எனது நோக்கில்.......

அறிவும் திறனும் இணைந்து தொழிற்படும் அற்புதமான ஒரு துறையாகக் கருதப்படுவது நூலக, தகவல் அறிவியல் துறை. உரு,வரி,வரைபு, அலை ஆகிய தகவல் வெளிப்பாட்டு வடிவங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட பதிவேடுகளின் உருவமைப்பில் அதிக கவனம்செலுத்தி அவற்றின் சேகரிப்பு,ஒழுங்கமைப்பு,சேமிப்பு, பகிர்வு, பராமரிப்புபோன்ற செய்முறைகள் ஊடாக வாசகனின் தகவல் தேவையைப் பூர்த்தி செய்கின்ற நூலகஅறிவியல் துறையும், இப்பதிவேடுகளின் உள்ளடக்கத்தில் மட்டும் அதிக கவனம் எடுத்து தகவல் உருவாக்கம், தகவல் பரவலாக்கம்,சேகரிப்பு, ஒழுங்கமைப்பு,மீள்பெறுகை, பொருள் விளக்கமளிப்பு, பயன்பாடு போன்ற செய்முறைகளினூடாக பயனரின் தகவல் தேவையைப் பூர்த்தி செய்கின்ற தகவல் அறிவியல் என்ற துறையும் இணைந்து உருவான இத்துறையானது தகவலின் பண்புகளும் நடத்தையும், தகவல் பாய்ச்சலை கட்டுப்படுத்தும் சக்திகள், தகவலிலிருந்து உச்ச அணுகுகையையும், பயன்பாட்டையும் பெறும்பொருட்டு தகவலைச் செய்முறைப்படுத்துவதற்கானவழிவகைகள்,தகவல் கையாள்கை மற்றும்பரவலாக்கம் போன்றவற்றில் நூலகங்கள்மற்றும் தகவல் நிலையங்கள் ஆகியவற்றின் பங்களிப்பு ஆகியவற்றைக் கூர்ந்து ஆராயும் ஒரு அறிவியலாக மட்டுமன்றிகணிதவியல்,தருக்கவியல், மொழியியல்,உளவியல், கணினித் தொழினுட்பம்;,நூலகவியல், தகவலியல்,முகாமைத்துவம் போன்ற துறைகளிலிருந்து பெறுவிக்கப்பட்டதாக அல்லது அவற்றுடன்தொடர்புடையதொன்றாகவும் உள்ள பெருமைக்குரியது.

யாழ்ப்பாணப் பிரதேசத்தில் நூலக அபிவிருத்தியை மையமாகக்கொண்டு இயங்கும்ஒரேயொரு அரசசார்பற்ற அமைப்பான'நூலக விழிப்புணர்வு நிறுவனம்' என்ற அமைப்பின் ஊடாக நடத்தப்பட்ட பொது நூலகர்கள், மற்றும் பாடசாலை நூலகர்களுக்கான கருத்தரங்குகள்,பயிற்சிப் பட்டறைகளில் இனங்காணப்பட்ட நூலகர்களின்தேவையும், கிராமம் தோறும் தனிநபர் நூலகங்களாகவோ, அமைப்பு சார்நூலகங்களாகவோ, கிராமிய நூலகங்களாகவோ இயங்கக் கூடிய வகையில் புதிய நூலக உருவாக்கத்தில் ஆலோசனை கோரி அணுகியவர்களின் தேவையும் இணைந்து உருவானதே இந்தவலைத்தளம்எனில் மிகையல்ல.

இந்த வலைத்தளத்தின் தேவையைத் திரும்பத்திரும்ப வலியுறுத்தி அதற்கான உந்துசக்தியைத் தந்த அனைவருக்கும் எனது நன்றிகள். வீட்டு நூலகம் முதற்கொண்டுசனசமூக நிலைய நூலகங்கள்,பாடசாலை நூலகங்கள் போன்ற கல்விநிறுவன நூலகங்கள், பொதுசன நூலகங்கள், சிறப்பு நூலகங்கள் அனைத்திற்கும் ஒரு அடிப்படையைத் தரவும், தாய்மொழி மூல கல்விமூலம் நூலகத்துறையைவளர்த்தெடுத்தல்,தமிழில் நூலகவியல் துறை சார்ந்த ஆய்வுகளை ஊக்குவித்தல் ஆகிய இரு இலக்குகளை முன்வைத்தும் இந்த வலைத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. அபிவிருத்தியின் அச்சாணி நூலகம் என்ற கருத்துநிலையையும் செயலுருப்பெற உதவுமெனில் அது நான் பிறந்த இந்த மண்ணுக்கும் நான் பேசும் மொழிக்கும்செலுத்துகின்ற நன்றிக்கடனாகும்.


அருளானந்தம் ஸ்ரீகாந்தலட்சுமி,
கல்விசார் நூலகர்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

13-09-2014


Sunday, September 14, 2014

நூல் பேசுகிறது



 என் உருவாக்கம்    ( My Formation)


எந்தவொரு தகவலும் தனக்குரிய வடிவைப் பெறுவதற்கு முன்னர்  ஐம்பொறிகளான  மெய், வாய், கண், மூக்கு, செவி மூலம் பெறப்படும் சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் பார்த்தல், கேட்டல், முகர்தல், தொட்டுணர்தல், சுவைத்தல்  ஆகிய அடிப்படை முறைகளினூடாகப் பெறப்படும் உண்மை நிகழ்வாக (fact) தோற்றம் பெறுகின்றது. மீளப் பார்த்தல், ஒப்பு நோக்கல், அவதானித்தல், சேகரித்தல், போன்ற இரண்டாம்நிலைச் செயற்பாடுகளினால் இந்த உண்மை நிகழ்வுகள் தரவாக மாறி, ஆய்வு செய்தல், பகுத்தாய்வு செய்தல், ஒழுங்கமைத்தல் போன்ற மூன்றாம்நிலைச் செயற்பாடுகளினால் தகவலாக மாறுகின்றது. எனவே தகவலைப் பெறும் முறைகளின் அடிப்படையில் தகவல் வளங்களை பின்வருமாறு வகைப்படுத்தலாம்

•    அவதானித்தலுக்குரியவை: நிலையான ஊடகங்களான படங்கள், ஒளிப்படங்கள், ஓவியங்கள், சித்திரங்கள் நுண் வடிவங்கள், படத் துணுக்குகள், காட்சி வில்லைகள், உண்மை உருவமைப்புகள், மாதிரி உருவமைப்புகள் போன்றவையும் அசையும் ஊடகங்களான மௌனப் படங்களும் இவ்வகைக்குள் உள்ளடங்கும்
•    செவிமடுத்தலுக்குரியவை: விலங்குகள் மனிதர்களின்  ஒலிகள், ஓசைகள், பாடல்கள் என்பன இவ்வகைக்குள் அடங்கும்
•    வாசித்தலுக்குரியவை: எண்கள் எழுத்துகள் இணைந்த வரிவடிவங்களை உள்ளடக்கும் அனைத்துத் தகவல் சாதனங்களும் இவ்வகைக்குள் அடங்கும்
•    தொட்டுணர்தலுக்குரியவை: உருவங்கள், விழிப்புலனற்றோருக்கான தகவல் வளங்கள் இவ்வகைக்குள் அடங்கும்.
•    முகர்தலுக்குரியவை: வாசனையூடாக அறியப்படும் பொருட்கள் அனைத்தும் இவ்வகையைச் சார்ந்தவை. எ-டு மலர்கள்
•    சுவைத்தலுக்குரியவை: சுவைத்தலுக்குரிய, சமைக்கப்பட்ட அல்லது இயற்கையான உணவுப் பதார்த்தங்கள் அனைத்தும் இதற்குள் அடங்கும். எ-டு கனிகள், பானங்கள், உணவுப் பதார்த்தங்கள் போன்றவை


                                                  என் உருவம் (My body)

கற்கள், பாறைகள், களிமண், இலை வகைகள், மரப்பட்டைகள், விலங்குத் தோல்கள், உலோகங்கள், துணி, தாள்கள், ஒளிப்படப் பொருட்கள் என்று கற்காலம் தொடங்கி  இக்காலம் வரை மனிதன் தனது சிந்தனைகளைப் பதிந்து வைப்பதற்கு பயன்படுத்திய சாதனங்கள் பலதரப்பட்டவையாக அமைந்திருக்கின்றன..


சுவரோவியங்கள் (Cave paintings)

1   மொழியின் தோற்றத்துக்கு முன்னரேயே தனது கருத்தைத் தெரிவிக்க மனிதன்  கையாண்ட முதலாவது முறையாக இச்சுவரோவியங்கள் விளங்கின.
2    உலகளாவிய ரீதியில் வேட்டையாடலுடன் தொடர்புடைய மிருகங்கள், ஆயுதங்கள் மற்றும் குறியீடுகள் சார்ந்தவையாக  விளங்கிய சுவரோவியங்கள் குகைகளின் வெற்றுச் சுவர்களில் எவ்வித வேலைப்பாடும் அற்ற நிலையில் பழுப்பு, சிவப்பு, கறுப்பு ஆகிய நிறங்களைப் பயன்படுத்தி கற்கால மனிதனால் வரையப்பட்டவை. ஓவியங்களாகவும் குறியீடுகளாகவும் வரையப்பட்ட இவை 35,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட மனிதன் பற்றிய தகவல் களஞ்சியமாகும்.
3    வரலாற்றுக் காலத்தின் தொடக்ககால ஓவியங்களாகக் கருதப்படுபவை எகிப்திய சுவரோவியங்களே. கி;.மு 4000 - கி;.பி 333 காலப்பகுதியைச் சேர்ந்தவையாகக் கருதப்படும் இவை மக்களுக்குச் சமய அறிவை ஊட்டுவதற்காகப் படைக்கப்பட்டவை. பபிலோனியர், அசிரேயர், கல்தேயர், பாரசீகர் ஆகியோரிடமும் இச் சுவரோவியங்கள் நிறைந்து காணப்பட்டன. ரோமானியரின் ஓவியங்கள் சுவரிலிருந்து புடைப்பாகத் தோன்றும் வகையில் புதிய முறையில் அமைந்தவை. தாவரங்கள், மிருகங்கள், மக்கள் உருவங்களைச் சித்தரிப்பவையாக இவை விளங்கின. பாம்பி நகரின் புகழ்பெற்ற ஓவியங்களுள் ஒன்றாகக் கருதப்படுவது அலெக்சாந்தரும் தேரியசும் செய்த போர் பற்றிய ஓவியமாகும்.
4    இஸ்லாமியர் காலத்து ஓவியங்கள் இயற்கை சார்ந்தவையாக இல்லாமல் வடிவக்கணித உருவங்களை அடிப்படையாகக் கொண்டவை. இவ்வகை ஓவியங்கள் எருசலேம், கெய்ரோ, தமாகசு ஆகிய இடங்களிலுள்ள மசூதிகளில் தீட்டப்பட்டுள்ளன. இவ்வகை ஓவியங்களில் கிரனடா நகரில் உள்ள அல்காம்பிரா அரண்மனை ஓவியங்கள் புகழ் பெற்றவை. இங்கிலாந்தில் காண்டர்பரிக் கிறிஸ்தவக் கோவில் மண்டபச்சுவரில் உள்ள புனித பால் ஓவியம் குறிப்பிடத்தக்கது.
5    இந்தியாவில் மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம்;, தமிழ்நாடு ஆகிய இடங்களிலுள்ள சுவரோவியங்கள் கற்காலத்தைச் சார்ந்தவை. வரலாற்றுக்காலச் சுவரோவியங்கள் அஜந்தா, எல்லோரா, பாகு, காஞ்சிபுரம், பனமலை, சித்தன்னவாசல், தஞ்சாவூர், உத்தரமேரூர் போன்ற இடங்களில் காணப்படுகின்றன. திருவிதாங்கூர், கொச்சி ஆகிய கேரளப்பகுதிகளிலும் இவை காணப்படுகின்றன. இலங்கையில்  சிகிரியாவிலுள்ள ஓவியங்கள் அஜந்தா ஓவியங்களுக்கு இணையானவை.(வாழ்வியல் களஞ்சியம் தொகுதி 9. பக்.269)

கல்வெட்டுகள் (Inscriptions)

1    பண்டைய மனிதனின் வரலாற்று அறிவைத் தரும் முதல்நிலைத் தகவல் வளங்களாக கல்வெட்டுகள் கருதப்படுகின்றன. கற்கள் எரிமலைக்கற்கள் அல்லது பாறைக்கற்கள், மடிப்புமலைக் கற்கள், படிவக் கற்கள் என மூவகைப்படும். பெரும்பாலும் பாறைக் கற்களே நீடித்துழைக்கக் கூடியவை என்பதால் இவையே அதிகம் பயன்பட்டிருக்கின்றன.
2    கிரேக்கம், மெசப்பத்தேமியா, நைல்நதிக்கரை, சினா, மாயன், தோல்தெக்கு, அகதெக்கு, இந்தியா போன்ற பகுதிகளிலிருந்த நாகரிகங்களை அறிய கல்வெட்டுகள் பேருதவி புரிகின்றன. கல்வெட்டுகளுக்கு இந்தியாவே புகழ்பெற்றது என்பது இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ள பெருந்;தொகையான கல்வெட்டுகளிலிருந்து அறிய முடிகின்றது.
3    பண்டைக்கால மனித வாழ்வின் சமூக, பொருளாதா, அரசியல், மத, பண்பாட்டு  அம்சங்களை இதில் பெறமுடியும். அரசர்களின் வரலாறு, குடும்ப விபரம் நாட்டின் பரப்பளவு, வெற்றி பெற்ற நாடுகளின் விபரங்கள், புவியின் அமைப்பு, ஊர்களின் பெயர், அரச அலுவலர்கள் ஆட்சிமுறை, கிராம நிர்வாகம், அவைகள், தொழிற்குழுக்கள், வாணிகக்குழுக்கள், கொடைகள், நில அமைப்பு, கல்விச்சாலைகள், கோவில்கள், மடங்கள், வேளாண்மை, பொருளாதாரம், நாணயம், சட்டம் போன்றவற்றை அறியமுடிகிறது. கல்வெட்டுகள் பொதுவாக அரசர் அளித்த கல்வெட்டுகள், தனிப்பட்டவர்களும் நிறுவனங்களும் அளித்த கல்வெட்டுகள் என இருவகைப்படும்.
4    வீர வழிபாட்டைப் போற்றுவதற்கு கருங்கற்களில் பொறிக்கும் பழக்கம் இருந்ததாக புறநானூறு (335) தெரிவிக்கின்றது. பல்லவர்களும் சோழர்களும் நிறுவிய குகைக்கோயில்களில் கல்லில் பொறிக்கப்பட்ட எழுத்துக்கள் பெருமளவில் காணப்பட்டன. கி;.பி 7ம் நூற்றாண்டளவில் தமிழில் கல்வெட்டுக்களைச் செதுக்கும் வழக்கம் இருந்திருக்கிறது. அறக்கொடைகளும் நன்கொடைகளும் இத்தகைய எழுதப்படு பொருட்களிலேயே பொறித்து வைக்கப்பட்டிருந்தன. மலைப் பாறைகள். கல்தூண்கள், கோவில் சுவர்கள் போன்றவை எழுத்துக்களைப் பொறித்து வைக்கப் பயன்பட்டிருக்கின்றன. இந்தியாவிலுள்ள கல்வெட்டுக்களில் அசோகரின் கல்வெட்டுகளே மிகப் பழமையானவை.அவை பிராமி, கரோசுதி ஆகிய எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளன. வட இந்தி கல்வெட்டுகளில் புகழ்பெற்றவை அகோகரின் கல்வெட்டுகள், காரவேலனின் அதிரும்பா கல்வெட்டு, பெசுநகர் கல்வெட்டு, உருத்திர தாமனுடைய சுனாகத்துப் பாறைக்கல்வெட்டு, அலகாபாத்துக் கற்தூண் கல்வெட்டு, தாளகுண்டாக் கற்றூண் கல்வெட்டு, மாண்டசோர் கற்றூண் கல்வெட்டு அய்கொளே கல்வெட்டு போன்றவையாகும்.


களிமண் பலகைகள் (Clay Tablets)

•    ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்துக்குக் காவிச் செல்வதற்கு ஏற்ற வகையிலும், ஓரிடத்தில் சேகரித்து வைக்கப்படக்கூடியதாகவும் உருவாக்கப்பட்ட முதலாவது மனித சிந்தனைப்பதிவேடு.
•    ஈரமான களிமண்ணைத் தட்டையாக்கிகூரான தடி கொண்டு முக்கோண வடிவங்களில் குறியீடுகளாகத் தகவல்கள் பதியப்பட்டு இது வேகவைத்துக் கடினமாக்கப்பட்டது
•    புராதன மெசப்பத்தேமியாவின் பாபிலோனிய, அசிரிய, பாரகீக மக்களால் பயன்படுத்தப்பட்ட ஆப்பு வடிவ எழுத்துமுறையைப் பின்பற்றி  மெல்லிய சிறிய ஈரமான களிமண்ணில் ளவலடரள எனப்படும் மெல்லிய கூரான எழுத்தாணி கொண்டு பதியப்படுவது.
•    களிமண் பலகைகளின் தோற்றம் கி;மு 4000 ஆண்டளவில் சுமேரியர் காலத்துடன் தொடங்குகின்றது.
•    குகை ஓவியங்களிலிருந்து ஏற்பட்ட அடுத்த வளர்ச்சிப்போக்காக இது கருதப்படுவது.
•    சால்டியா, சிரியா நாடுகளில் களிமண் எழுதப்படும் பொருளாக இருந்திருக்கிறது. களிமண் பலகையில் எழுதப்பட்ட எழுத்துகள் கூனிபார்ம் எழுத்துக்கள் (Cuniform writings) எனப்பட்டன
•    இங்கிலாந்திலுள்ள பிரிட்டிஸ் மியூசியத்தில் இவை இருப்பதாக அண்மைக்கால ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உலகின் முதற் காவியம் எனக் கருதப்படும் கில்கமேஷ் காவியம் (புடைபயஅநளா நுpiஉ) களிமண் தட்டில் படைக்கப்பட்டது.
•    கி;மு 669-626 காலப்பகுதியில் ஆட்சிபுரிந்த அசிரிய மன்னன் அசர் பனிபல்லினால் (Aser Banibel) நினவே (Nineve) என்னுமிடத்திலுள்ள அவனுடைய அரண்மனையில்   இவை சேகரிக்கப்பட்டன என்பதையும் இங்கு கிட்டத்தட்ட 22,000 களிமண் தட்டுகள் பொருட்துறை வாரியாகப் பிரிக்கப்பட்டு சேகரிக்கப்பட்டிருந்தன என்பதையும் அகழ்வாராய்ச்சிகள் நிரூபிக்கின்றன.
•    வைசாலிக் குடியரசின் பிரதம சேனாதிபதி சிம்மனது வாழ்க்கை வரலாற்றை   எடுத்துச் சொல்லும் சிந்து முதல் கங்கைவரை என்ற நூல் நூலாசிரியர் ராகுல சாங்கிருத்தியாயனின் சொந்த முயற்சியில் அகழ்வாராய்ச்சி செய்து கண்டபிடிக்கப்பட்டு இந்தியாவின் பாட்னா அரும்பொருளகத்தில் வைக்கப்பட்டிருக்கும் 1600 செங்கற்களிலிருந்து உருவாக்கப்பட்டதே என அந்நூலின் முன்னுரையில்  அதன் ஆசிரியர் ராகுல சாங்கிருத்தியாயன் குறிப்பிடுகின்றார்.

பைபிரஸ் நூல்கள்(Papyrus)

•    கி;மு 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே எகிப்தியர்களால் பயன்படுத்தப்பட்ட எழுது கருவி.
•    நைல்நதிக்கரையில் கிட்டத்தட்ட பத்து அல்லது பதினைந்து அடி உயரம் வரை வளரும் கோரை போன்ற ஒரு வகையான புல்லை அறுத்துப் பட்டை உரித்து, ஒரே அளவாக நறுக்கிப் பதப்படுத்தி, வெயிலில் உலர்த்தி, ஒவ்வொரு தாளையும் ஒன்றோடொன்று ஒட்டிச் சேர்த்து நீண்ட சுருளையாக்கி எழுதப் பயன்படுத்தப்படுவது. ஒரு பெரிய சுருளை சுமார் 20 தாள்களைக் கொண்டதாக இருந்தது. இரண்டு அங்குலம் முதற்கொண்டு பதினைந்து அங்குலம் வரையில் இந்தப் பைபிரஸ் தாள்களின் நீளம் இருந்தது.
•    6 அங்குல நீளத்தில் வெட்டப்பட்ட நாணற்குழாய்களின் முனைகள் கூராகச் சீவப்பட்டு மை தொட்டு எழுது கருவியாக பயன்பட்டு வந்திருக்கிறது. எழுதப்படு பொருளாகப் பயன்படுத்தப்பட்டது.
•    கி;.மு 3 - கி;.பி 7ம் நூற்றாண்டு வரை எகிப்தியர், கிரேக்கர், பினிஷியர், உரோமர், எபிரேயர், ஆர்மீனியர், அராபியர் ஆகியோருக்கு எழுதப்படு பொருளாகப் பயன்பட்டது.
•    கி;மு 4ம் நூற்றாண்டில் அலெக்சாண்டிரியா நகரில் கிரேக்க மன்னம் முதலாம் தொலமியால் உருவாக்கப்பட்ட மிகப் பெரிய நூலகத்தின் சேகரிப்புகளுக்கு பைபிரஸ் தாள்களே ஊடகமாக இருந்திருக்கின்றன. கிட்டத்தட்ட ஏழு இலட்சம் பைபிரசு சுருள்களைக் கொண்டதாக இந் நூலகம் இருந்திருக்கிறது.


ஓலைச்சுவடிகள் (Ola leaves)

•    தாள்களின் கண்டுபிடிப்புக்கு முன்னர் பயன்படுத்தப்பட்ட எழுதப்படு பொருள்களில் ஓலைச்சுவடிகள் முக்கியமானவை. கி.பி 4ம் நூற்றாண்டிலேயே ஓலை பயன்படுத்தப்பட்டதைத் தெரிவிக்கிறது.
•    தெற்கு மற்றும் தென் கிழக்காசிய நாடுகளில் நாட்டுப் பனையின் பழுப்பு நிறம் பெற்ற பழுத்த ஓலைகளை எடுத்து, அதன் குறுகிய அடி நுனிகளை நீக்கி, நரம்புகளை வார்ந்தெடுத்து, உலரவைத்துச், சில மணி நேரம் நீரில் கொதிக்க வைத்த பின்னர் பதப்படுத்தி அவற்றை எழுதுவதற்குப் பயன்படுத்தினர். பனையோலையின் நீளம் 1-3 அடிவரையிலும் அகலம் 1.75 அங்குலம் வரையிலும் இருந்தன.
•    எம்மிடையே பாவனையில் இருக்கும் ஓலைச் சுவடிகள் தனித்தனி ஓலைகளில் கூர்மையான உலோகத்தினாலான எழுது கோல் கொண்டு பொறிக்கப்பட்டு, அல்லது பேனாவின் மை கொண்டு எழுதப்பட்டு, பனையோலைகளின் நடுவில் அல்லது இரு முனைகளிலும் துளையிடப்பட்டு, அவற்றினூடாக நூலைக் கோர்த்து ஒன்றாகச் சேர்த்துக் கட்டி, ஓவியங்கள் தீட்டப்பட்;ட அல்லது  வேலைப்பாடுகள் செய்யப்பட்ட இரு கனமான, மரத்தினாலான கட்டைகளை ஓலைக்கட்;டின் மேற்புறம் ஒன்றும் கீழ்ப்புறம்; ஒன்றுமாக வைத்துப் பிணைத்து உருவாக்கப்பட்டவையாகும்.  சில சமயங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட ஓலைகளை ஒன்றாகச் சேர்த்துத் தைத்து அகலமாக்கியும் எழுதுவதற்குப் பயன்படுத்தினார்கள்.