எனது நோக்கில்.......

அறிவும் திறனும் இணைந்து தொழிற்படும் அற்புதமான ஒரு துறையாகக் கருதப்படுவது நூலக, தகவல் அறிவியல் துறை. உரு,வரி,வரைபு, அலை ஆகிய தகவல் வெளிப்பாட்டு வடிவங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட பதிவேடுகளின் உருவமைப்பில் அதிக கவனம்செலுத்தி அவற்றின் சேகரிப்பு,ஒழுங்கமைப்பு,சேமிப்பு, பகிர்வு, பராமரிப்புபோன்ற செய்முறைகள் ஊடாக வாசகனின் தகவல் தேவையைப் பூர்த்தி செய்கின்ற நூலகஅறிவியல் துறையும், இப்பதிவேடுகளின் உள்ளடக்கத்தில் மட்டும் அதிக கவனம் எடுத்து தகவல் உருவாக்கம், தகவல் பரவலாக்கம்,சேகரிப்பு, ஒழுங்கமைப்பு,மீள்பெறுகை, பொருள் விளக்கமளிப்பு, பயன்பாடு போன்ற செய்முறைகளினூடாக பயனரின் தகவல் தேவையைப் பூர்த்தி செய்கின்ற தகவல் அறிவியல் என்ற துறையும் இணைந்து உருவான இத்துறையானது தகவலின் பண்புகளும் நடத்தையும், தகவல் பாய்ச்சலை கட்டுப்படுத்தும் சக்திகள், தகவலிலிருந்து உச்ச அணுகுகையையும், பயன்பாட்டையும் பெறும்பொருட்டு தகவலைச் செய்முறைப்படுத்துவதற்கானவழிவகைகள்,தகவல் கையாள்கை மற்றும்பரவலாக்கம் போன்றவற்றில் நூலகங்கள்மற்றும் தகவல் நிலையங்கள் ஆகியவற்றின் பங்களிப்பு ஆகியவற்றைக் கூர்ந்து ஆராயும் ஒரு அறிவியலாக மட்டுமன்றிகணிதவியல்,தருக்கவியல், மொழியியல்,உளவியல், கணினித் தொழினுட்பம்;,நூலகவியல், தகவலியல்,முகாமைத்துவம் போன்ற துறைகளிலிருந்து பெறுவிக்கப்பட்டதாக அல்லது அவற்றுடன்தொடர்புடையதொன்றாகவும் உள்ள பெருமைக்குரியது.

யாழ்ப்பாணப் பிரதேசத்தில் நூலக அபிவிருத்தியை மையமாகக்கொண்டு இயங்கும்ஒரேயொரு அரசசார்பற்ற அமைப்பான'நூலக விழிப்புணர்வு நிறுவனம்' என்ற அமைப்பின் ஊடாக நடத்தப்பட்ட பொது நூலகர்கள், மற்றும் பாடசாலை நூலகர்களுக்கான கருத்தரங்குகள்,பயிற்சிப் பட்டறைகளில் இனங்காணப்பட்ட நூலகர்களின்தேவையும், கிராமம் தோறும் தனிநபர் நூலகங்களாகவோ, அமைப்பு சார்நூலகங்களாகவோ, கிராமிய நூலகங்களாகவோ இயங்கக் கூடிய வகையில் புதிய நூலக உருவாக்கத்தில் ஆலோசனை கோரி அணுகியவர்களின் தேவையும் இணைந்து உருவானதே இந்தவலைத்தளம்எனில் மிகையல்ல.

இந்த வலைத்தளத்தின் தேவையைத் திரும்பத்திரும்ப வலியுறுத்தி அதற்கான உந்துசக்தியைத் தந்த அனைவருக்கும் எனது நன்றிகள். வீட்டு நூலகம் முதற்கொண்டுசனசமூக நிலைய நூலகங்கள்,பாடசாலை நூலகங்கள் போன்ற கல்விநிறுவன நூலகங்கள், பொதுசன நூலகங்கள், சிறப்பு நூலகங்கள் அனைத்திற்கும் ஒரு அடிப்படையைத் தரவும், தாய்மொழி மூல கல்விமூலம் நூலகத்துறையைவளர்த்தெடுத்தல்,தமிழில் நூலகவியல் துறை சார்ந்த ஆய்வுகளை ஊக்குவித்தல் ஆகிய இரு இலக்குகளை முன்வைத்தும் இந்த வலைத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. அபிவிருத்தியின் அச்சாணி நூலகம் என்ற கருத்துநிலையையும் செயலுருப்பெற உதவுமெனில் அது நான் பிறந்த இந்த மண்ணுக்கும் நான் பேசும் மொழிக்கும்செலுத்துகின்ற நன்றிக்கடனாகும்.


அருளானந்தம் ஸ்ரீகாந்தலட்சுமி,
கல்விசார் நூலகர்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

13-09-2014


Saturday, September 13, 2014

உசாத்துணைச் சேவை


(உசாத்துணை சேவை தொடர்பாக நூலகவியல் அறிஞர்களது கருத்துநிலையை பதிவு செய்யும் அதேசமயம் உசாத்துணை சேவை தொடர்பாக எமது நூலகங்களில் ஏற்படும் கருத்துக் குழப்பங்களைத் தவிர்க்கும் முயற்சியில் உசாத்துணைச் சேவை பற்றிய பரந்த விளக்கத்தைக் கொடுப்பதற்கு இக்கட்டுரை முயல்கிறது)

அறிமுகம்
நூலகவியல் பஞ்சசீலக் கொள்கைகளில் முதலாவதும் முக்கியமானதுமாகக் கருதப்படுவது நூல்கள் பாவனைக்கே என்ற விதியாகும். இவ்விதி முறைப்படி செயற்பட வேண்டுமாயின் நூல்கள் இருவகையில் வாசகரால் பாவிக்கப்படல் வேண்டும்.

•    நூலகத்துக்கு வெளியே பயன்படுத்தல்
•    நூலகத்துக்குள்ளே பயன்படுத்தல்

முதலாவது வகைப் பயன்பாட்டுக்கு இரவல் வழங்கும் சேவையின் அவசியம் உணரப்படும் அதேசமயம் இரண்டாவது வகைப் பயன்பாட்டுக்கு உசாத்துணை சேவை மிக அவசியமானதாகும்.
பரந்த நோக்கில் பார்க்கும்போது வாசகனுக்கு நூலக அலுவலர்களினால் வழங்கப்படுகின்ற எந்த உதவியுமே உசாத்துணைச் சேவை என்று அழைக்கப்படுகிறது. வாசகனை நூலகத்துக்கு அறிமுகம் செய்தல், சரியான நூலுக்கு அவனை வழிகாட்டுதல், வாசகனால் கேட்கப்படும் வினாக்களுக்கு விடையளித்தல் போன்ற அனைத்துமே உசாத்துணை சேவையாகத் தான் கருதப்படுகிறது. இன்னொரு வகையில் ஒரு உசாத்துணை நூலகரால் மேற்கொள்ளப்படும் அனைத்துப் பணிகளுமே உசாத்துணைச் சேவையாகத் தான் கருதப்படுகின்றது. பல்வேறு தேவைகளின் அடிப்படையில் தகவலைத் தேடுகின்ற ஒரு வாசகனுக்கு நூலகத்துக்குள்ளேயே வழங்கப்படும் தனிப்பட்டரீதியிலான நேரடி உதவியே உசாத்துணைச் சேவை ஆகும்.

வரைவிலக்கணம்
உசாத்துணைச்சேவை என்றால் என்ன? இதற்குப் பலர் வரைவிலக்கணம் கொடுத்திருக்கிறார்கள்;

கலாநிதி எஸ்.ஆர். இரங்கநாதனின் கருத்துப்படி
' ஓர் நூலகத்தில் ஒரு வாசகனையும் அவனுக்குத் தேவையான ஒரு நூலையும் சரியான நேரத்தில் சரியான முறையில் இணைத்து விடும் செய்முறையே  உசாத்துணைசேவை ஆகும்'. சரியாகவும் விரைவாகவும் வாசகனது பொருள் ஆர்வத்துறை தொடர்பான தகவலைக் கொண்ட ஆவணத்தைத் தேடிக் கண்டு பிடிப்பதற்கு ஒவ்வொரு வாசகருக்கும் செய்யும் தனிப்பட்ட உதவியே இது என்று அவர் மேலும் குறிப்பிடுகின்றார்


Hutchinஎன்பவரது கருத்துப்படி
'பல்வேறு தேவையின் அடிப்படையி;ல் தகவலைத் தேடும் ஒரு நூலக பாவனையாளருக்கு நூலகத்திற்குள்ளே வழங்கப்படுகின்ற தனிப்பட்ட முறையிலான நேரடி உதவியும் தகவலை இலகுவாகத் தரக்கூடிய வகையில் வழங்கப்படும் நேரடிச் சேவையும் உசாத்துணைச் சேவையாகும்.'


William A. Katz  என்பவரது கருத்துப்படி
'ஒரு சாதாரண வினாவுக்கு விடையளிப்பது தொடக்கம் நூல் விபரத் தரவுகளை அடிப்படையாகக் கொண்ட தகவல்களை வழங்குவது வரை இது பலதரப்பட்ட பணிகளை உள்ளடக்கியதொன்று. மரபுரீதியான அல்லது ஆகக் குறைந்த சேவை, மிதமான அல்லது மத்திய அளவான சேவை, தாரளமய அல்லது உயர் அளவான சேவை என மூன்று வகையான சேவைகளை இவர் இனங் காண்கிறார்.'


Louis Shores  என்பவரது கருத்துப்படி
'இராணுவம் ஒன்றுக்குப் புலனாய்வு போன்றது தான் தகவல் சேவைக்கு உசாத்துணைச்  சேவை ஆகும்.'


ALA அகராதியின் படி
'படிப்பதற்கும் ஆய்வில் ஈடுபடுவதற்கும் என நூலக வளங்களைப் பயன்படுத்துவதற்கும் தேவையான தகவலைத் தேடிக் கண்டுபிடிப்பதற்கும் வாசகருக்கு வழங்கப்படும் தனிப்பட்ட உதவியுடன் நேரடியாகத் தொடர்புபடும் பணிகள் அனைத்தும் உசாத்துணை சேவை எனப்படும்.'


Alan M.Rees  என்ற அறி;ஞரின் கருத்துப்படி
'உசாத்துணை வளங்களை அடிப்படையாகக் கொண்டு வாசகனால் கேட்கப்படும் கேள்விகளுக்கு விடையளிக்க முயல்வதே உசாத்துணைசேவை ஆகும்'
ஒரு நூலகத்தில் உசாத்துணைப் பணிக்குப் பொறுப்பாக இருக்கின்ற நூலகரினால் ஆற்றப்படுகின்ற பணிகள் யாவும் உசாத்துணைப்பணி என்றும் கூறுவர். இவை அனைத்தையும் நோக்கும்போது ஒரு நூலகத்தினால் வழங்கப்படும் அனைத்துச் சேவைகளும் உசாத்துணை சேவை எனலாம்.

உசாத்துணை சேவையின் நோக்கங்கள்
உசாத்துணை சேவையின் முக்கிய நோக்கம் பொருத்தமான இடத்தில் பொருத்தமான நேரத்தில் பொருத்தமான முறையில் வாசகனையும் நூலையும் இணைத்துவிடுதல் என்பதாகும். இச் செயற்பாடு செவ்வனே நடைபெறுவதற்கு வாசகனைப் பற்றிய அறிவு நமக்கு எவ்வளவு முக்கியமோ அதேபோன்று நூல்களைப் பற்றிய அறிவும் எமக்கு முக்கியமாகும். கவர்ச்சிகரமான நூலகக் கட்டடம், வசதியான நூலக தளபாடங்களும் உபகரணங்களும், நூலக ஆவணங்களின் பகுப்பாக்க ஒழுங்கமைப்பு, பல் நோக்கத் தேவையை திருப்திப்படுத்தக் கூடிய பட்டியல், நூல்களுக்கான திறந்த அணுகுகை, பொருத்தமான இடத்தில் பொருத்தமான தகவல் வளங்களைத் தெரிவு செய்வதற்கு உதவுகின்ற வழிகாட்டிகள், நேரத்தைச் சேமிக்கக் கூடிய நூல் இரவல் வழங்கல் முறைகள், அமைதியான சூழல், கண்ணைக் கவரும் வண்ணப்படங்கள், இயற்கைக் காட்சிகள் அனைத்துமே ஒரு வாசகனையும் நூலையும் இணைத்துவிடுவதிற் பெரும் பங்கு வகிக்கின்றன. வளர்ச்சியடைந்த நாடுகளின் நூலகங்களுக்கும், எமது நாட்டிலுள்ள சிறப்பு நூலகங்களுக்கும் இது பொருந்தும் என்பதும் அனுபவ ரீதியான உண்மை என்பதில் சந்தேகமில்லை. எமது நூலகங்களில் இன்று எழுகின்ற அடிப்படைப் பிரச்சினைகளில் ஒன்று போதியளவு நூல்கள் இல்லை என்பதாகும். இன்னொன்று தரமான நூல்கள் இல்லை என்பதாகும். நூலே இல்லாதபோது வாசகனையும் நூலையும் எவ்வாறு இணைத்துவிடுவது என்ற வினா எழுவது தவிர்க்க முடியாத ஒன்று. இங்கு தான் நாம் சிந்திக்க வேண்டியவர்களாக, நாம் கற்ற அறிவிலிருந்து மாற்றீடுகளைக் கண்டுபிடிக்க வேண்டியவர்களாக ஆகின்றோம். எல்லா நூல்களையும் பணம் கொடுத்து வாங்குவது சாத்தியமில்லை. அதேசமயம் வாசகனுக்குத் தேவைப்படும் நூல் எமது நூலகத்தைச் சுற்றியமைந்த ஏனைய நூலகங்களில் இருக்கிறதா என்பதை அறிந்து சொல்வது எமது கடமையாகும்.. இங்கு தான் நூலகரின் அறிவுத் தளம் தொடர்பாக நாம் சிந்திக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். அறிவும் சமூக உணர்வும் மிக்க ஒருவரை நூலகராகக் கொண்ட நூலகமானது தனது நூல் இருப்புப் பற்றி பெரிதாகக் கவலைப்படத் தேவையில்

ஆனால் எம்மிடையே உள்ள பெரும்பாலான பாடசாலை நூலகங்கள், பொதுநூலகங்களை எடுத்தால் அவற்றின் பின்தங்கிய நிலையையும் மனதிற் கொண்டே ஆக வேண்டும். எனவே சேவை புரிதல் எங்ஙனம் என்னும் எண்ணப்பாடு தவறானது. உள்ளதைக் கொண்டு உயர்ந்த சேவையாற்றும் நிலையில் எமது பெரும்பாலான நூலகங்கள் இருக்கின்றன. எனவே ஏடுகளில் சொல்லப்பட்டது போன்று நூலக வசதியில் ஒன்று குறையினும் சேவை வழங்குவது சாத்தியமில்லை என்று எண்ணுவதைத் தவிர்த்துத் தற்கால சூழ்நிலைகளுடன் ஒத்துப் போகும்படி எவ்வாறு வழங்குவது என்பதற்கான மாற்றீடுகளைக் கண்டறிந்து அவற்றை வெற்றிகரமாகச் செயற்படுத்துவதில் தான் சமூகத்தின் முன்னேற்றமே தங்கியுள்ளது. இதில் இன்னொன்றையும் கவனிக்கலாம். போதிய வசதிகளும் வாய்ப்புகளும் இருந்தும் சில நூலகங்கள் எவ்வித சேவைகளையும் வழங்குவதாகத் தெரியவில்லை. குறைந்தது ஒரு நூல் பற்றிய தகவலைக் கேட்டாற்; கூட எத்தனை பேர் முகமலர்ச்சியுடன் எழுந்து சென்று உதவி செய்கின்றனர் என்று இலகுவாகக் கணக்கிட்டுக் கொள்ளலாம். வாசகனுக்கு உதவி செய்வதற்கு நிதிப் பற்றாக்குறையைக் காரணங் காட்டுவது பொருத்தமானதாகத் தெரியவில்லை.

உசாத்துணை சேவையின் பண்புகள்
•    குறைந்த மட்டம் தொடக்கம் கூடிய மட்டம் வரை தகவல் செயற்பாடுகளின் அனைத்து மட்டங்களுடனும் உசாத்துணை சேவை செல்வாக்கு வகிக்கின்றது.
•    சரியான நேரத்தில் சரியான தகவலையோ ஆவணத்தையோ பெறுவதற்கு இது உதவுவதனால் தகவல் அணுகுகைக்கும் அதேசமயம் வாசகரின் நேரத்தை மீதப்படுத்தவும் இது உதவுகின்றது.
•    ஒரே மாதிரி பல ஆய்வுகள் செய்வதைத் தடுப்பதற்கு ஆய்வாளருக்கு உதவுகிறது. அத்துடன் அவர்களைது ஆய்வுகளையும் அபிவிருத்திச் செயற்பாடுகளையும் தொடரவும் இது உதவுகிறது.
•    தீர்மானம் மேற்கொள்பவர்கள் சரியான தீர்மானம் எடுப்பதற்கான தகவல்களைப் பெறுவதற்கு உதவுகிறது.
•    தகவல் நிறுவனம் ஒன்றின் உச்சப்பயனபாட்டுக்கு இது வழி சமைப்பதனால் இது ஒரு முக்கிய சேவையாகக் கருதப்படுகிறது.
•    இச்சேவையை ஆற்றுவதற்கு மனிதத்துவ உணர்வு அவசியமாகக் கருதப்படுவதால் மனிதர்களிடம் நற்பண்பை விருத்தி செய்ய இது உதவுகிறது.
•    நூலகவியல் விதிகளை நடைமுறைப்படுத்துவதற்கு இது நன்கு உதவுகிறது.
1    முதலாவது விதிக்கமைய சரியான வாசகனையும் அவனுக்குப் பொருத்தமான சரியான நூலையும் இணைத்துவிடுகிறது.
2    இரண்டாவது விதிக்கமைய வாசகன் தனக்குத் தேவையான சரியான நூலை கண்டு பிடிக்க உதவுகிறது.
3    மூன்றாவது விதியின் படி ஒவ்வொரு வாசகனுக்கும் ஒவ்வொரு நூலுக்குமான பிரசாரகராக நூலக அலுவலர் தொழிற்படுமாறு செய்கிறது.
4   நான்காவது விதியின் படி சரியான நூலுக்கு வழிகாட்டுவதனூடாக மிக விரைவாக வாசகனுக்குரிய தகவல் தேவையைப் பூர்த்தி செய்ய வழிகாட்டுகிறது.
5    ஐந்தாவது விதியின் படி தொகையிலும் தரத்திலும் பலதரப்பட்டு உருவிலும் உள்ளடக்கத்திலும் பலதரப்பட்டு குவிந்திருக்கும் தகவல் சாதனங்களில் தமக்குப் பொருத்தமானவற்றை தேடிக்கண்டு பிடிக்க உதவுகின்றது.

வளர்ச்சிப்போக்கு
 நூலக அபிவிருத்தியின் ஆரம்பக் கட்டங்களிலேயே தனிப்பட்ட உதவி வாசகனுக்கு வழங்கப்பட்டதெனினும் தகவல் நிறுவனம் ஒன்றின் அடிப்படைத் தொழிற்பாடாகக் கருதப்பட்ட காலம் முதற்கொண்டே உசாத்துணை சேவை என்ற கருத்துநிலை தோற்றம் பெற்றது. 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அமெரிக்க பிரித்தானிய நூலகர்கள் கோட்பாடு ரீதியற்றமுறையில் உசாத்துணைசேவைகளை ஒழுங்கான முறையில் வழங்கி வந்துள்ளதாக அறிய வருகின்றது. 1876இல்
Samuel Green  என்பவரால் உசாத்துணை சேவை என்பது பட்டியலாக்கம் மற்றும் உசாத்துணை சாதனங்களைப் பயன்படுத்துவதற்கேற்ற வகையில் வாசகனுக்குக் கொடுக்கப்படும் தனிப்பட்ட ரீதியிலான விளக்கம் எனப் பொருள் கூறப்பட்டது. ஆனால் 1930ம் ஆண்டளவில்தான்

James I. wayer   என்பவரால் முதன்முதலில் உசாத்துணை சேவைக்கான கோட்பாட்டு ரீதியான அணுகுமுறை ஆராயப்பட்டது; அதுபோல் 1940 களில் கலாநிதி S.R இரங்கநாதனால் உசாத்துணைசேவை பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டாலும் கூட 2ம் உலகப்போரின் பின்னர் தான் நூலகங்கள் உசாத்துணை சேவையை ஆரம்பித்தது எனலாம். 

1971ம் ஆண்டளவில் கல்லூரி நூலகங்கள் ஆய்வு நூலகங்கள் என்பவற்றில் ஒரு கருத்துக் கணிப்பை மேற்கொண்ட  Florance Blakely என்ற அமெரிக்கப் பெண்மணி உசாத்துணை நூலகரின் பணிகளாகப் பின்வருவன அமைந்திருந்ததாகக் குறிப்பிடுகிறார்
•    நூலகங்களுக்கிடையிலான இரவல் வழங்கும் சேவை
•    பொது மக்களுக்கான ஆவண சேவை
•    நடப்புப் பருவ இதழ்கள் செய்தித் தாள்கள் போன்றவற்றை நுண்வடிவமாக்குதல்
•    நூலகச் சுற்றுலா
•    நூலக அறிவுறுத்தல்
•    தொடர் வெளியீடுகளுக்கான பட்டியல்களைப் பராமரித்தல்
•    உசாத்துணை சாதனங்களுக்கான நூல் தெரிவும் காட்சிப்படுத்தலும்
•    ஆய்வுக்கட்டுரைகளுக்கான பூர்வாங்கப்பணிகளை மேற்கொள்ளல்
•    வாசிப்புப் பகுதியை மேற்பார்வை செய்தல்
•    வாசகர்களுக்கான விசேட கோப்புக்களைப் பராமரித்தல்
•    நூலக வெளியீடுகளுக்குப் பங்களிப்புச் செய்தல்
•    செய்தித் தாள்களில் உள்ள விபரங்களை வெட்டிச் சேகரித்தல்
இதன் அடிப்படையில் பார்க்கும்போது ஒரு நூலகரால் செய்யப்படும் அனைத்துப் பணிகளுமே உசாத்துணைப்பணி எனப்படும்.  ஆனால் விசேட நோக்கில் மிக ஆழமாகப் பார்க்கும்போது மேற்கூறிய சேவைகள் அனைத்தையும்; நூலக தகவல் சேவை என்ற பொதுப் பெயருக்குள்ளே அடக்கிவிடமுடியும்.  அதுபோன்று வாசகனுக்குத் தனிப்பட்ட முறையில் செய்கின்ற உதவிகள் யாவுமே வாசகர் சேவை எனக் கூறிவிடலாம்.  வாசகர் வழிகாட்டல் சேவை,  வாசகர் ஆலோசனைச் சேவை,  வாசகர் அறிவுறுத்தல் சேவை என்பவற்றை உசாத்துணை சேவையின் ஒரு அங்கமாகக் கொள்ளலாமே தவிர இவை மட்டும்  உசாத்துணை சேவையாக முடியாது.  நுணுக்கமான முறையில் ஆராய்ந்து பார்க்கும்போது உசாத்துணை வளங்களை அடிப்படையாகக் கொண்டு வாசகனால் கேட்கப்படுகின்ற வினாக்களுக்கு விடையளிக்க முயல்வதே உசாத்துணைசேவை என
Alan.M.Ree என்ற அறிஞர் கூறுகின்றார்.

ஆனால் நூலக உணர்வும் நூல் உணர்வும் மிகக் குறைவாக இருக்கின்ற நூலகங்களில் வாசகன் வினவும் வரை காத்திருப்பதானது பயன்தரத் தக்கதல்ல. வாசகன் எம்மை நோக்கி வரும்வரை காத்;திருக்காது நாம் வாசகனை நோக்கி நகருவதே பொருத்தமானது . இந்த வகையில் நோக்கின் வாசகனை மையப்படுத்தி வாசகனது வேண்டுகோளின்  அடிப்படையில்; நாம் உதவும் சேவையும்; வாசகன் கேட்காமலேயே நாம் உதவும் சேவையும் இணைந்ததே உசாத்துணை சேவை என்ற முடிவுக்கு வரலாம்.

உசாத்துணை சேவை ஏன்?
நூலக விதிமுறைகள் பற்றிய விளக்கக் கையேடுகள், அறிவித்தல் அட்டைகள், நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட பட்டியல்கள், திறந்த அணுகுமுறை போன்ற வசதிகள் தாராளமாக இருக்கும்போது தனிப்பட்ட முறையில் வாசகனுக்கு உதவும் தேவையில்லை என்ற சிந்தனையுடன் நூலகம் பற்றிய மேலார்ந்த அறிமுகத்துடன் தமது பணியை முடித்துக் கொள்ளும் வளர்ந்த பல நூலகங்களை நாம் கண்கூடாகப் பார்க்க முடியும். பின்வரும் காரணங்கள் உசாத்துணை சேவையின் அவசியத்தை வெளிப்படுத்துகின்றன.

•    நூல்களின் செயற்கைத் தன்மை
சாதாரண நூல்களை எடுத்துக் கொண்டால் ஒரே பொருட்துறை சார்ந்து ஒரேமாதிரியான பல நூல்கள் இருக்கும்போது அதில் பொருத்தமானதையும் சரியானதையும் தேர்ந்தெடுக்கும் வல்லமை எல்லா வாசகருக்கும் இல்லை. அதே போன்று அகராதிகள், கலைக்களஞ்சியங்கள், ஆண்டு நூல்கள் போன்ற உசாத்துணை சாதனங்களோ அல்லது நுண்வடிவங்கள், படத்துணுக்குகள், சீடிரோம்கள் போன்ற உபகரணப் பாவனையுள்ள சாதனங்களோ செயற்கைத் தன்மை வாய்ந்தவை. இவற்றிலிருந்து வாசகனுக்குத் தேவைப்படும் தகவலைத் தேடிப் பொறுக்கியெடுத்தல் கடினமான அறிவுசார் பணியாகும். ஒருவரின் தனிப்பட்ட உதவியின்றி இவற்றைப் பயன்படுத்தல் மிகவும் சிரமமானது.

•    பட்டியலின் செயற்கைத் தன்மை
நூல்களை அதன் ஆசிரியரின் கீழ் அல்லது தலைப்பின் கீழ் அதுவுமன்றி ஆக்கத்தை உருவாக்கிய நிறுவனத்தின் கீழ் பதிவதற்குப் பின்பற்றப்படும் பட்டியலாக்க விதிமுறைகள் வாசகனுக்குப் புதிரையும் குழப்பத்தையும் ஏற்படுத்துபவை. நூலாசிரியரின் பெயர்களின் கீழ் ஒரு நூலின் விபரங்கள் பதியப்பட்டு ஒழுங்குபடுத்தப்படும் செய்முறையில் பல செயற்கைத் தன்மைகள் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக உலகப் புகழ் பெற்ற நாடகாசிரியரான பேனாட் ஷோவை பட்டியலாக்க முறையில் ஷோ,பேனாட் என பதிந்து அதன் கீழ் அவரது ஆக்கங்கள் அனைத்தையும் ஒழுங்குபடுத்தினால் வாசகன் பட்டியலாக்க அறிவுடன் நூலகத்துக்கு வருவான் என நினைப்பது தவறானது. பேனாட் ஷோ என்ற பெயரில் அவரது ஆக்கங்களைத் தேடும் வாசகனுக்கு இச் செய்முறை குழப்பத்தையே ஏற்படுத்தும். அதே போன்று திருக்குறளை குறள் என்ற பிரபல்யமான பெயரில் பதியப் போகின்றோமா அல்லது திருக்குறள் என்ற பெயரில் அதுவுமன்றி திருக்குறளை இயற்றியவராகக் கருதப்படும் திருவள்ளுவர் என்ற பெயரில் பதியப் போகின்றோமா என பட்டியலாளர் எடுக்கும் முடிவுகள் வாசகனுக்குத் தெரிவதற்கு நியாயமில்லை. அதேபோன்று பார்க்க, மேலும் பார்க்க குறிப்புகள் வாசகனுக்கு குழப்பத்தைத் தரும் ஒன்று. இதனால் பட்டியலாக்கமே அர்த்தமற்றது என்ற முடிவுக்கு நாம் வந்து விடக் கூடாது. அறிவை முறைப்படி ஒழுங்குபடுத்துவதற்கும், அதைப் பதிந்து வைத்திருப்பதற்கும் பட்டியலாக்கம் பகுப்பாக்கம் என்ற இரு அம்சங்களும் மிக அவசியமானவை. வாசகனின் நேரத்தைப் பேணுவதற்கு இவை எங்களுக்கு உதவுபவை என்ற எண்ணப்பாங்கை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டுமேயன்றி வாசகன் நூலகவியல் கற்பதற்கு நூலகம் வரவில்லை என்பதை நாம் தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும்

•    பகுப்பாக்க ஒழுங்கமைப்பின் செயற்கைத் தன்மை
வாசகனுக்கு குழப்பத்தைத் தரும் இன்னோர் அம்சம் நூல்களில் நாம் பொறித்திருக்கும் அழைப்பு எண்கள். நூல்களுக்கான வகுப்பெண்ணும் அந்த நூலை எழுதிய ஆசிரியர் பெயரின் முதல் மூன்று எழுத்துக்களும் இணைந்து தோற்றம் பெறுவதே அழைப்பு எண்ணாகும்.
எ-டு     பாரதியார் கவிதைகள்              அழைப்பு எண்
       
வகுப்பெண்                894.81116
        ஆசிரியர் பெயர்             பாரதி


இந்த அழைப்பு எண்கள் வாசகரைப் பொறுத்து மிகுந்த செயற்கைத் தன்மை வாய்ந்தவை. இந்த அழைப்பு எண்களின் தொடர்புத் தன்மையை விளங்கப்படுத்தி வாசகனுக்குத் தேவைப்படும் நூல்களை எடுப்பதற்கு அவனுக்கு தனிப்பட்ட ரீதியிலான உதவி அவசியமாகும்.

•    முறிந்த ஒழுங்கு
நூலக இறாக்கைகளில் ஒரே வகுப்பெண்ணைக் கொண்ட நூல்கள் பலதரப்பட்ட பிரிவுகளிலும் அப்பிரிவுக்குரிய அமைவிட விபரத்துடன் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டாக இலங்கை அரசியல் வரலாறு என்ற தலைப்பில் மூன்று நூல்கள் நூலகத்துக்கு வந்திருப்பின் அவை மூன்றும் ஓரிடத்தில் இறாக்கைப்படுத்தப்படாது யுசு என்ற குறியீட்டுடன் ஆவணப்பகுதியில் ஒன்றும். சு என்ற குறியீட்டுடன் உசாத்துணைப் பகுதியில் ஒன்றும் ளு என்ற குறியீட்டுடன் இரவல் வழங்கும் பகுதியில் ஒன்றுமாக ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கும். இத்தகைய பாவனைச் சொற்களின் பயன்பாடு வாசகனைப் பொறுத்துக் குழப்பத்தை ஏற்படுத்துபவை.

•    வாசகனின் உளவியல் தன்மை
நூலகத்தில் நாம் ஏழு வகையான வாசகரை இனங் கண்டு கொள்ள முடியும் என ஆசியாவின் நூலகவியல் தந்தை எனப் போற்றப்படும் எஸ்.ஆர்.இரங்கநாதன் குறிப்பிடுகிறார.;

1    தாழ்வு மனப்பாங்குடைய வாசகர்
நாம் ஏதாவது போய்க் கேட்டால் எமக்கு ஒன்றுமே தெரியாது என நூலகர் நினைத்து விடுவாரோ, எமது அறியாமை பலவீனம் என்பன அவர்களுக்கு தெரிந்து விடுமோ என நினைக்கும் வாசகர் கூட்டம் எம்மவர் மத்தியில் மிக அதிகமாக உண்டு. சற்று நேரம் அவர்களை உறுத்து நோக்கினால் போதும், குறித்த சில காலத்துக்கு எமது கண்ணிலேயே இவர்கள் படமாட்டார்கள். இவர்களை நூலகர் இனங்கண்டு அவரின் அறியாமையைப் போக்கி அவரை நிரந்தர வாசகராக ஆக்கும் பொருப்பு நூலகருக்கு உண்டு.

2    உயர்வு மனப்பான்மையுடைய வாசகர்
நூலகம் என்பது தகவல் சுரங்கம் அள்ள அள்ள குறையாத நீருற்று இது. சில வாசகர்கள் இதற்கு முரண்பட்டவர்கள். நூலகத்திலுள்ள அறிவுப் பதிவேடுகளை விடவும் தமது மூளையில் அதிகம் உண்டு என தம்மைப் பறைசாற்றிக் கொள்பவர்களை எமது அன்றாட வாழ்வில் நாம் கண்டு கொண்டு தான் இருக்கிறோம். இத்தகையவர்களைக் கண்டு மனம் சலிக்காது இந்திய தேசிய கவி எனப் போற்றப்படும் தாகூரின் வார்த்தையில் சொல்வதானால்' நண்பனே நாயகனே மனிதனிடமிருந்து கிடைக்கும் பொது அவமதிப்பின் மத்தியிலும் கூட அதனைத் தாங்கி அவனுக்குச் சேவை செய்யும் மனத்துணிவைத் எனக்கு கொடு என்ற எண்ணத்துடன் சேவையைத் தொடருவது தான் நூலக உணர்வு மிக்க நூலகரின் கடமையாகும்.
3    கூச்ச சுபாவம் உள்ள வாசகர்
பொதுவாக பயந்த சுபாவமுள்ள இவ்வாசக வகையினர் நூலக அலுவலர்களிடம் உதவி கோரக் கூச்சப்படுபவர்கள். எவரையும் எதுவும் கேட்காமல் நூலக இறாக்கைகள், நூலகப் பட்டியல் போன்றவற்றுடன் தடுமாறுபவர்கள். இவர்கள் எம்மிடம் எதுவித உதவியும் கோரமாட்டார்கள். அதேசமயம் தாமும் பயன்பெற மாட்டார்கள். இவர்களுக்கு உதவுவதற்கு நூலகர் அறிவு சார் தளத்திலிருந்து உணர்வு சார் தளத்துக்கு இறங்குதல் மிக முக்கியமானதாகும். இவர்கள் தம்மை நாடி வருவார்கள் என எதிர்பார்த்து நேரத்தை விரயமாக்காமல் சுயமரியாதை அந்தஸ்து, தகுதி போன்றவற்றைக் களைந்து ஒருபுறம் வைத்து விட்டு இவர்களை நூலகர்களே தேடிப் போகவேண்டும்.

4    சுயநலமிக்க வாசகர்
இவர்கள் தாம் மட்டும் பாவிப்பதற்காக குறித்த நூலை எடுத்து வேறு தட்டுகளில் ஒளித்து வைத்து விடுவார்கள். தவறான இடத்தில் வைக்கப்படும் நூல்கள் தொலைந்த நூல்களுக்குச் சமமானது என்பதனால் இவர்களை மிகக் கவனமாகக் கையாள வேண்டும்

5    நூல் திருடர்கள்
நூல்களிலிருந்து தேவையான பக்கங்களைக் கிழித்தோ, வெட்டியோ சில சமயம் கண்ணுக்குள் மண்ணைத் தூவிவிட்டு முழுப் புத்தகமாகவோ அபகரித்துச் சென்றுவிடுபவர்கள். இவர்களிடம் எவ்வித கருணையும் காட்டக் கூடாது என்பதுடன் இவர்கள் மீது எமது பார்வை எந்நேரமும் படும்படி நாம் பார்த்துக் கொள்வது அவசியமாகும்.

6    நுண்ணறிவுள்ள வாசகர்
இவர்களுடன் பழகுவது மிகவும் கடினமானது. நூலகத்தை, நூலக சாதனங்களை, நூலக வசதிகளை, நூலக சேவைகளை அணுவணுவாக அறிந்து வைத்திருப்பவர்களும் அதனை முழுமையாகப் பயன்படுத்துபவர்களும் இவர்கள் தான். ஒளிவு மறைவின்றி கூறுவதானால் நூலக சேவையின் பெரும் பகுதி இவர்களுக்காகவே பயனபடுத்தப்படுகிறது. நூலக செயற்பாடுகளும் இவர்களை மையமாகக் கொண்டே திட்டமிடப்படுகின்றன.

7    சாதாரண வாசகர்
நூலக வாசகர்களில் பெரும்பாலானோர் இவர்களே. இவர்களுக்கு தேவைப்படுவதை மட்டும் கேட்பார்கள்.

வகைகள்
பொதுவான சேவைகள்                
•    யார்  எது  எங்கே  எப்போது  எப்படி போன்ற கேள்விக்கு விடையளித்தல்
•    சிறப்புத் தகவல்களை வழங்குதல்
•    ஆவணங்களின் அமைவிடத்தை அறிந்;துகொள்ள உதவுதல்
•    நூலகப் பட்டியலை பயன்படுத்துவதற்கு உதவுதல்
•    உசாத்துணை நூல்களைப் பயன்படுத்த உதவுதல்
•    நூலக அறிவுறுத்தல்கள்
•    நூலகங்களை எப்படிப் பாவிப்பது என்பதற்கான அறிவுறுத்தல்
•    நூலகப் பட்டியல்கள், உசாத்துணைக் கருவிக்ள என்பவற்றின் பயன்பாடு
•    நூலக அங்கத்தவர்களையும் அதிதிகளையும் நூலகத்தைச் சுற்றிப்பார்வையிட எடுத்துச்செல்லல்
•    நூல்களை ஒதுக்கீடு செய்தல்
•    புதிய நூல்களையும்  அண்மைக்கால பருவஇதள்களையும் காட்சிப்படுத்தல்
•    நூலக கண்காட்சிகளை ஒழுங்குபடுத்தல்

சிறப்புச் சேவைகள்
•    நூலகர்களுக்;கிடையிலான நூலிரவல் வழங்குதல்
•    அங்கத்தவர் அல்லாதோருக்கும் நூலகத்தைப் பார்வையிட அனுமதியளித்தல்
•    நூலக வெளியீடுகளைத் தயாரித்தல் அல்லது தயாரிப்பதற்கு உதவி செய்தல்
•    சொல்லடைவாக்க சாராம்சப்படுத்தல் சேவைகள்
•    நூல்விபரப்பட்டியல்களைத் தொகுத்தல்
•    பத்திரிகைத் துணுக்குகளை பராமரித்தல்
•    துண்டுப்பிரசுரங்கள் இறிக்கைகள் போன்ற கோவையைப் பராமரித்தல்
•    ஆவண மீளுருவாக்கவியல் சேவைகள்
•    ஆற்றுப்படுத்தல் சேவைகள்(நூலகத்திற்கு வெளியே தகவல்பெற வழிப்படுத்தல்
•    தாய்நிறுவனத்தின் கடந்தகால, நிகழ்கால செயற்பாட்டு நோக்கங்கள் போன்;றவற்றின் விபரங்கள்  செயற்பாடு போன்றவற்றைச் சேகரித்து வைத்தல்

நூலக அறிமுகச் சேவை

உசாத்துணைச் சேவையில் முக்கியமானது வாசகனை நூலகத்துக்கு அறிமுகப்படுத்தல்
நூலகத்துக்கு நூலகம் ஆவணங்களை ஒழுங்குபடுத்துவதிலும், சேவைகளை வழங்குவதிலும் வேறுபட்ட முறைகள் பின்பற்றக் கூடும். எனவே நூலகத்துக்குப் புதிதாக வரும் வாசகர்களுக்கு நூலக விதி முறைகள், சேவைகள் என்பவை பற்றிய அறிமுகம் அத்தியாவசியமானது. புதிய வாசகர்களை நூலகரோ அல்லது நூலக அலுவலர்களோ கூட்டிச் சென்று நூல்களின் தன்மை, நூல்கள் வைக்கப்பட்டிருக்கும் பிரிவுகள், நூலுருவற்ற சாதனங்கள் இருக்குமாயின் அவை பற்றிய விளக்கம், பட்டியலைப் பாவிக்கும் முறைகள், நூலக விதிமுறைகள், அங்கத்தவராகச் சேருவதற்கான ஒழுங்குமுறைகள், போன்ற அனைத்து விபரங்களையும் பொறுமையுடன் கற்றுக் கொடுக்க வேண்டும். விரிவுரை மண்டபத்தில் ஓரிரு விரிவுரைகளுடன் இந்த அறிமுகத்தை முடித்துக் கொள்ளும் போக்கே எம்மிடையே அதிகம் காணப்படுமொன்று. நூலக அறிமுக சேவையைப் பெரிய நூலகங்கள் சரிவரச் செய்வதில்லை என்ற எண்ணப்பாடு வாசகர்களிடையே பரவலாக உண்டு. நூலக விதிமுறைகள் பற்றிய விளக்கக் கையேடுகள், அறிவித்தல் அட்டைகள், ஒழுங்கமைக்கப்பட்ட பட்டியல், திறந்த அணுகுமுறை போன்ற வசதிகள் தாராளமாக இருக்கும் போது வாசகருக்குத் தனித்தனி அறிமுகம் தேவையற்றது என்று நினைத்துக் கொண்டு  ஒரு மேலார்ந்த அறிமுகத்துடன் நாம் ஒதுங்கி;க் கொள்கின்றோம்.

வாசகர் அறிவுறுத்தல் சேவை

தகவல் கட்டுமீறல் அல்லது தகவல் வெடிப்பு என்ற காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனித சமூகத்தில் தரமான நூல்களைத் தெரிந்தெடுத்துப் படிப்பது சுலபமான தொன்றல்ல. அதற்குச் சரியானதொரு வழிகாட்டுதல் மிக அவசியமாகும். அதிலும் குழந்தைகள், சிறுவர், மாணவர், பெண்கள், முதியோர் எனச் சமூகத்தின் அனைத்து மட்ட வாசகருக்கும் சேவை புரிய வேண்டிய ஒரு நூலகத்தில் வாசகருக்கான வழிகாட்டுதல் என்பது மிக மிக அவசியமாகும்.
வாசகர்; அறிவுறுத்தல் சேவை அல்லது வாசகர் வழிகாட்டுதற் சேவை என்பது நூலகத்துக்கு வரும் வாசகரின் தரத்தை அறிந்து அவருக்குத் தேவையான உதவிகளைச் செய்து கொடுத்தல் ஆகும். இச் சேவையைச் செவ்வனே புரிவதற்கு நாம் நூலக வாசகர் ஒவ்வொருவரையும் நன்கு அறிந்திருத்தல் அவசியமாகும்.

எமது நூலகங்களில் இன்று எழுகின்ற அடிப்படைப் பிரச்சனைகளில் ஒன்று போதியளவு நூல்கள் இல்லை என்பது. இன்னொன்று தரமான நூல்கள் இல்லை என்பது. நூலே இல்லைப் பின் எவ்வாறு வாசகனையும் நூலையும் இணைத்து விட முடியும் என்ற வினா எழுவதும் கவனத்தில் கொள்ளத் தக்கது. இங்கு தான் நாம் சிந்திக்க வேண்டியவர்களாக, நாம் கற்ற அறிவிலிருந்து மாற்றீடுகளைக் கண்டு பிடிக்க வேண்டியவர்களாக ஆகின்றோம். நூல்களைப் பணம் கொடுத்து வாங்கிப் போடும் ஆற்றல் எமக்கு இல்லையெனில் வாசகனுக்குத் தேவைப்படும் நூல் வேறு எந்த நூலகத்தில் இருக்கின்றது என்பதை அறிந்தாவது சொல்ல முடியும். இதனைத் தான் ஆற்றுப்படுத்தல் சேவை என்ற பதம் குறிக்கின்றது.

கலாநிதி S.R ரங்கநாதன் அவர்கள் உசாத்துணைசேவையை இரண்டு வகையாகப் பிரிக்கிறார்.
•    குறுங்கால உசாத்துணைசேவை-உடனடி உசாத்துணைசேவை
•    நீண்டகால உசாத்துணைசேவை
குறுங்கால உசாத்துணைசேவை
மிகவும் குறுகிய நேரத்தில் உசாத்துணை வினாக்களுக்கு விடையளிக்கம் சேவை உடனடி உசாத்துணைசேவை எனப்படும். 
(Ready Reterence Scrvices) இச்சேவையானது உசாத்துணை அலுவலரது அறிவை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்படுகிறது

1)    வினாவுக்கான விடையை நேரடியாக வாசகனுக்குச் சொல்லுதல்
2)    சரியான உசாத்துணை வளத்தை வாசகருக்கு வழங்குதல்
3)    நூல்களை பயன்படுத்தும் முறையை வாசகனுக்கு பயிற்றுவித்தல்
நீண்டகால உசாத்துணைசேவை
ஒரு வாசகனினால் கேட்கப்படும் கேள்விக்கு 1/2மணித்தியாலத்திலோ ஒரு வாரத்தலோ அளிக்கப்படும் சேவை.  உசாத்துணைசாதனங்கள் மட்டுமன்றி ஏனைய சாதனங்கள் அல்லது சில சமயங்களில் நூலகத்தில் இல்லாத தகவல்களை நூலகத்திற்கு வெளியே பெற்றுக்கொள்ளல் என்பன
•    கேள்வியின் தன்மை (எ-டு அபிவிருத்தி அடைந்த நாடுகளின் இயந்திரமயமாக்கல்)
•    உசாத்துணை வளங்கள்;( எ-டு பருவகால இதள்களிலிருந்து பெற்றுக்கொள்ளப்படும் புதிய தகவல் புதியஅபிவிருத்திகள் பற்றிய சிறப்புத்தகவல்களாக இருத்தல்
•    காலம் ( எ-டு மிகவும் அண்மைக்கால தகவலாகவோ கடந்த காலத் தகவலாகவோ இருக்கலாம்
•    தகவலின் தன்மை ( எ-டு குறிப்பிட்ட விடயம் சம்பந்தமாக ஒருவரின் கருத்தாகவோ, பலவித தகவல் மூலங்களிலிருந்து சேகரிக்கப்படவேண்டிய தகவலாகவோ, அன்னிய மொழிகளிலிருந்து தேடப்படும் தகவலாகவோ, நூலகத்தில் இல்லாத ஒரு பருவ இதழிலிருந்து பெறப்பட வேண்டிய தகவலாகவோ இருக்கலாம்)
என்பவற்றின் அடிப்படையிலேயே நீண்டகால உசாத்துணை சேவை வழங்கப்படுகிறது
உசாத்துணை வினாக்களின் வகை
•    வழிகாட்டும் வகை
உ-ம் பட்டியலாக்கப் பகுதி எங்கே உள்ளது?
•    பொது வகை   Fact  Type  Questions
உ-ம் இலங்கையின் மிக உயரமான மலை பற்றிய விபரம் வேண்டும்
•    தனித்துவ வகை
உ-ம் தனிநாயகம் அடிகளாரின் வாழ்க்கைச் சரித்திரத்தின் பெயர் என்ன?



[75th Anniversary souvenir of Inuvil central college. Dec.2005].

No comments:

Post a Comment