப்பினரின் பொருள் ஆர்வத் துறைகளை இனங்கண்டு அவை ஒவ்வொன்றிற்குமான வாசிப்பு வட்டங்களை உருவாக்குதல்
•    ;உள்ளுர் கல்வி நிறுவனங்கள் மத சமூக நிறுவனங்களுடன் இணைப்பை ஏற்படுத்தி அவர்கள் மேற் கொள்ளும் கருத்தரங்குகள், பொதுச் சொற்பொழிவுகள் என்பவற்றுக்கு பொருத்தமான இடத்தை நூலகமே வழங்குவதனூடாக வாசகரை நூலகத்தின் பால் ஈர்த்தல்
•    நூலகத்தின் செயற்பாடுகள் பற்றிய விபரங்களை காலத்துக்குக் காலம் செய்திக் கடிதங்களாகவோ  செய்தித்தாள்களில் கட்டுரைகளாகவே வெளியிடுதல்
•    சமூகத்தின் கல்வித்தரம் வாய்ந்தவர்களை அணுகி நடைமுறை விவகாரங்களுடன் தொடர்பான பொருட்துறை சார்ந்த சொற்பொழிவுகளை ஒழுங்குபடுத்தும் அதேசமயம் அச் சொற்பொழிவுடன் தொடர்பான நூல்களை காட்சிக்கு வைத்தல் 
•    வேலைக்கு செல்லும் உறுப்பினர்களைக் கருத்தில் கொண்டு அனைத்து மட்ட உறுப்பினரும் தாம் விரும்பிய நேரம் நூலகத்தைப் பயனபடுத்துவதற்கேற்ற வகையில் நூலக சேவை நேரத்தை அதிகரித்தல்;.
•    இடையிடையே நூலக வாரங்களைக் கொண்டாடுவதன் மூலம் நூலகங்களின் அமைப்பு, நடைமுறை, பணிமுறை, பயன்பாடு என்பன பற்றி தெரியாமல் அல்லது தெரிந்து கொள்ள இயலாமல் இருக்கும் சமூக உறுப்பினர்களிடம் அது பற்றிய அறிவை ஏற்படுத்தல்

வாசகர் நேரம் பேணுக
•    ஒழுங்கமைப்பு
நூல்கள் இலகுவான முறையில் எடுக்கத்தக்கவாறு ஒழுங்கமைக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தும் இவ் விதியானது நூலகத்தின் உள்ளக செயற்பாடுகளில் கவனஞ் செலுத்துகிறது. பகுப்பாக்கம் என்ற செயற்பாட்டின் மூலம் ஒரு பொருட்துறை சார்ந்த நூல்களை ஒரே இடத்தில் ஒழுங்குபடுத்துவதும். பட்டியலாக்கம் என்ற செயற்பாடு மூலம் வாசகன் ஒருவன் தனக்கு தேவையான நூலகளை ஆசிரியர் ரீதியாகவோ அல்லது நூலின் தலைப்பு சார்ந்தோ அதுவுமன்றி பொருட்துறை சார்ந்தோ தேடிக்கண்டுபிடிக்கக்கூடிய வகையிலான ஒழுங்கமைப்பை அது கோரி நிற்கிறது.
•    உசாத்துணைச் சேவை
வாசகனையும் அவனுக்குப் பொருத்தமான நூலையும் பொருத்தமான முறையில் பொருத்தமான நேரத்தில் இணைத்து விடும் ஆற்றல் நூலகருக்கு இருக்கவேண்டும். நூலுணர்வும் ஒவவொரு வாசகளையும் மனங்கோணாமல் முகமலர்ச்சியுடன் வரவேற்கும் பாங்கும் உலக அறிவுத்துறைகள் தொடர்பான பரந்த அனுபவமும் இருந்தால் மட்டுமே பொருத்தமான முறையில் வாசகனையும் அவனுக்குத் தேவைப்படும் நூலையும் இணைத்துவிட முடியும். ஷவாசிக்க வருபவரின் வருகை ஏற்றும், மரியாதை காட்டி அவர்க்கிருக்கை தந்தும், ஆசித்த நூல் தந்தும், புதிய நூல்கள் அழைத்திருந்தால் அதையுரைத்தும், நாளும் நூலை நேசித்து வருவோர்கள் பெருகும் வண்ணம் நினைப்பாலும் வாக்காலும் தேகத்தாலும் மாசற்ற தொண்டிழைப்பீர் சமுதாயச் சீர் மறுமலச்சி கண்டதென முழக்கம் செய்வீர்ஷ என்ற புரட்சிக் கவி பாரதிதாசனின் உணர்ச்சி வரிகள் நூலகரின் முக்கியத்துவத்தை விளக்குவதற்கு போதுமானதாகும்.

நூலகம் வளர்ந்து வரும் ஓர் நிறுவனமாகும்
நூலகம் என்பது நூல்கள் வாசகன் நூலகர் என்ற மூன்று மூலக்கூறுகளைக் கொண்ட ஓர் மூவுரு. உலகில் உள்ள அனைத்துமே இயங்குசக்தி உள்ளவை என்ற வகையில் இந்த மூன்று மூலக்கூறுகளும் வளரும் போது நூலகமும் வளரும் எனவே நூல்களின் அதிகரிப்பு, வாசகனது அதிகரிப்பு நூலக அலுவலர்களின் அதிகரிப்பு என்பவற்றுக்கு ஈடு கொடுக்கும் வகையில் நூலகக் கட்டிடம் இருக்க வேண்டும் என்பதுடன் எதிர்காலத்தில் வரிவாக்கக்கூடியவகையில் கட்டிட அமைப்பை இப்போதே திட்டமிடுதலை அது குறித்து நிற்கிறது.

முடிவுரை
ஒரு சமூகத்தின் பெருமை அச்சமூகத்தின் இயற்கைவளத்தாலோ அல்லது செல்வ வளத்தாலோ கணிக்கப்படுவதில்லை. மனித ஆற்றல் சிந்தனை வளம் என்ற இரண்டாலுமே ஒரு சமூகத்தின் மேன்மை கணிப்பிடப்படுகிறது. ஷசெந்தமிழ் இன்பம் செறிந்திட நூல்கள் சேர்ப்பதும் நூலகமே, தமிழ் சந்தம் விளங்கிட சாத்திர நூல்கள் தருவதும் நூலகமே, அதில் சிந்தையின் உணர்வுகள் அறிவியலாக செழிப்பதும் நூலகமே, இதை எந்தையர் நாட்டின் அறிவகம் என்றே இயம்பியே வணங்கேனோஷ எனக் சமூகத்தில் நூலகத்தின் முக்கியத்துவத்தை கவிதை மொழியில் வெளிப்படுத்துகிறார் இந்திய நூலக அறிஞர் வே.தில்லைநாயம் அவர்கள். விரும்பிய நூலை விரும்பிய நேரத்தில் விருப்பப்படி சென்று படிக்க ஏற்றவாறு கதவுகளை விரியத் திறந்து வைத்துக் கொண்டு வருக வருக என வரவேற்கக் காத்திருக்கும் நூலகங்களும், இதோ இதோ என இன்னமுதூட்ட இருகரம் நீட்டி அமைக்கும் நூல்;;களும், ஓ! நாயகனே மனிதரிடமிருந்து கிடைக்கும் பொது அவமதிப்பின் மத்தியிலும் கூட அதனைத் தாங்கி அவரகளுக்கு சேவை புரியும் மன உறுதியை எனக்குக் கொடுஷ என கவி தாகூரின் சிந்தனையின் வழித்தடத்தில் செல்லக்கூடிய அன்பும் அறிவும் முகமலர்ச்சியும் வாசகனின் தேவையை சொல்லாமலேயே இனங்காணும் ஆற்றலும் உள்ள நூலகரும் இருக்கும்வரை அந்த சமூகம் அறிவமுது பெற்ற சமூகமாகவே இருக்கும். இப் பணியை இணுவில் பொது நூலகமும் ஆற்றட்டும்.

குறிப்புதவு நூல்கள்

  1. சண்முகலிங்கம், ம.(2005) 'நுழைபுலம்'. மேற்படி நூல் பக்.98-99.
  2.   சந்தானம், எஸ். கல்வியின் தத்துவ சமூக அடிப்படைகள். சென்னை: பழனியப்பா, 1987. பக்.605.
  3.  International Federation of Library Associations and Institutions.1995-2000. Reading.
  4.  www.ifla.org. [accessed on  01-07-2006]
  5. Kevin Eikenberry,Kevin[2002].  Kevin publishes Unleash Your Potential, a free weekly ezine designed to provide ideas, tools, techniques and inspiration to enhance your professional skills.  
  6. Senge [1990]. Cited by Sumana Jeyasuriya,Geeta Yapa and rosemary Redden.Library instructional program. Manual for Teacher Librarians.Colombo:National Institute of Library and Information Sciences,University of Colombo,2002.p.43
  7. Who said what when[1988]: The chronological dictionary of quotations. London:Bloomsburry publishing,.p.77
  8. Oxford dictionary of Quotations[1999].-London:Oxford. p44-45.


(1. ஸ்ரீகாந்தலட்சுமி,அ (2007). நூலக தகவல் அறிவியல் ஆய்வுக்கோவை .- கொழும்பு சேமமடு.
2. Cirunuvaith thiruvur. Compiled by M.Sivalingam. Inuvil: Saivath thirunerik kkalakam, 2004.)




No comments:

Post a Comment