எனது நோக்கில்.......

அறிவும் திறனும் இணைந்து தொழிற்படும் அற்புதமான ஒரு துறையாகக் கருதப்படுவது நூலக, தகவல் அறிவியல் துறை. உரு,வரி,வரைபு, அலை ஆகிய தகவல் வெளிப்பாட்டு வடிவங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட பதிவேடுகளின் உருவமைப்பில் அதிக கவனம்செலுத்தி அவற்றின் சேகரிப்பு,ஒழுங்கமைப்பு,சேமிப்பு, பகிர்வு, பராமரிப்புபோன்ற செய்முறைகள் ஊடாக வாசகனின் தகவல் தேவையைப் பூர்த்தி செய்கின்ற நூலகஅறிவியல் துறையும், இப்பதிவேடுகளின் உள்ளடக்கத்தில் மட்டும் அதிக கவனம் எடுத்து தகவல் உருவாக்கம், தகவல் பரவலாக்கம்,சேகரிப்பு, ஒழுங்கமைப்பு,மீள்பெறுகை, பொருள் விளக்கமளிப்பு, பயன்பாடு போன்ற செய்முறைகளினூடாக பயனரின் தகவல் தேவையைப் பூர்த்தி செய்கின்ற தகவல் அறிவியல் என்ற துறையும் இணைந்து உருவான இத்துறையானது தகவலின் பண்புகளும் நடத்தையும், தகவல் பாய்ச்சலை கட்டுப்படுத்தும் சக்திகள், தகவலிலிருந்து உச்ச அணுகுகையையும், பயன்பாட்டையும் பெறும்பொருட்டு தகவலைச் செய்முறைப்படுத்துவதற்கானவழிவகைகள்,தகவல் கையாள்கை மற்றும்பரவலாக்கம் போன்றவற்றில் நூலகங்கள்மற்றும் தகவல் நிலையங்கள் ஆகியவற்றின் பங்களிப்பு ஆகியவற்றைக் கூர்ந்து ஆராயும் ஒரு அறிவியலாக மட்டுமன்றிகணிதவியல்,தருக்கவியல், மொழியியல்,உளவியல், கணினித் தொழினுட்பம்;,நூலகவியல், தகவலியல்,முகாமைத்துவம் போன்ற துறைகளிலிருந்து பெறுவிக்கப்பட்டதாக அல்லது அவற்றுடன்தொடர்புடையதொன்றாகவும் உள்ள பெருமைக்குரியது.

யாழ்ப்பாணப் பிரதேசத்தில் நூலக அபிவிருத்தியை மையமாகக்கொண்டு இயங்கும்ஒரேயொரு அரசசார்பற்ற அமைப்பான'நூலக விழிப்புணர்வு நிறுவனம்' என்ற அமைப்பின் ஊடாக நடத்தப்பட்ட பொது நூலகர்கள், மற்றும் பாடசாலை நூலகர்களுக்கான கருத்தரங்குகள்,பயிற்சிப் பட்டறைகளில் இனங்காணப்பட்ட நூலகர்களின்தேவையும், கிராமம் தோறும் தனிநபர் நூலகங்களாகவோ, அமைப்பு சார்நூலகங்களாகவோ, கிராமிய நூலகங்களாகவோ இயங்கக் கூடிய வகையில் புதிய நூலக உருவாக்கத்தில் ஆலோசனை கோரி அணுகியவர்களின் தேவையும் இணைந்து உருவானதே இந்தவலைத்தளம்எனில் மிகையல்ல.

இந்த வலைத்தளத்தின் தேவையைத் திரும்பத்திரும்ப வலியுறுத்தி அதற்கான உந்துசக்தியைத் தந்த அனைவருக்கும் எனது நன்றிகள். வீட்டு நூலகம் முதற்கொண்டுசனசமூக நிலைய நூலகங்கள்,பாடசாலை நூலகங்கள் போன்ற கல்விநிறுவன நூலகங்கள், பொதுசன நூலகங்கள், சிறப்பு நூலகங்கள் அனைத்திற்கும் ஒரு அடிப்படையைத் தரவும், தாய்மொழி மூல கல்விமூலம் நூலகத்துறையைவளர்த்தெடுத்தல்,தமிழில் நூலகவியல் துறை சார்ந்த ஆய்வுகளை ஊக்குவித்தல் ஆகிய இரு இலக்குகளை முன்வைத்தும் இந்த வலைத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. அபிவிருத்தியின் அச்சாணி நூலகம் என்ற கருத்துநிலையையும் செயலுருப்பெற உதவுமெனில் அது நான் பிறந்த இந்த மண்ணுக்கும் நான் பேசும் மொழிக்கும்செலுத்துகின்ற நன்றிக்கடனாகும்.


அருளானந்தம் ஸ்ரீகாந்தலட்சுமி,
கல்விசார் நூலகர்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

13-09-2014


Saturday, September 13, 2014

பாடசாலை நூலகங்கள்


தமிழ்ச் சமூகத்தின் இன்றைய கல்விநிலையும்  
பாடசாலை நூலகங்களின் வகிபாகமும்
[இன்றைய தகவல் யுகத்துடன் யுகத்துடன் இசைந்து வாழ்வதற்கு ஏற்ற வகையிலான கற்றல் கற்பித்தல் செயற்பாடு சார்ந்து கொள்கை ரீதியாக பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டபோதும் அது தனக்குரிய இலக்கை இதுவரை எய்தவில்லை என்றே கல்வியியலாளர்கள் மத்தியில் கருத்து நிலவுகின்றது. பாடசாலை நூலகங்கள் கல்விச்செயற்பாடு முழுமையடைவதற்கான ஆதார நிறுவனமாகத் தொழிற்படும் கடப்பாடுடையவை. மனித ஆளுமையின் ஆத்மீக, ஒழுக்க, சமூக கலாசார அம்சங்களின் விருத்திக்கு பாடசாலை நூலகம் மிக அவசியமானதொன்று. இது ஒரு தேசத்தின் பொருளாதார மேம்பாட்டுக்கு பங்களிப்பு செய்கிறது. நூலக சேவையற்ற கல்வி ஆன்மா இல்லாத உடலுக்கு ஒப்பானது என்பதற்கமையவும் எந்தவொரு கல்விசார் நிறுவனத்தினதும் முதுகெலும்பாகத் தொழிற்படுவது என்ற வகையிலும்  கற்றல் கற்பித்தல் செயற்பாடு சார்ந்து பாடசாலை நூலகங்களின் வகிபாகம் தொடர்பாக கருத்தியல் ரீதியாக முக்கியத்துவம் கொடுக்கப்படாமை கல்வி தனக்குரிய இலக்கை எய்தாமைக்குகுரிய காரணங்களில ஒன்று என்பதை வலியுறுத்துவதாக இக்கட்டுரை அமைகிறது].
கல்வி
கல்வி -- சமூகரீதியில் நோக்கின் மனிதனை மனிதனாக வாழ வைப்பது. மனிதப்பண்புகளையும் மனித நேயத்தையும் உருவாக்குவது. பொருளாதார ரீதியில் நோக்கின் பயன் தரக்கூடியதும்  இலாபம் தரக்கூடியதுமான தனிநபர்-சமூக முதலீடு. சமூகத்தின் பொருளாதார வினைதிறனை அதிகரிக்கும் ஒரு காரணி. தேசங்களின் அபிவிருத்தி, கொள்கை, திட்டமிடல் ஆகியவற்றில் முதலிடம் பெறுவது. அரசியல் ரீதியில் நோக்கின் சர்வதேச வல்லரசுப் போட்டியில் முதலிடம் பெறுவது. தேசங்களின் பலத்தை அளவிட உதவிடும் கருவி. தலைமை தாங்குவதற்கு மட்டுமன்றி மனிதன் மாளாது வாழ்வதற்கும் அவசியமானது. கலாசார ரீதியில் நோக்கின் எண்ணங்களைப் பண்படுத்துவது. வாழ்நிலையைப் பண்படுத்துவது. 
கல்வியின் முக்கியத்துவம் தொடர்பாக நாம் அறியக்கூடிய அல்லது எமக்குக் கிடைக்கக்கூடிய மேற்கத்தேய சிந்தனைகள்  கைத்தொழில் சமூகம் ஒன்றின் தோற்றத்துடன் இணைந்ததாக இருக்க, தமிழ்ச் சமூகத்தின் சிந்தனைகளோ இரு ஆயிரியங்களைக் கடந்து நிற்கிறது. 'கல்வி கரையில கற்பவர் நாள் சில மெல்ல நினைக்கின் பிணிபல' என்னும்  நாலடியார்  'தொட்டனைத்து ஊறும் மணற்கேணி  நாளும் கற்றனைத்து ஊறும் அறிவு' என்னும் திருககுறள், 'நீரளவே ஆகுமாம் நீராம்பல் தான் கற்ற நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு' என்னும் ஓளவையின் முதுமொழி போன்றன எமக்கு உணர்த்தி நிற்பது கல்வியின் முக்கியத்துவம் என்பது தமிழ் மக்களால் இன்று நேற்று உணரப்பட்டதொன்றல்ல என்பதையே.
'கல்வியினாலே பெருந்தொகையான மக்கள் வாசிக்கக் கூடியவர்களாக விளங்கினாலும், தாம் வாசிப்பனவற்றிலே எவை வாசிக்க வேண்டியவை என்பதைப் பிரித்தறிய முடியாதுள்ளனர்' என்கிறார் ஜி.எம்.றெவெலியன். 'நான் உயிர் வாழ்வதற்காகக் கற்க மாட்டேன். ஆனால் கற்பதற்காகவே உயிர்வாழ விரும்புகிறேன்' என்கிறார் பிரான்சிஸ் பேக்கன். 'மக்களுடைய சிந்தனையில், மனப்பாங்கில், செயலில் ஆரோக்கியமான, ஆக்கபூர்வமான, முன்னேற்றகரமான மாற்றங்களை விளைவிக்கின்ற. செயற்பாடே கல்வி என விளம்புகிறார் நம்முடன் வாழும் சிற்பி அவர்கள்.
கல்வியின் நோக்கங்கள் 
கல்வியின் நோக்கங்களை குறுங்காலப் பயன்கள், நீண்டகாலப் பயன்கள், உடனடிப்பயன்கள் என மூவகைப்படுத்துகிறார் இந்திய கல்வியியல் சிந்தனையாளரில் ஒருவரான எஸ் சந்தானம் அவர்கள். ஓவ்வொரு மாணவனும் அன்றாடம் கற்கும் பாடங்களின் முடிவில் அவனிடம் எதிர்பார்க்கப்படுபவை உடனடிப்பயன்கள் எனவும், குறிப்பட்ட பாடம் ஒன்றை மாணவன் கற்பதனூடாக ஏற்படும் பயன்கள் குறுங்காலப் பயன்கள் எனவும் அழைக்கப்படுகின்றன. குறுங்காலப் பயன்களே கல்வியின் குறிக்கோள் என அழைக்கப்படுகின்றன. இந்தக் குறிக்கோள்கள் ஒவ்வொன்றும் நிறைவேறும்போது நீண்டகாலப் போக்கில் ஏற்படுபவை நீண்டகாலப் பயன்கள் எனப்படுகின்றன. இந்தப் பயன்கள் கல்வியின் நோக்கங்கள் எனப்படுகின்றன. இலங்கையில் கல்விக் கொள்கை காலத்துக்குக் காலம் பல மாற்றங்களைச் சந்தித்திருப்பதுடன் 1943ம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை காலத்துக்குக் காலம் ஒழுக்க நோக்கம், அறிவு நோக்கம், தொழில் நோக்கம், சமூக நோக்கம் ஓய்வு நோக்கம், இசைந்த வளர்ச்சி நோக்கம் என  புதிய புதிய நோக்கங்களை உள்ளடக்கியிருப்பதை சி.டபிள்யூ.டபிள்யூ கன்னங்கரவின் தலைமையில் 1943ல் உருவாக்கப்பட்ட விசேட கல்வி ஆணைக்குழுவினரின்  விதப்புரை ஜஅமர்வு அறிக்கை ஓஓஐஏ-1943ஸஇ 1972-76 காலப்பகுதியை உள்ளடக்கிய ஐந்தாண்டுத் திட்டம், 1979இன் கல்வி மீளாய்வுக்குழு அறிக்கை, 1981இன் கல்வி வெள்ளை அறிக்கை 1989இல் முன்மொழியப்பட்ட தேசியக் கல்விக் கொள்கை, 2000ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய கல்விக்கொள்கை போன்றவற்றிலிருந்து தெரிந்து கொள்ளமுடியும். 
இதுவரை பின்பற்றப்பட்ட குறிக்கோள் மையக் கலைத்திட்டத்திலிருந்து மாறாக 2007ம் ஆண்டிலிருந்து அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய கலைத்திட்டம் முற்றுமுழுதாக அறிவு, மனப்பாங்குகள், திறன்கள் என்பவற்றை உள்ளடக்கிய தேர்ச்சி மையக் கல்வியாக அமையப்பெறவுள்ளது. ஜநவாஸ்தீன் 2006ஸ
கல்வி மட்டங்களும் நூலகப்பயன்பாடும்.

முன்பள்ளிக்கல்வி
மனிதவளர்ச்சிக் கட்டங்களின் அடிப்படையில் நோக்கின் குழந்தையிடம் நற்பழக்கங்களை உருவாக்கி உடல் உள வளர்ச்சிக்கு உதவுதல், எதிர்காலக் கல்விக்கும் பயனுள்ள வாழ்க்கைக்கும் ஆயத்தப்படுத்துதல் போன்றன கிட்டத்தட்ட 3-5 வயது வரையான காலப்பகுதியை உள்ளடக்கும் முன்பள்ளிக் கல்வியின் முக்கிய நோக்கமாக இருத்தல் வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தன்னம்பிக்கை, சமுதாய வாழ்வில் தனது பங்கையும்; உரிமைகளையும் உணர்தல், அழகுணர்ச்சி, உடற்பயிற்சியின் முக்கியத்துவம் என்பவற்றைக் குழந்தையிடம் ஏற்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டது. 'தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும்', 'ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா' போன்ற முதுமொழிகள் நமக்கு உணர்த்தி நிற்பதும் இதைத்தான். உடல், உள, சமூக, மனவெழுச்சி விருத்தி, பாடசாலைக்கான தயார்படுத்தல், உள்ளடங்கிய ஒட்டுமொத்த விருத்திக்குப் பொருத்தமான வாய்ப்புகளையும் அனுபவங்களையும் வழங்குவது முன்பள்ளிக் கல்வியின் நோக்கமாகும்.
முன்பள்ளிப்பருவ கல்வி ஏற்பாடுகள் பிள்ளைகளின் உள்ளார்ந்த ஆற்றலின் முழுமையான வளர்ச்சிக்கும் வாழ்நாள் முழுவதற்குமான கல்விக்குமான அத்திவாரத்தை இடுகின்றன. பிற்காலத்தில் உருவாகும் சிறந்த உளப்பாங்குகள், கற்றலை விரும்பும் மனநிலை என்பன உருவாக இப்பருவத்தின் வளர்ச்சி மிக முக்கியமானது. (சந்திரசேகரம் 2006). முழுக்க முழுக்கப் பெற்றோரிலும் முன்பள்ளி ஆசிரியரிலும் தங்கியிருக்கும் இப்பருவத்தினரின் வளர்ச்சிக்காக வாசிக்கும்  நிர்ப்பந்தம் இவர்களுக்குண்டு.
ஆரம்பக் கல்வி
மொழித்திறன் விருத்தி, ஆக்கவேலை, சூழலுக்கேற்ற தொழில், பாடசாலையையும் சமூகத்தையும் இணைத்தல் போன்றன 6-10 வயது வரை கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளை உள்ளடக்கும் ஆரம்பக் கல்வியின் நோக்கமாக இருக்கிறது. எதிர்கால சமூகத்தைத் தாங்கக்கூடிய தூண்களாக வளர்த்தெடுக்கப்படவேண்டிய பருவமாக இதைக் கொள்ளலாம்.
ஷகுழந்தையின் முதல் ஆறு ஆண்டுகளின் வாழ்க்கையை என்னிடம் ஒப்படையுங்கள் அதற்குப்பிறகு அதன் வாழ்க்கை அமைப்பை எப்படிப்பட்டவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதைப்பற்றி எனக்கு கவலையில்லைஷ எனக் கூறும் பெஸ்டலோசி என்ற தலைசிறந்த கல்வியாளரின் கூற்று ஜசந்தானம் 1987ஸ, 'குழந்தைகளினுடைய மனதின் இரகசியத்தையும், ஆசிரியர் பயிற்சி என்னும் கலையையும், ஆசிரியரின் திறமைகளையும் அறிய முற்படுகையில் ஒவ்வொரு குழந்தையிடமும் நான் எனது ஆசிரியனை, ஆசானைக் காண்பேன்' என்ற  வாசகத்தின்  உண்மையை, பயனைச் சரிபார்த்து குழந்தைகளின் நடவடிக்கைகளின் உட்பொருளினுள் ஆழப் புகுவதன் மூலம், குழந்தையின் உள்ளாற்றல்களைப் பயன்படுத்தி, அன்பு பரந்த மனப்பாங்கு, நகைச்சுவை உணர்வு, துடியார்வம், யதார்த்தத்தை அறியும் ஆக்கபூர்வமான அணுகுமுறை ஆகியவற்றைத் தட்டியெழுப்பி இவர்களுக்கு அவசியமான சமூக அம்சங்களை அளிக்கலாம் என உறுதியாக நம்பி ஆறுவயதுக் குழந்தைக்கு படிப்பு சொல்லிக் கொடுப்பதை தனது மிக விருப்புக்குரிய தொழிலாக ஏற்ற ருஷ்ய விண்வெளிக்கழகத்தின் தலைவரும் இயற்பியல் விஞ்ஞானியுமான அமனஷ்வீலியின் கூற்று ஜ அமனஸ்வீலி 1987 ஸ என்பன ஆரம்பக்கல்விப்; பருவத்தின் அத்தியாவசியத்தையும் வீட்டுச் சூழல் ஒன்றிலிருந்து முதன்முதலான பாடசாலை என்ற நிறுவனத்திற்குள் நுழைகின்ற ஆறு வயது குழந்தையின் முக்கியத்துவத்தையும் தெளிவாகக் காட்டப் போதுமானது. 
இடைநிலைக் கல்வி
குடியாட்சிப்பண்பு நிறைந்த எதிர்கால மக்களை உருவாக்குதலும், உயர்கல்விக்கோ அல்லது ஏதாவது ஒரு தொழிலுக்கோ செல்லக்கூடிய தகுதியை உண்டாக்குவதுமே 10-16 வரையான காலப்பகுதியை உள்ளடக்கும் இரண்டாம் நிலைக்கல்வியின் நோக்கமாகும். இடைநிலைக் கல்வியின் கிட்டத்தட்ட 20மூ மாவது தொழிற்கல்விக் வாய்ப்பு அளிக்கப்படவேண்டிய கட்டமாக இது உணரப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாணவரும் சமூக வளர்ச்சித் திட்டங்களில் தொடச்சியாக ஒரு மாதமாவது பங்குபெற வைக்கப்படல் வேண்டும. மரவேலை, உலோக வேலை, அச்சடித்தல், கணினித் தொழினுட்பம்  போன்றவற்றுக்கான தொழிற்கூடங்களை ஒவ்வொரு பாடசாலையும் கொண்டிருத்தல் வேண்டும்.
17-18 வயது வரையான இரண்டு வருடங்களை உள்ளடக்கும்  உயர்கல்வியானது பல்கலைக்கழகக் கல்விக்கான தயார்படுத்தலில் முழுக்ககமுழுக்க ஈடுபடவைக்கும் அதேசமயம் தொழிற்கல்வியையும் வளர்த்தெடுக்கும் நோக்கத்தைக் கொண்டது. கிட்டதட்ட 80மூ தொழிற்கல்விக்கு முகட்கியத்துவம் கொடுக்கும் பருவமாக இது உணரப்பட்டிருக்கிறது. உயர்கல்விக்குள் நுழையும் வாய்ப்பற்ற மாணவர்கள் முழுக்க முழுக்க தொழிற்கல்வியில் பயிற்சியைப் பெறுவதற்கு ஏற்றவகையில் பல்தொழினுட்பக் கல்லூரிகளின் உருவாக்கத்தை இது வேண்டிநிற்கிறது. 
உயர்கல்வி
பல்கலைக்கழகக் கல்வியின் நோக்கம் மாணவரிடையே உண்மை அறிவை வளர்ப்பதும் அதைப் பரப்புவதுமாகும். சமூகத்தை தாங்கக்கூடிய தலைவர்களையும் சமூகத்தை வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்லும் துறை வல்லுனர்களை உருவாக்குவதுமாகும். 
கல்வியின் முதன்மை இலக்கு
கல்வியின் நோக்கங்கள் பல எனினும் அதன் பிரதான நோக்கம் சுயசிந்தனையும் மனித நேயமுமிக்க மனிதனை உருவாக்குதல் ஆகும். சுயசிந்தனையுள்ள மனிதனை உருவாக்குவதற்கு அறிவுசார் சிந்தனை அவசியம்.. 'எதனையும் உற்றுணர்ந்து, சீர்தூக்கிப் பார்த்து, நிதானித்து, எதிர் விளைவுகள் பக்க விளைவுகளை அடையாளங் கண்டு ,பயன்விளைவு ஆராய்ந்து, அனுகூலங்கள் பிரதிகூலங்களை கருத்தில் கொண்டு, ஒன்றைக் கூறும்- நம்பும் -தீர்மானிக்கும்- தீர்வு காணும்- செயற்படுத்தும்- அறிவும் மனப்பாங்கும் உடைய உள்ளம் அறிவு சார் உள்ளம் என்றும் அத்தகைய சிந்தனை அறிவு சார் சிந்தனை என்றும் கூறலாம்' என படியாதவனின் படிப்பு என்ற நூல் கூறுகிறது.[படிப்பு 1994] 'தௌ;ளிய அறிவும் நன்நடத்தையும் கொண்ட பண்பட்ட மக்களை உருவாக்குவதே கல்வி' என்ற மாட்டின் லுதர், 'மனிதனை மனிதனாக வாழ வைப்பதே உண்மைக் கல்வி' என்ற சுவாமி விவேகானந்தர், 'அன்பை உணருதல், அன்பு காட்டுதல் என்றால் என்ன என்று கண்டுபிடித்தல், அன்பு காட்டுதல் என்பவையே கல்வி' என்ற இந்திய கல்விச் சிந்தனையாளர் ஜே.கிருஸ்ணமூர்த்தி, 'உன்னத மரபுகளையும் அன்பையும், இரக்கத்தையும் ஒருவரிடம் பேணி வளர்க்கவும் முழுமையான வாழ்க்கையை வாழ உதவுவதுமே கல்வி' என்ற கல்வியியலாளர் ராதாகிருஷ்ணன் போன்றோரின் சிந்தனைகள் எமக்கு வெளிக்காட்டுவது மனிதத்தை மனிதர்களிடம் உருவாக்குவதே உண்மைக் கல்வியின் நோக்கம் என்பதையே. அறிவுசார் சிந்தனையானது மனிதநேயத்துடன் இணைந்ததாக இல்லாதுவிடின் கல்வியின் நோக்கம் நிறைவேறுவது கடினம். அறிவு சார் சிந்தனையை உருவாக்குவதற்கு பரந்த வாசிப்புத் திறன் முக்கியம். தான் எதிர் கொள்ளும் பிரச்சனைகளிலிருந்து விடுவிப்பதற்கு தனித்துவமான, தனக்குத் தானே நீதிபதியாகக் கூடிய வல்லமையை அளிப்பது இந்த பரந்து பட்ட வாசிப்புத் திறனே. வாசிப்புத் திறனை ஊக்குவிக்கக்கூடிய பிரதான தளம் நூலகம் என்பதில் எவ்வித கருத்துமுரண்பாட்டுக்கும் இடம் இருக்காது.
கல்வியின் இன்றைய நிலை
துரதிருஷ்டவசமாக இன்றைய கல்விமுறையில் மனிதநேயமிக்க மனிதனை உருவாக்கும் கல்வியின் பிரதான நோக்கம் பின்தள்ளப்பட்டு தொழில் நோக்கம் முனைப்புப்படுத்தப்பட்டுள்ளது. உயர் கல்விக்கு வாய்ப்பற்றவர்களைத் தொழிற்கல்விக்கு வழிப்படுத்தும் முக்கிய நோக்கமான தொழில் நோக்கம் என்ற கருத்துநிலை கூட தரமிறக்கப்பட்டு அந்தஸ்து மிக்க தொழில் நோக்கிப் பெற்றோர் பிள்ளைகளை வலிந்து திசைதிருப்பும் ஒன்றாக மாறியிருக்கிறது. அதுமட்டுமன்றி மாணவர்களிடையே போட்டி மனப்பான்மையை ஊக்குவிக்கும் தளமாக இன்றைய கல்விமுறை  அமைகின்றது. பாடசாலைகளைத் தர அடிப்படையில் வகைப்படுத்தியிருப்பது இத்தகைய போட்டி மனப்பான்மைகள் மேலும் அதிகரிக்க வழிவகுக்கின்றது. அறிவை வளர்க்க அறிமுகப்படுத்தப்படும் எந்தச் செயற்பாடும் வசதியுள்ளோரை மேலும் வளர்க்கவே உதவுகின்றன. போட்டிப்பரீட்சைகள் கூட வளமிக்க மனிதர்களை மேலும் வளப்படுத்தும் ஒன்றாகவே நடைமுறையில் உள்ளது.  1943இல் அறிமுகப்படுத்தப்பட்ட கல்விக் கொள்கையின் மையப் பொருளாக நற்பிரசைகளை உருவாக்குதல் என்பது அமைந்திருந்தபோது இத்தகைய போட்டி மனப்பான்மைகள் உருவாக்கம் பெறவில்லை.  பிள்ளைகளைத் தொழிலுக்கு ஆயத்தப்படுத்தல் என்பதை பிரதான நோக்கமாகக் கொண்ட 1981இன் கல்வி வெள்ளை அறிக்கையுடன் தொழில் நோக்கம் முற்றுமுழுதாக கல்வி முறையில் முனைப்புப் பெறத் தொடங்கிவிட்டது. 2000ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய கல்விக்கொள்கையானது பரீட்சைகளை மையப்படுத்திய பாடத்திட்டத்தினை மாற்றி மனிதருக்கு இருக்கவேண்டிய அடிப்படைப் பண்புகளுடன் சமூகத்துடன் இசைந்து வாழ்வதற்கான வழிப்படுத்தல்களையும் உள்ளடக்கியிருக்கிறது. இந்தமுறையானது கற்றல் கற்பித்தல் செயற்பாடு பாடத்திட்டத்துக்கும் அப்பால் புதிய தேடல் நோக்கி ஆசிரியரையும் மாணவரையும் நிர்ப்பந்திக்கிறது.
கல்விமுறை எத்தகைய நோக்கத்தைக் கொண்டிருப்பினும் இன்றைய தகவல் யுகத்தை துணிவுடன் எதிர்கொள்வதற்கு, இந்த யுகத்துடன் இசைந்து வாழ்வதற்கு பாடத்திட்டத்தை அறிப்படையாகக் கொண்ட கல்வி மட்டும் போதுமானதல்ல.. கல்வித்திட்டங்களில் ஏற்படுத்தும் மாற்றங்களின் வேகத்துக்கு ஈடு கொடுக்கும் வகையில் ஆசிரியர்களுக்கான பயிற்சியோ அவர்களிடம் மனமாற்றத்தைக் கொண்டு வருவதற்கான தூண்டுதல்களோ மிகக் குறைவு. வறுமை வேலையின்மை போன்ற பொருளாதாரக் காரணிகளின் தாக்கம் மிக அதிகமாக உள்ள எமது தேசத்தில் கல்வியின் முழு நோக்கமுமே தொழில் நோக்கமாகவே உள்ளது. மேலை நாட்டு அறிவியல் கண்டுபிடிப்புகளின் பாவனையாளராகவே இருக்கும் எமக்கு இக் கண்டுபிடிப்புகளை பயன்படுத்துவதற்கான தேடலில் வாழ்வின் பெரும் பகுதி கழிந்து விட இக் கண்டுபிடிப்புகளின் உன்மையான பயன்பாடு என்ன இதன் நன்மைகள் தீமைகள் போன்றவற்றை அறிவதற்கான வாய்ப்புகளை இழந்து விடுகின்றோம்.
பாடசாலை நூலகங்கள்
பாடசாலைகள்.... மனிதன் சந்திக்கும் முதலாவது நிறுவனம். மனித வளர்ச்சிக் கட்டங்களில் இளமை, ஆர்வம், துடிப்பு, தேடல் அதிகம் உள்ள குழந்தைப்பருவம் முழுவதையும் தமதாக்கி அவர்களை நாட்டின் எதிர்காலத்தை ஒப்படைப்பதற்கான வழிப்படுத்தல் என்ற  மாபெரும் பொறுப்பை ஏற்று நிற்பவை. நூலக சேவையற்ற கல்வி ஆன்மா இல்லாத உடலுக்கு ஒப்பானது. நாட்டின் எதிர்காலம் ஒப்படைக்கப்பட்டிருப்பது இன்றைய குழந்தைகளிடமே என்பது உண்மையானால் அந்த குழந்தைகளின் உள்ளத்தை கிட்டத்தட்ட 12 வருடங்கள் பண்படுத்தும் பாரிய கடமைப்பாட்டில் இருப்பவை. எந்தவொரு கல்விசார் நிறுவனத்தினதும் முதுகெலும்பாகத் தொழிற்படுவது என்ற வகையில் பாடசாலை நூலகங்கள் கல்விச்செயற்பாடு முழுமையடைவதற்கான ஆதார நிறுவனமாகத் தொழிற்படும் கடப்பாடுடையவை. மனித ஆளுமையின் ஆத்மீக, ஒழுக்க, சமூக கலாசார அம்சங்களின் விருத்திக்கு பாடசாலை நூலகம் மிக அவசியமானதொன்று. இது ஒரு தேசத்தின் பொருளாதார மேம்பாட்டுக்கு பங்களிப்பு செய்கிறது. வீட்டுச்சூழலில் இருந்து வெளியுலகுக்கு குழந்தை பிரவேசிக்கும் முதலாவது இடமாக பாடசாலைகள் இருப்பதனால் குழந்தையின் வாசிப்புப் பழக்கத்துக்கு அடித்தளம் போடும் நல்ல வாய்ப்பு பாடசாலை நூலகத்துக்கு ஏற்படுகிறது. ஒவ்வொரு கல்விசார் நிறுவனமும் சிறப்புடன் இயங்குவதற்கும் மாணவர்களின் கல்வி கலாச்சார ஆர்வங்களை ஊக்குவிப்பதற்கும் பாடசாலை நூலகம் முக்கிய கருவியாக இருப்பதனால் ஒவ்வொரு முதல்நிலை, இரண்டாம்நிலை, மூன்றாம் நிலைப் பாடசாலைகளுக்கும் பாடசாலை நூலகம் இருத்தல் மிக அவசியமானது. பாடல்கள், கதை சொல்லல் மூலம் முன்பள்ளிகளில் தனது துருவி ஆராயும் பண்புக்கு களம் அமைக்கும் குழந்தைகள் வாசிப்பு பழக்கத்தின் மூலமே இப் பண்பை கட்டியெழுப்பலாம் என்ற அறிவை பெறக்கூடிய இடமாக பாடசாலை நூலகங்கள் இருத்தல் அவசியமானது. இது மட்டுமன்றி புது முயற்சிகளில் இறங்கும் குழந்தையின் இயல்பை ஊக்குவிப்பது சுயசார்புக் கல்வி மட்டுமே. புதிய பாடத்திட்டங்கள், கணிப்பீடுகள் யாவும் இதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துவது மட்டுமன்றி எழுத்தறிவிக்கும் இறைவர்களையும் கற்பிப்பதற்கு கற்பவர்களாக மாறவேண்டிய நிலையை நிர்ப்பந்திக்கிறது. வகுப்பறைக் கற்றல் கற்பித்தலுக்கான புதியதோர் அணுகுமுறையாக 2007இல் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் 5நு-மாதிரியானது (5நு- ஆழனநட) கற்றல் கற்பித்தல் செயற்பாட்டை முழுமைப்படுத்துவதற்கான காரணி என்ற வகையில் பாடசாலை நூலகத்தைத் தரமுள்ள நூலகமாக மாற்ற வேண்டியதன் அவசியத்தை  வலியுறுத்துகின்றது. 
தொழிற்பாடுகள்
பலதரப்பட்ட பொருட்துறைகளிலும் உள்ள சிறந்த தகவல் வளங்களின் சேகரிப்பைக் கொண்டிருப்பதனூடாக கற்பித்தலுக்கு உதவுதல்
அறிவை விருத்தி செய்வதற்கான வாசிப்புப் பழக்கத்தை ஒவ்வொரு மாணவரிடமும் ஏற்படுத்துதல்
உசாத்துணை சாதனங்களைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதனூடாக மாணவர்களின் ஆளுமையை வளர்க்கக்கூடிய வகையிலும் தம்மில் தாமே மதிப்பை ஏற்படுத்திக்கொள்ளும் வகையிலும் உதவுதல்
மாணவரால் விரும்பப்படுகின்ற அல்லது அவர்களால் தேடப்படுகின்ற அனைத்துவகை அறிவுக்குமான அணுகுகையை வழங்குதல்
அனைத்து வகை தகவல் அமைப்புகள் தொடர்பான அறிவை அவர்களிடம் வளர்த்து அத்தகைய தகவல் அமைப்புகளைப் பயன்படுத்தும் ஆர்வத்தை ஏற்படுத்துவதனூடாக பாடசாலையை விட்டு நீங்கிய பின்னரும் தமக்கெனச் சொந்தமான சிறு நூலகம் ஒன்றை கட்டியெழுப்பும் உணர்வைத் தூண்டுதல்  
மேற்கூறிய குறிக்கோள்களை நிறைவேற்றுவதற்கு பாடசாலை நூலகம் ஒன்று மாணவர், கற்போர் கற்பிப்போரின் தகவல் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய வகையிலான சிறந்த தகவல் வளத்தொகுதி, தகவல் வளங்களில் மிகுந்த ஈடுபாடும், அதனைச் சரியான வகையில் முகாமை செய்யக்கூடிய தகுதியும், மாணவரின் ஆர்வங்களைப் புரிந்து கொள்ளும் ஆற்றலும் மிக்க நூலகர், மாணவர்களை மேலதிக தேடல் நோக்கி வழிப்படுத்தும் ஆசிரியர்; ஆகிய மூன்று அம்சங்களை உள்ளடக்கியிருத்தல் அவசியமானது. 
தகவல் வளத் தொகுதி
பாடசாலை நூலகத்தின் தகவல் வள அபிவிருத்தியில்  பின்வரும் அம்சங்களுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும்.                         
மாணவர்களின் திறமை, வயது என்பவற்றி;ற்கேற்ப அந்தந்தத் தரத்திற்குரிய தகவல் சாதனங்கள்;
மாணவர்களுக்;குப் பயனளிக்கக் கூடிய கவிதைகள், கட்டுரைகள்,  பெரியோரது வாழ்க்கை வரலாற்று நூல்கள், பயணக் கதைகள், விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்கள் ஆகியவற்றுடன் விளையாட்டு, படம் வரைதல், இயந்திரத் தொழினுட்பம் முதலிய பொழுது போக்கு நடவடிக்கையுடன் சம்பந்தப்பட்ட நூல்கள் 
தகவல் சாதனத் தெரிவிற்குரிய கருவிநூல்கள், புதிதாக வெளிவருகின்ற நூல்கள்
பாடவிதானத்துடன் தொடர்புடைய நூல்கள்  அவற்றிற்குச் சமமான வகையில் புவியியல், வரலாறு, அரசியல் போன்ற பிரதேச முக்கியத்துவம் வாய்ந்த நூல்கள.;
பொருட்;;;;;;;;துறை தொடர்பான அடிப்படைக் கருத்துக்களைக் கொடுக்கக்கூடிய கலைக்களஞ்சியங்கள், அகராதிகள், புவியியற் படங்கள், கைநூல்கள் போன்ற மாணவர்களது பொது அறிவு வளர்ச்சிக்கு உதவும் நூல்கள்.
நூலுருவற்ற சாதனங்களான ஒளிப்படங்கள், கட்புல செவிப்புல சாதனங்கள் போன்றவை.
பாடசாலை நூலகமொன்றின் தகவல் வளங்கள் பின்வரும் நான்கு பிரிவுகளின் கீழ் வகைப்படுத்தப்படுகின்றது. 
அச்சு வடிவ நூல்கள் - நூல்கள், பருவ இதழ்கள், செய்தித்தாள்கள், சிறுநூல்கள் என்பன.
வரைபியல் வளங்கள் - சுவரொட்டிகள், படங்கள், தேசப்படங்கள், பூகோளம், மாரி உருவமைப்புகள் போன்றவை.
செவிப்புல கட்புல வளங்கள் - கேட்பொலிப் பதிவுகள், வீடியோப் பதிவுகள், நுண்வடிவங்கள், படங்கள், படத்துணுக்குகள் போன்றவை
இலத்திரனியல் வளங்கள் - கணனிக் கணிமங்கள், பல்லூடகங்கள், இறுவட்டுகள், இணையத்துக்கான அணுகுகை போன்றவை.
ஆசிரியர் - நூலகர் -  ஆசிரிய நூலகர்
ஆசிரியர்:  என்பவர் சூழ்ந்த பார்வையுடையவர் என்கிறார் புலவர் மணி ஏ.பெரியதம்பிப் பிள்ளை. சூழ்ந்த பார்வை என்பது- நிரம்பிய கல்வி, ஆழமான அறிவு, விசாலமான ஆராய்ச்சி, பரந்த மனப்பான்மை உயர்ந்த கொள்கை, சூழலைப் பயன் செய்தல், தேசிய நோக்கம் முதலிய பல கருத்துக்களை உள்ளடக்கியது. முறை சார்ந்த கல்வியை வழங்குதல் ஆசிரியரின் பணியாக இருக்கும். 21ம் நூற்றாண்டின் ஆசிரியருக்குத் தமது மாணவர்களிடையே காணப்படும் அடிப்படை நிபுணத்துவங்கள், படைப்பாற்றல் திறன் மாற்றம் அல்லது புதுமை காணல் என்பவற்றின் சிறப்பம்சங்கள் பல்துறைப்புலமை, மாறும் நிலைக்கேற்ப அமைதல், விமர்சனப்பாங்கு, பிரச்சினைகளை இனங்காணல், மற்றும் தீர்ப்புத் திறமை என்பன பற்றிய ஆற்றல் இருக்க வேண்டும்'  என யுனெஸ்கோ கூறுகின்றது. ஒரு ஆசிரியரின் வெற்றியை அளக்கும் அளவுகோல் என்பது புலமைப் பரிசில் பரீட்சையிலிருந்து தொடங்கி ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் வடிகட்டி தெரிந்தெடுக்கப்படும் மாணவர்களை கல்வியிலும்  அதன்மூலம் வாழ்வாங்கு வாழக்கூடிய வாழ்க்கையிலும் வெற்றியடையச் செய்யும் அளவுகோல் அல்ல. சராசரியிலும் குறைவெனக் கணிக்கப்பட்ட மாணவர்களில் எத்தனை வீதத்தை  கல்வியிலும் அதன்மூலம் வாழ்வாங்கு வாழக்கூடிய வாழ்க்கையிலும் வெற்றியடையச் செய்ய முடியும் என்பதே ஒரு ஆசிரியரின் வெற்றியை அளக்கும் அளவுகோல் ஆகும்.
நூலகர்: பொருத்தமான நூலை அதற்குப் பொருத்தமான வாசகனிடம் பொருத்தமான நேரத்தில் பொருத்தமான முறையில் இணைத்துவிடுபவர்.  சுய சார்புக் கல்விக்கான அடித்தளம் இடுபவராக நூலகரின் பணி அமைகிறது. நன்கு படித்தவர்களையே அசர வைக்கும் எத்தனையோ நூல்களின் ஒளிவு மறைவுத் தன்மையை வாசகர் இனங்காண உதவி செய்யும் பாரிய பணி நூலகரையே சார்ந்தது. அத்துடன் குறிப்பிட்ட நூலை எங்கே எப்படி எடுப்பது என்பதை வழிகாட்டுவதும் நூலகரே. பாரபட்சமற்ற நூல் தெரிவு, தன்னலமற்ற சேவை, பலதரப்பட்ட வாசகனது தகவல் தேவைகளையும் நினைவில் இருத்திக் கொள்ளக் கூடிய பல்பரிமாண நினைவாற்றல், வாசகர்களது குணநலன்களின் அடிப்படையில் எல்லோரையும் கருத்தில் கொள்ளக்கூடிய வகையிலான அநுதாப மனப்பாங்கு, பலதரப்பட்ட வாசகர்களது சுபாவங்களையும் எதிர் கொள்வதற்கான சாமர்த்தியம், வாசகனது அறிவுத் தேவையை பூர்த்தி செய்வதற்கு உதவக்கூடிய புலமைத்துவம், எல்லாவற்றுக்கும் மேலாக கடும் உழைப்பு  ஆகிய சப்த ஒழுக்க தீபங்களுக்குமுரியவராக நூலகர் கருதப்படுகின்றார். சமூக அறிவியல், தகவல் வளங்களின் தெரிவு, தகவல் தொழினுட்பம், தொடர்பாடல், உளவியல், அச்சிடுதல் தொழினுட்பம், பகுப்பாக்கம், பட்டியலாக்கம், ஆவணவாக்கம், முகாமைத்துவம் ஆகிய துறைகளில் நூலகருக்கு தேர்ச்சி முக்கியம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆசிரிய நூலகர்: ஆசிரிய நூலகர் என்பவர் அங்கீகரிக்கப்பட்ட கற்பித்தல் தகுதியும், நூலகவியலில் தகுதியும் கொண்டவர். கல்வித்துறையிலும், தகவல் நிர்வாகத்துறையிலும் ஒருங்கிணைக்கப்பட்ட அறிவைப் பெற்று, சிறந்த கல்விமானாகவும் தகவல் நிர்வாகியாகவும் செயற்படுபவர். பாடத்திட்டத்தை வடிவமைத்தல், ஆதாரப்படுத்தல், அமுலாக்குதல் போன்றவற்றில்; செயல்திறன் மிக்க பங்காற்றுபவர். பாடத்திட்டம் பற்றிய அறிவு, கற்பித்தல், கற்றல் நடை தந்திரோபாயங்கள் என்பவற்றை வளங்கள் பற்றிய அறிவு, தகவல் பெற்றுக்கொள்ளும் முறைகள் ஆகியவற்றுடன் இணைத்துப் பயன்படுத்தும் ஆற்றல் பெற்றவர். வழிகாட்டுனராகத் தொழிற்படுதல், பாடத்திட்டத்தை வடிவமைப்பதில் ஆசிரியர்களுடன் இணைந்து செயற்படுதல், பல்வேறு விளம்பரத் திட்டங்கள் மூலம் பாடசாலை நூலகங்களுக்கு ஆதரவளித்தல், வரவு செலவுத் திட்டம், உதவி வழங்கும் ஊழியர் மற்றும் கற்றலுக்கான வளங்களைக் கையாளுதல், பாடசாலை நூலகங்களை விருத்தி செய்யும் செயற்பாடுகளிலும் ஈடுபடுதல்; போன்றன கல்விச் செயற்பாட்டில் ஆசிரிய நூலகரின் பங்களிப்பாக அமைகின்றது.
ஆசிரிய நூலகரின் பொறுப்புகள்
நூலகத்தின் நாளாந்த செயற்பாடுகளை முகாமை செய்தல்
ஆசிரியர்கள்,பெற்றோர்கள் உதவியுடன் மாணவர்களின் வாசிப்பு ஆர்வத்தையும் ஆயுட்கால வாசிப்புப் பழக்கத்தையும் கட்டியெழுப்பும் வழிவகைகளைக் கண்டறிதல்
வகுப்பாசிரயருடன் இணைந்து நூலக தகவல் திறன்களை பாடத்திட்ட நடவடிக்கைகளுடன் ஒன்றிணைக்கக்கூடிய வாய்ப்புகளை உருவாக்கக் கூடிய நூலக செயற்திட்டங்களை விருத்தி செய்தல்
தனிப்பட்ட முறையிலோ அல்லது ஆசிரியர்களுடன் இணைந்தோ கற்பிப்பதன் மூலம் தகவல் திறன்களை பாட உள்ளடக்கத்துடன் ஒன்றிணைப்பதற்கு உதவுதல்
தொடர்ச்சியான கணிப்பீடுகள் மூலம் தகவல் திறன்களைக் கற்றலை மதிப்பீடு செய்தல்
ஏனையோருடன் கூட்டுச் சேர்ந்து வேலை செய்யவும்; எதிர்கால தொழில்களில் அவர்களுக்கு உதவக் கூடிய திறன்கள், மனப்பாங்குகள், நடத்தைகளை கற்றுக் கொள்வதற்குமான வாய்ப்புகளை மாணவர்களுக்கு வழங்குதல்
தகவல் வளங்களை பகிர்ந்து கொள்ளும் பொருட்டு ஏனைய தகவல் அமைப்புகளின் அலுவலர்களுடன் இணைந்து வேலை செய்தல்
2006ம் ஆண்டு வலிகாமம் கல்வி வலயத்தால் விநியோகிக்கப்பட்ட சுற்று நிருபம் ஒன்றின்படி ஆசிரிய நூலகரின் கடமைப்பட்டியல் பின்வருமாறு அமைகின்றது.
பாடசாலை நூலகக் குழுவின் ஒத்துழைப்புடன் பாடசாலை நூலகத்தின் வளர்ச்சிக்குத் தேவையான செயற்பாடகளை திட்டமிடுதல், அவற்றை நடைமுறைப்படுத்துதல், கணிப்பிடுதல், மதிப்பிடுதல்
மாணவரின் வாசிப்புப் பழக்கத்தை வளப்படுத்துவதற்குப் பொருத்தமான செயற்பாடுகளையும் திட்டங்களையும் அடையாளங் காணலும் அவற்றைச் செயற்படுத்தலும் மதிப்பிடலும்
மாணவரின் தகவலியல் திறன்களை மேம்படுத்துவதற்கான பல்வேறு செயற்பாடுகளையும் திட்டங்களையும் அடையாளங் காணலும் அவற்றை நடைமுறைப்படுத்தலும்.
பாடசாலை மாணர் நூலகத்தைப் பயனபடுத்துதல் பற்றிய ஆண்டு மதிப்பீட்டைக் கைக்கொள்ளுதல், கண்டறியப்பட்டவற்றை காட்சிப்படுத்துதல், பின்னூட்டம் செய்தல்.
புது யுகத்தின் நூலகர்கள் நுண்ணறிவு மிக்க வாசகனை திருப்திப்படுத்தும் அறிவாளியாக, தனக்கு ஒன்றுமே தெரியாது என்று நினைக்கும் தாழ்வுணர்ச்சியுள்ள வாசகனிடம் நல்லதோர் உளவியலாளராக, கூச்ச சுபாவமுள்ள வாசகனுக்கு நல்லதோர் வழிகாட்டியாக, ஷஎன்னை விட இவருக்கென்ன தெரியும்ஷ என நினைக்கும் எல்லாம் தெரிந்தவரையும்(?) பொறுத்துப்போகும் தத்துவவியலாளராக இருக்கவேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 'வாசிக்க வருபவரின் வருகை ஏற்றும், மரியாதை காட்டி அவர்க்கிருக்கை தந்தும் ,ஆசித்த நூல் தந்தும் , புதிய நூல்கள் அழைத்திருந்தால் அவை உரைத்தும், நாளும் நூலை நேசித்து வருவோரகள்; பெருகும் வண்ணம் , நினைப்பாலும் வாக்காலும் தேகத்தாலும் மாசற்ற தொண்டிழைப்பீர் ; சமுதாயச் சீர் மறுமலர்ச்சி கண்டதென்று
முழக்கஞ் செய்வீர்'  என்று  நூலகரின் பணி எதுவாக இருக்கவேண்டும் என புரட்சிக் கவி பாரதிதாசன் 60களிலேயே கூறியிருக்கும் போதும் இன்றுவரை பெரும்பாலான நூலகர்கள் தமது பணியை தொழில் என நினைக்கின்றனரேயன்றி சமுதாய மறுமலர்ச்சிக்கான தமது சேவையென்று உணரவில்லை என்றே கூறவேண்டும்.
ஒரு ஆசிரியரின் வெற்றியை அளக்கும் அளவுகோல் என்பது புலமைப் பரிசில் பரீட்சையிலிருந்து தொடங்கி ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் வடிகட்டி தெரிந்தெடுக்கப்படும் மாணவர்களை கல்வியிலும்  அதன்மூலம் வாழ்வாங்கு வாழக்கூடிய வாழ்க்கையிலும் வெற்றியடையச் செய்யும் அளவுகோல் அல்ல. சராசரியிலும் குறைவெனக் கணிக்கப்பட்ட மாணவர்களில் எத்தனை வீதத்தை  கல்வியிலும் அதன்மூலம் வாழ்வாங்கு வாழக்கூடிய வாழ்க்கையிலும் வெற்றியடையச் செய்ய முடியும் என்பதே ஒரு ஆசிரியரின் வெற்றியை அளக்கும் அளவுகோல் ஆகும்.
எத்தனிப்பில் வெற்றி காணும் போது, ஒன்றைச் சாதித்து விட்ட உண்ர்வு ஏற்படும் போது, ஒன்றில் திருப்தி யடையும் போது தலையில் தாங்கிய சுமை தணிவடையும் போது கற்றல் செயற்பாடு நடைபெறுகின்றது. சாதனை ஒன்றைப் புரிய வேண்டும் என்ற முனைப்புணர்வு, பிரச்சனையான ஒரு அம்சம், ஆர்வத்ழைதத் தூண்டும் ஒரு கருத்து, கருத்துள்ள ஒரு செய்முறை, எதிர்பாராத கண்டுபிடிப்பனுபவம் ஆகியவற்றில் ஒன்றையோ பலதையோ எதிர்கொள்ளக்கூடிய கற்கும் சூழல் ஒன்று கற்றல் செயற்பாட்டுக்கு மிக அவசியமாகும். 

No comments:

Post a Comment