சனசமூக நிலைய நூலகங்கள்
சமூக மேம்பாட்டின் குவி மையங்கள்
பகுதி - 1
மனிதன் :-
இயற்கை என்னும் பரந்த விளைநிலத்தில் உருவாகி, இயற்கையுடன் இசைந்து போகவும், தனது பகுத்தறிவின் துணைகொண்டு சிலசமயம் இயற்கையைத் தனக்கு இசைவாக்கவும் ஆற்றல் பெற்ற இனம் என்ற வகையில் இவ்வுலகில் வாழும் உயிரினங்களுக்குள் உயர்வான ஓர் உயிரி. இயற்கையின் ஆற்றல்களுக்கு எல்லை காணமுடியாதது போன்றே மனிதனது ஆற்றல்களுக்;கும் எல்லை காணமுடியாது என்பதை நித்தமும் உணர்த்திக்கொண்டிருப்பவன். அன்பு, இரக்கம், கருணை, பாசம், காதல், ஈடுபாடு, மரியாதை, பக்தி போன்ற உயரிய மனிதப் பண்புகளை தன்னகத்தே கொண்டமையால் மனிதன் என அழைக்கப்படுபவன். அதேசமயம் ஏமாற்றங்களின்பாற்பட்டு கோபம், வெறுப்பு, குரோதம் போன்ற எதிர்மறைப் பெறுமானங்களுக்கு இலகுவாக ஆட்படக்கூடியவன். சிறு முகமலர்ச்சியில் கண்களின் பாவத்தில், இலேசான தலையசைப்பில்கூட தனது உணர்வுகளைத் துல்லியமாக வெளிப்படுத்தத் தெரிந்தவன். கண்டவை, கேட்டவை, படித்தவை, உணர்ந்தவை என புலன்களால் பெற்ற அறிவை புலனுக்கு புறம்பாக உள்ள பகுத்தறிவின் துணைகொண்டு அலசி ஆராய்ந்து, ஒப்புநோக்கி, உண்மை கண்டு, புதிய கருத்துக்களை உருவாக்கி, அவற்றை மேலும் ஆய்வுசெய்து சரிபார்த்து, கோட்பாடு கண்டு, சட்டமாக்கி உலகை வழிநடத்தும் ஆற்றல் பெற்றவன் என்பதால் மனிதனுக்கு நிகர் மனிதனே. மனிதன் மனிதனாக வாழ்வதற்கு அவனுக்கு இன்றியமையாததாக இருப்பது அறிவு.
சமூகம்........
மனிதன் தனித்து இயங்கமுடியாத ஒரு சமூகப் பிராணி. அவனது தேவைகள் வரையறுக்கப்பட முடியாதளவுக்கு எண்ணிறைந்தவை. மேடும் பள்ளமும், கற்களும் முட்களும், வெளிச்சமும் இருட்டும் நிறைந்த வாழ்க்கைப் பாதையில் தனித்து நடைபோடும் ஆற்றல் மனிதனுக்கு இல்லை. சூழலுக்கு தன்னை சரிசெய்து கொள்ளாத எதுவுமே நிலைகொள்வது கடினம் என்பதை உணர்ந்து, அதற்கமையக் கூடி வாழும் பண்பு கொண்டவன். தேவைகளைப் பூர்த்திசெய்யும் பொருட்டு பலரையும் நாடவேண்டிய நிர்ப்பந்தம் மனிதனுக்கு ஏற்படும்போது அது மனித சமூகத்தின் உருவாக்கத்துக்கு வழிவகுக்கின்றது. தன்னைச் சுற்றியுள்ளவைகள் மீதான அவதானிப்புகளும், அவ் அவதானிப்புகளைப் பரிசோதனைக்குள்ளாக்கி தீர்வு காணமுயலும் மனித மூளையின் ஆற்றலுமே மனிதகுல வளர்ச்சிக்கு அடிப்படையாக இருப்பதனால் சமூகம் என்பது தனிமனிதனுக்கும் முற்பட்டது. 'ஒருவருடன் ஒருவர் கலந்து, இணைந்து எல்லோருக்கும் பொதுவான சில நோக்கங்களை அடைவதற்காக கூடிச் செயற்படும் பல மனிதர்களின் கூட்டே சமூகம்' என்கிறார் கிட்டிங்ஸ்ஜபுனைனiபௌஸ என்ற அறிஞர். ஷபாதுகாப்பு, புதிய அனுபவங்களைப் பெறல், பிறரது தூண்டல்களுக்கு ஏற்ப நடத்தல், பிறர் தம்மைப்போல் ஒருவராக எம்மை ஏற்றுக்கொள்ளல் ஆகிய நான்கு ஊக்கிகளே சமூகத் தொடர்புகளுக்கு அடிப்படைஷ என்கிறார் தோமஸ் என்ற அறிஞர். ஒரு மனிதனின் முழு வளர்ச்சிக்கும் சமூகம் இன்றியமையாதது. உணவு, உடை, உறையுள் போன்ற உடல் தேவைகளும், அன்பு போன்ற உளத்தேவைகளும், பாதுகாப்பு, பொழுதுபோக்கு போன்ற சமூகத் தேவைகளும் நிறைவு பெறுவதற்கு சமூக வாழக்கை மனிதனுக்கு அவசியமானது.
மனிதனும் சமூகமும் :-
ஒரு மனிதனின் முழு வளர்ச்சிக்கு சமூகம் இன்றியமையாதது. மரபு, வயது, பயிற்சி, சூழல் என்பன மனித உருவாக்கத்துக்கு முக்கிய பங்கு வகிக்கின்றன. பிறப்பால் விலங்காக இருக்கும் மனிதன் மனிதனாக வார்க்கப்படுவது குடும்பம் என்ற அச்சில் தான.; மனிதன் சந்திக்கின்ற முதலாவது உறவான தாய் சேய் உறவு மனிதனுக்கு தன்னுணர்வையும், தன்னைச் சுற்றியுள்ள கூட்டாளிகளின் உறவு சமூக உணர்வையும் தோற்றுவிக்கிறது. சமூகத்தின் வளம், சமூகத்தின் மரபு, சமூகத்தின் தேவைகள், சமூகத்தின் சூழல் என்பவற்றின் அடிப்படையிலேயே மனிதனின் முன்னேற்றம் தங்கியுள்ளது. அதேசமயம் தனித்தன்மை மிக்க மனிதர்கள் இன்றி சமூகம் வேரூன்றி நிலைத்து நிற்கமுடியாது. தனிமனித வளர்ச்சியை சமூக முன்னேற்றத்தினின்றும் பிரிக்கமுடியாதளவுக்கு அவை நெருங்கிப் பின்னிப் பிணைந்திருக்கின்றன. எனவே மனிதனின்றி சமூகமில்லை. சமூகமின்றி மனிதப் பண்புள்ள மனிதன் இல்லை.
சமூகமும் பண்பாடும்:-
மனிதனது குழு வாழ்க்கையினின்றும் எழுவது பண்பாடு. எனவே சமூகம் என்பது பண்பாடு இன்றி நிலைகொள்ள முடியாதது. ஷஎந்தவொரு மக்கள் குழுவிலும் உள்ள மக்களினதும் வாழ்க்கை முறை, பழகும் விதம், ஏனைய மக்கள் குழுவுடன் பழகும் தன்மை, அவர்களின் மொழி, எண்ணங்களை வெளிப்படுத்துவதற்கு அம் மொழியைப் பயன்படுத்தும் விதம், பொருட்கள் கருவிகளை உருவாக்கும் முறை, அவற்றைப் பயன்படுத்தும் முறை, அவர்களின் சிந்தனைகள் அனைத்துமே பண்பாடு என்பதற்குள் உள்ளடங்கும்! என்கிறார் போல் சியர்ஸ் என்ற அறிஞர்.
பண்பாடு உயிர்வாழ்வதற்கு பின்வரும் மூன்று அம்சங்களுக்கிடையில் இசைவுத்தன்மை அவசியமாகும்
1. கற்கோடரி முதற் கொண்டு இன்றைய கணினி வரை மனிதனால் உருவாக்கப்பட்ட பௌதிக உபகரணங்கள். பண்பாட்டின் முதிர்ச்சியானது இவ் உபகரணங்களின் பரந்த பயனபாட்டினால் அளக்கப்படுகிறது. கருவிகள் வளர்வதற்கமைய அதனைப் பயன்படுத்துவதற்கான அறிவும் வளர வேண்டும்.
2. கண்டுபிடிக்கப்படும் ஒவ்வொரு கருவியும் எவ்வாறு, எந்தளவிற்கு, என்ன நோக்கத்துக்கு பயனபடுத்தப்பட வேண்டும் என்பது தொடர்பாக சமூக உறுப்பினர்களிடையே உருவாக்கப்படும் கோட்பாடுகள் நம்பிக்கைகள், அனுபவங்கள், கட்டுக்கதைகள், புனைகதைகள், கற்பனை உருவாக்கங்கள் அனைத்தும் ஒன்றிணைந்த அறிவு என்னும் புலமைத்துவம். இந்த புலமைத்துவத்திலிருந்து பெறப்படுகின்ற தத்துவம் ஒரு மனிதனை இன்னொரு மனிதனுடன் தொடர்புபடுத்துவதுடன் உலகம் எங்கணும் தொடர்புபடுத்துகின்றது
3. .இவற்றை செயலுருப்படுத்துகின்ற, பண்பாட்டுக்கு யதார்த்தத்தைத் தருகின்ற சமூக நிறுவனங்கள். உபகரணங்களைப் பயனபடுத்துவதற்கு சமூக உறுப்பினர்களால் ஒன்று திரட்டப்பட்ட அறிவு என்னும் இந்த புலமைத்துவமே மக்களின் நடைமுறைகள் பழக்க வழக்கங்களாக உருவாகி நிறுவனங்களினூடாக செயலுருப் பெற்று சமூக நடத்தையாக உருவாகிறது. எந்தவொரு சமயத்திலும் இந்த புலமைத்துவமானது பௌதிக உபகரணங்களில் கட்டுப்பாட்டை ஏற்படுத்தும். சமூக நிறுவனங்களின் எல்லைப் பரப்பையும் வரையறுக்கும்.
மேற்கூறிய மூன்று அம்சங்களும் ஒன்றுடன் ஒன்று இசைந்து போவதன் மூலமே பண்பாடு என்பது உயிர் வாழ முடியும்.
சமூக நிறுவனங்கள்
சமூகம் தனிமனிதர்கள் சேர்ந்து உருவாக்கப்பட்டது எனினும் அது பலதரப்பட்ட நிறுவனங்களின் கட்டமைப்பாலானது. சமூகத்தின் தோற்றப்பாடுகள், மரபுகள் ,முறைசார்ந்த கட்டமைப்புகள் என்பவற்றின் தொகுப்பே சமூக நிறுவனங்கள் ஆகும். தனிமனிதர் ஒவ்வொருவரும் பெற்றோராக, ஆசிரியராக, தொழிலாளியாக, தொழில் முயற்சியாளராக, சமூக சேவையாளராக என பலதரப்பட்ட வகையில் இந் நிறுவனங்களில் தமது பங்கை ஆற்றுகின்றனர். மனிதரின் தேவையைப் பூர்த்தி செய்யவென மனிதரால் உருவாக்கப்பட்ட இந்நிறுவனங்கள் இன்று சமூக உறுப்பினர்கள் மீது தமது விருப்பங்களை அமுல்படுத்துகின்ற ஒரு கருவியாக வளர்ந்தது மட்டுமன்றி, இவற்றில் சில தமது சமூகத்தின் பரப்பெல்லைக்கும் அப்பால் சென்று ஏனைய சமூகங்களையும் கட்டுப்படுத்தும் அளவிற்கு பாரிய சக்திகளாகவும் உருவெடுத்திருக்கின்றன.
. சமூக நிறுவனங்களின் ஆதார (Primary) நிறுவனங்களாகக் கருதப்படுபவை குடும்பம், கூட்டாளிக்குழு, சுற்றுப்புறச் சமுதாயம் என்ற மூன்றுமே. இவை சமூக உறுப்பினரிடையே முழுக்க முழுக்க நேரடித் தொடர்பைப் பேணுபவை. மனித குலத்தின் ஆரம்ப கட்டங்களிலேயே இந்த ஆதார நிறுவனங்கள் தோற்றம் பெறத் தொடங்கிவிட்டன. பாடசாலைகள், மத நிறுவனங்கள் போன்றவை நேரடித் தொடர்பையும், மறைமுகத் தொடர்பையும் பேணுகின்ற இடைநிலை(Intermediate) நிலையங்களாகக் கருதப்படுகின்றன. முற்றிலும் மறைமுகத் தொடர்பைப் பேணுகின்ற அரசு, தொடர்பு சாதனங்கள் போன்றவை வழிநிலை(Secondary) நிலையங்கள் எனக் கூறப்படுகின்றன. மனித வாழ்வின் ஒவ்வொரு வளர்ச்சிப்படியிலும் இச் சமூக நிறுவனங்களின் செல்வாக்கு அளப்பரியதாகும். கருவறை தொடங்கி கல்லறைவரை ஒவ்வொரு வளர்ச்சிப்படியிலும் செல்வாக்குச் செலுத்தும் வலிமைமிக்க இச் சமூக நிறுவனங்களின் அளவு, தன்மை, ஆதிக்கம் என்பவற்றினூடாக ஒரு சமூகத்தின் தன்மையையும், அதன் சிக்கல் வாய்ந்த அமைப்பையும் இனங்கண்டுகொள்ள முடியும். இதிலிருந்து தனிமனித வளர்ச்சிக்கும், சமூக வளர்ச்சிக்கும் அடிப்படை இச் சமூக நிறுவனங்களே என்பது தெளிவு.
சனசமூக நிலையங்கள் :-
ஒரு குறிப்பிட்ட இடத்தில் நெருங்கிச் சேர்ந்து வசிக்கும் பல குடும்பங்கள் தமக்குள் எண்ணங்கள், குறிக்கோள்கள், பழக்க வழக்கங்கள், வாழ்க்கை முறைகள், தொழில்கள் போன்ற ஏதாவது ஒன்றிலோ அல்லது பலவற்றிலோ சில பொதுப் பண்புகளைக் கொண்டிருக்குமாயின் அது சுற்றுப்புறச் சமூகம் என்ற ஆதார நிறுவனமாக உருப்பெறுகிறது. இந்த ஆதார நிறுவனத்திலிருந்து சேவை மனப்பான்மை மிக்க உறுப்பினர் தமக்குள் ஒன்றுசேர்ந்து தமது மக்களுக்கு சேவை புரிவதற்கென உருவாக்கும் நிலையங்களே சனசமூக நிலையங்களாகும். மனிதர் ஒருவருக்கொருவர் உதவுவதற்கும், உறவு கொண்டாடுவதற்கும் தோழமை கொள்வதற்கும், ஒன்றிணைந்து செயற்படுவதற்கும் தமக்குள் நேரடித் தொடர்பைப் பேணுகின்ற சிறிய எண்ணிக்கையுள்ள உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பே சனசமூக நிலையங்களாகும். இவை விவசாய சமுதாயங்களாகவோ, கடற்தொழிலை சிறப்பாகக் கொண்ட கடற்தொழில் சமுதாயங்களாகவோ அல்லது தொழிற்துறைச் சமுதாயங்களாகவோ இருக்க முடியும். மனித வாழ்வின் பெரும்பகுதி சுற்றப்புறச் சமூகம் என்ற வட்டத்துக்குள்ளேயே கழிகின்றது. மனிதப் பண்புகளை விருத்தி செய்யும் இத்தகைய ஆதார நிலையங்களை மனிதப்பண்புகளின் 'வளர்ப்புப் பண்ணைகள்' என சமூகவியலாளர் அழைக்கின்றனர்.
பகுதி - 11
இன்றைய மனிதனும் சமூகமும் :-
இன்றைய சமூகம் தகவல் சமூகம் எனப்படுகிறது. அறிவே ஆற்றல் என்ற கோஷம் முன்வைக்கப்பட்ட கைத்தொழில் சமூகத்திலிருந்து தகவலே ஆற்றல் என முழங்கும் தகவல் சமூகத்தில் நாம் வாழ்கின்றோம். குடும்பம், சுற்றுப்புற சமூகம், கிராமம் போன்றவற்றின் வரையறைகள் உலகக் கிராமம் என்ற கருத்து நிலைக்குள் தமது தனித்துவத்தை மெல்ல மெல்ல இழந்து வருகின்றன. உலகின் வேகத்தோடு ஒட்டி ஓடவேண்டிய நிர்ப்பந்தம் மனிதனுக்கு இருப்பதால் பம்பர வேகத்தில் சுழலும் இன்றைய உலகில் மனிதனின் உதடுகள் அதிகம் உச்சரிக்கும் வார்த்தை 'நேரமில்லை' என்பதே. நேரமில்லாத உலகில் தன்னுணர்வையும், சமூக உணர்வையும் தக்கவைப்பதற்கு பாரிய பிரயத்தனம் தேவை. சாதனைப் படிகளின் உச்சியில் நிற்கும் மனிதனால் மனிதன் தலையை நிமிர்த்தும் தடவைகளை விட அம்மனிதனால் உருவாக்கிவிடப்பட்ட சமூக, பொருளாதார, அரசியல், கலாச்சார ஏற்றத்தாழ்வுகளின் அபாயகரமான விளைவுகளை சந்தித்துக்கொண்டிருக்கும் மனித சமூகத்தைப் பார்த்து மனிதன் தலைகுனியும் தடவைகள் அதிகமானவை.
அன்பு, பாதுகாப்பு, பரஸ்பர உறவு என்பவற்றின் அடிப்படையில் உருவான குடும்பம் என்ற ஆதார நிறுவனம் இன்று அவற்றை புறந்தள்ளி பணத்துக்கும் அந்தஸ்து மிக்க தொழிலிற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் நிறுவனமாக மாறிக்கொண்டு வருகிறது. தைரியம், பற்றுறுதி, பரந்த மனப்பாங்கு, பொதுநலப் பண்பு போன்றவற்றை வளர்ப்பதற்கு உதவும் விளையாட்டுக் குழுக்களுடன் குழந்தைகள் செலவிட்ட காலம் மாறி, தனியார் கல்வி நிலையங்களில் கூடுதலான நேரம் முடக்கப்பட எஞ்சியுள்ள நேரத்தில் கணனி விளையாட்டுக்களும், வியாபார ரீதியான வர்த்தக மையங்களும் முக்கியப்படுத்தப ;படுவதனால் குழந்தைகளை பிரதான அங்கத்தவராக கொண்ட விளையாட்டுக்குழு என்ற வலுமிக்க ஆதார நிறுவனம் நகர்ப்புற சமூகங்களில் மெல்ல மெல்ல மறைந்துகொண்டு போகிறது. வாழ்க்கைப் படிப்பை புறந்தள்ளி ஏட்டுப்படிப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் பாடசாலை என்ற நிறுவனம், விரும்பத்தகாத மனவெழுச்சிகளை மனிதரிடம் குறிப்பாக குழந்தைகளிடம் தூண்டிவிடும் திரைப்பட ஊடகங்கள், நின்று நிதானித்து சிந்தித்துப் பார்த்து செயற்பட நேரமற்ற பம்பர உலகில் தொகை ரீதியாகவும் தரரீதியாகவும் பெருத்துக்கொண்டு போகும் தகவல் வெள்ளத்துக்குள் நல்லதை, பொருத்தமானதை தெரிவு செய்வதற்கான நேரமோ, பொறுமையோ, அறிவோ அற்ற மனித சமூகம் இப்படி இன்றைய சமூகத்தின் எதிர்க்கணியப் போக்கை விவரித்துக்கொண்டே போகலாம்.
உலகம் கிராமமாக சுருங்கிவரும் இன்றைய காலத்தில் ஒவ்வொரு சமூகமும் தமது தனித்தன்மையை வெளிக்கொணர்வதற்கு தம்மாலான வகையில் முயற்சி செய்கின்றன. கொடிய விலங்குகளிடமிருந்து தன்னைப் பாதுகாக்க, கூடி வாழ முற்பட்ட மனித சமூகம் இன்று மனிதர்களிடமிருந்து தம்மைப் பாதுகாக்கவேண்டிய தன்மைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. வலியது மெலியதை நசுக்கும் என்ற இயற்கையின் விதி மனிதனுக்கு விதிவிலக்கானதொன்றல்ல. எனவே நசுக்கப்படும் சமூகம் தன்னை காத்துக்கொள்ளவும், தனித்தன்மையை பேணிக்கொள்ளவும் சமூக மேம்பாடு அவசியமானது
சமூக மேம்பாடு:-
சமூக மேம்பாடு என்பது சமூகத்தின் நலனை மேம்படுத்தும் பொருட்டு சமூகத்தின் ஆதார நிறுவனமான குடும்பம் என்ற நிறுவனம் முழுமையான வளர்ச்சி பெறவும், குடும்பத்தின் உறுப்பினரான தனிமனிதர் ஒவ்வொருவரும் தன்னிறைவும் திருப்தியும் பெறவும் வேண்டிய வாய்ப்பை ஏற்படுத்தித் தருவதை நோக்கமாகக் கொண்டது. தனிமனித வளர்ச்சிக்கு அறிவு எந்தளவுக்கு அடிப்படையாக உள்ளதோ சமூக வளர்ச்சிக்கும் அடிப்படை அறிவே. விவசாயத்தை முதன்மையாகக் கொண்ட நிலபிரபுத்துவ சமூகமொன்றில் 'வரப்புயர' என்ற ஒற்றைச் சொல்லின் மூலமே சமூகத்தின் மேம்பாட்டுக்கு உழவுத்தொழிலின் அவசியத்தை அவ்வைக்கிழவி வெளிக்கொணர்ந்தது போன்று, தகவலை முதன்மையாகக் கொண்ட இன்றைய சமூகத்தில் 'அறிவுயர' என்ற ஒற்றைச் சொல்லின் மூலம் தனி மனித அறிவு குடும்பத்தின் மேம்பாட்டையும்; குடும்ப உறுப்பினர்களது மேம்பாடு சுற்றுப்புறச் சமூகத்தின் மேம்பாடு; அதன் வழியில் சமூக மேம்பாட்டையும்; எவ்வாறு வளர்கக முடியும்; என்பதை வெளிக்கொணர முடியும்.;. எந்தவொரு சமூகமும். சமூக, பொருளாதார துறைகளில் முன்னேற வேண்டுமாயின் பிற நாடுகளில் தங்கியிருக்கும் நிலை மாறி நாட்டின் இயற்கை வளங்களும் மனித வளங்களும் பூரணமாகப் பயன்படுத்தப்பட வேண்டும் பொது மக்களின் நலனையும் வளர்ச்சியையும் அதிகரிக்க உதவும் வகையில் அவ்வளங்களை பயனபடுத்தி அதிக பொருட்களை உற்பத்தி செய்வதும் சிறந்த சேவையை அளிப்பதுமே அபிவிருத்தியின் முக்கிய நோக்கமாகும். எந்தவொரு அபிவிருத்தி முயற்சியின் இலக்கு மனிதனே. அபவிருத்திக்கான கருவியும் மனிதனே. அபிவிருத்தியின் கர்த்தாவும் மனிதனே. மனிதனுக்காக மனிதனைக் கொண்டு மனிதனால் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளே அபிவிருத்தியைத் தரும்.
எங்கிருந்து தொடங்கலாம்?
.சமூக மேம்பாட்டை எங்கிருந்து தொடங்கலாம் என்ற வினா எழுப்பப்படும்போது நாட்டு மக்களில் முக்கால் பகுதிக்கு அதிகமாக வசிப்பது கிராமங்களில்தான் என்பதற்கமைய கிராமம் தேசத்தின் அபிவிருத்தியை அளவிடுவதற்கான சிறந்த அளவுகோலாக பொருளியல் வல்லுனர்கள் கண்டனர். ஆனால் உலகமயமாக்கல், நகரமயமாக்கல், போன்ற சிந்தனைகள் காரணமாக கிராமம் என்ற கருத்துநிலை மெல்ல மெல்ல தனது வரையறைகளை இழந்து வருவதும் கிராமமா நகரமா என்று தெளிவாக வரையறுக்க முடியாதபடி இரண்டும் கெட்டான் நிலையில் கிராமங்கள் இருப்பதும் இதன்காரணமாக பட்டின சபைகள், கிராம சபைகள் என்பன இல்லாமல் ஆக்கப்பட்டு இரண்டையும் இணைத்து பிரதேச சபைகள் உருவாக்கப்பட்டிருப்பதும் கிராமத்திலும் பார்க்க குறுகிய வரைவெல்லை ஒன்றினை அபிவிருத்திக்கான அளவுகோலாக தெரிவு செய்யவேண்டிய தேவையை உருவாக்கியுள்ளது.
கிராமங்களை முன்னேற்றுவதற்கு கிராம அபிவிருத்திச் சங்கங்கள் அமைக்கப்பட்டு அதனூடாக சமூக பொருளாதார, கல்வி, சுகாதார, கலாச்சார அபிவிருத்தியை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பின்பற்றப்படுகின்றதெனினும் கிராம மக்களின் உணர்வுபூர்வமான பங்குபற்றல் இல்லாத எதுவுமே அபிவிருத்தியை கொண்டுவராது என்பதற்கான எடுத்துக்காட்டுகளாக இவை காணப்படுவது கண்கூடு. இத்தகைய சங்கங்கள் உள்ளுர் சுய உதவியிலேயே பெரிதும் தங்கியிருப்பதும் சனசமூகநிலையங்கள், கூட்டுறவுச் சங்கங்கள், விவசாய சபைகள், பெற்றோர் ஆசிரிய சங்கங்கள், சமய நிலையங்கள், மக்கள் சபைகள் போன்றவற்றுடன் தொடர்புகொண்டே கிராம அபிவிருத்தியை முன்னெடுக்க வேண்டியிருப்பதும், ஒரு கிராமமானது ஒன்றிற்கு மேற்பட்ட சுற்றுப்புற சமுதாயங்களை உள்ளடக்கியிருப்பதனால் இவர்களிடையே காணப்படும் சமூக பொருளாதார, கலாச்சார ஏற்றத்தாழ்வுகள் கிராம அபிவிருத்தி என்ற கருத்துநிலைக்கு சரியான பங்களிப்புச் செய்யமுடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளன. எனவே குடும்பத்திற்கு அடுத்ததாக சுற்றுப்புற சமுதாயத்தினின்றும் தோற்றம் பெறும் சனசமூக நிலையங்கள் கிராம அபிவிருத்திக்கான தள மையமாக உருவாக்கப்படக்கூடிய வாய்ப்பு உண்டாகிறது.
யார் தொடங்குவது.?
சமூக மேம்பாட்டில் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் பங்குண்டு என்பது ஏற்கனவே குறிப்பிடப்பட்டிருக்கிறது. முழமையான சமுதாய ஈடுபாட்டின் மூலமே முழமையான சமுதாய உயர்வு ஏற்பட முடியும். சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதில் இளைஞருக்கும் வயது வந்தோருக்கும் பாரிய பங்குண்டு. வருங்கால சமூகத்தைத் தாங்கப்போகும் இன்றைய குழந்தைகளின் ஆராய்வூக்கத்துக்கு களமமைத்துக் கொடுத்தல், இறுதிக் காலத்தை அமைதியாக கழிக்க விரும்புகின்ற முதியோர்களின் ஓய்வு நேரத்தைப பயனள்ளதாக்கல், இயறகை செயற்கைக் காரணிகளின் தாக்கத்தால் உடல் உளத் தாக்கமுற்ற சமூக உறுப்பினர்களை அரவணைத்துக் காத்தல், எல்லாவற்றுக்கும் மேலாக ஒவ்வொரு சமூக உறுப்பினரிடையேயும் நாம் என்ற உணர்வைத் தோற்றுவிப்பதனூடாக சமூகத்தில் தனது பங்கு பற்றிய சிந்தனையை உருவாக்குதல் போன்ற பாரிய பணிகளை ஏற்று நடத்தும் பொறுப்பு சமூகத்தின் இளைய தலைமுறையிடமும் வயது வந்தவர்களிடமுமே ஒப்படைக்கப்பட்டிருக்கிறது பொதிந்த. செயலூக்கமும் உற்சாகமும் எதையும் கேள்விக்குட்படுத்தும் அறிவு வேட்கையும் மிக்க இளைஞர் சமுதாயத்தின் ஒத்துழைப்பும், பொறுமையும் அனுபவ அறிவும் நிரம்ப்பெற்ற வயது வந்தோர்களின் ஒத்துழைப்பும் சரியான வகையில் ஒன்றணையும் போதே சமூகத்தின் எந்த வொரு நோக்கமும் செயலுருப்பெறும் வாய்ப்பு உண்டாகிறது. இவ் வாய்பபை கொண்டுள்ள ஒரேயொரு அமைப்பு சனசமூகநிலையமாகவே அமைய முடியும்.
பகுதி -3
எப்படித் தொடங்குவது?
சமூக மேம்பாட்டை எப்படித் தொடங்குவது என்ற வினா எழுப்பப்படும் போது
மனிதரெல்லாம் அன்பு நெறி காண்பதற்கும்
மனோபாவம் வானைப்போல் விரிவடைந்து
தனிமனித தத்துவமாம் இருளைப்போக்கி
சகமக்கள் ஒன்றென்ப துணர்வதற்கும்
இனிதினிதாய் எழுந்த உயர் எண்ணமெல்லாம்
இலகுவது புலவர் தரு சுவடிச் சாலை
புனித முற்று மக்கள் புதுவாழ்வு வேண்டில்
புத்தகசாலை வேண்டும் நாட்டில் யாண்டும்
என்ற புரட்சிக் கவி பாரதிதாசனின் அர்த்தம் பொதிந்த வரிகள் இங்கு உயிர் பெறுகின்றன.
சிதைந்துகொண்டு போகும் மனிதப் பண்பை விருத்தி செய்வதற்கு அடிப்படையாக இருப்பது அறிவு. தொடர்ச்சியான கற்றல் செயற்பாட்டினூடாக ஒரு பொருட்துறை பற்றி ஒரு மனிதன் மூளையில் பதிந்து வைத்திருக்கின்ற அல்லது அனைத்து மக்களாலும் பயன்படுத்தப்படும் பொருட்டு பகிர்ந்து கொள்ளப்படுகின்ற தகவலும் அது தொடர்பான புரிதலும் அறிவு எனப்படுகிறது. இந்த அறிவை அடக்கிக்கொண்டிருப்பவை நூல்கள். ஒரு நூலானது கல்வியறிவு தந்து நடைமுறைநிலை தெரிவித்து கடமைகளைக் காட்டி, உரிமைகளைச் சேர்த்து, பொருளாதாரத்தை வளர்த்து கலாச்சாரத்தைக் காக்கும் செயற்பண்புகள் கொண்டது என்கிறார் இந்திய நூலகவியல் விற்பன்னர் வே. தில்லைநாயகம். ஒரு நூலகத்தில் இருக்கும் நூல்கள் தகவலைத் தருபவை, மன ஆறுதலைக் கொடுப்பவை, புத்துயிர்ப்பூட்டுபவை, அறிவைத் தருபவை என பலதரப்பட்டவையாக அமைகின்றன. இவை அனைத்தும் களிமண் பதிவுகள் முதற் கொண்டு இன்றைய கணினிப் பதிவுகள் வரை மனித வரலாற்றுக் கட்டங்களில் பல வளர்ச்சிப் போக்குகளைச் சந்தித்திருக்கினறமையை நூலகங்களில் குவிந்து கிடக்கும் தகவல் சாதனங்கள் மூலம் கண்டு கொள்ள முடியும்.
நூல்கள் இருக்கும் இடம் நூலகம். நூலகங்களை அவற்றின் நோக்கத்தின் அடிப்படையில் கல்வி சார் நூலகங்கள் பொது நூலகங்கள் சிறப்பு நூலகங்கள் என மூன்று பெரும் பிரிவாக வகைப்படுத்த முடியும். இவற்றில் பொது நூலகங்கள் மக்களால் மக்களுக்காக மக்களே முன்னின்று நடத்துவது பொது நூலகம் எனப்படுகிறது. எமது சமூகத்தில் பொது நூலகப் பணியை மேற் கொள்வதில் மாநகர சபை நூலகங்கள், பிரதேசசபை நூலகங்கள் கிராம நூலகங்கள் சனசமூக நிலைய நூலகங்கள் என்பன உள்ளடங்குகின்றன.மாநகரசபை பிரதேசசபை நூலகங்களின் பரப்பெல்லை விரிவடைந்ததன் காரணமாக சமூகத்தின் அனைத்து உறுப்பினர்களும் பயனபடுத்தக்கூடியவகையில்; ஒழுங்கமைப்பதற்கு மிகப் பொருத்;தமான இடம் சனசமூக நிலையங்களினால் உருவாக்கப்படும் நூலகங்களாகவே இருக்க முடியும். எனவே சனசமூக நிலையம் ஒன்றின் நூலக உருவாக்கமானது அறிவு பரப்பும் மிகச் சிறந்த சாதனமாக இருக்கக்கூடிய வாய்ப்புண்டு. இந்த அறிவை பாடசாலைகள் வழங்கமுடியாதா என்ற கேள்வி எழுகிறது.
பாடசாலைகளும் சனசமூக நிலையங்களும்.
கற்றல் என்பது வாழ்க்கையினின்றும் எழும் ஒன்று. வாழ்க்கை அனுபவங்களின் ஒரு பகுதியை மட்டுமே பாடசாலைகள் மனிதனுக்கு வழங்க முடியும். கல்வி என்பது உயர்குடியினருக்கு மட்டுமே சொந்தமானது என்ற காலகட்டத்தில் ஆரம்பித்த குரு குலக்கல்வி முறையிலிருந்து தொடங்கி அனைவருக்கும் கல்வி என்ற கோஷம் முன்வைக்கப்பட்ட காலத்தில் ஆரம்பித்த நிறுவனமயப்பட்ட கல்வி முறையில் நடை பயின்று குழந்தை மையக்கல்வி என்ற கருத்து நிலைக்கு முக்கியத்துவம் கொடுத்து சமூக மையக் கல்வியில் கல்விச் சிந்தனைகள் அனைத்தும் ஒருமுகப்படுத்தப்பட்டுள்ள இன்றைய கால கட்டத்தில் மனிதனை மனிதனாக உருவாக்குவதே உண்மைக் கல்வியின் நோக்கம் என்ற சுவாமி விவேகானந்தரின் சிந்தனை உடல் உள்ளம் ஆன்மா என்பவற்றின் சிறப்பு மிக்க பண்புகளை வெளிக் கொணர உதவுவது கல்வி என்ற காந்தியின் சிநதனை போன்ற பலதரப்பட்ட உயர் சிந்தனைகளையும், தொழில் நோக்கம், அறிவு நோக்கம், ஒருமைப்பாடுடைய ஆளமையை வளர்த்தெடுக்கும்; இசைந்த வளர்ச்சி நோக்கம், ஒழுக்க நோக்கம், ஓய்வு நோக்கம், சமூக நோக்கம் என பலதரப்பட்ட நோக்கங்களையும் சந்தித்திருக்கும் இன்றைய கல்வி முறையானது செயற்பாட்டளவில் செய்துள்ள சாதனைகள் மிக மிகக் குறைவு. கல்வித்திட்டங்களில் ஏற்படுத்தும் மாற்றங்களின் வேகத்துக்கு ஈடு கொடுக்கும் வகையில் ஆசிரியர்களுக்கான பயிற்சியோ அவர்களிடம் மனமாற்றத்தைக் கொண்டு வருவதற்கான தூண்டுதல்களோ மிகக் குறைவு. வறுமை வேலையின்மை போன்ற பொருளாதாரக் காரணிகளின் தாக்கம் மிக அதிகமாக உள்ள எமது தேசத்தில் கல்வியின் முழு நோக்கமுமே தொழில் நோக்கமாகவே உள்ளது. மேலை நாட்டு அறிவியல் கண்டுபிடிப்புகளின் பாவனையாளராகவே இருக்கும் எமக்கு இக் கண்டுபிடிப்புகளை பயன்படுத்துவதற்கான தேடலில் வாழ்வின் பெரும் பகுதி கழிந்து விட இக் கண்டுபிடிப்புகளின் உன்மையான பயனபாடு என்ன இதன் நன்மைகள் தீமைகள் போன்றவறறை அறிவதற்கான வாய்ப்புகளை இழந்து விடுகின்நோம்.
போட்டி மிக்க தொழில் சநதையில் நின்றுபிடிப்பதற்கேற்ற வகையில் தான் எமது நகர்வுகள் இருப்பதன் காரணமாக வாழ்க்கைப் படிப்பிற்கான கால அவகாசமோ சிந்தனையோ எம்மிடம் அருகி வருவதே கண்கூடு. தொழில் சந்தையில் போட்டிபோடக்கூடிய வல்லமையைத் தரும் பாடசாலைகளை நோக்கி தமது பிள்ளைகளை நகர்த்தும் பெற்றோர்கள,; பாடசாலைகளை பெறுபேறுகளின் அடிப்படையில் தரப்படுத்தும் கல்வித்திட்டங்கள் அந்தஸ்து மிக்க வாழ்க்கைக்குரிய மூலதனமாகக் கல்வியை கருதும் எமது சமூகத்தின் மனப்பாங்கு என்பன மாறும் வரை பாடசாலைகள் சமூக மையக்கல்விக்குரிய மையத் தளங்களாக இருக்கும் வாய்ப்பு சாத்திய மற்றதொன்றாகும். மாறாக தொழில் நோக்கம் உச்சநிலையடைந்து நாம் என்ற உணர்ச்சிக்குப் பதில் நான் என்ற உணர்வு மனிதனுக்குள் வேரோடி தான் பிறந்த தவழ்ந்த ஓடித்திரிந்த மண்ணையே மறந்து விடும் இயல்பையே நாம் கண்கூடாகப் பார்க்கிறோம்.
மனித வாழ்க்கையின் பெரும்பகுதி குடும்பம் சுற்றுப்புறச் சமூகம் என்ற வட்டத்துக்குள்ளேளே கழிகிறது. ஷகுழந்தையின் முதல் ஆறு ஆண்டுகளின் வாழ்க்கையை என்னிடம் ஒப்படையுங்கள் அதற்குப்பிறகு அதன் வாழ்க்கை அமைப்பை எப்படிப்பட்டவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதைப்பற்றி எனக்கு கவலையில்லைஷ எனக் கூறும் பெஸ்டலோசி என்ற தலைசிறந்த கல்வியாளரின் கூற்று மனித வாழ்க்கையில் குடும்பம்மும் சுற்றுப்புறச் சமூகமும் வகிக்கும் பங்கை தெளிவாகக் காட்டப் போதுமானது. எனவே இவற்றுக்குள் இருந்து உருவாக்கப்படும் சன சமூக நிலையங்கள் சமூக மேம்பாட்டின் அடித்தளங்களாக உருவாக்கப்பட வேண்டியதன அவசியம் பற்றிய கருத்துமுரண்பாட்டிக்கு வாய்ப்பில்லை என்றே கூறவேண்டும்.. அறிவுத் தேடல் இங்கிருந்து தொடங்கவேண்டும். பார்த்துச் செய்தல் குழந்தையின் பிரதான பண்பு என்பதனால் தேடல் உணர்வுக்கான களம் இங்கிருந்து அமைவதே பொருத்தமானது. பாடசாலைக்கு செல்வதற்கு முன்னுள்ள குழந்தைப் பருவத்தின் ஆராய்வூக்கத்திற்கு களம் அமைத்து கொடுக்கக் கூடிய வாய்ப்பு சனசமூக நிலையங்களினால் நடத்தப்படும் பாலர்கல்வியும் சிறுவர் நூலகமும் சரியான முறையில் செயற்படுவதனூடாக அடையப்பட முடியும்.
நடைமுறை நிலை
தமது பலம் தமது முக்கியத்துவம் எத்தகையது என்பது தமக்கே தெரியாத நிலையில்; இன்றைய சனசமூக நிலையங்கள் இருப்தையே நாம் கண்கூடாகக் காண்கிறோம். பெரும்பாலான சனசமூக நிலையங்கள் ஓரிரு பத்திரகைகளை வாசிப்பதற்கான வாசிகசாலைகளாக மட்டுமே தமது பணியைக் குறுக்கி விடுகின்றன. சில சனசமூக நிலையங்கள் வாசிக சாலையுடன் பாலர் பாடசாலை விளையாட்டுக் கழகம் என்று ஓரளவிற்கு தமது பணியை விரிவுபடுத்தியிருக்கின்றன. குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஓரிரு சனசமூக நிலையங்கள் மட்டும் நூலகம் என்ற எண்ணக்கருவிற்கு ஓரளவுக்கு வடிவம் கொடுத்திருப்பதுடன் தற்போதைய தகவல் சமூகத்தின் இரு கண்கள் எனப்படுகின்ற கணனிப்பயிற்சி, ஆங்கிலக் கல்வி என்ற இரண்டையும் நோக்கி தமது பணிகளை விரிவுபடுத்தியிருக்கின்றன. நிதி பெறும் நோக்கத்துக்காக நூலகம் என்ற அமைப்மை உருவாக்கி அதனமூலம் பெற்றுக்கொண்ட நூல்களையே அலுமாரிகளில் பூட்டி வைத்திருக்கும் சனசமூக நிலையங்களையும் இங்கு மறந்துவிட முடியாது.
.வாசிக சாலை என்பது மிக ஆழமான உட்பொருளைக் கொண்ட ஒரு சொற்பதம் என்பதை உணர்ந்து கொள்ளாமலேயே சனசமூக நிலையங்களில் பெரும்பாலானவை வாசிக சாலை என்ற பெயராலேயே இன்றும் இனங்காணப்படுகின்றன. வாசிப்பு மனிதனைப் பூரண மனிதனாக்குகிறது என்ற புகழ்மிக்க வாசகத்தின் உட்பொருள் எதுவோ அந்த உட்பொருளைத் தருவதே வாசிகசாலையாகும். ஆனால் நடைமுறையில் நாம் காணும் வாசிக சாலைகள் ஓரிரு புதினப் பத்திரிகைகளை வாசிக்கும் இடமாகவே இன்றும் இருக்கின்றன. எவ்வளவுதான் கல்வியறிவு வீதத்தில் உலகின் வளர்ந்த நாடுகளுக்கு இணையாக எமது சமூகம் இருப்பினும் எம்மிடையே வாசிப்புப் பழக்கம் என்பது மிக மிகக் குறைவு. இது எமது எண்ணங்களைக் குறுக்கி எம்மிடையே நான் என்ற உணர்வை மேலோங்கச் செய்கிறது. இதுவே சமூக மேம்பாட்டின் தடைக்கல்லாகவும் அமைந்து விடுகிறது. சனசமூக நிலைய நூலகங்களினால் வழங்கப்படும் சேவைகளினூடாக ஷநாம்! என்ற உணர்வை தோற்றுவிக்க முடியும்.
கனவு மெய்ப்பட
எம்மவர் மத்தியில் நூலகம் என்பது ஏதோ நெருங்க முடியாத இடம், மேதாவிகள் பெரிய மனிதர்கள் மட்டுமே செல்லக்கூடிய இடம் என்ற உணர்வு உண்டு. அதேபோல் நூலகம் செல்வது வேலை மினைக்கேடு என்று எண்ணுபவர்களும் எம்மிடையே உள்ளனர். நூலகத்திற்கு விருமபிச் செல்பவர்களின் அறிவுத் தேடலை அப்படியே நசுக்கிவிடக்கூடியளவுக்கு சில நூலகர்களின் மனப்பாங்கு இருப்பது இங்கு குறிப்பிடப்படவேண்டியதாகும்.
நூல்கள்,வாசகர்,நூலகர் என்ற மூன்று கூறுகளும் ஒன்றுடன் ஒன்று சரிவர இணையும் போதே நூலகம் ஒன்றின் நோக்கமானது நிறைவேறுகிறது. இதில் நூலகர் என்பவரின் பங்கே பிரதான ஊக்கியாக செயறபட வேண்டும். நூலகத்தினால் வழங்கப்படக்கூடிய சேவைகளை இங்கு கணிசமானளவுக்கு பட்டியலிட்டுக்கொண்டு போகலாம். ஆனாலும் வாசிப்புப் பழக்கத்தை சமூக உறுப்பினர் அனைவரிடையேயும் ஏற்படுத்தலே எல்லாவற்றிலும் பிரதான பணியாகும்.இலாப நோக்கம் உள்ள நிறுவனம் ஒன்று தனது வாடிக்கையாளரை கவருவதற்கு என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமோ அத்தனை நடவடிக்கைகளையும் நூலகர் என்பவர் இலாபம் எதுவுமற்ற நூலக சேவையில் மேற்கொள்ளுவதன் மூலமே சமூக உறுப்பினரிடையே வாசிப்புப் பழக்கத்தை உருவாக்க முடியும். கவர்ச்சியான நூலகக் கட்டிடமோ வசதியான நூலக தளபாடங்களோ, பெருந்தொகையான நூல்களோ இலகுவான நூலக ஒழுங்கமைப்போ வாசிப்புப் பழக்கமற்ற சமூகத்தில் பயனபாடற்றது. நூலகத்தை மக்கள் நாடாத ஒரு சமூகத்தில் வாசிப்புப் பழக்கத்தை உருவாக்குவதற்கு நூலகம் தான் மக்களை நோக்கி நகர வேண்டிய தேவை உருவாகிறது. களைத்து வழுந்து வேலையால் வரும் குடும்பத் தலைவன், குழந்தைகள் குடும்பம் என்று நாள் முழுவதும் போராடும் குடும்பத் தலைவி, ஓய்வு நேரத்தை பயனுள்ள வகையில் கழிக்க வகை தெரியாமல் திண்டாடும் முதியோர்களை நோக்கி நூலகமே நகர வேண்டும். ஓரு தடவை அவர்களுக்கு நூலுணர்வை ஏற்படுத்துவதில் வெற்றி பெறின் பின்னர் தாமாகவே அவர்கள் நூலகத்தை பயன்; படுத்தத் தொடங்கி விடுவர். ஒரு குறிப்பிட்ட மக்கள் தொகுதிக்கென சேவையாற்றும் சனசமூக நிலைய நூலகங்களுக்கு ஒவ்வொரு உறுப்பினரிடையேயும் தனிப்பட்ட தொடர்பைப் பேணும் வாய்ப்பு உண்டு.
நூலக சேவை பற்றிப் பேச்செடுத்தாலே முதலில் வருவது நிதிப்பற்றாக்குறை என்ற அம்சம் தான். தமது சமூகத்தை தாம் மேம்படுத்துவதற்கு சமூக உறுப்பினர்கள் தம்மில் தான் தங்கியிருக்கவேண்டுமேயன்றி அரசாங்கத்தையல்ல. சமூக உறுப்பினரின் உணர்புபூர்வமான பங்குபற்றுதலின்றி எந்த வொரு சமூக மேம்பாடும் சாத்தியமில்லை என்பதையே சமூக அபவிருத்திக்கு கோடிக்கணக்கில் செலவழி;த்துக் கொண்டிருக்கும் அரசோ அல்லது உதவி தரும் நிறுவனங்களோ கண்டுள்ள அனுபவபூர்வமான உண்மை.
நெருக்கடிக்குட்படும் மனிதர்களிடம் தான் மேம்பாடு தொடர்பான சிந்தனை உருப்பெறுவது இயல்பு என்பதையே வரலாறு எமக்கு எடுத்துக் காட்டியிருக்கிறது. வசதியான சூழல்கள் எப்போதுமே வலிமையான மனிதர்களை வளர்த்தெடுப்பதில்லை. அரசியல் சூழலோ பொருளாதாரச் சூழலோ எதற்குமே இது பொருந்தும்.
ஸ்ரீ.அருளானந்தம்,
முதுநிலை உதவி நூலகர்
யாழ்.பல்கலைக்கழகம்.
No comments:
Post a Comment