எனது நோக்கில்.......

அறிவும் திறனும் இணைந்து தொழிற்படும் அற்புதமான ஒரு துறையாகக் கருதப்படுவது நூலக, தகவல் அறிவியல் துறை. உரு,வரி,வரைபு, அலை ஆகிய தகவல் வெளிப்பாட்டு வடிவங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட பதிவேடுகளின் உருவமைப்பில் அதிக கவனம்செலுத்தி அவற்றின் சேகரிப்பு,ஒழுங்கமைப்பு,சேமிப்பு, பகிர்வு, பராமரிப்புபோன்ற செய்முறைகள் ஊடாக வாசகனின் தகவல் தேவையைப் பூர்த்தி செய்கின்ற நூலகஅறிவியல் துறையும், இப்பதிவேடுகளின் உள்ளடக்கத்தில் மட்டும் அதிக கவனம் எடுத்து தகவல் உருவாக்கம், தகவல் பரவலாக்கம்,சேகரிப்பு, ஒழுங்கமைப்பு,மீள்பெறுகை, பொருள் விளக்கமளிப்பு, பயன்பாடு போன்ற செய்முறைகளினூடாக பயனரின் தகவல் தேவையைப் பூர்த்தி செய்கின்ற தகவல் அறிவியல் என்ற துறையும் இணைந்து உருவான இத்துறையானது தகவலின் பண்புகளும் நடத்தையும், தகவல் பாய்ச்சலை கட்டுப்படுத்தும் சக்திகள், தகவலிலிருந்து உச்ச அணுகுகையையும், பயன்பாட்டையும் பெறும்பொருட்டு தகவலைச் செய்முறைப்படுத்துவதற்கானவழிவகைகள்,தகவல் கையாள்கை மற்றும்பரவலாக்கம் போன்றவற்றில் நூலகங்கள்மற்றும் தகவல் நிலையங்கள் ஆகியவற்றின் பங்களிப்பு ஆகியவற்றைக் கூர்ந்து ஆராயும் ஒரு அறிவியலாக மட்டுமன்றிகணிதவியல்,தருக்கவியல், மொழியியல்,உளவியல், கணினித் தொழினுட்பம்;,நூலகவியல், தகவலியல்,முகாமைத்துவம் போன்ற துறைகளிலிருந்து பெறுவிக்கப்பட்டதாக அல்லது அவற்றுடன்தொடர்புடையதொன்றாகவும் உள்ள பெருமைக்குரியது.

யாழ்ப்பாணப் பிரதேசத்தில் நூலக அபிவிருத்தியை மையமாகக்கொண்டு இயங்கும்ஒரேயொரு அரசசார்பற்ற அமைப்பான'நூலக விழிப்புணர்வு நிறுவனம்' என்ற அமைப்பின் ஊடாக நடத்தப்பட்ட பொது நூலகர்கள், மற்றும் பாடசாலை நூலகர்களுக்கான கருத்தரங்குகள்,பயிற்சிப் பட்டறைகளில் இனங்காணப்பட்ட நூலகர்களின்தேவையும், கிராமம் தோறும் தனிநபர் நூலகங்களாகவோ, அமைப்பு சார்நூலகங்களாகவோ, கிராமிய நூலகங்களாகவோ இயங்கக் கூடிய வகையில் புதிய நூலக உருவாக்கத்தில் ஆலோசனை கோரி அணுகியவர்களின் தேவையும் இணைந்து உருவானதே இந்தவலைத்தளம்எனில் மிகையல்ல.

இந்த வலைத்தளத்தின் தேவையைத் திரும்பத்திரும்ப வலியுறுத்தி அதற்கான உந்துசக்தியைத் தந்த அனைவருக்கும் எனது நன்றிகள். வீட்டு நூலகம் முதற்கொண்டுசனசமூக நிலைய நூலகங்கள்,பாடசாலை நூலகங்கள் போன்ற கல்விநிறுவன நூலகங்கள், பொதுசன நூலகங்கள், சிறப்பு நூலகங்கள் அனைத்திற்கும் ஒரு அடிப்படையைத் தரவும், தாய்மொழி மூல கல்விமூலம் நூலகத்துறையைவளர்த்தெடுத்தல்,தமிழில் நூலகவியல் துறை சார்ந்த ஆய்வுகளை ஊக்குவித்தல் ஆகிய இரு இலக்குகளை முன்வைத்தும் இந்த வலைத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. அபிவிருத்தியின் அச்சாணி நூலகம் என்ற கருத்துநிலையையும் செயலுருப்பெற உதவுமெனில் அது நான் பிறந்த இந்த மண்ணுக்கும் நான் பேசும் மொழிக்கும்செலுத்துகின்ற நன்றிக்கடனாகும்.


அருளானந்தம் ஸ்ரீகாந்தலட்சுமி,
கல்விசார் நூலகர்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

13-09-2014


Saturday, September 13, 2014

பொது நூலகங்களினால் வழங்கப்படக் கூடிய சேவைகள்


அறிமுகம்
ஒரு மனிதன் பகுத்தறிவுடையோனாக நடந்து கொள்வதற்குத் தனது சுற்றாடலிலிருந்து தகவல்கள் தங்கு தடையின்றித் தொடர்ந்து  கிடைக்கப்பெறுவதிலேயே தங்கி நிற்கிறான். ஒரு சமூகமானது அதன் பொதுத் தொடர்பு முறைகளைச் சுற்றியே பின்னப்பட்டுள்ளதுடன் முற்றாகவே ஒன்றிலொன்று தங்கி நிற்கும் இவ்வுலகத்தில் வாழ்வதற்கு தகவல் மிகவும் அவசியமானது. அறிவே ஆற்றல் எனக் கூறும் பிரான்சிஸ் பேகனின் கூற்று பல வழிகளில் உறுதிப்படுத்தப்பட்ட போதிலும் இன்றைய சமூகத்தில் அறிவே மாற்றமுமாகும். உதாரணமாக உலகின் வளர்ச்சியுற்ற நாடாகக் கருதப்படும் அமரிக்காவை எடுத்துக் கொண்டால் இன்று அமெரிக்க பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்துகின்ற துறையாக தகவல் தொழிற்றுறை அமைந்துள்ளது. 1880ஆம் ஆண்டளவில் 5 வீதத்துக்கும் குறைவான ஆதிக்கத்தைக் கொண்டிருந்த தகவல் துறையானது 1980களிலேயே 60 வீதத்துக்கும் மேற்பட்ட வளர்ச்சி வீதத்தைக் காட்டியது. அதே சமயம் நாட்டின் பொருளாதாரத்தில் மிக முக்கியத்துவம் பெற்றிருந்த விவசாயத்துறை இன்று கணிசமாக வீழ்ச்சியடைந்து விட்டது. இதிலிருந்து நாம் விளங்கிக் கொள்ளக் கூடியது என்னவெனில் ஒரு நாட்டின் முன்னேற்றம் தகவல் துறையின் செயற்பாடுகளிலேயே முழுக்க முழுக்கத் தங்கியுள்ளது என்பதேயாகும்.
ஆரம்பத்தில் தகவல் அறிவுத் துறைகளின் பிரதான மூலங்களுக்கிடையே தொடர்பற்றுத் தனித்து நின்ற நாடுகளுக்கிடையே இன்று பொருளாதார, விஞ்ஞான, தொழினுட்ப, மற்றும் கலாச்சாரத் துறைகளில் பிராந்திய ஒத்துழைப்பு நோக்கிய நடவடிக்கைகள் அறிவுப் பரிமாற்றத்தின் புதிய அவசியங்களைத் தோற்றுவித்துள்ளன. இத்தகைய அறிவுப் பரிமாற்றத்துக்கான மூலமாக நூலகங்கள் விளங்குகின்றன என்பதுடன் நூலகராகிய எமது பங்களிப்பும் சமூக முன்னேற்றத்தின் தாங்கு தூண்களாக இருந்து சமூக முன்னேற்றத்துக்கூடாக நாட்டின் முன்னேற்றத்துக்கும் உதவக்கூடியது என்பதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை. நூலகங்கள் என நான் குறிப்பிடுவது ஆரம்ப காலத்தில் வெறும் சேமிப்புக்குதங்களாகக் காணப்பட்ட நூலகங்களையன்று. கைத்தொழிற் புரட்சியுடன் ஏற்பட்ட மறுமலர்ச்சி காரணமாக கைத்தொழில் ஆராய்ச்சி நிறுவனங்களின் தோற்றத்துடன் சேமிப்புக் குதங்கள் என்ற நிலை மாறுபட்டு நூலகங்கள் அறிவைப் பரப்பும் ஊற்றுக்கள் என்ற கோட்பாடு வலியுறுத்தப்பட்ட பின்னர் துரிதமாக மாற்றமடைகின்ற சமூக பொருளாதாரச் சுற்றாடல் ஒன்றில் தகவல் பாவனையாளருக்குத் தேவையான தகவல்களை வழங்கும் பொறுப்பினை ஏற்றுக் கொண்ட தகவல் பரிமாற்ற மத்திய நிலையங்களாக அமைந்த நூலகங்களையே நான் இங்கு குறிப்பிடுகின்றேன்.
ஆரம்ப கால நூலகங்கள் வெறுமனே சேமிப்புக் குதங்களாக இருந்தது என்னவோ உண்மைதான். ஆனால் இன்று நாம் முற்றிலும் வேறுபட்ட ஒரு காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். தகவல் அல்லது அறிவு என்பதும் நாட்டின் வள முன்னேற்றத்துக்கு அவற்றின் பங்களிப்பு என்பதும் இன்று உலகின் உயர் வளர்ச்சியுற்ற சமூகங்களின் திறவு கோலாக உள்ளமையை அவதானிக்க முடிகின்றது. இன்றைய நிலைப்பாட்டில் சமூக பொருளாதார அபிவிருத்தியில் தகவல் என்பது மிகப் பெரிய மூலாதாரமாக உண்மையில்  ஒரு உற்பத்திக் காரணியாக எவ்வித கேள்வியுமின்றி அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஒரு நாட்டின் முன்னேற்றம் அந் நாட்டிலுள்ள சமூகங்களின் முன்னேற்றத்தில் தங்கியுள்ளது. அதேபோன்று ஒரு சமூகத்தின் முன்னேற்றமோ சமூகத்தில் வாழுகின்ற மக்கள் ஒவ்வொருவரதும் முன்னேற்றத்திலேயே தங்கியுள்ளது. இவ்வகையில் நோக்கின் சமூக அங்கத்தவர்களுக்குச் சேவை செய்கின்ற ஒரு சமூகத்தின் உயர் வளர்ச்சிக்குப் பாடுபடுகின்ற நிறுவனங்களாக பொது நூலகங்கள் மிளிர்கின்றன.
நவீன சமூகத்தின் முக்கிய அம்சமாகக் கருதப்படும் பொது நூலகங்கள் சமூகத்தின் நாளாந்த செயற்பாடுகளில் மிக முக்கிய பங்கு வகிக்கின்ற ஒரு சமூக நிறுவனமாகும். சமூகங்களின் கலாசார நிலையங்களாகச் சேவையாற்றும் இந் நிறுவனங்கள் சமூக அங்கத்தவர்களை இன, மத, வயது வேறுபாடின்றி ஒருங்கிணைக்கும் நிலையங்களாகக் காணப்படுகின்றன. சமூகத்தின் பல்வேறு துறைகளிலும் முக்கிய பங்கு வகிக்கும் இந் நிறுவனங்கள் தமது சேவைகளை வழங்குவதனூடாக சமூகத்தின் உந்து சக்தியாக வளர்ந்துள்ள அதே நேரம் ஜனநாயகம், பாதுகாப்பு, அரசியல் விழிப்புணர்வு சமூக அறிவு போன்றவற்றுக்கு உதவுகின்ற ஒரு சமூக நிறுவனம் என்பதையும் நாம் உணர்ந்து கொள்வது அவசியமாகும்.
மேற்கூறிய தகவல்களைப் பின்னணியாகக் கொண்டு பொதுசன நூலகமொன்றினால் வழங்கக் கூடிய சேவைகள் எவை எனப் பார்ப்போம். சேவை என எண்ணும்போதே கண் முன் வந்து நிற்பவை நூலக வசதிகளின் குறைபாடுகளும் நிதிப் பற்றாக்குறையுமே. ஒரு நூலகத்தினால் வழங்கப்படக்கூடிய சேவைகளைத் திட்டமிடல் என்பது மிகவும் சிக்கலானதொன்று. தொழில் நிலை அறிவின் மூலமும் பயிற்சியின் மூலமும் தான் சிறந்ததொரு நூலகவியல் கொள்கை, நூலகப் பட்டியல் ஒன்றின் அடிப்படைத் தேவைகள், முக்கியமான உசாத்துணைப் பணிகள், வாசகர் தரத்துக்கேற்ப வழங்கக் கூடிய சேவைகள், போன்றவற்றை அறிந்திருக்க முடியும். ஆனால் மட்டுப்படுத்தப்பட்ட நிதி வசதி, போதுமான நூலக வசதிகளின்மை போன்றவற்றை எதிர்நோக்கும்போது நூலகவியல் கல்வியில் போதிக்கப்பட்டவற்றை அப்படியே கைக்கொள்ளுதல் சாத்தியமற்றது. எமது நூலகங்கள் இன்றிருக்கும் நிலைமைகளுக்கேற்றபடி திட்டமிடல் மேற்கொள்ளப்பட வேண்டும். வசதிக்கேற்பத் திட்டமிடல் என்பதை நூலகக் கல்வி கற்றுக் கொடுப்பதில்லை. இது நாளாந்தத் தொழில் அனுபவங்கள் மூலமும், அனுபவமிக்க நூலக அலுவலர் மூலமுமே பெறப்பட முடியும்.

பொதுசன நூலக சேவைகளை பஞ்சீலக் கொள்கைகளில் ஒன்றாகிய நூல்கள் பாவனைக்கே என்ற விதியுடன் ஆரம்பிப்பது பொருத்தமானது.
நூல்கள் வாசகரினால் இரு வகைகளில் பயன்படுத்தப்படுகின்றது. ஒன்று நூலகத்துக்குள்ளே வாசித்தல.; இரண்டாவது நூலகத்துக்கு வெளியே வீட்டுக்கு எடுத்துச் சென்று வாசித்தல். இதில் முன்னையது உசாத்துணைச் சேவை எனப்படுகின்றது. மற்றையது இரவல் வழங்கும் சேவை எனப்படுகின்றது.

இரவல் வழங்கும் சேவை
இரவல் வழங்கும் செய்முறையில் பின்வரும் அம்சங்கள் முக்கியமாகக் கருதப்படுகின்றன.
•    வாசகரைப் பதிவு செய்தல்
•    நூல்களை இரவல் வழங்குதல்
•    வாசகர் கோரும் நூல்களை அவர்களுக்கென ஒதுக்கி வைத்தல்
•    நூல்களுக்கு வழங்கப்பட்ட கால எல்லையைப் புதுப்பித்தல்
•    மீளப் பெற வேண்டிய நூல்கள் பற்றி அவதானித்தல்
•    நூலகங்களுக்கிடையிலான நூல் பரிமாற்றம்
•    இரவல் வழங்கல் நடைமுறை தொடர்பான புள்ளிவிபரங்கள் பதிவேடுகளைப் பராமரித்தல்
•    இரவல் வழங்கும் முறைகள்
இரவல் வழங்கும் முறைகளில் பலதரப்பட்ட முறைகள் பின்பற்றப்படுகின்றன. எனினும் பொது  நூலகங்களினால் பின்பற்றப்படுகின்ற பிறவுணி இரவல் வழங்கும் முறை பற்றி இங்கு பார்த்தல் பொருத்தமானது.

பிறவுணி இரவல் வழங்கல் முறை
டீழளவழn டீரசநயர  நூலகம்  ஒன்றில் பொறுப்பாளராக இருந்த Niநெ. நு. டீசழறnநை என்ற அமெரிக்கப் பெண்மணியினால் முதன் முதலாக இம் முறை உருவாக்கப்பட்டது. ஆனால் இம் முறை அமெரிக்காவில் பின்பற்றப்படவில்லை. பிரித்தானியா, இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் இம் முறை மிகப் பெருமளவில் பின்பற்றப்படுகின்றது. நூல்களை இரவல் கொடுக்கும் முறையினை உhயசபiபெ ளலளவநஅ என்றும் நூல்களை மீளப் பெறும் முறையினை னளைஉhயசபiபெ ளலளவநஅ என்றும் அழைப்பர்.
•    இரவல் வழங்குதல்
நூலின் பிற்பகுதியில் திகதிப் பதிவுத்தாள் ஒட்டப்பட்டு அதனுள் உள்ள பையுள் நூல் அட்டை செருகப்பட்டிருக்கும். வாசகர் இரவல் பெற அனுமதிக்கப்படும் நூல்களின் எண்ணிக்கைகளுக் கேற்ப அட்டைப்பை வழங்கப்படும். இதை அங்கத்தவர் அனுமதிஅட்டை (சுநயனநச'ள வுiஉமநவ) என அழைப்பர். அங்கத்தவர் தான் இரவல் பெறத் தெரிவு செய்த நூல்களுடன் அங்கத்தவர் அனுமதி அட்டையையும் வாசகர் சேவைப் பிரிவில் கையளிப்பர். நூல் அட்டைகள் தவறுதலாக வேறு நூலின் பையில் செருகப்படும் வாய்ப்பு இருப்பதனால் நூலகர் நூலிலுள்ள நூல்விபரம் தாங்கிய அட்டையை நூலுடன் ஒப்பிட்டுப் பார்த்து இரண்டும் சரியாயின் நூல் அட்டையை எடுத்து அங்கத்தவர் அனுமதி அட்டையுள் செருகி தான் பொறுப்பேற்ற பின்னர் நூலில் மீள ஒப்படைக்க வேண்டிய திகதியைக் குறித்து அங்கத்தவரிடம் நூலை ஒப்படைப்;பார். பொறுப்பேற்ற வாசகர் அட்டைகள் அங்கத்தவர் அனுமதி அட்டை வைப்பதற்கான பிரத்தியேகமான பேழையில் மீள ஒப்படைக்க வேண்டிய திகதியின்  கீழ் பொருள் வாரியாக வரவுப் பதிவெண் ஒழுங்கில் அடுக்கிவைக்கப்படும்;. திகதியைக் குறிப்பிடும் அடையாள அட்டைகள் அங்கத்தவர் அனுமதி அட்டையிலும் சற்று உயரமானதாக இருக்கும், இவற்றின் உதவியால் நூலகர் அங்கத்தவர் மீளப்பெறும் திகதியை இனங்காண்பது இலகுவாகின்றது. வாசகரிடம் ஒப்படைக்கப்படும் நூல் மீளவும் நூலக வாயில் பகுதியில் கடமையாற்றும் பரிசோதகரால் பார்வையிடப்படுகிறது.
•    மீளப் பெறுதல்
நூல்கள் மீள ஒப்படைக்கப்படும் போதும் நூல் வருமதியாகவுள்ள திகதியின் கீழ் அத் திகதிற்குரிய அட்டைக் கூட்டத்தினுள் பொருள்வாரியாக சேர்விலக்க ஒழுங்கில் அடுக்கப்பட்டிருக்கும் அனுமதி அட்டையை மீண்டும் நூலினுள் செருகி அங்கத்தவர் அட்டையை அங்கத்தவரிடம் ஒப்படைப்பார். அதன் பின்னர் வாசகர் வேறொரு நூலையோ அதே நூலையோ மீண்டும் இரவல் எடுக்க உரித்துடையவராவார்.

அனுகூலங்கள்
1.    இம் முறை சுலபமானது.
2.    சிக்கனமானது.
3.    நேர விரயம் குறைந்தது.
4.    ஓரேயொரு பதிவு மட்டும் பின்பற்றப்படுவதால் விநியோகம் மிகவும் விரைவாக செய்யப்பட முடியும்.
5.    நூலினை உரிய நேரத்தில் திருப்பிக் கொடுக்காதவிடத்து     ஞாபகக் கடிதம் அனுப்புதல் இலகுவானது.
6.    எந் நேரத்திலும் எந்த நூல் இரவல் வழங்கப்பட்டுள்ளது என்பதை அறிய முடியும்
7.    நூல் ஒன்றினைத் தேவைப்படுவோருக்கு ஒதுக்கி வைக்க முடியும் 
8.    நூல்களை மீண்டும் துரித கதியில் பாவனைக்கு விடுதல் இலகுவானது.
9.    வாசகர் அட்டை நூலகத்தில் இருப்பதால் எத்தகைய நூல்கள் மிக அதிகமாக சுழற்சிக்கு விடப்படுகின்றன என்பதை அறிய முடியும்
10.    இம் முறையில் நூல்களை இரவல் பெறுவதற்கு விண்ணப்பப்படிவம் பூர்த்தி செய்ய வேண்டிய தேவையோ அல்லது கையெழுத்து போடப்பட வேண்டியதேவையோ இல்லை.
11.    குற்றப்பணம் கணித்தல் சுலபமானது
12.    சுழற்சிக்கு விடப்படுகின்ற நூல்கள் பற்றிய புள்ளி விபரத் தரவுகளை தயாரிப்பது இலகுவானது.
13.    வாசகர் அட்டை நூலகத்தில் இருக்கும் வரை ஒரு நூல் எவரிடம் உள்ளது என்பதை இலகுவாக அறியலாம்.   

பிரதிகூலங்கள்
1.    அங்கத்துவ அட்டைப் பையும் நூல் அட்டையும் தொலைந்தால் எவ்வித நிரந்தரப் பதிவும் கிடையாமல் போகும்
2.    அட்டைகளை கையினால் ஒழுங்கு செய்ய வேண்டி இருப்பதனால் அதிக நேரம் செலவாகின்றது.
3.    அட்டைகளை ஒழுங்கு செய்வதிலும் நூல்களை மீளப் பெறுவதிலும் பிழைகள் ஏற்பட இடமுண்டு
4.    ஒரு வாசகரின் அட்டைப் பையினுள் வேறொருவரின் நூல் பெற்ற அட்டை வைக்கப்பட்டால் யார் நூல் எடுத்தது என அறிவது கடினம்.
5.    நாளாந்தம் திகதி வாரியாக அட்டைகளை அடுக்கா விட்டால் நூல்களை மீளப்பெறும் போது நூல் அட்டையைத் தேடி எடுத்தல் மிகவும் சிரமமாக இருக்கும்
6.    இம்முறையினை நடை முறைப்படுத்த பல நூலக உத்தியோகத்தர்களும் விநியோகத் தட்டுக்களும் பெரிய முகப்பு மேசையும் தேவைப்படுவதனால் சிறிய நூலகங்கள் இம் முறையைப் பின்பற்றுவது கடினம்
7.    விநியோகத் தட்டுக்கள் சீரான முறையில்; ஒழுங்கு செய்யப்படாவிட்டால் சில நேரங்களில் நீண்ட வரிசை (ஞரநஎந) ஏற்படவும் அதனால் நேர விரயமும் ஏற்படும்.

உசாத்துணைச் சேவை
தகவல் அமைப்புகளினால் வழங்கப்படும் சேவைகளிற் தலை சிறந்தது உசாத்துணைச் சேவையாகும். இது பின்வரும் வகைகளில் வழங்கப்படலாம்.
    வாசகரை நூலகத்துக்கு அறிமுகம் செய்தல்
    வாசகருக்கு வழிகாட்டுதல்
    வாசகரையும் நூலையும் பொருத்தமான முறையில் இணைத்து விடுதல்
    உடனடி உசாத்துணைச் சேவை
    தொடர் உசாத்துணைச் சேவை

நூலக அறிமுகச் சேவை
உசாத்துணைச் சேவையில் முக்கியமானது வாசகனை நூலகத்துக்கு அறிமுகப்படுத்தல் நூலகத்துக்கு நூலகம் ஆவணங்களை ஒழுங்குபடுத்துவதிலும், சேவைகளை வழங்குவதிலும் வேறுபட்ட முறைகள் பின்பற்றக் கூடும். எனவே நூலகத்துக்குப் புதிதாக வரும் வாசகர்களுக்கு நூலக விதி முறைகள், சேவைகள் என்பவை பற்றிய அறிமுகம் அத்தியாவசியமானது. புதிய வாசகர்களை நூலகரோ அல்லது நூலக அலுவலர்களோ கூட்டிச் சென்று நூல்களின் தன்மை, நூல்கள் வைக்கப்பட்டிருக்கும் பிரிவுகள், நூலுருவற்ற சாதனங்கள் இருக்குமாயின் அவை பற்றிய விளக்கம், பட்டியலைப் பாவிக்கும் முறைகள், நூலக விதிமுறைகள், அங்கத்தவராகச் சேருவதற்கான ஒழுங்குமுறைகள், போன்ற அனைத்து விபரங்களையும் பொறுமையுடன் கற்றுக் கொடுக்க வேண்டும். விரிவுரை மண்டபத்தில் ஓரிரு விரிவுரைகளுடன் இந்த அறிமுகத்தை முடித்துக் கொள்ளும் போக்கே எம்மிடையே அதிகம் காணப்படுமொன்று. நூலக அறிமுக சேவையைப் பெரிய நூலகங்கள் சரிவரச் செய்வதில்லை என்ற எண்ணப்பாடு வாசகர்களிடம் பரவலாக உண்டு. நூலக விதிமுறைகள் பற்றிய விளக்கக் கையேடுகள், அறிவித்தல் அட்டைகள், ஒழுங்கமைக்கப்பட்ட பட்டியல், திறந்த அணுகுமுறை போன்ற வசதிகள் தாராளமாக இருக்கும் போது வாசகருக்குத் தனித்தனி அறிமுகம் தேவையற்றது என்று நினைத்துக் கொண்டு  ஒரு மேலார்ந்த அறிமுகத்துடன் நாம் ஒதுங்கி;க் கொள்கின்றோம்.

வாசகர் அறிவுறுத்தல் சேவை
தகவல் கட்டுமீறல் அல்லது தகவல் வெடிப்பு என்ற காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனித சமூகத்தில் தரமான நூல்களைத் தெரிந்தெடுத்துப் படிப்பது சுலபமான தொன்றல்ல. அதற்குச் சரியானதொரு வழிகாட்டுதல் மிக அவசியமாகும். அதிலும் குழந்தைகள், சிறுவர், மாணவர், பெண்கள், முதியோர் எனச் சமூகத்தின் அனைத்து மட்ட வாசகருக்கும் சேவை புரிய வேண்டிய ஒரு பொதுசன நூலகத்தில் வாசகருக்கான வழிகாட்டுதல் என்பது மிக மிக அவசியமாகும்.
வாசகர்; அறிவுறுத்தல் சேவை அல்லது வாசகர் வழிகாட்டுதற் சேவை என்பது நூலகத்துக்கு வரும் வாசகரின் தரத்தை அறிந்து அவருக்குத் தேவையான உதவிகளைச் செய்து கொடுத்தல் ஆகும். இச் சேவையைச் செவ்வனே புரிவதற்கு நாம் நூலக வாசகர் ஒவ்வொருவரையும் நன்கு அறிந்திருத்தல் அவசியமாகும். நூலகத்தில் நாம் கூச்ச சுபாவமுள்ள வாசகர், தாழ்வு மனப்பான்மையுள்ள வாசகர், உயர்வு மனப்பான்மையுள்ள வாசகர், சுயநலமிக்க வாசகர், நூல் திருடர், சாதாரண வாசகர், நுண்ணறிவுள்ள வாசகர் என  ஏழு வகையான வாசகரை இனங்கண்டு கொள்ள முடியும் என்று என ஆசியாவின் நூலகவியல் தந்தை எனப் போற்றப்படும் எஸ்.ஆர்.இரங்கநாதன் குறிப்பிடுகிறார.;
உசாத்துணைச் சேவையின் முக்கிய நோக்கம் பொருத்தமான இடத்தில் பொருத்தமான நேரத்தில் பொருத்தமான முறையில் வாசகனையும் நூலையும் இணைத்து விடுதல் என்பதாகும். இதற்கு வாசகனைப் பற்றிய அறிவு எமக்கு எவ்வளவு முக்கியமோ அதை விட முக்கியமானது நூலகம் கொண்டிருக்கும் தகவல் சாதனங்கள் பற்றிய அறிவாகும். கவர்ச்சிகரமான நூலகக் கட்டடம், வசதியான நூலக தளபாடங்களும் உபகரணங்களும், நூலக ஆவணங்களின் பகுப்பாக்க ஒழுங்கமைப்பு, பல் நோக்கத் தேவையை திருப்திப்படுத்தக் கூடிய பட்டியல், நூல்களுக்கான திறந்த அணுகுகை, பொருத்தமான இடத்தில் பொருத்தமான தகவல் வழங்களைத் தெரிவு செய்வதற்கு உதவுகின்ற வழிகாட்டிகள், நேரத்தைச் சேமிக்கக் கூடிய நூல் இரவல் வழங்கல் முறைகள், அமைதியான சூழல், கண்ணைக் கவரும் வண்ணப்படங்கள், இயற்கைக் காட்சிகள் அனைத்துமே ஒரு வாசகனையும் நூலையும் இணைத்துவிடுவதிற் பெரும் பங்கு வகிக்கின்றன. வளர்ச்சியடைந்த நாடுகளின் நூலகங்களுக்கும், எமது நாட்டிலுள்ள சிறப்பு நூலகங்களுக்கும் இது பொருந்தும் என்பதும் அனுபவ ரீதியான உண்மை என்பதில் சந்தேகமில்லை. ஆனால் எம்மிடையே உள்ள பெரும்பாலான பொதுநூலகங்களை எடுத்தால் அதில் ஒன்று கூடச் சரிவர அமையவில்லை என்பதையும் மனதிற் கொண்டே ஆக வேண்டும். எனவே சேவை புரிதல் எங்ஙனம் என்னும் எண்ணப்பாடு தவறானது. உள்ளதைக் கொண்டு உயர்ந்த சேவையாற்றும் நிலையில் எமது பெரும்பாலான நூலகங்கள் இருக்கின்றன. எனவே ஏடுகளில் சொல்லப்பட்டது போன்று நூலக வசதியில் ஒன்று குறையினும் சேவை வழங்குவது சாத்தியமில்லை என்று எண்ணுவதைத் தவிர்த்துத் தற்கால சூழ்நிலைகளுடன் ஒத்துப் போகும்படி எவ்வாறு வழங்குவது என்பதற்கான மாற்றீடுகளைக் கண்டறிந்து அவற்றை வெற்றிகரமாகச் செயற்படுத்துவதில் தான் சமூகத்தின் முன்னேற்றமே தங்கியுள்ளது. இதில் இன்னொன்றையும் கவனிக்கலாம். போதிய வசதிகளும் வாய்ப்புகளும் இருந்தும் சில நூலகங்கள் எவ்வித சேவைகளையும் வழங்குவதாகத் தெரியவில்லை. குறைந்தது ஒரு நூல் பற்றிய தகவலைக் கேட்டாற்; கூட எத்தனை பேர் முகமலர்ச்சியுடன் எழுந்து சென்று உதவி செய்கின்றனர் என்று இலகுவாகக் கணக்கிட்டுக் கொள்ளலாம். வாசகனுக்கு உதவி செய்வதற்கு நிதிப் பற்றாக்குறையைக் காரணங் காட்டுவது பொருத்தமானதாகத் தெரியவில்லை.
எமது நூலகங்களில் இன்று எழுகின்ற அடிப்படைப் பிரச்சனைகளில் ஒன்று போதியளவு நூல்கள் இல்லை என்பது. இன்னொன்று தரமான நூல்கள் இல்லை என்பது. நூலே இல்லை--- பின் எவ்வாறு வாசகனையும் நூலையும் இணைத்து விட முடியும் என்ற வினா எழுவதும் கவனத்தில் கொள்ளத் தக்கது. இங்கு தான் நாம் சிந்திக்க வேண்டியவர்களாக, நாம் கற்ற அறிவிலிருந்து மாற்றீடுகளைக் கண்டு பிடிக்க வேண்டியவர்களாக ஆகின்றோம். நூல்களைப் பணம் கொடுத்து வாங்கிப் போடும் ஆற்றல் எமக்கு இல்லையெனில் வாசகனுக்குத் தேவைப்படும் நூல் வேறு எந்த நூலகத்தில் இருக்கின்றது என்பதை அறிந்தாவது சொல்ல முடியும். இதனைத் தான் ஆற்றுப்படுத்தல் சேவை என்ற பதம் குறிக்கின்றது.

நூலக விரிவாக்க சேவைகள்
பொது சன நூலகங்களினால் வழங்கப்படக் கூடிய சேவைகளில் முக்கியமானதாகக் கருதப்படுவது நூலக விரிவாக்க சேவையாகும். விரிவாக்க சேவைகள் ஏனைய நூலகங்களினாலும் மேற்கொள்ளப்படக் கூடியது எனினும் பொதுசன நூலகத்தைப் பொறுத்து இது மிகமிக இன்றியமையாதது. ஒரு விசேட நூலகத்தையோ அல்லது ஆய்வு நூலகத்தையோ நாம் எடுத்துக் கொண்டால் தகவல் தேவையின் நிர்ப்பந்தம் அவரை அங்கு போகத் தூண்டும் என்ற வகையில் அங்கு வாசகரை ஈர்ப்பதற்கு நாம் எவ்வித சிரமத்தையும் எதிர் கொள்ளத் தேவையில்லை. அங்கு விரிவாக்க சேவைகளை விட வேறு முக்கிய சேவைகளில் கவனம் செலுத்த வேண்டிய தேவை இருக்கும். பொதுசன நூலகத்தைப் பொறுத்துச் சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் இன, மத, வயது வேறுபாடின்றிச் சேவை செய்ய வேண்டிய கடப்பாடு உண்டு. இதற்கு அவர்களை நூலகத்தின் பால் ஈர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் அவசியமானது. முக்கியமான விரிவாக்க சேவைகளில் சில:-

வாசிப்பு வட்டம்.
வாசிப்பு வட்டம் என்னும்போது பொதுவான பொருட்துறைகளில் ஆர்வமுள்ளோரை ஒன்று சேர்த்து அவர்களுக்கென வாசிப்பு வட்டங்களை உருவாக்குதல் வேண்டும். வாசிப்பு வட்டங்களுக்குத் தேவையான நூல்களையும் வாசிப்பு வட்டத்தை ஒழுங்குபடுத்துவதற்கான இடத்தையும் தேர்ந்தெடுத்து வாசிப்பு வட்டங்கள் சிறப்பான முறையில் நடைபெற வழிவகுக்க வேண்டும். வாராந்த மாதாந்த ரீதியில் நடைபெறும் இத்தகைய கருத்தூட்டல்களுக்கு உதவுமுகமாக நூலகங்கள் தமக்கென சிறியளவிலாவது கருத்தரங்கு மண்டபம் ஒன்றையும் கொண்டிருக்குமாயின் வாசிப்பு வட்டம் நடைபெறுவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பேயே அவற்றுடன் தொடர்பான நூல்களை அம் மண்டபத்தின் ஒரு பகுதியிலேயே காட்சிப்படுத்தின் வாசகர்களுக்கு இலகுவாக இருக்கும்.

கல்வியற்றோருக்கான வாசிப்பு
அபிவிருத்தியடைந்து வரும் பெரும்பாலான நாடுகளில் கல்வியறிவற்றோரின் தொகை அதிகமாக இருப்பது மட்டுமன்றி இவர்கள் பொருளாதார, சமூக, கலாசார ரீதியில் மிகவும் பின் தங்கியோராக இருப்பதை இனங் காண முடிகின்றது. இவர்களுக்கு வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்தி ஏனையோரைப போன்று இவர்களையும் சமூகத்தின் மேல் நிலைக்குக் கொண்டு வர வேண்டிய பணி பொது நூலகங்களையே சாரும். இச் சேவையின் மூலம் கல்வியறிவற்றோரும் கல்வி பெற, தகவலைப் பெற, பொழுது போக்க, அகத் தூண்டலுக்கு உதவ, மீளுருவாக்கத்திற்;கு உதவு முடியும். இச் சேவையின் மூலம் மிகச் சிலராவது எழுதவும் படிக்கவும் தூண்டப்படக் கூடும். அவ்வாறு அவர்கள் தூண்டப்பட்டுக் கல்வியறிவு ஊட்டப்பட்டவர்களாக மாறிய பின்னர் அவர்களை மேலும் ஊக்குவிக்க வழிகாட்டலாம். இளமையிற் கல்வி சிலையில் எழுத்துப் போன்று முதுமையில் கல்வி விட்டாலற் போச்சு என்ற நிலை உருவாக விடாது மேலும் மேலும் முதியோர்க்கான வழிகாட்டல் உதவியை மேற்கொள்ளுதல் அவசியமாகும்.

ஏனைய நிறுவனங்களுடன் தொடர்பு
உள்ளுரிலுள்ள கல்வி நிறுவனங்கள் மேற்கொள்ளும் கருத்தரங்குகள், கூட்டங்கள் போன்றவற்றுக்குப் பொருத்தமான இடத்தை வழங்குவதன் மூலமும் கருத்தரங்கிற்;குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுப்பதன் மூலமும் சமூகத்தின் மேல் மட்ட அங்கத்தவர்களுடன் ஒரு இணைப்பை ஏற்படுத்திக் கொள்ளல் ஒரு பொது சன நூலகத்தின் கடமையாகக் காணப்படுகின்றது. சமூகத்தின் வளர்ச்சி அச்சமூகத்தின் மேல் மட்ட அங்கத்தவர்களின் ஆதரவிலும் தங்கியுள்ளது என்பதை நாம் மறுக்க முடியாது. இவர்களுடன் கூடுமான வரை நல்லுறவை வளர்த்துக் கொள்வதன் மூலம் நூலகம் சமூகத்தின் புத்தி ஜீவிகள் நிலையமாக மாறுவதற்கு இத்தகைய சேவை வழிவகுக்கும்.

பொதுச் சொற்பொழிவுகள்
சமூகத்தின் கல்வித் தரம் வாய்ந்தவர்களை அணுகி அவர்கள் மூலமாகப் பொதுச் சொற்பொழிவுகளை ஒழுங்கு செய்யலாம். சொற்பொழிவுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் பொருட்துறை அண்மைக்காலத்திற்;கு உரியதாக இருத்தல் அவசியம். இங்கும் கூட முன்னர் குறிப்பிட்டவாறு கருத்தரங்கு மண்டபத்தின் ஒரு புறத்தில் சொற்பொழிவிற்கான பொருட்துறை சார்ந்த புத்தகங்களைக் காட்சிப்படுத்தலாம்.. இந் நிகழ்வானது சமூக ரீதியிற் பரந்தளவுக்கு விளம்பரப் படுத்தப்படுவதுடன் ஒவ்வொரு சொற்பொழிவிலும் அச் சொற்பொழிவுடன் தொடர்புடைய நூல்களின் விபரங்களும், தற்போது அவற்றில் எவையெவை நூலகத்தில் இருக்கின்றன என்ற விடயமும் அறிவிக்கப்படல் அவசியம்.

கலாச்சார நிகழ்வுகள்
மக்களை ஈர்க்கக்கூடிய முயற்சிகளில் ஒன்றாகக் கலாச்சார நிகழ்ச்சிகளை ஒழுங்கு பண்ண வேண்டும். நாடகம் திரைக்காட்சி போன்றவற்றை ஒழுங்கு செய்து சமூகத்தின் அனைத்து அங்கத்தவர்களையும் பங்குபற்றச் செய்தல் வேண்டும். நூலகப் பக்கமே திரும்பிப் பார்க்காத ஒருவரைத் தன்னும் நூலகப் பக்கம் வரப்பண்ணுவதில் நாம் வெற்றியடைவோமானால் அது நூலகத் தொழிலுக்குக் கிடைத்த வெற்றியாகும்.

நூல் கண்காட்சிகள்
 வெறுமனே நூல்களை மட்டும் காட்சிப்படுத்துவதைத் தவிர்த்து கூடியவரை ஏனைய ஆவணங்களான நுண்வடிவங்கள், பருவ இதழ்கள், கட்புல செவிப்புல ஆவணங்கள் வரைபடங்கள் போன்றவற்றையும் கண்காட்சியில் பார்வைக்கு வைப்பதன் மூலம் நூலகம் என்பது வெறுமனே கதைப்புத்தகம் வாசிப்பதற்குரிய இடம் மட்டுமே என்ற கருத்துநிலையை மாற்ற முடியும்.

சிறுவர்க்கான கதை நேரம்
நூலக விரிவாக்க சேவையில் அதி கூடிய கவனம் செலுத்த வேண்டிய அம்சமாக இது கருதப்படுகின்றது. இலங்கையில் இலவசக் கல்வித் திட்டம் ஏனைய வளர்முக நாடுகளுக்கில்லாத ஒரு வரப்பிரசாதம் என்பது உண்மை. எனினும் வெறும் எழுத்துக்களையும் எண்களையும் மட்டுமே நாம் படிக்கின்றோமே தவிர அறிவை வளர்த்துக் கொள்பவர்கள் எம்மில் வெகு சிலரேயாவர். 85 வீதத்துக்கும் மேற்பட்ட மக்கள் எழுத வாசிக்கத் தெரிந்தவர் எனப் புள்ளி விபரம் கூறுகின்றது. இவர்களில் சுயமாகச் சிந்தித்து ஒரு விடயத்தைத் தீர ஆலோசித்து விடை காண்பவர் எத்தனை பேர். சுயமான கற்றலுக்கு உதவக்கூடிய ஒரே நிறுவனம் பொது நூலகமே என்பதை எவரும் மறுக்க முடியாது. சுயமாகக் கற்றல் என்பதைச் சிறுவர்கள் மூலம் தான் நாம் செயற்படுத்திக் காட்ட முடியுமே தவிர இன்றைய இளம் தலைமுறைக்கு தனியார் கல்வி என்பது வாழ்க்கையின் பிரிக்க முடியாத ஒரு அம்சமாகி விட்டது. சிறுவர்களை நல்ல வழிக்கு வழிகாட்டுவதன் மூலம் தான் சுய சிந்தனையுள்ள எதிர்கால சந்ததியினரை உருவாக்க முடியும் என்பதை மனதில் இருத்தி சிறுவர்க்கான சேவை முறைகளை பொது நூலகங்கள் விரிவு படுத்த வேண்டும். இதைச் செய்து பலனும் கண்டபின்பே எமது மக்களில் 85 வீதமானோர் படித்தவர்கள் என்று எமைப் பறை சாற்றிக் கொள்வதில் பலனுண்டு அர்த்தமும் உண்டு. ஊர்களில் நடைபெறும் திருவிழைக்கள், பண்டிகைகளின்போது நடைபெறும் பேச்சுப்போட்டிகள், கட்டுரைப் போட்டிகளுக்கான தகவல்களை உடனுக்குடன் வழங்கக் கூடியவர்களாக எம்மை நாம் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். சிறுவர் பகுதியெக் கொண்ட நூலகங்களில் பொதுசன நூலகம் முக்கியமானது. ஏனைய நாடுகளைப் போன்று சிறுவர்களுக்கென இங்கே விசேட நூலகங்கள் எதுவுமில்லை என்பதை இங்கு நாம் மனதில் கொள்ள வேண்டும்.

நூலக விளம்பரம்
எம்மவர் மத்தியில் சிலருக்கு நூலகம் என்பது ஏதோ நெருங்க முடியாத இடம், மேதாவிகள், விற்பன்னர்கள், பெரிய மனிதர்கள் மட்டுமே செல்லக் கூடிய இடம் என்ற ஒரு உணர்வு உண்டு. அதேபோன்று நூலகம் செல்வது வேலை மினைக்கேடு என்று எண்ணுபவர்களும் எம்மிடையே உள்ளனர். நூலகத்தில் நூலை இரவல் பெறுவதற்கு கட்டணம் செலுத்தி அங்கத்தவராக மாறவேண்டும். காசு கட்டிப் படித்து அறிவு பெற்று ஆக வேண்டியது ஒன்றுமில்லை எனப் பின் தங்குபவர்களும் எம்மிடையே உள்ளனர். நூலகத்தால் பயன அதிகம் எனக் கருதி அதனைப் பயனபடுத்த விழைவோர் கூட அதனைச் சரிவரப் பயனபடுத்துவதில்லை. பல்கலைக்கழகப் பட்டம் பெற்றவர்களில் நூலகம் செல்பவர்களின், நூலக உணர்வு பெற்றவர்களின் எண்ணிககையை விரல் விட்டே எண்ண முடியும். நூலகங்களின் அமைப்பு, நடைமுறை, பணிமுறை, பயனபாடு என்பன தெரியாமல் அல்லது தெரிந்து கொள்ள இயலாமல், அல்லது தெரிந்து கொள்ள விரும்பாமல், தெரிந்து கொள்ள முயலாமல் இருப்பதற்கு காரணம் மக்களுக்கும் நூலகங்களுக்குமிடையே காணப்படும் பெரியதோர் தொடர்பு இடைவெளி தான். இதனை நிவர்த்திப ண்ணுவதற்குச் சிறந்த முறை நூலக வாரம் கொண்டாடுதல். இதனை நூலகங்களின் வசதிக்கேற்பச் செய்யலாம். கண்காட்சிகளை ஒழுங்குபண்ணுதல், அண்மைக்காலங்களில் வெளியான நூல்களைக் காட்சிக்கு வைத்தல், நூலகத்தின் பணிகள் செயற்பாடுகள் தொடர்பான விபரங்களைத் தொகுத்துச் செய்திக் கடிதங்களாக, அறிக்கைகளாக நூலக உறுப்பினர்களுக்கும் வாசகருக்கும் விநியோகித்தல் போன்றவற்றின் மூலம் இதனை நடைமுறைப்படுத்தலாம்.
வசதியும் வாய்ப்பும் அற்ற நூலகங்களினால் இன்றைய நிலையில் செய்யபக்கூடியது ஆண்டுக்கொரு தடைவ நூலகவாரம் கொண்டாடுவது தான். இந் நிகழ்வின் போது நூலகம் சம்பந்தமான சுவரொட்டிகளை ஊரின் முக்கிய இடங்களில், கல்வி நிலையங்களுக்கு அருகில், கண்ணைக் கவரும் முறையில் வெளியிடுவது  அதிக பயனைக் கொடுக்கும். இதன் மூலம் நூலகவியல் விதியின் மூன்றாவது விதியாகிய நூலுக்கொரு ஆள் என்ற விதியை நிறைவேற்ற முடியும்.

விசேட சேவைகள்
பெரும்பாலும் சில வளர்ச்சியடைந்த பெரிய விசேட நூலகங்களிலேயே இச் சேவைகள் ஆற்றப்படக்கூடும் என்ற கருத்துநிலை நிலவினும் எவ்வித வசதியுமற்ற சிறிய பிரதேசசபை நூலகங்களில் இச்சேவைகள் நூலகரினால் தனித்து மேற்கொள்ளப்படுவதைக் காணும்போது சேவை புரிவதற்கான மனநிலை தான் அவசியமே தவிர நூலக வசதிகள் இரண்டாம் நிலையே என்பது தெளிவாகின்றது.

பத்திரகைத் துணுக்குகளை வெட்டி ஒட்டுதல்.
பத்திரகைகள் பொதுவாக அனைத்து நூலகங்களினாலும் வாங்கப்படுபவை. ஆனால் பெரும்பாலான நூலகங்கள் இவற்றை வாங்கி வாசகர் பார்வைக்கு வைத்து ஒரு மாதமோ இரு மாதஙகளோ சென்ற பின்னர் அவற்றை பழைய கடைக்கு தள்ளி விடுவதே நடைமுறையாக உள்ளது. எமது நாட்டின்; வரலாற்றை எடுத்துக் கூறும் முக்கிய தகவல் மூலமாக  இன்றும் பத்திரிகைகள் இருக்கின்றன. 'இன்றைய செய்தித்தாள் நாளைய கழிவுத்தாள்' என்ற கருத்துநிலை வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு மட்டுமே பொருந்தும். வரலாறு மட்டுமன்றி சமூக பொருளாதார கலாசார மாறுதல்கள் அனைத்தையும் பத்திரிகைகள் தான தாங்கி நிற்கின்றன. மக்களின் குறை நிறைகளை வெளிக்கொணரும் சாதனமாக மட்டுமன்றிப் புதிய கருத்துக்களைப் பரப்புதல், உலகின் பலதரப்பட்ட நாடுகளின் அரசியல், பொருளாதார, சமூக மாற்றங்கள் பற்றிய தகவல்களை வழங்குதல் போன்ற பணிகளையும் எம்மூர்ப் பத்திரிகைகள் ஆற்றுகின்றன. இப்பத்திரிகைகளை பொருளடிப்படையில் முக்கியத்துவம் பெறும் கட்டுரைகள் செய்திகள் போன்றவற்றை வெட்டியெடுத்து பழைய நோட்டுப் புத்தகமோ, வர்த்தமானப பத்திரிகையோ எதுவென்றாலும் கால அடிப்படையில் ஒட்டி  அகர வரிசைப் பொருட் தலைப்புகளின் கீழ் ஒழுங்குபடுத்தலாம். சமூகத்திற்கு மிகவும் அவசியமான பொருளாதார அபிவிருத்திக்கான மாற்றீடுகள், அண்மைக்கால நூல் வெளியீடுகள், பெண்களுக்கான சிறு தொழில் முயற்சிகள், விவசாயம் தொடர்பாக உள்ளுர் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், அனமுரண்பாடுகள்  போன்றவை துணுக்குகள் சேகரிப்பதற்கான பொருட்தலைப்புகளின் சிலவாகும். பொதுசன நூலகங்கள் குறிப்பிட்ட பொருட்தலைப்புகளை தெரிந்தெடுத்த பின்னர் தமக்குள் கலந்து பேசி இப் பணியைச் செய்வதன் மூலம் ஒரே மாதிரியான ஆக்கங்கள் உருவாவதைத் தடுக்க முடியும். இவ்வாறு செய்வதன் மூலம் உயர் மட்ட ஆய்வுகளை மேற்கொண்டுள்ள ஆய்வாரள்களைக் கூட எமது நூலகம் நோக்கி இழுக்க முடியும். பத்திரிகைகளைக் கொண்டு சிறந்த தகவல் வலயம் ஒன்றை உருவாக்கக் கூடிய வல்லமை நிதிப்பற்றாக்குறையையும் போதி வசதிகளின்மையையும் அடிப்படைப் பண்பாகக் கொண்ட நூலகங்களினால் திறம்பட ஆற்றப்பட முடியுமாயின் அது அங்கு கடமை புரியும் நூலகரின் தனிப்பட்ட ஆற்றலிலேயே தங்கியிருக்கும் என்பது தெளிவு.

மொழிபெயர்ப்புச் சேவை
காலங்காலமாக மனித சமூகம் பெற்றிருந்த அறிவும் அனுபவமும்அநிறைந்த அறிவுக் களஞ்சியம் எம்மிடையே உண்டு. எமது பல அனுபவங்களுக்கு அதில் பதிவு இருக்கலாம். வளர்ச்சியடைந்த நாடுகள் தமது ஆய்வு அபிவிருத்திப் பணிகளை முடுக்கி விடுவதும் எம்போன்ற வளர்முக நாடுகள் தமது துரித வளர்ச்சி வீதத்தைப் பரதிபலிப்பதற்காக அவற்றைப் பயனபடுத்துவதும் அறிவு அத்தியாவசிய மூல வளம் என்ற கருத்துநிலையினி தோற்றத்துக்கு இட்டுச் சென்றிருக்கிறது. திரிபில்லாது, பாரபட்சமில்லாது அறிவினை ஆளக்கு ஆள், நாட்டுக்கு நாடு பரப்புதல் நூலகங்களின் குறிப்பாக பொதுசன நூலகங்களின் முக்கிய பணியாக உள்ளது. ஒரு சமூகம் தகவலை மையமாகக கொண்டு பின்னப்பட்டிருக்குமாயின் அறிவு ஒரு சர்வதேச மூலவளமாக கருதப்படுமாயின் அதனைப் பயனபடுத்துவோர் அம்மூலவளத்தினை அணுகச் சம அருகதையுடையோராக இருத்தல் அவசியம். ஆனால் இவ் இலட்சியத்தை அடையமுடியாதபடி மொழித் தடை, பொருளாதாரத் தடை, தொழினுட்ப அறிவு மீதான தடை போன்றன இயங்குகின்றன. மேற்கூறிய அனைத்துத் தடைகளிலும் மொழித் தடையை நீக்குவதற்கு மிகச் சிறதளவு பங்களிப்பையாவது நூலகர் வழங்க முடியும். தனிப்பட்ட ஒரு வாசகனுக்காக நேரத்தைச் செலவழிக்க முடியாது போனாலும் பொதுவான நடப்பு விடயங்களை, மொழிபெயர்ப்புச் செய்து காட்சிப்படுத்துவது உகந்தது.
எம்மிடையே மொழிபெயர்ப்புச் சேவை என்பது வளர்ச்சியடைந்த பெரிய நூலகங்களினால், அல்லது ஆய்வு நூலகங்களினால் வாசகரின் கோரிக்கையடிப்படையில் ஆற்றப்படுவது என்ற எண்ணப்பாடு உண்டு. போதிய நிதி வசதி, நூலக வசதியைக் கொண்ட எத்தனை நூலகங்கள் இவற்றைச் செய்கின்றன என்றால் விடை கேள்விக் குறியே. நூலக உணர்வும் சமூக மேமபாட்டுக்காக உழகை;கும் உணர்வும் எம்மிடையே சிறிதளவு இருந்தாலும் வசதியிருந்து பெரிய நூலகங்களினால் மறுக்கப்படுகின்ற, தட்டிக் கழிக்கப்படுகின்ற, சேவைகளை இச் சமூகத்துக்கு பொது சன நூலகர்களால் வழங்க முடியும். சமூகத்தில் இலைமறை காயாக இருக்கும் பரந்த அறிவும் அனுபவமும் வாய்ந்த சமூக உணர்வு மிக்க அங்கத்தவர்களை இனங்கண்டு அவர்களை அணுகி அவர்கள் உணரும் படி செய்ய முடியுமாயின் அது நூலகருக்கும் நூலக சேவைக்கும் அதனால் இச் சமூகத்துக்கும் கிடைத்த வெற்றி என்றே கூற முடியும்.

குறிப்புதவு நூல்கள்


1.  Harrison,K.C. First steps in Librarianship. London: Crafton,1960.
2.  Harrod,L.M. Harrod`s librarians` glossary of terms used in librarianship documentation and the book craft and reference book. Compiled by Ray Prytherch,6th ed..- London:Gower,1987.
3.  Krishankumar. Reference services. New delhi:Vani educational books, 1984.
4.  Hutchins, Margaret. Introduction to reference work. Chicago: American Library Association,1944.
5.  Katz, William. A. Introduction to reference work. 3rd ed. New york: McGraw Hill,1978.
6.  Mittal,R.L. Library administration.Theory and practice, 5th ed.-New Delhi: Metropolitan book,1983.
7.  Shera,Jesse.H. (1976)Introduction to Librarary Science:Basic elements of Library science. Littletone:Libraries unlimited. p14.


[Seminar for public Librarians conducted by 
Local Government services, Jaffna on  09th-10th, Nov, 1991]

No comments:

Post a Comment