போருக்குப் பின்னரான சமூக அபிவிருத்தியில் பொது நூலகங்களின் புதிய பரிமாணங்கள்
அறிமுகம்
முப்பது ஆண்டுகால உள்நாட்டுப் போரில் சிக்குண்டு சிதைவுற்ற சமூகமொன்றின் போருக்குப் பின்னரான புனர்நிர்மாணமும் அதனுடன் இணைந்த வகையில் சமூகத்தின் உறுப்பினர்களை அவர்களின் பௌதிக மற்றும் உணர்வுசார் பாதிப்புகளிலிருந்து விடுவிப்பதற்கான புனர்வாழ்வு முயற்சிகளும் சமூகப் படிநிலை ஒவ்வொன்றிலும் சேவைகளின் உச்ச அளவிலான முனைப்புத்தன்மையைக் கோரி நிற்கிறது. இந்த வகையில் தனிமனிதர் ஒவ்வொருவரையும் இலக்கு வைத்து அவர்களது அபிவிருத்திக்கான வழிவகைகளில் பொது நூலகங்களின் பணி முக்கிய பங்காற்றுகின்றது. வளர்ச்சியடைந்த நாடுகளின் அபிவிருத்தி நோக்கிய பாதையில் சுய கற்றல் செயற்பாட்டின் பங்கு அளப்பரியது. வளர்ச்சித் தன்மையை எட்டிய பின்னரும் கூட செலவிடும் ஒவ்வொரு மணித்துளியையும் பயனுள்ளதாக்கிக் கொள்ளும் வகையில் குறுகிய தூரப் பிரயாணங்களின் போது கூட வாசிப்பு என்பது பிரதான செயற்பாடாகத் தனிமனித வாழ்வில் அங்கம் வகிக்கிறது. போரினால் மிகவும் நலிவடைந்திருக்கும் தமிழ்ச்சமூகத்தில் தனிமனித ரீதியிலான அறிவு விருத்தியின் மூலமே சமூக மேம்பாடு சாத்தியமாகும் என்பதைக் கருத்திற் கொள்ளும் எவரும் நூலகங்களின் புதிய பொறுப்புக்களை முன்னுணர்வர். இதனைக் கருத்திற் கொண்டு பொதுநூலகங்கள் முன்னெடுக்க வேண்டிய பணிகள் தொடர்பான ஒரு அவசியமான பார்வையைத்தர இக்கட்டுரை முயல்கிறது.
வாசிப்பால் தன்னை நீண்ட காலம் வளப்படுத்தி கல்வியில் உயர்ந்த சமூகம் என்ற பெருமையை உலகளாவியரீதியில் பெற்ற நமது தமிழ்ச் சமூகத்தின் இன்றைய வாசிப்பு நிலை கேள்விக்குறியாகி நிற்கிறது. குறைந்தது கடந்த இரு தசாப்தங்களாவது மனித மனங்கள் ஒவ்வொன்றிலும் தேடலுக்கான பாதைகள் அனைத்தும் மூடப்பட்ட பரிதாபகர நிலையானது கல்விச் சமூகத்தின் பார்வைக்கு எட்டியதோ இல்லையோ நூலக சமூகத்தின் கண்களுக்கு மிகத் தெளிவாகவே தெரியும் காலப்பகுதி இது. அதிலும் தகவல் தொழினுட்பத்தின் நல்ல அம்சங்களைத் தேடிக் கண்டுபிடித்து கருத்துக்கு இனிமை தரும் அம்சங்களைப் பயன்படுத்தும் ஆற்றலைக் கைவிட்டு கண்ணுக்கு இனிமை தரும் கவர்ச்சிகளை மட்டும் தேடியலையும் நிலையும், வலைத் தளம் இருக்க வாசிப்பு ஏன் என்ற வாதங்களும், வாசிப்புப் பழக்கத்தை இல்லாமலாக்குவதில் 30 ஆண்டுகால உள்நாட்டுப் போருக்கு கணிசமான பங்குண்டு என்ற நொண்டிச் சாக்குகளும், தகவல் தேடலுக்கான அனைத்து தேவைகளையும் இல்லாமலாக்குவதில் ஒருபடி கூடவே ஒத்துழைக்கும் இன்றைய நிலையில் தமிழ்ச் சமூகத்தை வாசிப்பை நோக்கி மீண்டும் திசைதிருப்பும் பாரிய கடமையைக் கொண்டனவாகவே நூலகங்களின் பணி உணரப்படுகின்றது.
பாடசாலைகள் தோறும் பாடசாலை நூலகக் கற்றல் வள நிலையம் என்ற புதிய பெயருடன் பாடசாலை நூலகங்களை உருவாக்கும் பணி, ஏற்கனவே இயங்கும் நூலகங்களை புது மெருகூட்டும் முயற்சிகள், பாடசாலை நூலகத்துக்கு இயன்றவரை பட்டதாரி ஆசிரியர் ஒருவரை ஆசிரிய நூலகர் என்ற பெயருடன் நியமிக்கும் முயற்சிகள், ஒக்டோபர் மாதத்தை தேசிய வாசிப்பு மாதமாகப் பிரகடனப்படுத்தி; அந்த நாட்களில் பொதுசன நூலகம் பாடசாலை நூலகம் என்ற பேதமின்றி கருத்தரங்குகள், கண்காட்சிகள், போட்டிப்பரீட்சைகள் என்று நடத்துதல், ஆசிரிய நூலகர்களுக்கு பயிற்சிப் பட்டறைகளை ஒழுங்குபடுத்துதல் முதலான வாசிப்பை மேம்படுத்துவதற்கான பலவித முயற்சிகளில் இறங்கியிருக்கிறது இலங்கைச் சமூகம். 5நு மாதிரி போன்று வகுப்பறைக் கற்றல் கற்பித்தலுக்கான புதிய பல அணுகுமுறைகள், வகுப்பறைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்ற வாசிப்பு மூலை, வாசிப்புப் பெட்டி போன்ற புதிய பல செயற்திட்டங்கள் வாசிப்பின் அவசியத்தை மேலும் வெளிப்படுத்தி பாடசாலை நூலகத்தைத் தரமுள்ளதாக மாற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றது.
அன்றைய வாசிப்புச்சூழலும் அதன் நோக்கங்களும்;
வாசிப்பு என்ற கருத்துநிலை தமிழ்ச்சமூகத்திற்குப் புதியதோ அல்லது அண்மைக்காலங்களில் தோற்றம்பெற்றதோ அல்ல. குடும்ப மட்டத்தில் தமிழ்மகன் ஒவ்வொருவரது வீட்டிலும் ஒரு காலத்தில் மிக அத்தியாவசிய அம்சமாகக் கருதப்பட்டு பராமரிக்கப்பட்ட வீட்டு நூலகம் என்ற கருத்துநிலையின் எச்சமே இன்றைய காலப்பகுதியில் யாழ்ப்பாண நடுத்தர வர்க்கத்தினரில் ஒவ்வொருவரதும் வீடுகளில் உள்ள காட்சி அறைகளில் ஆடம்பரப் பொருளாக அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்ற நூற் தொகுதிகள். சாதாரண ஆசிரியர்கள், சமயகுருமார்கள், சோதிடர், சித்தவைத்தியர் முதற்கொண்டு பேராசிரியர்கள் வரை மிகச்சிறந்த வீட்டு நூலகங்களைக் கொண்டிருந்தனர். சேர் பொன்னம்பலம் இராமநாதன், கலைப்புலவர் நவரத்தினம், வணபிதா ஞானப்பிரகாசர், வண பிதா தனிநாயகம் அடிகளார், க.சி.குலரத்தினம், த.கைலாயபிள்ளை, பல்கலைக்கழகப் பேராசிரியர்களான கா.கைலாசநாதக்குருக்கள், சு.வித்தியானந்தன், க.கைலாசபதி, கா. சிவத்தம்பி, ச.தனஞ்ஜெயராசசிங்கம் முதலியோர் இதில் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களிடம் தனிப்பட்ட வகையிலே பல்வேறு பரிமாணங்களிலான நூலகங்கள் இருந்தன. இலங்கையின் மிகச்சிறந்த, மிகத்தரமான தனிநபர் நூலகமாக ஒருகாலத்தில் அன்றைய அமைச்சர் கன்னங்கராவினால் பேசப்பட்டது சேர். பொன். இராமநாதன் என்ற தமிழ் மகனால் உருவாக்கப்பட்ட நூலகமே (ஏiவாடைiபெயஅ 1971). பொது வாசிப்புக்கும் அப்பாற் சென்று தாம் தேர்ந்தெடுத்த துறைகளில் சிறப்புத்தேர்ச்சி பெறும் பொருட்டு சேகரிக்கப்பட்ட சிறப்புச் சேகரிப்புகளும் இதில் உள்ளடங்கியிருந்தன. சுற்றுப்புறச்சமூகம் என்ற வகையில் தமிழ்ப்பிரதேசத்தில் உள்ள சனசமூக நிலையங்கள் விளையாட்டு, முன்பள்ளிக் கல்வி போன்ற பொதுநலச் செயற்திட்டங்களின் களமாகக் கருதப்பட்ட போதும் வாசிகசாலை என்ற காரணப் பெயரில் வழங்கப்படுவதன் காரணம் அவற்றின் பிரதான செயற்பாடாக இன்றும் இருப்பது புதினப்பத்திரிகை வாசிப்பு வசதியே. கல்விக்கூடங்கள் என்ற ரீதியில், வட இலங்கையின் மூளை என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணத்திலுள்ள பழம்பெரும் பாடசாலைகளிற் பெரும்பாலானவை மிகத்தரமான நூற் சேகரிப்புகளுக்குப் பேர்போனவை. அமெரிக்க மிசினரிமாரின் அரிய முயற்;சியின் பலாபலனே அரிய நூல்களின் இருப்பிடமாக இன்றும் கருதப்படும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் நூலகமாகும். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு வந்து சேர்ந்த அன்பளிப்புத் தொகுதிகளில் உள்ளடங்கியிருக்கும் சேகரிப்பின் வகைகளின் அடிப்படையில் நோக்கின் ஆய்வுக்கு உதவும் நூல்களைவிட பொதுவாசிப்புக்கு உதவும் சேகரிப்புக்களை உள்ளடக்கிய தொகுதிகளில் புகழ்பெற்றவை குல சபாநாதன், க.சி. குலரட்ணம் போன்ற அறிஞர்களால் பராமரிக்கப்பட்ட நூற்தொகுதிகளே. கையெழுத்துப் பிரதிகள் உட்பட, புதினத்தாள்களில் அவ்வப்போது வெளிவந்த செய்திகளை பொருள் வாரியாக வெட்டி ஒட்டி உருவாக்கப்பட்ட சேகரிப்புகள் தமிழ்ச்சமூகத்தின் தனிமனிதன் ஒவ்வொருவரும் கல்வி என்ற நிலைக்கும் அப்பால் சென்று அறிவுச் சமூகமாக தமிழ்ச் சமூகத்தை மாற்ற எடுத்த பெரு முயற்சிகளாகவே இதனைப் பார்க்க முடிகிறது. சமூக மட்டத்தில் யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலில் வரவேற்பறை போன்று கண்கவர் தோற்றத்தில் தென்னிலங்கை மக்களின் முழு ஈர்ப்பிற்;குரிய பொருளாகக் கருதப்படும் யாழ்ப்பாணப் பொதுநூலகம் 1981ம் ஆண்டு மே மாதம் 31ம் திகதி எரியூட்டப்படும்வரை ஆசியாவின் மிகச் சிறந்த நூலகங்களில் ஒன்றாகக் கருதப்பட்டது. கடந்த மூன்று தசாப்தங்களாக நிலவி வந்துள்ள போர்க்கால சூழ்நிலை, போர் அனர்த்தங்களால் மேற்குறிப்பிட்ட அனைத்துக் கருவூலங்களும் அழிக்கப்பட்டுவிட்டது.
அன்றைய வாசிப்புச்சூழலின் பிரதான நோக்கம் அறிவுத்தேடல். அறிவு என்பது படிப்பறிவு, பட்டறிவு இரண்டினதும் சேர்க்கையாக இருந்தது. பகல் பொழுதானது வயது வந்த அனைவருக்கும் அவர்களுக்கேற்;ற தொழிலில் ஈடுபடுவதன் மூலம் பொருள் தேடுவதற்கு வழிவகுத்தது. ஆர்வம் உள்ள சிலர் மாலை அல்லது இரவு வேளைகளில் தக்க அறிஞர்களிடம் முறைசார்ந்த கல்வி பெற்று வந்தனர். கல்வி அறிவு இல்லாதவர்கள் கேள்வி வழி அறிவு பெறுவதற்;குப் பல வழிவகைகள் மேற்கொள்ளப்பட்டன. சமயச்சொற்பொழிவும், நாடகங்களும் பிரதான பங்கை வகித்தன. வண்ணைச் சிவன் கோவிலில் நாவலர் மேற்கொண்ட கந்தபுராண படன நிகழ்ச்சி செல்வாக்குப் பெற்று நாடெங்கும் பரவிற்று. கந்தபுராணம், மகாபாரதம், இராமாயணம் ஆகிய நூல்கள் சில ஆலயங்களில் நாள்தோறும் படிக்கும் வழக்கம் ஏற்பட்டது. இணுவிலில் மாணிக்க வைரவர் முன்றிலில் இத்தகைய நிகழ்வு சாத்திர அம்மா எனப்போற்றப்பெறும் அம்மையார் ஆதரவில் பல ஆண்டுகள் நடைபெற்று வந்தது. ஒருவர் படிக்க ஏனையோர் கேட்டுக்கொண்டிருப்பர். இத்தகைய நிகழ்வுகள் தனியார் வதிவிடங்களிலும் நடைபெற்றன. கடந்த நூற்றாண்டில் யாழ்ப்பாணப் பகுதியில் சுருட்டுத்தொழில் பிரதான இடம் பெற்று விளங்கியது. இதற்கான தொழில் நிலையங்கள் இணுவில், தாவடி, கொக்குவில், கோண்டாவில், திருநெல்வேலி முதலிய பல ஊர்களில் இருந்தன. பெரும் எண்ணிக்கையினர் இந்நிலையங்களில் நாள்தோறும் ஈடுபட்டிருந்தனர். இவர்களது பகல் நேரம் பயனுள்ளதாக இருப்பதற்காக நிலைய உரிமையாளர்கள் ஆதரவுடன் இதிகாசங்கள் படிக்கும் நிகழ்ச்சி நாடோறும் நிகழ ஒழுங்கு செய்யப்பெற்றன. உணர்வுபூர்வமாக ஆற்றல் உள்ளவர்கள் இந்நூல்களைப் படிக்க நியமிக்கப்பெற்றனர். மேலே குறிப்பிட்ட இவ் வழிவகைகள் மூலம் கேள்வி வழி அறிவு நாட்டில் பரவியிருந்தது. கல்விக் கூடங்களில் கற்றவர்களுக்கு ஒப்பாக அல்லது அதற்கும் மேலாக இவர்கள் அறிவாற்றல் உள்ளவர்களாக விளங்கினர்.
இன்றைய வாசிப்புச்சூழலும் அதன் நோக்கங்களும்
குடும்ப ரீதியில் பார்க்கும் போது இன்றைய தகவல் தொழினுட்ப யுகம் மேற்குறிப்பிட்ட சூழலை அடியோடு மாற்றியமைத்து விட்டது. ஒரு புறம் நேரம் இல்லை என்ற கோஷமும் மறுபறத்தில் நேரம் போவதே தெரியாமல் தொலைக்காட்சியின் சின்னத்திரையே கதி என்று கிடப்பதும் தான் குழந்தைகளுக்கு நாம் தரும் சூழலாக மாறிவிட்டது. அறிவுத் தேடலுக்குப் பதில் ஏட்டுக்கல்வி முனைப்புற்றிருக்கிறது. குடும்ப அமைப்பில் பொதுவாசிப்பிற்கான அத்தனை வாசல்களும் அடைக்கப்பட்ட நிலையே காணப்படுகின்றது. வீட்டு நூலகங்களைக் கொண்ட பல குடும்பங்கள் போர்ச்சூழலினால் ஏற்பட்ட தொடர்ச்சியான இடப்பெயர்வுகளால் அனைத்தையும் இழந்திருப்பதனால் வளரும் இளஞ்சந்ததியினருக்கு வீட்டுநூலகத்தின் பெறுமதியும் அதன் பயன்பாடும் பற்றிய முக்கியத்துவத்தை செயலுருவில் காணும் வாய்ப்பை இல்லாமல் ஆக்கியிருக்கிறது. யுத்தம் தந்த பயம், இழப்புகள், அதனால் ஏற்பட்ட நிம்மதியற்ற நிலை என்பன வாசிப்பில் உள்ள ஆர்வத்தைக் கணிசமாகக் குறைத்திருக்கின்றன. யும் தராதரப் பத்திரம் நோக்கிய கல்வித் தேடலானது பொது வாசிப்பில் தமது குழந்தை ஈடுபடுவதானது அந்தஸ்து நோக்கிய தமது கல்வித் தேடலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற ஆழமான நம்பிக்கையை பெற்றோர் கொண்டிருக்கும் காலமிது. இன்றைய புதினத் தாள்களில் அறிவிக்கப்படும் பொது அறிவு மற்றும் ஆக்கத்திறன் போட்டிகளில் தமிழ்ச் சமூகத்தின் மிகத் தரமான பாடசாலைகளின் பிள்ளைகள் பங்குபற்றும் தன்மை அருகி வருகிறது. (நேறளியிநச ளரசஎநல 2011). சில பாடசாலைகளில் ஆசிரியர்கள் ஆக்கத்திறன் போட்டிகளில் பிள்ளைகளின் பெயர்களை பாடசாலை ஆசிரியர்கள் உள்ளடக்கினால் பெற்றோரே சென்று அத்தகைய போட்டிகளில் ஈடுபடுவது தமது பிள்ளையின் கல்வியை பாதிக்கும் என்ற அடிப்படையில் போட்டிpலிருந்து பிள்ளையை தாமே விரும்பி நீக்கிவிடும் தன்மையும் இனங்காணப்பட்டிருக்கிறது.
இது மட்டுமன்றி எமது கல்விமுறையானது சுயகற்றலுக்கு வழிப்படுத்தத் தவறுகின்ற ஒன்றாகவே பார்க்கப்படுகின்றது. பாடசாலைகள் மட்டுமன்றி பல்கலைக்கழகங்கள் கூட தயார்நிலைக்கல்வியிலேயே கருத்துச்செலுத்துகின்றன. இதன்காரணமாக கற்பித்தல் என்ற செய்முறை மேலோங்கி இருப்பது மட்டுமன்றி ஆசிரியர்களின் மிகப் பெரும் சுமையாகவும் பார்க்கப்படுகிறது. 'மனிதனை மனிதனாக உருவாக்குவதே உண்மைக் கல்வியின் நோக்கம்' என்ற சுவாமி விவேகானந்தரின் சிந்தனை 'உடல் உள்ளம் ஆன்மா என்பவற்றின் சிறப்பு மிக்க பண்புகளை வெளிக் கொணர உதவுவது கல்வி' என்ற காந்தியின் சிந்தனை வெறும் சுலோகங்களாக மட்டுமே படிக்கப்படுகின்றன. மாணவர்களிடையே போட்டி மனப்பான்மையை ஊக்குவிக்கும் தளமாக இன்றைய கல்விமுறை அமைகின்றது. பாடசாலைகளை தர அடிப்படையில் வகைப்படுத்தியிருப்பது இத்தகைய போட்டி மனப்பான்மைகள் மேலும் அதிகரிக்க வழிவகுக்கின்றது. உலகளாவியரீதியில் நடைமுறையிலிருக்கும் சிறந்த திட்டங்களின் தொகுப்பாக இலங்கையின் கல்வித் திட்டங்கள் அமைந்திருந்தபோதும் கல்வித்திட்டங்களில் ஏற்படுத்தும் மாற்றங்களின் வேகத்துக்கு ஈடு கொடுக்கும் வகையில் ஆசிரியர்களுக்கான பயிற்சியோ அவர்களிடம் மனமாற்றத்தைக் கொண்டு வருவதற்கான தூண்டுதல்களோ மிகக்குறைவு. இன்றைய கல்விமுறையில் மனிதநேயமிக்க மனிதனை உருவாக்கும் கல்வியின் பிரதான நோக்கம் பின்தள்ளப்பட்டு தொழில் நோக்கம் முனைப்புப்படுத்தப்பட்டுள்ளது. வறுமை, வேலையின்மை போன்ற பொருளாதாரக் காரணிகளின் தாக்கம் மிக அதிகமாக உள்ள எமது தேசத்தில் கல்வியின் முழு நோக்கமுமே தொழில் நோக்கமாகவே உள்ளது.
இன்றைய சமூகத்தின் தேவைகள்
இன்றைய சமூகம் தகவல் சமூகம் எனப்படுகிறது. அறிவே ஆற்றல் என்ற கோஷம் முன்வைக்கப்பட்ட கைத்தொழில் சமூகத்திலிருந்து தகவலே ஆற்றல் என முழங்கும் தகவல் சமூகத்தில் நாம் வாழ்கின்றோம். குடும்பம், சுற்றுப்புற சமூகம், கிராமம் போன்றவற்றின் வரையறைகள் உலகக் கிராமம் என்ற கருத்து நிலைக்குள் தமது தனித்துவத்தை மெல்ல மெல்ல இழந்து வருகின்றன. உலகின் வேகத்தோடு ஒட்டி ஓடவேண்டிய நிர்ப்பந்தம் மனிதனுக்கு இருப்பதால் பம்பர வேகத்தில் சுழலும் இன்றைய உலகில் மனிதனின் உதடுகள் அதிகம் உச்சரிக்கும் வார்த்தை 'நேரமில்லை' என்பதே. நேரமில்லாத உலகில் தன்னுணர்வையும், சமூக உணர்வையும் தக்கவைப்பதற்கு பாரிய பிரயத்தனம் தேவை. சாதனைப் படிகளின் உச்சியில் நிற்கும் மனிதனால் மனிதன் தலையை நிமிர்த்தும் தடவைகளை விட அம்மனிதனால் உருவாக்கிவிடப்பட்ட சமூக, பொருளாதார, அரசியல், கலாச்சார ஏற்றத்தாழ்வுகளின் அபாயகரமான விளைவுகளை சந்தித்துக்கொண்டிருக்கும் மனித சமூகத்தைப் பார்த்து மனிதன் தலைகுனியும் தடவைகள் அதிகமானவை.
அன்பு, பாதுகாப்பு, பரஸ்பர உறவு என்பவற்றின் அடிப்படையில் உருவான குடும்பம் என்ற ஆதார நிறுவனம் இன்று இப்பண்புகளை இழந்து பணத்துக்கும் அந்தஸ்து மிக்க தொழிலிற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் நிறுவனமாக மாறிக்கொண்டுள்ளது. தைரியம், பற்றுறுதி, பரந்த மனப்பாங்கு, பொதுநலப் பண்பு போன்றவற்றை வளர்ப்பதற்கு உதவும் விளையாட்டுக் குழுக்களுடன் குழந்தைகள் செலவிட்ட காலம் மாறி, தனியார் கல்வி நிலையங்களில் கூடுதலான நேரம் முடக்கப்பட எஞ்சியுள்ள நேரத்தில் கணனி விளையாட்டுக்களும், வியாபார ரீதியான வர்த்தக மையங்களும் முக்கியப்படுத்தப்படுவதனால் குழந்தைகளை பிரதான அங்கத்தவராக கொண்ட விளையாட்டுக்குழு என்ற வலுமிக்க ஆதார நிறுவனம் நகர்ப்புற சமூகங்களில் மெல்ல மெல்ல மறைந்துகொண்டு போகிறது. வாழ்க்கைப் படிப்பை புறந்தள்ளி ஏட்டுப்படிப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் பாடசாலை என்ற நிறுவனம், விரும்பத்தகாத மனவெழுச்சிகளை மனிதரிடம் குறிப்பாக குழந்தைகளிடம் தூண்டிவிடும் திரைப்பட ஊடகங்கள், நின்று நிதானித்து சிந்தித்துப் பார்த்து செயற்பட நேரமற்ற பம்பர உலகில் தொகை ரீதியாகவும் தரரீதியாகவும் பெருத்துக்கொண்டு போகும் தகவல் வெள்ளத்துக்குள் நல்லதை, பொருத்தமானதை தெரிவு செய்வதற்கான நேரமோ, பொறுமையோ, அறிவோ அற்ற மனித சமூகம் இப்படி இன்றைய சமூகத்தின் எதிர்க்கணியப் போக்கை விவரித்துக்கொண்டே போகலாம்.
உலகம் கிராமமாக சுருங்கிவரும் இன்றைய காலத்தில் ஒவ்வொரு சமூகமும் தமது தனித்தன்மையை வெளிக்கொணர்வதற்கு தம்மாலான வகையில் முயற்சி செய்கின்றன. கொடிய விலங்குகளிடமிருந்து தன்னைப் பாதுகாக்க, கூடி வாழ முற்பட்ட மனித சமூகம் இன்று மனிதர்களிடமிருந்து தம்மைப் பாதுகாக்கவேண்டிய தன்மைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. வலியது மெலியதை நசுக்கும் என்ற இயற்கையின் விதி மனிதனுக்கு விதிவிலக்கானதொன்றல்ல. எனவே நசுக்கப்படும் சமூகம் தன்னை காத்துக்கொள்ளவும், தனித்தன்மையை பேணிக்கொள்ளவும் சமூக மேம்பாடு அவசியமானது. அதிலும் நீண்ட கால உள்நாட்டுப் போரில் சிக்குண்டு சிதைந்திருக்கும் ஒரு சமூகத்தின் அபிவிருத்தியை கருத்தில் கொள்ளும் எவரும் தனிமனித அபிவிருத்தியைப் புறந்தள்ளி சிந்திப்பது சாத்தியமற்றதொன்று.
சமூக மேம்பாடு என்பது சமூகத்தின் நலனை மேம்படுத்தும் பொருட்டு அதன் ஆதார நிறுவனமான குடும்பம் என்ற நிறுவனம் முழுமையான வளர்ச்சி பெறவும், அதன்; உறுப்பினரான தனிமனிதர் ஒவ்வொருவரும் தன்னிறைவும் திருப்தியும் பெறவும் தேவைப்படும் வாய்ப்பை ஏற்படுத்தித் தருவதை நோக்கமாகக் கொண்டது. தனிமனித வளர்ச்சிக்கு அறிவு எந்தளவுக்கு அடிப்படையாக உள்ளதோ சமூக வளர்ச்சிக்கும் அதுவே அடிப்படை. விவசாயத்தை முதன்மையாகக் கொண்ட நிலபிரபுத்துவ சமூகமொன்றில் 'வரப்புயர' என்ற ஒற்றைச் சொல்லின் மூலமே சமூகத்தின் மேம்பாட்டுக்கு உழவுத்தொழிலின் அவசியத்தை அவ்வைக்கிழவி வெளிக்கொணர்ந்தது போன்று, தகவலை முதன்மையாகக் கொண்ட இன்றைய சமூகத்தில் 'அறிவுயர' என்ற ஒற்றைச் சொல்லின் மூலம் தனி மனித அறிவு குடும்பத்தின் மேம்பாட்டையும்; குடும்ப உறுப்பினர்களது மேம்பாடு சுற்றுப்புறச் சமூகத்தின் மேம்பாட்டையும் அதன் வழியில் ஒட்டுமொத்தமான சமூக மேம்பாட்டை எவ்வாறு வளர்க்க முடியும்; என்பதை வெளிக்கொணர முடியும். எந்தவொரு சமூகமும். சமூக, பொருளாதார துறைகளில் முன்னேற வேண்டுமாயின் பிற நாடுகளில் தங்கியிருக்கும் நிலை மாறி நாட்டின் இயற்கை வளங்களும் மனித வளங்களும் பூரணமாகப் பயன்படுத்தப்பட வேண்டும் பொது மக்களின் நலனையும் வளர்ச்சியையும் அதிகரிக்க உதவும் வகையில் அவ்வளங்களை பயனபடுத்தி அதிக பொருட்களை உற்பத்தி செய்வதும் சிறந்த சேவையை அளிப்பதுமே அபிவிருத்தியின் முக்கிய நோக்கமாகும். எந்தவொரு அபிவிருத்தி முயற்சியின் இலக்கு மனிதனே. அபிவிருத்திக்கான கருவியும் மனிதனே. அபிவிருத்தியின் கர்த்தாவும் மனிதனே. மனிதனுக்காக மனிதனைக் கொண்டு மனிதனால் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளே அபிவிருத்தியைத் தரும்.
சமூக மேம்பாட்டை எங்கிருந்து தொடங்கலாம் என்ற வினா எழுப்பப்படும்போது நாட்டு மக்களில் முக்கால் பகுதிக்கு அதிகமாக வசிப்பது கிராமங்களில்தான் என்பதற்கமைய கிராமம் தேசத்தின் அபிவிருத்தியை அளவிடுவதற்கான சிறந்த அளவுகோலாக பொருளியல் வல்லுனர்கள் கண்டனர். ஆனால் உலகமயமாக்கல், நகரமயமாக்கல், போன்ற சிந்தனைகள் காரணமாக கிராமம் என்ற கருத்துநிலை மெல்ல மெல்ல தனது வரையறைகளை இழந்து வருவதும் கிராமமா நகரமா என்று தெளிவாக வரையறுக்க முடியாதபடி இரண்டும் கெட்டான் நிலையில் கிராமங்கள் இருப்பதும் இதன்காரணமாக பட்டின சபைகள், கிராம சபைகள் என்பன இல்லாமல் ஆக்கப்பட்டு இரண்டையும் இணைத்து பிரதேச சபைகள் உருவாக்கப்பட்டிருப்பதும் கிராமத்திலும் பார்க்க குறுகிய வரைவெல்லை ஒன்றினை அபிவிருத்திக்கான அளவுகோலாக தெரிவு செய்யவேண்டிய தேவையை உருவாக்கியுள்ளது. சமூக மேம்பாட்டை எப்படித் தொடங்குவது என்ற வினா எழுப்பப்படும் போது 'புனித முற்று மக்கள் புதுவாழ்வு வேண்டில் புத்தகசாலை வேண்டும் நாட்டில் யாண்டும்' என்ற புரட்சிக் கவி பாரதிதாசனின் அர்த்தம் பொதிந்த வரிகள் இங்கு உயிர் பெறுகின்றன.
சிதைந்துகொண்டு போகும் மனிதப் பண்பை விருத்தி செய்வதற்கு அடிப்படையாக இருப்பது அறிவு. இந்த அறிவை உள்ளடக்கியிருப்பவை நூல்கள். ஒரு நூலானது கல்வியறிவு தந்து நடைமுறைநிலை தெரிவித்து கடமைகளைக் காட்டி, உரிமைகளைச் சேர்த்து, பொருளாதாரத்தை வளர்த்து கலாச்சாரத்தைக் காக்கும் செயற்பண்புகள் கொண்டது (தில்லைநாயகம் 1971) நூல்கள் இருக்கும் இடம் நூலகம். நூலகங்களை அவற்றின் நோக்கத்தின் அடிப்படையில் கல்வி சார் நூலகங்கள் பொது நூலகங்கள் சிறப்பு நூலகங்கள் என மூன்று பெரும் பிரிவாக வகைப்படுத்த முடியும். இவற்றில் மக்களால் மக்களுக்காக மக்களே முன்னின்று நடத்துவது பொது நூலகம் எனப்படுகிறது. எமது சமூகத்தில் பொது நூலகப் பணியை மேற் கொள்வதில் மாநகர சபை நூலகங்கள், பிரதேசசபை நூலகங்கள் கிராம நூலகங்கள் சனசமூக நிலைய நூலகங்கள் என்பன உள்ளடங்குகின்றன.
நவீன சமுதாயத்தின் முக்கிய அம்சமாகக் கருதப்படும் பொதுசன நூலகங்கள் சமூகத்தின் நாளாந்த செயற்பாடுகளில் மிக முக்கியத்துவம் வகிக்கின்ற ஒரு சமூக நிறுவனமாகும். சமூகத்தின் கலாசார நிலையங்களாகச் சேவையாற்றும் இந் நிறுவனங்கள் சமூக அங்கத்தவர்களை இன, வயது, மொழி, மத வேறுபாடின்றி ஒன்றிணைக்கும் நிலையங்களாகக் காணப்படுகின்றன. இவை ஏனைய கல்விசார், விசேட நூலகங்கள் போன்று குறிப்பிட்ட வாசகர் பிரிவுக்குச் சேவை செய்வன அல்ல. சிறுவர், மாணவர், முதியவர், பெண்கள், வலுக்குன்றியோர், ஆசிரியர், ஆராய்ச்சியாளர் போன்ற சமூகத்தின் அனைத்து மட்டத்தினருக்கும் சேவை செய்யவேண்டிய கடமைப்பாடு உடையது பொதுசன நூலகமாகும்.
எனவே தகவல் வள சேகரிப்பில் சமூக உறுப்பினர்களின் பலதரப்பட்ட அறிவுச் தேவைகளையும் பூர்த்திசெய்யக்கூடிய அளவிற்கு தகவல் வளங்கள் இடம்பெறுமாறு கொள்கை வகுக்கப்படல் வேண்டும். இக் கொள்கை மூலம் பொதுசன நூலகத்தின் முக்கிய செயற்பாடுகளான வாசகருக்கான தகவல், கல்வி, பொழுதுபோக்கு, மீள் உருவாக்கம் போன்றவற்றை நிறைவு செய்யும் வகையில் பொதுசன நூலகங்களில் தகவல் வள அபிவிருத்திக் கொள்கை வகுக்கப்படல் வேண்டும்
சர்வதேச நூலகச் சங்கங்களின் சம்மேளனத்தினால் (ஐகுடுயு) மீளாய்வு செய்யப்பட்ட யுனெஸ்கோவின் கொள்கை விளக்கப்படி பொதுசன நூலகங்களின் குறிக்கோள்களும் இலக்குகளும் கல்வி சார்ந்தவை, தகவல் சார்ந்தவை, கலாசாரம் சார்ந்தவை, பொழுதுபோக்கு சார்ந்தவை என நான்காக வகைப்படுத்தப்படுகின்றன. இக்குறிக்கோள்களை நிறைவேற்றுவதற்குப் அவை பின்வரும் முக்கிய தொழிற்பாடுகளை ஆற்ற வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. (ஐகுடுயு 1995)
• முறை சாராத வளர்ந்தோர் கல்விக்கான முகவர்நிலையங்களாக செயற்படல்
• சுய கல்விக்கான முகவர் நிலையங்களாகத் தொழிற்படல்
• கூட்டுறவு முறையிலான கலாசார அனுபவங்களையும் ஜனநாயக வாழ்வையும் விருத்தி செய்தல்
• தற்காலத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற அனைத்து விவகாரங்கள், நெருக்கடிகள் தொடர்பான தகவல்களை வழங்குதல்
• சனசமூக நிலையங்களாகத் தொழிற்படல்
• சமூகரீதியில் பயனுள்ள ஒரு நிறுவனமாகவும், கலாசார நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நிறுவனமாகவும், தற்கால உலகியல் மாற்றங்களை அலசும் இடமாகவும் இருத்தல்
• பொதுமக்கள் சார்ந்த நிகழ்வுகளை நினைவுகூரும் வகையில் ஒரு சந்திப்பிடமாக தொழிற்படல்
• பொது, சிறப்பு நிகழ்வுகள் தொடர்பான நூல்களின் பட்டியல்களை காட்சிக்கு வைத்தல்
• பிரபலமான நபர்களின் பேச்சுகள், விரிவுரைகள், திரைப்படக்காட்சிகள் போன்றவற்றை ஒழுங்கு படுத்துவதனூடாக விரிவாக்க நிலையமாகத் தொழிற்படல்
• நோக்கு சேவைகள், சிறுவர்க்கான சேவைகள் நூலுருவற்ற வளங்களின் சேவைகள் போன்றவற்றை ஒழுங்குபடுத்தல்
• பௌதீக ரீதியிலான அனைத்துத் தடைகளையும் உடைத்து அனைத்துத் தகவல் வளங்களையும் வாசகர் அணுகக்கூடியவாறு வழியமைத்தல்
• சமூகத்தின் நிகழ்காலத் தேவைகளையும் இனித் தேவைப்படும் என எதிர்பார்க்கப்படும் தேவைகளையும் பிரதிபலிக்கும் நிலையமாகத் தொழிற்படல்
• ஒவ்வொரு தனிமனிதனும் தனது தேவைகளுக்கும் ஆர்வங்களுக்கும் ஆற்றல்களுக்கும் ஈடு கொடுக்கும் வகையில் ஆய்வு, தனிநபர் கலாசாரம் என்பவற்றுக்கான நிலையமாகத் தொழிற்படல்
• உயிரூட்டமிக்க, சமூகரீதியில் ஒருங்கிணைக்கப்பட்ட உத்திகளின் உருவாக்க சக்தியாக தொழிற்படல்
• பாடசாலைகள், கல்லூரிகள் என்பவற்றின் முறைசார்ந்த கல்விக்கு உதவும் நிலையமாக இருத்தல்
• வாசிப்புப் பழக்கத்தை விருத்தி செய்யும் நிலையமாக தொழிற்படல்
மேற்குறிப்பிட்ட தொழிற்பாடுகளைவிடவும் மேலதிகமாக புதிய புதிய பரிமாணங்களில் பொதுநூலகங்களின் சேவை போரால் நலிவுற்ற சமூகமொன்றின் அபிவிருத்திக்கு அவசியமாகின்றது. புதிய பரிமாணங்களின் ஓரிரு அம்சங்கள் இங்கு கருத்தில் கொள்ளப்படுகின்றன.
பொது நூலகங்களின் புதிய பரிமாணங்கள்
திறந்த பாடசாலையாக
கல்விசார் நிறுவனங்களான பாடசாலைகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மக்களுக்கு கற்பித்தலை மேற்கொள்கிற முறைமை கல்வி எனப்படுகிறது. கல்வி மற்றும் அனுபவம் ஆகிய இரண்டினூடாகவும் தனிநபரால் பெறப்படுகின்ற புலமைத்துவமும் திறனும் அறிவு எனப்படுகிறது. விலங்குத்தன்மையை கூடியவரை தவிர்த்து மனிதத்தன்மையை தக்கவைப்பதற்கு மனிதனுக்கு இன்றியமையாததாக இருப்பது அறிவு. மானுட மேம்பாட்டுக்கு அடிப்படை அறிவு.
கல்விக்கு அடிப்படை கற்பித்தல். பாடசாலைகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் போன்ற கல்விசார் நிறுவனங்களின் வழி கல்வியைப் பெற்றுக்கொள்ளலாம். பலதரப்பட்ட உண்மைகள், கருத்துகள், கோட்பாடுகள் போன்றவற்றை கல்வி மூலம் அறிய முடியும். இவற்றை பிரயோகிப்பதே அறிவு எனப்படுகிறது. அறிவு என்பது வாழ்க்கை அனுபவங்களின் மூலம் பெற்றுக் கொள்ளப்படுவது. பயனுள்ள சில பிரயோகங்களுக்காக அறிவைப் பெற்றுக்கொள்ளும் செய்முறை கல்வியாக இருக்க நல்ல கல்வி, நல்ல தோழர்கள், நல்ல கலந்துரையாடல்கள், தீவிர வாசிப்பு என்பவற்றினூடாக அடையப்பெறுவதே அறிவாக இருக்கிறது. கல்வி என்பது ஆசிரியர்களால் மாணவர்களுக்குப் போதிக்கப்படுவது. அறிவோ தானாக உருவாவது. சுயமாக அடையப்பெறுவது. ஏற்கனவே வரையறுக்கப்பட்ட சட்டங்கள், ஒழுங்குவிதிகள், பாடத்திட்டங்கள் போன்றவற்றை கல்வி கொண்டிருக்கும் அதேசமயம் அறிவைப் பெறுவதற்கென எந்தவொரு வழிகாட்டுதல் கொள்கைகளும் கிடையாது. மாணவர்கள், பெற்றோர்கள், நண்பர்கள், வாழ்க்கையில் வலியை அல்லது மகிழ்ச்சியை ஏற்படுத்தும் கணங்கள், குழந்தைகள் போன்ற எதனூடாகவும் அறிவைப் பெறமுடியும்.
பாடநூல்களிலிருந்து பெறப்படுவது கல்வி. வாழ்க்கை அனுபவங்களிலிருந்து பெறப்படுவது அறிவு. கல்விக்கு வயதெல்லை உண்டு. வயது அதிகரிக்க அதிகரிக்க கல்வி மட்டமும் அதிகரிக்கும். அறிவுக்கு வயதெல்லை கிடையாது. கல்வித் தகுதியில் கூடிய நபர் ஒருவரைவிட குழந்தை ஒன்று அதிக அறிவுள்ளதாக இருக்கலாம். இதிலிருந்து தெரியவருவது கல்வி என்பது முதற் பொருள் அறிவு என்பது முடிவுப் பொருள். அறிவுக்கு அடிப்படை கற்றல். கல்விக்கான பிரதான தளம் கல்விக்கூடங்கள். அறிவிற்கான பிரதான தளம் நூலகங்கள்.
'ஒரு மனிதன் கற்பது எவ்வாறு எனக் கற்றுக் கொள்வதே கல்வியின் இலக்காகும். கற்றுக் கொள்வதற்கான ஆற்றலானது அறிவை விட முக்கியமானதாகும். அறிவு காலத்திற்கொவ்வாததாகப் போனாலும் கற்கும் திறனானது அனைத்து அறிவுகளுக்குமான திறவு கோலாக விளங்குகிறது' என்ற கூற்று அறிவை விட கல்வி முக்கியம் என்ற கருத்துநிலையைத் தருகின்றது. துரதிருஷ்டவசமாக எமது கல்விமுறையானது சுயகற்றலுக்கு வழிப்படுத்தத் தவறுகின்ற ஒன்றாகவே பார்க்கப்படுகின்றது. பாடசாலைகள் மட்டுமன்றி பல்கலைக்கழகங்கள் கூட தயார்நிலைக் கல்வியிலேயே கருத்துச் செலுத்துகின்றன. இதன்காரணமாக மாணவர்களுக்கான கல்வித்திட்டங்கள் மாணவர்களுக்கான கற்பித்தற் செயற்பாட்டிலிருந்து கற்றற் செயற்பாடு நோக்கி வழிப்படுத்துவதை இலக்காகக் கொண்டிருந்தபோதும் கற்றல் செயற்பாடு குறைந்து கற்பித்தல் என்ற செய்முறை மேலோங்கி இருப்பது மட்டுமன்றி ஆசிரியர்களின் மிகப் பெரும் சுமையாகவும் பார்க்கப்படுகிறது.
படிப்பு கல்வியைத் தரும் பரந்துபட்ட வாசிப்பு அறிவைத் தரும் என்பது நன்கு தெளிவாகத் தெரிந்திருந்தும் கூட இன்றைய பெற்றோரோ ஆசிரியர்களோ பிள்ளைகளை அது நோக்கி வழிப்படுத்த தவறுகின்றனர். பாடசாலைகள் மற்றும் ஏனைய கல்விக்கூடங்கள் வரையறுக்கப்பட்ட நேரத்துடன் தமது பணியை முடித்துக் கொள்கின்றன. பாடசாலைகளுக்கு இருக்கும் நேரக் கட்டமைப்புப்போன்று நூலகங்களுக்கு இருக்கக்கூடாது. அறிவைத் தேடும் எவரும் எந்த நேரமும் நூலகத்துக்குள் நுழையும் வகையில் திறந்த பாடசாலையாக பொது நூலகம் மாற வேண்டிய தேவை உண்டு. எனவே கல்விக் கூடங்களுக்கு இணையாக அல்லது அதற்கும் மேலாக நூலகங்கள் தரமுயர்த்தப்படவேண்டிய தேவையும் உண்டு. அறிவைத் தேட விழையும் எவருக்கும் எந்நேரமும் சேவையாற்றக்கூடிய வாய்ப்பு பொது நூலகங்களுக்கு மட்டுமே உண்டு. கல்வி சார் நூலகங்களின் சேகரிப்புகள் பெரும்பாலும் கல்வி சார்ந்தவையாகவே இருக்கின்றன. அறிவுத் தேடலுக்கான சேகரிப்புகளை பொது நூலகங்களே கொண்டிருக்கின்றன. இதுமட்டுமன்றி பார்த்துச் செய்தல் என்னும் பண்பு குழந்தைகளிடம் அதிகமாக இருப்பதன் காரணமாக பெற்றோர் கூடியவரையில் பிள்ளைகளுடன் சேர்ந்து சிறிது நோரமாவது நூலகத்தில் வாசிப்பதற்கு முன்வருவார்களெனில் நூலகங்கள் சிறந்ததொரு திறந்த பாடசாலையாக மிளிரும் என்பதில் சந்தேகமில்லை.
சான்றாதாரக் கல்விநிலையங்களாக......
இன்றைய கல்விமுறையானது கண்டும் கண்டும் தொட்டும் உணரத்தக்க சான்றுகளுடன் கூடிய கற்றல் சூழலினை உருவாக்கத் தவறிவிட்டது. முதற்தரப் பாடசாலைகளில் உள்ள ஆய்வுகூடங்கள் கூட அறிவியல் துறைக்கு மட்டுமே உரியன என்பது மட்;டுமன்றி இவை செய்முறைக்கு முக்கியத்துவம் கொடுக்குமளவிற்கு சான்றாதாரங்களுடன் கூடிய கற்றலுக்கு முக்கியத்துவம் கொடுப்பது குறைவு. சமூகச் சூழல் கூட குழந்தைகள் தொடடுணரக்கூடிய சான்றுகளுடன் கூடிய எதையும் கொண்டிருக்கவில்லை. அருங்காட்சியகம், கலைக்கூடங்கள், மிருகக் காட்சிச்சாலைகள் அறிவூட்டலுக்கான பிரதான தளமாக மேலைநாடுகளின் குழந்தைகளுக்கு இருப்பது போன்று எமது சமூகச்சூழலில் இல்லை. எனவே ஒவ்வொரு பொது நூலகமும் அனைத்துத் துறைசார்ந்தும் உருக்களைச் சேகரித்து மாணவர்களுக்கு அறிவூட்டவேண்டிய கடப்பாட்டில் இருக்கின்றன.
இத்தகைய பின்னணியில் வாசிப்பினை மாத்திரம் மையப்படுத்தாத வகையில் கண்டும் தொட்டும் உணரத்தக்க சான்றுகளுடன் கூடிய கற்றல் சூழலினை உருவாக்குதல், அறிவின் பதிவகங்களாக தொழிற்படும் நூலகங்களை அனுபவங்களையும் அறிவின் மாதிரிகளையும் வெளிப்படுத்தும் கலையகங்களாக தொழிற்பட வைத்தல், பாடசாலைக் கல்வியில் களப்பயணங்கள் மூலம் பெறும் கல்வி அனுபவங்களை மாதிரிகளின் ஊடாக நூலக மட்டத்திலேயே எற்படுத்த உழைத்தல், எமது பண்பாட்டு புலம் தொடர்பான மாற்றங்களையும் புதுமைகளையும் மாதிரிகளின் ஊடாக ஆவணப்படுத்தவும் வெளிப்படுத்தவும் பாடுபடுதல், பல்லூடகக் கல்வி அறிவின் முழுமையான அனுபவத்தினை மாணவர்களுக்கு வழங்குதல் ஆகியவற்றை இலக்கு வைத்து 2009இல் அறிமுகப்படுத்தப்பட்ட முப்பரிமாண நூலகம் என்ற புதிய கருத்துநிலை அண்மைக்காலங்களில் பொது நூலக மட்டத்தில் செயலுருவம் பெறுவது ஆரோக்கியமான கற்றல்சூழல் ஒன்றின் உருவாக்கத்தை கோடிகாட்டிநிற்கிறது. தற்போது நிலைகொண்டிருக்கும் நூலக முறைமைகளினூடாக சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்தும் நோக்குடன் யாழ் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் வெளிப்பாடாக கருக்கொண்ட புதிய கருத்துநிலையே முப்பரிமாண நூலகமாகும். 'சிந்தனைப் பதிவேடுகள் அன்றும் இன்றும்' என்ற தலைப்பில் யாழ் மாவட்டத்தில் 30க்கும் மேற்பட்ட பாடசாலைகளில் நடமாடும் நூலகக் கண்காட்சியை ஒழுங்குபடுத்தியதன் வாயிலாக சான்றாதாரக் கல்வியின் முக்கியத்துவத்தையும் அதன் பயனையும் தெளிவாகக் கண்டுணர்ந்ததன் விளைவாக முப்பரிமாண நூலகம் என்ற புதிய கருத்துநிலையினூடாக வாசிப்பை மேம்படுத்தும் புதிய உத்தி இங்கு அறிமுகம் செய்யப்படுகிறது. சுயகற்றல் செயற்பாட்டை இலக்கு வைத்து தகவலைக்; கண்டறியும் பொருட்டு குறித்த பாடத் துறையில் பொருள் தரும் வகையில் ஒழுங்குபடுத்தப்பட்ட உருக்கள், ஆவணங்கள், தகவல்கள் என்ற மூன்று முக்கிய மூலகங்களை உள்ளடக்கி உருவாக்கப்பட்ட புதிய ஒரு கருத்துநிலையே முப்பரிமாண நூலகமாகும்.
நூற்சிகிச்சை நிலையங்களாக......
உடலுக்குப் பயிற்சி விளையாட்டு எனில் உளத்துக்குப் பயிற்சி வாசிப்பு ஆகும். நூலகங்கள் ஆத்மாவைச் சீர்ப்படுத்தும் மருத்துவ நிலையங்கள் என்ற கருத்துநிலை மனிதசமூகத்துக்குப் புதியதொன்றல்ல. வரலாற்றின் தோற்றத்துக்கு இணையாகவே நூலகங்களின் தோற்றங்களும் இருந்திருக்கின்றது என்பது மட்டுமன்றி அவை உள மருத்துவநிலையங்களாகவும் மனித சமூகத்தினால் கருதப்பட்டிருக்கின்றன என்பது எகிப்தின் பிரமிட்டுகள் உள்ள இடத்திலுள்ள தொல் சான்றிலிருந்து உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. யூலியஸ்சீசர் காலத்தில் வாழ்ந்தவராகக் கருதப்படும் கி;மு 1ம் நூற்றாண்டைச் சார்ந்த கிரேக்க வரலாற்றாசிரியரான னுழைனழசரள ளiஉடைல என்பவர் எகிப்தில் உள்ள திபிஸ் பழங்குடி மக்கள் வாழும் பிரதேசத்தில் உள்ள நினைவுச் சின்னங்களை விபரிக்கும்போது இச்சின்னங்கள் அமைந்துள்ள இடத்திலுள்ள நூலகம் ஒன்றின் நுழைவாயிலில் 'ஆத்மாவுக்கான மருத்;துவம்' என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளமையைக் குறிப்பிடுகின்றார். (ளூநசய 1976) நூல்கள் தனிமையில் இருப்பவர்களுக்கு உற்ற நண்பர்களாகின்றன. துக்கத்தைப் போக்கி மகிழ்வையும் சாந்தியையும் தருகின்றன. தடுமாற்றத்தைத் தெளிய வைத்து மன உறுதியைத் தருகின்றன. ஒருவர் தமது எதிர்காலத்தைத் தீர்மானிக்க வழிகாட்டியாகின்றன. ஒருவருடைய வாழ்வில் தன்னம்பிக்கையை விதைத்து மேம்பாடுகளை வளர்க்க உதவுகின்றன. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அறிஞர்கள், நல்ல மனிதர்கள் ஆகியோருடன் ஆத்மார்த்த நிலையில் சில மணிநேரம் வாழவைக்கின்றன. அத்துடன், தற்காலத்தில் வாழும் பெரியோருடன் உறவாட முடிகிறது. என்றபேராசிரியர் நந்தி அவர்களின் கூற்று இங்கு கருத்திற் கொள்ளத்தக்கது
போருக்குப் பின்னரான தமிழ்ச்சமூகத்தில் மனித நடத்தைகள் ஒவ்வொன்றிலும் அன்பு, இரக்கம், கருணை, பாசம், காதல், ஈடுபாடு, மரியாதை, பக்தி போன்ற உயரிய மனிதப் பண்புகள் மெல்ல மெல்ல அழிவடைந்து கோபம், வெறுப்பு, குரோதம் போன்ற எதிர்மறைப் பெறுமானங்கள் மனித மனங்களை மிகக் கூடுதலாக ஆக்கிரமித்திருக்கின்றன. இந்த எதிர்மறைப் பெறுமானங்களை இயன்ற வரையில் குறைக்கும் வல்லமை வாசிப்புக்கு உண்டு என்ற வகையில் வாசகனுக்காக நூலகம் காத்திருந்த பழைய நிலையிலிருந்து மாறி வாசகனை நோக்கி நூலகமானது நகரவேண்டிய நிலையில் இருக்கிறது. 2003ம் ஆண்டு அறிவாலயம் சிறப்பு மலருக்காக குடும்பத்தலைவர் ஒருவரை நேர்காணல் செய்தபோது கிடைத்த பின்வரும் தகவல்கள் நூலகங்கள் உளச்சிகிச்சை நிலையங்களாக பணியாற்றுவதன் தேவையை உணர்த்துகின்றன.
'நான் சிறு பிள்ளையாக இருந்தபோது எனது தகப்பனார்; புராண இதிகாசக் கதைகள், வள்ளுவர், பட்டினத்தார் போன்ற ஞானிகளின் உபதேசங்கள், பஞ்ச தந்திரம், விவேக சிந்தாமணி போன்ற நூல்களில் பொதிந்து கிடக்கும் நீதி வாக்கியங்கள் போன்றவற்றை மிகவும் சுவைபடச் சொல்லிக் கொண்டிருப்பார். ஒரு மூலையில் இருந்து படித்துக் கொண்டிருக்கும் போது கூட அவரது கதைகளே எனது மனத்தை ஈர்க்கும். சாதாரண சுருட்டுத் தொழிலாளியாக இருந்த அவர் நாம் விடும் தவறுகளைக் கூட இக்கதைகளிலிருந்து மேற்கோள் காட்டியே திருத்துவார். இதுவே அறிவை அறிவதற்குப் படிக்க வேண்டும் என்ற எனது எண்ணத்துக்கான அடித்தளம்.. சிறு வயது முதலே எனக்குள் குடி கொண்டிருந்த தாழ்வு மனப்பான்மையை, வாழ்க்கை பற்றி எமது பயத்தை நீக்கும் வல்லமை இந்த வாசிப்புக்கு உண்டு. வறுமையிலும் செம்மையாக வாழ, குடும்பப் பிரச்சினைகள் கழுத்தை நெரித்தபோதும் அதனைத் துணிவுடன் எதிர்கொள்ள பலருக்கு இந்த வாசிப்பு உதவியிருக்கிறது. இந்த அறிவு நூல்களே எனக்குத் துணை நின்றன. கால் கடுக்க நாள் முழுவதும் புடைவைக் கடையில் நின்று களைத்து விழுந்து வீட்டுக்கு வரும் எனது களைப்பை ஆற்றும் வல்லமை இந்தப் புத்தகங்களுக்கே உண்டு. குறைந்த சம்பளமும், ஓய்வற்ற வேலையும், கடும் சொற்களும் ஏற்படுத்தும் மன வேதனை, வீட்டின் அர்த்தமற்ற செயற்பாடுகள்; ஏற்படுத்தும்; கடுங்கோபம், அத்தனையையும்; பக்கம் பக்கமாக டைரியில் எழுதுவதன் மூலமே தீர்த்துக்கொள்வேன். கோபத்தில் வார்த்தைகளைக் கொட்டிவிட்டு, பின் அதன் விளைவுகளுக்காக வருத்தப்பட்டு மீண்டும் மீண்டும் ஒரே வட்டத்துக்குள் நிற்கும் வாழ்க்கையிலிருந்து மீட்டுத் தரும் இதுவும் வாசிப்பால் விளைந்த பெரிய நன்மை என்றே நினைக்கிறேன்'.(அறிவாலயம் 2003)
யாழ்ப்பாண மாவட்ட பிரதேச சபைகளின் செயலாளர்களுக்கும் பொது நூலகர்களுக்கும் என 2012 ஏப்ரல் மாதத்தில் உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட ஒருநாள் கருத்தரங்கில் சமூகமளித்தவர்களில் 80 வீதமானோர் போருக்குப் பின்னரான சமூக அபிவிருத்தியில் பொதுநூலகங்கள் நூற்சிகிச்சை நிலையங்களாக அல்லது உளமருத்துவ நிலையங்களாக இயங்கவேண்டியதன் தேவையை வலியுறுத்தியமை இங்கு கருத்தில் கொள்ளத்தக்கது. (களஆய்வு 2012)
தகவலறிவின் மாதிரியாக...
தகவல் வெளிப்பாட்டு வடிவங்களான உரு வடிவம், எண்ணும் எழுத்தும் சேர்ந்த வரி வடிவம், கோடுகள் இணையும் வரைபு வடிவம், கண்ணுக்குப் புலப்படாத அலை வடிவத் தகவல்களின் ஈட்டல், செய்முறை, சேமிப்பு, பரிமாற்றம், பரவலாக்கம் போன்ற அனைத்து செய்முறைகளுக்கும் தனித்தோ அல்லது இணைந்த வகையிலோ பிரயோகிக்கப்படும் கைவினைத் தொழிநுட்பம், அச்சுத் தொழிநுட்பம், கட்புல செவிப்புலத் தொழினுட்பம், பிரதியாக்கத் தொழினுட்பம், தொலைதொடர்புத் தொழினுட்பம், கணினித் தொழினுட்பம் ஆகியவற்றின் ஒன்றிணைந்த சேர்க்கையில் இன்றைய உலகு இயங்குகின்றது. கையடக்கத் தொலைபேசிக்கு ஒருநாள் ஓய்வு கொடுப்பது கூட சாத்தியமற்றது என்றளவிற்கு நாளாந்த வாழ்வு தொழிநுட்ப உலகுடன் இறுகப் பிணைந்து போயிருக்கிறது. இணையம் இன்றி இயக்கம் இல்லை என்பதையும் முகநூலே (குயஉநடிழழம) முதன்மை நூல் என்பதற்கும் அறிமுக உரைகளும் அணிந்துரைகளும் தேவைப்படாத அளவிற்கு அதன் இன்றியமையாமை அனைத்து மனங்களாலும் உணரப்படுகின்றது. சர்வதேச தொலைத்தொடர்பு நாள், நூல் நாள் போன்று தொழிநுட்பமற்ற நாள் (ழே வுநஉhழெடழபல னயல) என்ற ஒன்றை சர்வதேச ரீதியில் கொண்டாடவேண்டிய தேவையை மனித சமூகம் உணரும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்னுமளவிற்கு தகவல் தொழிநுட்ப உலகின் ஆக்கிரமிப்பால் மனித சமூகம் திணறிக்கொண்டிருக்கிறது. இத்தகைய பின்னணியில் தான் தகவல் அறிதிறன் என்னும் பதமும் புரிந்துகொள்ளப்படவேண்டும்.
தேவையான தகவலைக் கண்டறிதல், மீளப் பெறல், பகுப்பாய்வு செய்தல், பயன்படுத்தல் முதலிய திறன்களின் தொகுதி தகவல் அறிதிறன் என்ற பதத்தால் குறிப்பிடப்படுகிறது. (நுளைநnடிநசப 2008). 1970களின் ஆரம்பகால தோற்றப்பாடுகளில் ஒன்றான தகவல் அறிதிறன் என்ற கருத்துநிலையானது இன்றைய ஒவ்வொரு மனிதனதும் இன்றியமையாத தேவையாக, உலக அபிவிருத்தியைத் தீர்மானிக்கும் அளவுகோலாக, சுயகற்றலுக்கான ஆளுமைவிருத்தியின் தூண்டியாகக் கருதப்படுகிறது. தகவல் அறிதிறனின்றி வாழ்க்கை முழுவதற்குமான கல்வி என்ற கருத்துநிலை பொருளற்றது என்பதைக் கல்விச் சமூகம் உணரத் தொடங்கியிருக்கிறது. தகவற் சுமைக்கான தீர்வாகவும்;, தகவற் பதுக்கலுக்கான தீர்வாகவும், தகவலுக்கான நுழைவாயிலாகவும், தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் ஒன்றாகவும், வேகமாகவும் சரியாகவும் முடிவெடுப்பதற்கான தூண்டலைத் தருவதற்கான அடிப்படையாகவும் இதன் முக்கியத்துவம் மாறியிருக்கிறது.
தகவற் தேவை, அதன் கிடைக்கும் தன்மை, தகவலைத் தேடும் வழிமுறைகள், கிடைக்கும் தகவலை மதிப்பிடவேண்டிய தேவை, கிடைத்த தகவலின் நுட்பமான கையாளுகை, தகவலைப் பயன்படுத்துவது தொடர்பான ஒழுக்க நியமங்கள், தகவலைப் பிறருடன் பகிர்ந்துகொள்ளும் சரியான வழிகள், கிடைத்த தகவல்களை எவ்வாறு முகாமைசெய்வது என்பன தகவல் அறிவில் உள்ளடங்குகின்றன. தகவல் தொழினுட்பம், தகவல் வளங்கள், தகவல் செய்முறை, தகவல் முகாமைத்துவம், அறிவு உருவாக்கம், அறிவுப் பரம்பல், பேரறிவு என்பன தகவல் அறிதிறனின் ஏழு படிநிலைகளாகக் (டீசரஉந 1997) கொள்ளப்படுகின்றன. ஒவ்வொரு பொதுநூலகமும்; இந்த அம்சங்கள் அனைத்தையும் உள்ளடக்கிய வகையில் ஒரு மாதிரியாக மாறவேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும்.
தரவு வங்கிகளாக
தரவு வங்கிகள் என்பவை மதிப்பீட்டு ஆய்வுகள் எதுவுமின்றி செய்முறைக்குட்படுத்தப்படாத அல்லது ஓரளவு செய்முறைப்படுத்தப்பட்ட தரவுகளை மட்டும் ஒழுங்குபடுத்தி பயனருக்கு வழங்குகின்ற நிறுவனங்களாகும். இத்தரவுகள் ஆவணங்களிலுள்ள தரவுகளாகவோ அல்லது எமது பிரதேசம் சார்ந்த தகவல்களாகவோ, பாவனையாளருக்கு அவர்களின் பொருள் ஆர்வத்துறைகள் தொடர்பான அண்மைக்கால வளர்ச்சிகளைத் தெரியப்படுத்துவதாகவோ, குறிப்பிட்ட உற்பத்திகள், சேவைகள் தொடர்பான தகவல்களாகவோ இருக்கலாம்.
பொதுநூலகங்களின் இன்றைய கட்டமைப்பில் உள்ளுராட்சி அரச நிரவாகத்தின் கீழ் ஆரம்பத்தில் கிராம மற்றும் பட்டினசபை நூலகங்களாக இருந்தவை அனைத்தும் பிரதேச சபை நூலகங்கள் என்ற கட்டமைப்பிற்குள் இயங்குகின்றன. அதே போன்று சமூகத்தின் ஆதார நிறுவனமான சனசமூக நிலையத்தின் நிர்வாகமும் பிரதேச சபபைக் கட்டமைப்பிற்குள்ளேயே காணப்படுகின்றது. தனிநபர் தொடக்கம் ஒரு பிரதேசத்தின் அனைத்து வளங்களையும் ஓரிடத்தில் சேகரித்து ஒரு தரவு வங்கியாகத் தொழிற்படக்கூடிய வாய்ப்பை இந்நிர்வாகக் கட்டமைப்பு வழங்குகின்றமை இதன் சிறப்பம்சமாகக் கொள்ளத்தககது. போருக்குப் பின்னரான புனர்நிர்மாணத்தில் பிரதேசங்களில் ஒவ்வொரு கிராமத்தினதும் அபிவிருத்திக்குத் தேவையான அடிப்படைத் தரவுகளின் வங்கிகளாக அந்தந்தப் பிரதேச சபை நூலகங்கள் இருப்பது காலத்தின் அவசியமாகின்றது.
பொருளாதாரவள நிலையமாக----
மனிதனது உயிர்வாழ்வுக்கும் அபிவிருத்திக்கும் அவசியமாக இருப்பவை வளங்கள். வளம் என்ற வகையில் அதிலும் சக்தியுள்ள வளம் என்ற வகையில் தேசிய அபிவிருத்தியுடன் நேரடியாகத் தொடர்புபடுவது தகவல் ஆகும். எந்தவொரு நாட்டினதும் அது பெரியதோ அல்லது சிறியதோ அபிவிருத்தியடைந்ததோ அல்லது அபிவிருத்தியடைந்து வருகிறதோ- இறுதி இலக்குத் தேசிய அபிவிருத்தியாகும். தேசிய அபிவிருத்தியானது அறிவியல், தொழினுட்பம், மருத்துவம், விவசாயம், கலைத்திறன், எழுத்தறிவு, புத்தாக்கம், மொழியியல், சமயம், தத்துவம், அறவொழுக்கம், உளவியல், கல்வி, அரசியல், பொருளாதாரம், சமூகம், கலாச்சாரம், சட்டம் போன்ற துறைகளில் குழு ரீதியான நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட முழுமையான அபிவிருத்தியை இலக்காகக் கொண்டதொன்று. தேசிய அபிவிருத்தியை உறுதிப்படுத்துவதற்கு ஒவ்வொரு தேசமும் தமக்கென தேசிய அபிவிருத்தி அமைப்பொன்றை உருவாக்குதல அவசியமாகும். ஒவ்வொரு தேசிய அபிவிருத்தி அமைப்பும் பயன்விளைவுள்ளதாகத் தொழிற்படுவதற்குக் கைத்திறன்சார், பொறிமுறைசார், நிதிசார், பொருள்சார், புலமை சார் வளங்களை உள்ளீடாகக் கொண்டு இவ்வளங்களின் பொருளாதார ரீதியான பயன்பாட்டைக் கோரி நிற்கிறது. புலமைசார் வளத்தின் பிரதான உள்ளீடே தகவல் ஆகும்.
ஒரு நூலகத்தில் உள்ள தகவல் வளங்கள் அனைத்தும் வளங்களேயன்றிப் பண்டமல்ல. ஏனைய மூல வளங்களைப் போலன்றி தகவல் பல்லினத் தன்மை வாய்ந்ததாகவும் உலகளாவிய தன்மையுள்ளதாகவும் அள்ள அள்ளக் குறையாததாகவும், சிக்கல் வாய்ந்ததாகவும் துரிதமாக விரிவடைந்து செல்லும் தன்மையுள்ளதாகவும் உள்ளது. ஏனைய வளங்களின் ஒதுக்கீட்டுக்கும் பயனுள்ள பாவனைக்கும் தகவல் அவசியமானதொன்றாக இருப்பதனால் புலமை சார் மூல வளமாக உள்ள தகவல் ஏனைய வளங்களை விட மிகப் பெறுமதியானதாகவும் விலைமதிப்பற்றதாகவும் உள்ளது. செல்வத்தை தரும் வடிவமாகவும் மூல வளம் என்ற கருத்துநிலை காரணமாக ஒரு நிறுவனத்தின் பெறுமதியையும், சமூகத்துக்கு அதன் பங்களிப்பையும் நிர்ணயிப்பதும், தரரீதியாகவும் தொகை ரீதியாகவும் அது உருவாக்கும் தகவலிலும் அறிவிலும் சமூகத்துக்கு அதனைப் பயன்படுத்தும்; தன்மையிலுமே இது தங்கியுள்ளது.
இந்த வகையில் ஒவ்வொரு பொது நூலகமும் தமது பிரதேசத்துக்கு உகந்த பொருளாதாரம் சம்பந்தமான தகவல் வளத் தொகுதி ஒன்றைக் கட்டியெழுப்புதல் மிக முக்கியமான தேவையாகும்.
பல்லூடக வளநிலையமாக
பல்லூடக வளநிலையம் என்ற கருத்துநிலை எமது பொதுநூலகங்களுக்குப் புதியதொன்று. நூல்கள், சஞ்சிகைகள், புதினத்தாள்கள் என்ற வரையறைக்கும் அப்பால் தகவலைப் பொதிந்து வைத்திருக்கும் சாதனங்களின் பௌதிக வடிவமைப்பை அடிப்படையாகக் கொண்டு பொது நூலகங்கள் தமது தகவல் வள அபிவிருத்திக் கட்டமைப்பை உருவாக்குவதை இது கோரிநிற்கிறது. செய்திகளைப் பார்வையிடுவதற்கு புதினத்தாள்கள் வரும்வரை காத்திருக்காது அன்றாட செய்திகளை உடனுக்குடன் பார்க்கும் வகையில் நவீன வலையமைப்பு வசதிகளுடன் கூடிய சேவைகளை வழங்குவதற்கு மிகச் சிறந்த இடமாக பொது நூலகங்கள் அமையவேண்டியதன் தேவையை இது வலியுறுத்தி நிற்கிறது. இதற்கு பொதுநூலகங்கள் காலவரையறையைக் கடந்து சேவையாற்றுவது மட்டுமன்றி நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய தகவல் வள கட்டமைப்பையும் கொண்டிருத்தல் அவசியமாகின்றது. ஒரு சமூகத்தின் அபிவிருத்திக்குத் தேவையான அடிப்படைத்தகவல்கள் முதற்கொண்டு உலக மாற்றங்களை உடனுக்குடன் அறிவிக்கும் இணைத்தளம் வரை இந்த வளக்கட்டமைப்பு அமையும்.
ஆற்றுப்படுத்தல் நிலையமாக-----
ஒரு நூலகத்திலுள்ள ஆவணங்களில் வாசகருக்கு தேவைப்படும் தகவல்களை இனங்கண்டு அவர்களை அந்த ஆவணங்களுடன் தொடர்புபடுத்தி விடுதல் அல்லது வாசகருக்கு வேண்டிய தகவல்களை அவை நூலகத்தில் இல்லாதவிடத்து எங்கே யாரிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம் என்ற விவரங்களை அறிந்து அவர்களை வழிப்;படுத்தி விடுகின்ற நிறுவன முறைமை ஆற்றுப்படுத்தல் நிலையம் எனப்படுகிறது. ஒவ்வொரு பொது நூலகமும் பலதரப்பட்ட முறைகளில் இதனை மேற்கொள்ள முடியும். இதில் முதலாவது ஒவ்வொரு பிரதேச சபையும் அல்லது நகரசபையும் தமக்குள் ஒரு பிரதான நூலகத்தையும் ஒன்றோ அதற்கு அதற்கு மேற்பட்டோ சிறிய நூலகங்களையும் கொண்டிருக்கிறது. இந்த நூலகங்களில் உள்ள தகவல் வளங்களுக்கான ஒரு ஒன்றிணைந்த பட்டியலை பிரதான நூலகமாவது பராமரிக்குமாயின் குறிப்பிட்ட தகவல் தம்மிடம் இல்லாத போது தகவல் இருக்கும் இடம் நோக்கி ஆற்றுப்படுத்தி விடுதல் இலகுவாகின்றது. இரண்டாவது தம்மிடம் இல்லாத தகவல்கள் தமது பிரதேசத்தில் வேறு எந்த நூலகத்தில் இருக்கின்றது என்பது தொடர்பான விபரக் கொத்தை பேணுவதன் மூலம் இந்த ஆற்றுப்படுத்தற் சேவையை இலகுவாகச் செய்ய முடியும்.
முடிவுரை
மட்டுப்படுத்தப்பட்ட நேர சேவையை வழக்கமாகக் கொண்டிருக்கும் பொது நூலகங்கள் இப்பண்பிலிருந்து மாறி நினைத்த நேரமெல்லாம் அறிவூட்டும் வாய்ப்பைக் கொண்டவையாக மாறுதல் முதலாவதும் முக்கியமானதுமான பணியாகின்றது. நூல்கள்,வாசகர்,நூலகர் என்ற மூன்று கூறுகளும் ஒன்றுடன் ஒன்று சரிவர இணையும் போதே நூலகம் ஒன்றின் நோக்கமானது நிறைவேறுகிறது. இதில் நூலகர் என்பவரின் பங்கே பிரதான ஊக்கியாக செயற்பட வேண்டும். நூலகத்தினால் வழங்கப்படக்கூடிய சேவைகளை இங்கு கணிசமானளவுக்கு பட்டியலிட்டுக்கொண்டு போகலாம். ஆனாலும் வாசிப்புப் பழக்கத்தை சமூக உறுப்பினர் அனைவரிடையேயும் ஏற்படுத்தலே எல்லாவற்றிலும் பிரதான பணியாகும். இலாப நோக்கம் உள்ள நிறுவனம் ஒன்று தனது வாடிக்கையாளரை கவருவதற்கு என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமோ அத்தனை நடவடிக்கைகளையும் நூலகர் என்பவர் இலாபம் எதுவுமற்ற நூலக சேவையில் மேற்கொள்ளுவதன் மூலமே சமூக உறுப்பினரிடையே வாசிப்புப் பழக்கத்தை உருவாக்க முடியும். கவர்ச்சியான நூலகக் கட்டிடமோ, வசதியான நூலக தளபாடங்களோ, பெருந்தொகையான நூல்களோ இலகுவான நூலக ஒழுங்கமைப்போ வாசிப்புப் பழக்கமற்ற சமூகத்தில் பயன்பாடற்றது. நூலகத்தை மக்கள் நாடாத ஒரு சமூகத்தில் வாசிப்புப் பழக்கத்தை உருவாக்குவதற்கு நூலகம் தான் மக்களை நோக்கி நகர வேண்டிய தேவை உருவாகிறது. களைத்து விழுந்து வேலையால் வரும் குடும்பத் தலைவன், குழந்தைகள் குடும்பம் என்று நாள் முழுவதும் போராடும் குடும்பத் தலைவி, ஓய்வு நேரத்தை பயனுள்ள வகையில் கழிக்க வகை தெரியாமல் திண்டாடும் முதியோர்களை நோக்கி நூலகமே நகர வேண்டும். ஓரு தடவை அவர்களுக்கு நூலுணர்வை ஏற்படுத்துவதில் வெற்றி பெறின் பின்னர் தாமாகவே அவர்கள் நூலகத்தை பயன்படுத்தத் தொடங்கி விடுவர். ஒரு குறிப்பிட்ட மக்கள் தொகுதிக்கென சேவையாற்றும் சனசமூக நிலைய நூலகங்களுக்கு ஒவ்வொரு உறுப்பினரிடையேயும் தனிப்பட்ட தொடர்பைப் பேணும் வாய்ப்பு உண்டு.
நூலக சேவை பற்றிப் பேச்செடுத்தாலே முதலில் வருவது நிதிப்பற்றாக்குறை என்ற அம்சம் தான். தமது சமூகத்தை தாம் மேம்படுத்துவதற்கு சமூக உறுப்பினர்கள் தம்மில் தான் தங்கியிருக்கவேண்டுமேயன்றி அரசாங்கத்தையல்ல. சமூக உறுப்பினரின் உணர்புபூர்வமான பங்குபற்றுதலின்றி எந்தவொரு சமூக மேம்பாடும் சாத்தியமில்லை என்பதையே சமூக அபிவிருத்திக்கு கோடிக்கணக்கில் செலவழி;த்துக் கொண்டிருக்கும் அரசோ அல்லது உதவி தரும் நிறுவனங்களோ கண்டுள்ள அனுபவபூர்வமான உண்மை.
நெருக்கடிக்குட்படும் மனிதர்களிடம் தான் மேம்பாடு தொடர்பான சிந்தனை உருப்பெறுவது இயல்பு என்பதையே வரலாறு எமக்கு எடுத்துக் காட்டியிருக்கிறது. வசதியான சூழல்கள் எப்போதுமே வலிமையான மனிதர்களை வளர்த்தெடுப்பதில்லை. அரசியல் சூழலோ பொருளாதாரச் சூழலோ எதற்குமே இது பொருந்தும்.
- Bruce, Christine (1997). Seven faces of Information literacy. AUSLIB Press, Adelaide, South Australia.
- Eisenberg, B. M. (2008). Information Literacy: Essential Skills for the Information Age. Journal of Library & Information Technology, Vol. 28, No. 2, March 2008, pp. 39-47,
- Hornby, A.S(1995). Oxford Advanced learner’s Dictionary. 5th ed. London: Oxford,.
- International Federation of Library Associations and Institutions.1995-2000. www.ifla.org.
- Shera,Jesse.H. (1976) Introduction to Librarary Science:Basic elements of Library science. Littletone:Libraries unlimited. p14.
- The American Library Association (1989). Final Report of the Presidential Committee on Information Literacy. ALA.
- Sodex, Elle Benetti. What is reading?. A joint position paper of the international Reading Association and National middle school association. www.reading.org
- Vithilingam, 1971). The life of Sir Ponnampalam Ramanathan. Colombo: Ramanathan Commemoration society.
- Worl Bank (1991) Annual worl bank conference on development economics. ed by Boris Pleskovic and Joseph E.Stiglitz. key note address by Joseph E. Stiglitz.- Wachington:world bank.p17-31.
11. கனகலிங்கம், ரதி.(2005) 'இல்லத்தரசி ஒருவரின் வாசிப்பு அனுபவங்கள்'. அறிவாலயம் சிறப்பு மலர். இணுவில்: இணுவில் திருவூர் ஒன்றியம், பக்.98-99
12. சண்முகலிங்கம்,ம.(2005) 'நுழைபுலம்'. அறிவாலயம் சிறப்பு மலர். இணுவில்: இணுவில் திருவூர் ஒன்றியம்,. பக்.98-99
13. சந்தானம்,எஸ். (1987). கல்வியின் சமூக தத்துவ அடிப்படைகள். சென்னை: பழனியப்பா பிரதர்ஸ்.-
14. சந்திரசேகரம்,சோ. (2006). முன்பள்ளிக் கல்வியின் முக்கியத்துவம். அகவிழி. 2(22). யூன் 2006. ப13-15)
15. சச்சிதானந்தம்,க.(2005) 'புத்தகங்களே சிறந்த தோழர்கள்'அறிவாலயம் திறப்புவிழாச் சிறப்புமலர், இணுவில் : இணுவில் திருவூர் ஒன்றியம,; 2005.
16. தில்லைநாயகம்,வே. (1978). இந்திய நூலக இயக்கம். சென்னை:பாரி நிலையம். பக்.90
No comments:
Post a Comment