எனது நோக்கில்.......

அறிவும் திறனும் இணைந்து தொழிற்படும் அற்புதமான ஒரு துறையாகக் கருதப்படுவது நூலக, தகவல் அறிவியல் துறை. உரு,வரி,வரைபு, அலை ஆகிய தகவல் வெளிப்பாட்டு வடிவங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட பதிவேடுகளின் உருவமைப்பில் அதிக கவனம்செலுத்தி அவற்றின் சேகரிப்பு,ஒழுங்கமைப்பு,சேமிப்பு, பகிர்வு, பராமரிப்புபோன்ற செய்முறைகள் ஊடாக வாசகனின் தகவல் தேவையைப் பூர்த்தி செய்கின்ற நூலகஅறிவியல் துறையும், இப்பதிவேடுகளின் உள்ளடக்கத்தில் மட்டும் அதிக கவனம் எடுத்து தகவல் உருவாக்கம், தகவல் பரவலாக்கம்,சேகரிப்பு, ஒழுங்கமைப்பு,மீள்பெறுகை, பொருள் விளக்கமளிப்பு, பயன்பாடு போன்ற செய்முறைகளினூடாக பயனரின் தகவல் தேவையைப் பூர்த்தி செய்கின்ற தகவல் அறிவியல் என்ற துறையும் இணைந்து உருவான இத்துறையானது தகவலின் பண்புகளும் நடத்தையும், தகவல் பாய்ச்சலை கட்டுப்படுத்தும் சக்திகள், தகவலிலிருந்து உச்ச அணுகுகையையும், பயன்பாட்டையும் பெறும்பொருட்டு தகவலைச் செய்முறைப்படுத்துவதற்கானவழிவகைகள்,தகவல் கையாள்கை மற்றும்பரவலாக்கம் போன்றவற்றில் நூலகங்கள்மற்றும் தகவல் நிலையங்கள் ஆகியவற்றின் பங்களிப்பு ஆகியவற்றைக் கூர்ந்து ஆராயும் ஒரு அறிவியலாக மட்டுமன்றிகணிதவியல்,தருக்கவியல், மொழியியல்,உளவியல், கணினித் தொழினுட்பம்;,நூலகவியல், தகவலியல்,முகாமைத்துவம் போன்ற துறைகளிலிருந்து பெறுவிக்கப்பட்டதாக அல்லது அவற்றுடன்தொடர்புடையதொன்றாகவும் உள்ள பெருமைக்குரியது.

யாழ்ப்பாணப் பிரதேசத்தில் நூலக அபிவிருத்தியை மையமாகக்கொண்டு இயங்கும்ஒரேயொரு அரசசார்பற்ற அமைப்பான'நூலக விழிப்புணர்வு நிறுவனம்' என்ற அமைப்பின் ஊடாக நடத்தப்பட்ட பொது நூலகர்கள், மற்றும் பாடசாலை நூலகர்களுக்கான கருத்தரங்குகள்,பயிற்சிப் பட்டறைகளில் இனங்காணப்பட்ட நூலகர்களின்தேவையும், கிராமம் தோறும் தனிநபர் நூலகங்களாகவோ, அமைப்பு சார்நூலகங்களாகவோ, கிராமிய நூலகங்களாகவோ இயங்கக் கூடிய வகையில் புதிய நூலக உருவாக்கத்தில் ஆலோசனை கோரி அணுகியவர்களின் தேவையும் இணைந்து உருவானதே இந்தவலைத்தளம்எனில் மிகையல்ல.

இந்த வலைத்தளத்தின் தேவையைத் திரும்பத்திரும்ப வலியுறுத்தி அதற்கான உந்துசக்தியைத் தந்த அனைவருக்கும் எனது நன்றிகள். வீட்டு நூலகம் முதற்கொண்டுசனசமூக நிலைய நூலகங்கள்,பாடசாலை நூலகங்கள் போன்ற கல்விநிறுவன நூலகங்கள், பொதுசன நூலகங்கள், சிறப்பு நூலகங்கள் அனைத்திற்கும் ஒரு அடிப்படையைத் தரவும், தாய்மொழி மூல கல்விமூலம் நூலகத்துறையைவளர்த்தெடுத்தல்,தமிழில் நூலகவியல் துறை சார்ந்த ஆய்வுகளை ஊக்குவித்தல் ஆகிய இரு இலக்குகளை முன்வைத்தும் இந்த வலைத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. அபிவிருத்தியின் அச்சாணி நூலகம் என்ற கருத்துநிலையையும் செயலுருப்பெற உதவுமெனில் அது நான் பிறந்த இந்த மண்ணுக்கும் நான் பேசும் மொழிக்கும்செலுத்துகின்ற நன்றிக்கடனாகும்.


அருளானந்தம் ஸ்ரீகாந்தலட்சுமி,
கல்விசார் நூலகர்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

13-09-2014


Sunday, September 14, 2014

யாழ். பல்கலைக்கழக நூலகத்தின் முதல் நிலைத் தகவல் வளங்கள்: ஒழுங்கமைப்பு, பயன்பாடு பராமரிப்பு

ஆய்வுச் சுருக்கம்
(அறிவியல் ரீதியில் நோக்கும் போது சமூகத்தின் அதி உயர் கல்வி நிறுவனமாக இருக்கின்ற பல்கலைக்கழகம் ஒன்றின் ஆய்வுத் தேவைக்கு அதிகமாக உதவுபவை முதல் நிலைத் தகவல் வளங்களே. எனினும் பொருளாதார நோக்கில் பார்க்கும் போது வளர்ச்சியடைந்த தேசங்களின் ஆய்வு முயற்சிகள் அதிக பொருட் செலவில் தரம் மிக்க நூல்கள், ஆய்வறிக்கைகள், பருவ இதழ்கள் போன்ற வடிவில்;  எமது நூலகத்தை வந்தடைகின்ற அதே சமயம், வெளியீட்டுக்கான வாய்ப்பின்றி அல்லது வெளியீட்டுச் செலவை ஈடு கட்டும் வாய்ப்பின்றி பெறுமதி மிக்க முதல்நிலைத் தகவல் வளங்கள் சர்வ தேச தராதரத்துக்கு ஏற்ப பதிப்பிக்கப்படாமல் யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலகத்தில் காணப்படுகின்றன. கையெழுத்துப் பிரதிகளாக, செய்தித் தாள் கட்டுரைகளாக, சிறுநூல்களாக, சிறப்பு மலர்க் கட்டுரைகளாக இலை மறை காயாக இருக்கும் பிரதேச முக்கியத்துவம் வாய்ந்த சிறந்த ஆய்வு முயற்சிகளையும் அதன் முக்கியத்துவத்தையும், அவை பேணிப் பாதுகாக்கப்படவேண்டியதன் அவசியத்தையும் ஓரளவேனும் வெளிக்கொணர இக் கட்டுரை முயல்கிறது.)

அறிமுகம்
ஷஒரு நாட்டுக்கு உள்ளேயோ அல்லது வெளியேயோ வெளியிடப்பட்ட, வெளியிடப்படாத அனைத்து தகவலும் தகவல் வளங்கள்; எனப்படும்ஷ என தகவல் வளங்கள் என்ற பதத்தை வரைவிலக்கணப்படுத்தும் தன்மை காணப்படினும் கூட1 தகவல் சாதனங்களிலிருந்து பயன்பாட்டுக்கு எடுத்துக்கொள்ளப்படும் தகவலே பெரும்பாலும் வளம் என்ற பெயரால் குறிக்கப்படுகிறது. இவை பதிவேடுகளில் பதியப்பட்ட நூல்கள், பருவ இதழ்கள் போன்ற அச்சு வடிவ ஊடகங்களாகவோ அல்லது சுவடிகள், ஓவியங்கள் போன்ற அச்சு வடிவற்ற ஊடகங்களாகவோ அதுவுமன்றி தகவலைப் பரப்பும் வல்லமை மிக்க நிறுவனங்களாகவோ, தகவலை மூளையில் பொதிந்து வைத்திருக்கும் ஆற்றல் பெற்ற ஆராய்ச்சியாளர்கள,; அறிவியலாளர்கள் போன்ற மனித வளங்களாகவோ இருக்கலாம். தகவல் வளங்கள் அவற்றின் உள்ளடக்கத்தின் அடிப்படையில் முதல் நிலைத் தகவல் வளங்கள், இரண்டாம் நிலைத் தகவல் வளங்கள், மூன்றாம் நிலைத் தகவல் வளங்கள் என மூவகைப்படுத்தப்படுகின்றன 2.

உண்மையான ஆய்வு அபிவிருத்திகளை, அவற்றின் புதிய பிரயோகங்களின் விளக்கங்களை, அல்லது பழைய கருத்துக்களுக்கான புதிய விளக்கங்களை உடனுக்குடன் தாங்கி வரும் வெளியீடுகள் அனைத்தும் முதல்நிலைத் தகவல் வளங்கள் (Primary information resources) எனப்படுகிறது. ஆய்வாளர் ஒருவரால் உருவாக்கப்படுகின்ற புதிய தகவல்கள் அனைத்தும் இந்த முதல்நிலைத் தகவல் வளங்களின் ஊடாக குறிப்பிட்ட சமூகத்தைச் சென்றடைகிறது. ஒழுங்குபடுத்தப்படாத வளங்களாக இவை இருப்பதனால் இவற்றைப் பயன்படுத்துவது எளிதல்ல. இவற்றின் பூரண பயன்பாட்டிற்குப் பாவனையாளர் இரண்டாம் நிலைத் தகவல் வளங்களிலேயே பெருமளவில் தங்கியிருக்க நேரிடும். மிக முக்கியமான தகவல் மூலாதாரங்களாகக் கருதப்படும் இவ்வளங்கள்
•    புதிய அபிவிருத்திகள் பற்றிய தகவல்களை உடனுக்குடன் அறிவிப்பதன் மூலம் அத்துறை தொடர்பாக அதிக அறிவு நிலையில் இருக்க உதவுதல்,
•    ஒரே மாதிரியான ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதைத் தடுத்தல்,
•    புதிய தகவல்களை உருவாக்குவதற்கு ஏனையோர்களுக்கு உதவுதல் போன்ற வழிகளில் ஆய்வாளர்களுக்குப் உதவுகின்றன.
ஒரு குறிப்பிட்ட பொருட்துறையின் வளர்ச்சி வீதமானது அத்துறை சார்ந்து வெளிவரும் முதல் நிலைத் தகவல் வளங்களின் தொகையிலேயே பெருமளவு தங்கியுள்ளது. தனிப்பொருள் நூல்கள், அறிக்கைகள், ஆய்வுக்கட்டுரைகள், முதல்நிலைப் பருவ இதழ்கள், சிறு நூல்கள், காப்புரிமை இலக்கியங்கள், நியமங்கள், தடை செய்யப்பட்ட ஆவணங்கள், அரச வெளியீடுகள், கையெழுத்துப் பிரதிகள், சுவடிகள் போன்றவை முதல்நிலை தகவல் வளங்களாகக் கருதப்படுகின்றன.

1. பல்கலைக்கழக நூலகமும் முதல்நிலைத் தகவல் வளங்களும்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்தில் சிறப்புக் கவனம் செலுத்தப்படும் முதல்நிலைத் தகவல் வளங்களாக நூல்கள், ஆய்வுக் கட்டுரைகள், சிறுநூல்கள், அறிக்கைகள், அரச ஆவணங்கள,; கையெழுத்துப் பிரதிகள், மற்றும் செய்தித் தாள்கள், செய்திக் கடிதங்கள், செய்தியறிக்கைகள், பருவ இதழ்கள், ஆண்டு மலர்கள் என்பவற்றை உள்ளடக்கிய தொடர் வெளியீடுகள்; போன்றவற்றைக் கொள்ள முடியும்.
இவற்றுக்குள் அரிய வளங்களாகவும் பெறுமதி மிக்கதாகவும் கருதப்பட்டு ஆவணக் காப்பகப் பகுதியில் பாதுகாக்கப்படும் முதல்நிலைத் தகவல் வளங்களின் எண்ணிக்கையை அட்டவணை 1 எடுத்துக் காட்டுகிறது. 3 இப்புள்ளிவிபரமானது 2004 யூலை வரை நூலகத்தால் பெற்றுக்கொள்ளப்பட்டதாகும்.

அட்டவணை 1
பொருட்துறை     ஆய்வுக்கட்டுரை    சிறு நூல்கள்    மலர்கள்    பருவ இதழ்(தொகுதி)
பொது                     08                              31                123                      72 (299)
தத்துவம்               09                              39                 03                        07(35)
சமயம்                   24                              889               221                         21(46)
சமூக அறிவியல்    121                     1178                431                         29(205)
மொழி                   32                               140                 02                           01
அறிவியல்           23                              102                06                           16(103)
தொழினுட்பம்    27                                 172              10                          32(111)
 கலை                  11                                186               16                         14(75)
இலக்கியம்        76                               662               89                           09(20)
வரலாறும் புவியியலும்    32          467                23                          67(109)

மூலம்: புள்ளிவிபரப் பதிவேடு-ஆவணக்காப்பகப்பகுதி

1.1 ஆய்வுக்கட்டுரைகள் Dissertations
வழிகாட்டுபவரின் மேற்பார்வையின்கீழ் முதுநிலைப் பட்டத்துக்காக அல்லது கலாநிதிப் பட்டத்துக்காகப் பல்கலைக்கழகத்தை அல்லது கல்வி சார்ந்த நிறுவனமொன்றைச் சேர்ந்த  மாணவர் ஒருவரால் மேற்கொள்ளப்படும் ஆய்வின் முடிவில் எழுதப்படும் அறிக்கையே ஆய்வுக் கட்டுரை எனப்படுகிறது. 4 உண்மையான ஆய்விற்கான சான்றுகளை இக்கட்டுரை உள்ளடக்க வேண்டும் என்பதுடன் குறிப்பிட்ட துறை சார்ந்த ஆய்வாளர்களுக்கு வேண்டிய முக்கிய ஆவணங்களாக இவை வடிவமெடுக்கின்றன. ஆய்வுக்கட்டுரையில் உள்ள சில முக்கிய தகவல்கள் பின்னர் முதல்நிலைப்பருவ இதழ்களில் அல்லது நூல்களில் வெளியிடப்படுவதெனினும் குறிப்பிட்ட சில தரவுகளுக்கு மூல ஆய்வுக்கட்டுரையிலேயே தங்கியிருக்க வேண்டும் என்பதனால் இவை முக்கியமான முதல்நிலைத் தகவல் வளங்களாக கருதப்படுகின்றன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்படுகின்ற முதுமாணி, முது தத்துவமாணி, கலாநிதிப் பட்டம் போன்றவற்றுக்கான ஆய்வுமுயற்சிகள் அனைத்தும் ஆவணக்காப்பகப் பகுதியில் பாதுகாக்கப்படுகின்றன. இதைவிட தமிழ்மொழி, இலக்கியம் போன்ற துறைகளில் இந்திய பல்கலைக்கழகங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் சிலவும் இங்கு சேர்க்கப்பட்டிருக்கின்றன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேராசிரியர்களின் மதிப்பீட்டுக்கென இந்தியப் பல்கலைக்கழகங்கள் சிலவற்றிலிருந்து ஆய்வுக்கட்டுரைகள் இங்கு அனுப்பி வைக்கப்படுவதே இதற்கான காரணமாகும். இத்துடன் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் இலங்கை சார்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் சிலவற்றின் ஒளிப்படப்பிரதியும் ஜீhழவழஉழிலஸ் இங்கு காணப்படுகிறது.
பொருட்துறை சார்ந்து இங்கு காணப்படும் ஆய்வுக்கட்டுரைகளின் எண்ணிக்கையை அட்டவணை 1 எடுத்துக்காட்டுகிறது. இங்கு சமூக அறிவியல் சார்ந்த ஆய்வுக் கட்டுரைகளே(117) கூடுதலாகக் காணப்படுகின்றன. கல்வியியல் சார்ந்து மேற்கொள்ளப்படும் ஆய்வு முயற்சிகள்(69) அதிகமாக இருப்பதே இத்தகைய அதிகரிப்புக்குக் காரணமாகும். அறிவியல், தொழினுட்பம் சார்ந்த துறைகளில் ஆய்வுக்கட்டுரைகள் மிகவும் குறைவாகவே உள்ளன. 1990 களுக்குப் பின்னர் இத்துறைகளில் எவ்வித ஆய்வுக்கட்டுரைகளும் நூலகத்தினால் பெறப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 5

1.2 சிறு நூல்கள் Pamphlets
ஆவணக் காப்பகப்பகுதியின் மதிப்புக்குப் பெருமை சேர்க்கும் இன்னோர் முதல்நிலைத் தகவல் வளமாகக் கருதப்படுவது இங்கு ஒழுங்கமைக்கப்பட்டிருக்கும் சிறு நூல்களாகும். நிரந்தரமாகக் கட்டப்படாத அச்சு வடிவ ஆக்கம் எதுவும் சிறுபிரசுரம் அல்லது சிறு நூல் என்ற பதத்தால் குறிப்பிடப்படுமெனினும் 6 சர்வதேச பட்டியலாளர் மகாநாட்டில் தீர்மானிக்கப்பட்டதன்படி ஆகக் குறைந்தது 5 பக்கங்கள் உடையதாகவும் 48 பக்கங்களுக்கு மேற்படாததாகவும் உள்ள பருவஇதழ் அல்லாத வெளியீடுகள் அனைத்தும் இவ்வகைக்குள் அடங்குகின்றன7. கட்டப்படாதபோதும் சில சிறு நூல்கள் அதிக பக்கங்களைக் கொண்டமைந்ததாகவும் நிரந்தரப் பெறுமதியுடையதாகவும் இருக்கக்கூடும். செய்முறைத் தொழினுட்பம், தொழிற்பயிற்சி, பிரயாணம், ஆராய்ச்சி முடிவுகள், புகழ்பெற்ற சொற்பொழிவுகள், செய்தியறிக்கைகள், கருத்து முரண்பாட்டைத் தோற்றுவிக்கும் கட்டுரைகள், நிகழ்கால விவகாரங்கள், அரசியல் விவகாரங்கள் போன்ற முக்கிய அம்சங்களைத் தாங்கிவரும் இவை ஆய்வாளர்களுக்கு மிகப் பெறுமதி வாய்ந்த தகவல் மூலங்களாக இருப்பதுடன், விசேட நூலகங்களில்; இவற்றிற்கே கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மிகக் குறைந்தளவு நூல்களே கிடைக்கக்கூடியதாக உள்ள பொருட்துறை சார்ந்த தகவல்களை வழங்குவதற்கு மிகப் பயனுள்ள தகவல் மூலமாக இவை உள்ளன.
பருவ இதழில் வெளி வருகின்ற முக்கிய கட்டுரைகளின் பிரதிகள், றோணியோவில் தட்டச்சு செய்யப்பட்ட பல்கலைக்கழக நினைவுப்பேருரைகள், செய்தித்தாள் துணுக்குகள், முக்கியமான கட்டுரைகளைக் கொண்ட பருவஇதழின் ஒற்றை இதழ்கள் போன்றவை இந் நூலகத்தில் கணிசமானளவுக்கு சேகரிக்கப்பட்டு நிலைக்குத்துக் கோப்புகளில் வகுப்பெண் ஒழுங்கில் பராமரிக்கப்படுகின்றன. இங்குள்ள சிறுநூல்களின் அண்ணளவான எண்ணிக்கையை அட்டவணை 1 தெளிவாகக் காட்டுகிறது. சமூக அறிவியல், இலக்கியம், சமயம் போன்ற துறைகளில் அதிகளவு சிறு நூல்கள் உள்ளன. அரசியல்(336), பொருளியல்(246), கல்வி(310) போன்ற துறைகளில் அதிகளவு சிறுநூல்கள் காணப்படுகின்றன.8
நூலகவியல் விதிமுறையின் படி சிறு நூல்களில் பெரும்பாலானவற்றை குறுங்கால எழுத்து மூலங்களாகக் கருதி காலத்துக்குக் காலம் அவற்றை நூல் இருப்பிலிருந்து நீக்கும் தன்மை பல நாடுகளில் வழக்கிலிருப்பினும் எமது சமூகத்தைப் பொறுத்தவரை இத்தகைய நடைமுறை பொருத்தமற்றதொன்றாகும். இங்கு அச்சிடுதற் தொழினுட்பமானது பொருளாதார ரீதியாக ஆக்ககர்த்தாக்களின் அறிவுருவாக்கத்திற்கு உதவும் நிலைக்கு இன்னும் வரவில்லை. இத்தகைய தன்மையானது பெறுமதி மிக்க ஆய்வு முயற்சிகளை சிறு நூல்களின் வடிவிலோ அல்லது கையெழுத்துப் பிரதிகளின் வடிவிலோ அதுவுமன்றி நிறுவன ரீதியாக இடையிடையே வெளியாகும் சிறப்பு மலர்களிலோ வெளியிடுவதற்கு நிர்ப்பந்திப்பதன் காரணமாக ஏனைய பிரதேசங்களைப் போன்று இங்கு இத்தகைய சிறுநூல்கள் குறுங்காலப் பெறுமதியுடையவையாகக் கருதப்படக்கூடிய வாய்ப்பு இல்லை என்பதுடன் இவை மிகக் கவனமாக பேணப்படவேண்டியதும் அவசியமாகும். வேறு எங்குமே கிடைத்தற்கரிய சிறுநூல்களின் மூலப் பிரதிகளும் இங்கு உண்டு. ஒளிப்படப்பிரதி எடுத்து வாசக பயன்பாட்டுக்கு விடப்பட முடியாதளவுக்கு மிகப் பாதிப்புற்று, நொருங்கும் நிலையிலுள்ள சில மூல நூல்களை அவற்றின் மூல வடிவத்தில் பேணக்கூடிய வகையில் வளர்ச்சியடைந்த தொழினுட்பமுறைகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு முறைகளை இங்கு கையாளவேண்டிய அவசியம் உண்டு.

1.3 சிறப்பு மலர்கள்
ஆராய்ச்சி நோக்கில் பார்க்கும்போது ஆய்வுக்கட்டுரைகளுக்கு அடுத்ததாக வாசகரின் பயன்பாட்டுக்கு உதவும் இன்னோர் முக்கிய வளமாக சிறப்பு மலர்கள் காணப்படுகின்றன.  தனிப்பட்ட மனிதர்கள் அல்லது நிறுவனங்கள் சார்ந்து கொண்டாடப்படும் ஆண்டு விழா, பொன் விழா, வெள்ளி விழா போன்ற சிறப்பு மலர்களாகவோ அல்லது நினைவு மலர்களாகவோ இவை இருக்கலாம். இவற்றிலிருந்து வேறுபட்டதாகக் குறிப்பிட்ட துறை சார்ந்த நிறுவனங்களால் வருடாவருடம் வெளியிடப்படும் ஆண்டு மலர்கள், பருவ இதழ்களாகக் கருதப்பட்டு பருவ இதழ்களுடன்  சேர்க்கப்பட்டிருக்கின்றன. அட்டவணை 1 இன்படி சமூக அறிவியல் சார்ந்த மலர்களே இங்கு அதிகம் காணப்படுகின்றன. சமூக அறிவியல் துறையில் உள்ள கிட்டத்தட்ட 431 மலர்களில் 390 மலர்கள்; கல்வி நிறுவனம் சார்ந்து வெளியிடப்பட்டவையாகும். சமயத்துறையில் காணப்படும் கிட்டத்தட்ட 222 மலர்களில் பெரும்பாலானவை இந்து சமய ஆலயங்கள் சார்ந்து வெளியிடப்படும் மலர்களாகும். பொது ஆண்டு மலர்களில் கணிசமானவை சனசமூக நிலையங்கள், இதழியல் துறை சார்ந்தவை. இலக்கிய ஆண்டு மலர்களும் கணிசமானளவுக்குக் காணப்படுகின்றன.

1.4 பருவ இதழ்கள் Periodicals
குறிப்பிட்ட தலைப்பினை உடையதாகவும் ஒழுங்கான கால இடைவெளியில் வெளியீடு செய்யப்படுவதாகவும் இறுதி இதழ் எப்போது வெளிவரும் என்பதை முன்கூட்டியே தீர்மானிக்க முடியாததுமான வெளியீடே பருவ இதழ் எனப்படுகிறது.9 செய்தியறிக்கைகள், சஞ்சிகைகள், செய்திக்கடிதங்கள், சங்க நடவடிக்கைக் குறிப்பேடுகள் போன்ற பெயர்களில் வெளியாகும் வெளியீடுகள் அனைத்தும் பருவ இதழ்கள் என்ற பொதுப் பெயருக்குள் அடங்குகின்றன. பெரும்பாலான ஆரம்ப இலக்கியங்கள் யாவும் பருவ இதழ் வடிவிலேயே வெளியாகின்றன. அறிவியல் ரீதியான தகவல்களைப் பரிமாற்றம் செய்வதற்கான பிரதான தொடர்பு சாதனமாக கருதப்படும் இவை உண்மையான ஆய்வுகளை உடனுக்குடன் அறிக்கைப்படுத்துகின்றன. பருவ இதழ்களை அவற்றின் கால அடிப்படையில் நாளிதழ்கள்;, வார இதழ்கள், இருவார இதழ்கள், மாத இதழ்கள், இரு மாத இதழ்கள், காலாண்டு இதழ்கள், அரையாண்டு இதழ்கள்;, ஆண்டு இதழ்கள் என வகைப்படுத்தலாம்.
பருவ இதழ்களை அவற்றின் உள்ளடக்கத்தைக் கொண்டு பொதுப்பருவ இதழ்கள், பொருட் பருவ இதழ்கள் என இருவகையாகப் பிரிக்கலாம். குறிப்பிட்ட ஒரு பொருட்துறை சார்ந்ததாக இல்லாமல் அரசியல், ஆக்க இலக்கியங்கள், விளையாட்டு, சினிமாச் செய்திகள், விளம்பரங்கள் போன்றவற்றை உள்ளடக்கி வெளிவருபவை பொதுப்பருவ இதழ்களாகும். எ-டு இந்தியா ருடே, தாயகம், மல்லிகை போன்றவை. காத்திரமான ஆக்கங்களைக் கொண்டிராது செய்தித் துணுக்குகள் பொழுதுபோக்கு அம்சங்கள் போன்றவற்றைத் தாங்கி வரும் பொதுப் பருவ இதழ்கள், சஞ்சிகைகள் என்ற பெயரால் அழைக்கப்படுகின்றன. பொருட்துறை சார்ந்து வெளியிடப்படும் பருவ இதழ்கள் பொருட் பருவ இதழ்கள் என அழைக்கப்படுகின்றன.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்தினால் தற்போது பெற்றுக் கொள்ளப்படும் பருவ இதழ்களின் மொத்த எண்ணிக்கையை அட்டவணை 2 தருகிறது.10

அட்டவணை 2
ஈட்டல் முறை                            வெளியூர்                                      உள்ளுர்                            மொத்தம்
                                                    தமிழ்    ஆங்கிலம்                     தமிழ்    ஆங்கிலம்   

கொள்வனவு                  22    18                               28    44                                   112
அன்பளிப்பு                      10    217                             23    48                                   298
பரிமாற்றம்                       -       05                              -       06                                  11
மொத்தம்                          32    240                             51    98                                   421
(மூலம்: புள்ளிவிபரப் பதிவேடு, பருவ இதழ்ப்பகுதி)

கொள்வனவு, அன்பளிப்பு, பரிமாற்றம் என்ற மூன்று வழிகளில் 421 பருவ இதழ்கள் பெற்றுக் கொள்ளப்படுகின்றன. இதில் 149 பருவ இதழ்கள் உள்ளுரிலிருந்தும் 272 பருவ இதழ்கள் வெளியூரிலிருந்தும் பெற்றுக்கொள்ளப்படுகின்றன. அன்பளிப்பு மூலமான பருவ இதழ்களே கூடுதலாக இருப்பதைப் புள்ளிவிபரம் எடுத்துக் காட்டுகிறது. சுவெற்ஸ் ஜளுறுநுவுளுஸ தகவல் நிறுவனமானது கடந்த ஆண்டுகளில் நிதிப் பற்றாக்குறை காரணமாக இடைநிறுத்தப்பட்ட பருவ இதழ்களில் கணிசமானளவு தொகையினை அன்பளிப்பாக வழங்க முன் வந்தமையே அன்பளிப்பில் ஏற்பட்ட அதிகரிப்புக்குக் காரணமாகும். பொதுவாகக் கடந்த காலங்களில் 200க்கும் மேற்பட்ட பருவ இதழ்கள் கொள்வனவு மூலமாக பெற்றுக் கொள்ளப்பட்டபோதும் 2001ம் ஆண்டிலிருந்து நிதி ஒதுக்கீட்டில் ஏற்பட்ட பற்றாக்குறை காரணமாக கொள்வனவு மூலமான பருவ இதழ்களின் எண்ணிக்கை சரிபாதியாகக் குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. பருவ இதழ்களின் பொருட்துறை சார்ந்த வகைப்பாட்டை அட்டவணை 3 எடுத்துக் காட்டுகிறது.

அட்டவணை 3

பொருட்துறை    எண்ணிக்கை
பொது    67
தத்துவம்    08
சமயம்    24
சமூக அறிவியல்    111
மொழி    22
அறிவியல்    60
தொழினுட்பம்    63
கலை    18
இலக்கியம்    06
புவியியலும் வரலாறும்    42


(புள்ளிவிபரப் பதிவேடு - 2004, பருவ இதழ்ப்பகுதி)

1.5 அறிக்கைகள் Reports
குறிப்பிட்ட செயற்திட்டம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் தொடர்பான தகவல்களை ஆய்வுப்பணியாளர்கள் தமது துறைசார்ந்த ஆர்வலர்களுக்குப் பயன்படத்தக்கவகையில் தொகுத்துத் தயாரிக்கப்படும் வெளியீடே அறிக்கைகள் எனப்படுகிறது11. நடைமுறையில் இருக்கும் ஆய்வு அபிவிருத்தித் திட்டங்களின் முடிவுகளை வெளியிடுவதே அறிக்கைகளாகும்.  ஒரு நாட்டில் அரசாங்கத்தின் அதிகாரத்துடன் வெளியிடப்படும் நம்பகரமான,  அதிகாரபூர்வ வெளியீடுகளாக இவை இருப்பதுடன் உள்ளுர், பிரதேச, தேசிய, சர்வதேசிய ரீதியாக குறைந்த விலையில் இவை வெளியீடு செய்யப்படுகின்றன. பெரும்பாலான அறிக்கைகள் வெளியீடு செய்யப்படுவதோ அல்லது பருவ இதழ்க் கட்டுரைகளின் தரத்திற்கு பதிப்பிக்கப்படுவதோ இல்லை. அறிக்கைகளில் தொகுக்கப்படும் பெறுமதி வாய்ந்த தகவல்கள் பின்னர் பருவ இதழ்க் கட்டுரைகளில் சேர்த்துக்கொள்ளப்படுவதன் காரணமாக அறிக்கைகளின் காலம் ஒருசில வருடங்களுக்கே மட்டுப்படுத்தப்பட்டிருப்பினும் அந்த ஒருசில வருடங்களுக்கும் மிகப் பெறுமதி மிக்க தகவல் வளமாக இவை கருதப்படுகின்றன. ஏனெனில் பருவ இதழ்க் கட்டுரைகள் பூரணப்படுத்தப்பட்ட பணிகளையும் வெற்றிகரமாக முடிக்கப்பட்ட பணிகளையும் மட்டுமே சேர்த்துக் கொள்ளும் அதேசமயம் அறிக்கைகளோ ஆய்வுகளின் ஒவ்வொரு வளர்ச்சிக் கட்டங்களையும் பிரதிபலிப்பதுடன் நின்றுவிடாது இடைநிறுத்தப்பட்ட ஆய்வுப்பணிகளையும் தோல்வியில் முடிவடைந்த ஆய்வுப்பணிகளையும் பற்றிய தகவல்களைப் பெறுவதற்கான முக்கிய தகவல் மூலமாகக் கருதப்படுகினறன.; இவற்றை பின்வரும் மூன்று பரந்த பிரிவுகளுக்குள் வகைப்படுத்த முடியும். 12
•    அரச உதவியுடன் மேற்கொள்ளப்படும் ஆய்வுகளுக்கான அறிக்கைகள் (இராணுவ விஞ்ஞானத்துறை சார்ந்த அறிக்கைகள்)
•    தொழிற்துறை உதவியுடன் மேற்கொள்ளப்படும் ஆய்வுகளுக்கான அறிக்கைகள். இவை வர்த்தக பாதுகாப்புக்கு உட்பட்டவையாகவும் நிறுவனத்துக்கு வெளியே கிடைக்க முடியாதவையாகவும் உள்ளன.
•    கல்விசார் ஆய்வுகளுக்கான அறிக்கைகள். இவை எந்தவொரு பாதுகாப்பு அம்சங்களுக்கும் உட்பட்டவையல்ல.

அரச ஆவணப்பகுதியின் கணிசமானளவு பகுதி அறிக்கைகளுக்கென்றே ஒதுக்கப்பட்டிருக்கிறது. தொகை மதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களத்தின் புள்ளி விபரப் பதிவேடுகள், மத்திய வங்கி போன்ற வங்கி சார்ந்த அறிக்கைகள், மற்றும் திணைக்கள அறிக்கைகளை இப்பகுதி கணிசமானளவு கொண்டிருக்கிறது.

1.6 வெளியிடப்படாத ஆவணங்கள் Unpublished resources
கையெழுத்துப் பிரதிகள், ஆய்வுகூடக் குறிப்பேடுகள், நாட்குறிப்பேடுகள், தனிப்பட்டவர்களுக்கு எழுதப்படும் முக்கிய கடிதங்கள், நிறுவனங்கள்pன் கோப்புகள், உள்ளக ஆய்வு அறிக்கைகள், உருவப்படங்கள், வாய்மொழி வரலாறுகள், நாணயங்கள் போன்ற வெளியிடப்படாத தகவல் வளங்களும் முதல்நிலைத் தகவல் வளங்களாகக் கருதப்படுகின்றன. குல சபா நாதன், க.சி.குலரட்ணம் போன்ற அறிஞர்களின் பெறுமதி மிக்க கையெழுத்துப்பிரதிகள் முதல் நிலைத் தகவல் வளங்களின் காத்திரத் தன்மைக்கு மேலும் மெருகூட்டுகின்றன.

1.7 அரசாங்க வெளியீடுகள்; Government documents
அரசாங்கத்தினால் வெளியிடப்படுகின்ற உத்தியோக பூர்வமான வெளியீடுகள் அரசாங்க வெளியீடுகள் எனப்படும்.  சட்டங்கள் விசேட ஆணைக்குழு அறிக்கைகள் போன்றவற்றை வெளியிடுகின்றன. மசோதாக்கள், சட்டங்கள், பாராளுமன்ற விவாதங்கள், பருவகால ஆணைப்பத்திரங்கள்,நீலப்புத்தகம் போன்ற ஆவணங்கள் அரச ஆவணப்பகுதியில் ஒழுங்குபடுத்தப்பட்டுன.

1.8நூலுருவற்ற சாதனங்கள்
சுவடிகள், ஓவியங்கள்,படங்கள், வரைபுகள், நுண்படங்கள், கணினி சாதனங்கள், பத்திரிகைத் துணுக்குகள் கையெழுத்துப் பிரதிகள் போன்றவையும் முதல்நிலைத் தகவல்களைத் தருபவை. யாழ்.பல்கலைக்கழக நூலகத்தில் இவற்றின் சேகரிப்பு மிகவும் குறைவு என்றே சொல்ல முடியும்.

2.ஒழுங்கமைப்பு
2.1 ஆவணக் காப்பகப்பகுதி

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்தின் வாசகரது ஆய்வுத் தேவையைப் பூர்த்தி செய்கின்ற பிரதான பிரிவாகக் கருதப்படுவது அதன் ஆவணக்காப்பகப்பிரிவும் அரச வெளியீடுகளுக்கான பிரிவும் ஆகும். ஷஉள்ளடக்கத்தின் பெறுமதியைக் கருத்தில் கொண்டும், சான்றாக காட்டும் பொருட்டு உருவமைப்பில் பாதிப்பு ஏற்படுவதை கூடுதலான வரை தவிர்ப்பதை கருத்தில் கொண்டும்; ஒரு ஆவணத்தை அதன் மூல வடிவில் நிரந்தரமாகப் பேணுவதற்கென விசேடமாக வடிவமைக்கப்படும் அமைப்பு அல்லது  அமைப்பின் ஒரு பகுதியே ஆவணக்காப்பகமாகும்ஷ என்ற வரைவிலக்கணத்திலிருந்து அப்பாற்பட்டதாக, கிடைத்தற்கரிய நூல்களின் இருப்பிடமாக, இலங்கை சார்ந்து வெளியிடப்படும் ஆக்கங்களின் சேமிப்பிடமாக, இப்பிரிவு தொழிற்படுகிறது. முதல்நிலைத் தகவல் வளங்களின் கணிசமான பகுதியை உள்ளடக்கியிருக்கும் இப்பகுதியை ஆவணக்காப்பகம் என அழைப்பதைவிட ஆராய்ச்சிப்பகுதி என அழைப்பது கூடுதல் பொருத்தமானது. நூல்கள், ஆய்வுக்கட்டுரைகள், சிறப்பு மலர்கள், சிறு நூல்கள், பருவ இதழ்கள், வரலாற்று முக்கியத்துவம் மிக்க நூல்கள், கையெழுத்துப் பிரதிகள் போன்ற பெறுமதிமிக்க வளங்களை இப்பகுதி  தன்னகத்தே கொண்டிருக்கிறது. பொதுவாக இலங்கை தொடர்பாக இலங்கையர்களாலும் வெளிநாட்டு அறிஞர்களாலும் எழுதப்பட்ட நூல்களே இப்பகுதியில் பராமரிக்கப்படுகின்றது..
ஆய்வுக்கட்டுரைகள் அனைத்தும் ஆவணக்காப்பகப் பிரிவில் மரத்தாலான கண்ணாடி அலுமாரிகளில் பொருட்துறை சார்ந்து ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. சிறு நூல்களில் ஓரளவு பகுப்பாக்கம்இ பட்டியலாக்கம் செய்யப்பட்டு பரந்த பொருட் தலைப்புகளி;ன் கீழ் சிறுபிரசுரப் பேழைகளில் ஒழுங்குபடுத்தப்பட்டு மரத்தாலான கண்ணாடி அலுமாரிகளில் வைக்கப்பட்டிருக்கின்றன. கணிசமானளவு சிறுநூல்களுக்கு பட்டியல் பதிவுகள் மேற்கொள்ளப்படவேண்டியுள்ளது. பொருட்துறைகளுக்கிடையிலான தொடர்புத் தன்மையை அடிப்படையாகக் கொண்டு அத்தகைய  ஆக்கங்களை ஒன்றாகச் சேர்த்துக் கட்டி அதற்கு நூல் வரவுப்பதிவெண் கொடுத்து நூல் இருப்புப் பகுதியில் சேர்க்கும் முயற்சி கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்டதெனினும் வாசகரின் பயன்பாட்டை அடிப்படையாகக் கொண்டு நோக்கின் இவை சிரமம் தரும் ஒன்றாகவே இனங்காணப்பட்டிருக்கிறது. சிலசமயங்களில் பொருட்துறைகளுக்கிடையிலான தொடர்புத் தன்மை, நூலின் அளவு போன்றவற்றைக்  கருத்தில் கொள்ளாமலும்; பல சிறு நூல்கள் ஒன்றாகச் சேர்த்து கட்டப்பட்டிருக்கும் தன்மையும் இனங்காணப்பட்டிருக்கிறது. ஒரு தாளில் இருக்கும் தகவல் கூட ஆராய்ச்சி நோக்கில் மிகப் பெறுமதி வாய்ந்ததாக இருப்பதனால் இவை தனித்தனியாக அதற்குரிய பொருட்துறை சார்ந்த நிலைக்குத்துக் கோப்புகளில் பேணப்படவேண்டியது அவசியமாகும். இடப் பெயர்வுக்கு முன்னர் ஒழுங்காக கோவைப்படுத்தப்பட்டு பட்டியலிடப்பட்டு பருவ இதழ்ப்பகுதியின் பராமரிப்பில் இருந்த பெறுமதி மிக்க கையெழுத்துப் பிரதிகளின் ஒரு தொகுதியை  ஆவணக் காப்பகப் பகுதியில் ஒழுங்கமைக்கும் முயற்சி அண்மையில் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

2.2 அரச ஆவணப் பகுதி
பாராளுமன்ற விவாதங்கள், மசோதாக்கள், சட்டங்கள்,  பருவகால ஆணைப்பத்திரங்கள், பாராளுமன்றத் தொடர்கள், நீலப்புத்தகம் போன்றவை அரச ஆவணப் பகுதியில் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கின்றன. ஆவணக்காப்பகப்பகுதியுடன் இணைந்ததாக இயங்கும் அரச ஆவணப்பகுதியின் 50 வீதத்துக்கும் மேற்பட்ட இடத்தை நிரப்பும் அறிக்கைகள் வாசகரின் பயன்பாடு கூடிய வளமாகவும்  கருதப்படுகின்றன. பொதுவாக இலங்கை சார்ந்து வெளியிடப்படும் அறிக்கைகளே இங்கு வைக்கப்பட்டுள்ளது. றழசடன னநஎநடழிஅநவெ சநிழசவஇ hரஅயn னநஎநடழிஅநவெ சநிழசவ போன்ற வெளிநாட்டு அறிக்கைகள் இருப்புப் பகுதி, உசாத்துணைப் பகுதி போன்றவற்றில் பராமரிக்கப்படுகின்றன.

2.3 பருவ இதழ்ப்பகுதி
பருவ இதழ்கள் அனைத்தும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்தின் தளப்பகுதில் அமைந்திருக்கும்; பருவ இதழ்ப் பகுதியில் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கின்றன. நடப்புப் பருவ இதழ்கள் வாசகர் சேவைப் பகுதியுடன் இணைந்ததாகவும், பழைய இதழ்கள் அதற்கென தனியாக இயங்கும் பருவ இதழ் இருப்புப் பகுதியிலும் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. கட்டப்பட்ட பருவ இதழ்கள் அனைத்தும் நூலாக கருதப்பட்டு வரவுப் பதிவெண் கொடுக்கப்பட்டு நூல் இருப்புப் பகுதியில் தனியாக ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. செய்திக் கடிதங்கள் அதற்கென சிறப்பாக வடிவமைக்கப்பட்ட சிறுபிரசுரப்பேழைகளில் வைக்கப்பட்டு பருவஇதழ்ப்பகுதியில் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கின்றன.
செய்தித் தாள்களும் பருவ இதழ்ப்பகுதியின் பராமரிப்பிலேயே இருக்கின்றன. இவற்றில் இலங்கை சார்ந்து வெளியிடப்பட்ட பருவ இதழ்கள், ஷகசடதபறஷ போன்ற மிகப் பழமை வாய்ந்த தமிழ்ப்பருவ இதழ்கள் பாதுகாக்கப்படவேண்டிய அரிய வளங்களாகக் கருதப்பட்டு ஆவணக்காப்பகப்பகுதியில் வைக்;கப்பட்டிருக்கின்றன. ஆவணக்காப்பகப் பகுதியில் பேணப்படும் முக்கிய பருவ இதழ் தலைப்புகளின் எண்ணிக்கையையும் அவற்றின் மொத்தத் தொகுதிகளின் எண்ணிக்கையையும் அட்டவணை 1 தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. இது தவிர பருவ இதழின் முதலாவது பிரதி கிடைக்கும் சமயங்களில் இவை அரிய நூலுக்கான பெறுமதி கொடுக்கப்பட்டு ஆவணக்காப்பகப் பிரிவில் பாதுகாக்கப்படுகின்றன.

2.4 நூலுருவற்ற சாதனங்களுக்கான பகுதி

நூலுருவற்ற சாதனங்கள் தனிப்பிரிவில் வைத்துப் பாதுகாக்கப்படவேண்டும் என்ற தீர்மானம் அண்மையில்  மேற்கொள்ளப்பட்டு தனி அறையொன்றில் இதற்கான ஆரம்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. ஆவணக்காப்பகப்பிரிவில் வைக்கப்பட்டிருந்த இரண்டு சுவடிப்பேழைகள், திரு. கனகசபை அவர்களினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட இருபதுக்கும் மேற்பட்ட ஓவியங்கள், பருவ இதழ்ப்பகுதியினால் வெளிநாடுகளிலிருந்து பெறப்படும் பருவ இதழ்களுடன் இணைத்து அனுப்பப்படும் நுண் தாள்கள், இந்து சாதனம் போன்ற செய்தித்தாள்களைப் பேணும்பொருட்டு 1980களின் பிற்பகுதியில் நூலக நிர்வாகத்தின் கீழ் உருவாக்கப்பட்ட நுண்படங்கள் போன்றவற்றை அடித்தளமாகக் கொண்டு நூலுருவற்ற சாதனங்களுக்கான தனிப்பிரிவு ஒன்று உருவாக்கம் பெற்றுள்ளது. தற்போது பட்டியலாக்கப்பகுதியில் வைத்துப் பராமரிக்கப்படும் நவீன இலத்திரனியல் சாதனங்களான சீடிரோம், நெகிழ் வட்டுகள், வீடியோப் படப்பிரதிகள் போன்றவையும் காலப்போக்கில் இதனுடன் இணைக்கப்படக்கூடிய வாய்ப்புண்டு;.

3.பயன்பாடு
முதல் நிலைத் தகவல் வளங்கள் எனப்படுபவை பெரும்பாலும் ஆராய்ச்சிக்கு உதவுபவை. எனவே ஆராய்ச்சியாளர்களே இவற்றின் வாசகர்களாவர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பட்டப்படிப்பு இறுதி வருட மாணவர்களதும் பட்டப்பின்படிப்பு மாணவர்களதும் தேவைகளை கணிசமானளவுக்கு பூர்த்தி செய்பவையாக இந்த முதல் நிலைத் தகவல் வளங்கள் காணப்படுகின்றன. 2003 ஆகஸ்ட் தொடக்கம் 2004 யூலை வரையான காலப்பகுதியில்  அரச ஆவணங்கள் தவிர்ந்த ஆவணக்காப்பகப்பகுதியின் முதல்நிலைத் தகவல் வளங்களைப் பயன்;படுத்திய வாசகர்களது எண்ணிக்கை 2311 ஆகும். 13 நூல்களும்(1158) ஆய்வுக் கட்டுரைகளுமே (1092) இங்கு அதிகளவு பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. சிறப்பு மலர்களுக்குரிய வாசகர்களாக 36 பேர் இனங்காணப்பட்டிருக்கின்றனர்.
சமயம், சமூக அறிவியல் ஆகிய பொருட் துறைகளைச் சார்ந்த மாணவர்கள் இவற்றை அதிகமாகப் பயன்படுத்தும் தன்மை இனங்காணப்பட்டுள்ளது. கடந்த யூலை மாதத்தில் பொருட்துறை சார்ந்த மாணவர்களின் பயன்பாட்டை  அட்டவணை 4 எடுத்துக் காட்டுகிறது. 14

அட்டவணை 4
வாசகர் பயன்பாடு                                        பொருட்துறை    வாசகர் எண்ணிக்கை
பொது    12
தத்துவம்    59
சமயம்    61
சமூக அறிவியல்    137
மொழி    10
அறிவியல்    --
தொழினுட்பம்    13
கலை    41
இலக்கியம்    35
வரலாறு    75
(வாசகர் பதிவேடு-2004 ஆவணக் காப்பகப் பகுதி)

3.1 ஆய்வுக் கட்டுரைகள்
ஆய்வுக் கட்டுரைகளின் பிரதான வாசகர்களாகக் கருதப்படுபவர்கள் பட்டப்பின்படிப்பை மேற்கொள்ளும் ஆராய்ச்சியாளர்களே. கல்வியியல் துறையில் முதுமாணிப்படிப்பை மேற்கொள்பவர்களும், டிப்ளோமா பயிற்சி நெறியை தொடர்பவர்களும் ஆய்வுக்கட்டுரை எழுதுவதற்கான ஆய்வு முறையியல் அறிவைப் பெறும் பொருட்டு ஆய்வுக்கட்டுரைகளைப் பயன்படுத்துகின்றனர். மொழி, தமிழ் இலக்கியம் சார்ந்த ஆய்வுக்கட்டுரைகள் பெரும்பாலும் ஆராய்ச்சியாளர்களினால் தகவல் பெறும் நோக்கத்துக்காக பயன்படுத்தப்படுகின்றது. கடந்த யூலை மாதத்தில் மட்டும் வாசகரால் 271 ஆய்வுக்கட்டுரைகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்து சமயம்(75), புவியியல்(58), பொருளியல்(33), கல்வி(28), சமூகவியல்(26), இலக்கியம்(18), ஏனையவை(33) என்ற அடிப்படையில் ஆய்வுக் கட்டுரைகளின் பயன்பாடு இனங்காணப்பட்டிருக்கிறது. இந்து தத்துவம், அபவிருத்திப் பொருளியில் போன்ற துறைகள் அதிகமாக பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆய்வுக் கட்டுரைகளை முதலாம், இரண்டாம், மூன்றாம் வருட பட்டப்படிப்பு மாணவர்கள் பாடப்புத்தகமாக பயன்படுத்தும் தன்மை அதிகரித்துக் கொண்டு செல்லும் போக்கு அண்மைக்காலங்களில் இனங்காணப்பட்டிருக்கிறமை பயன்பாடு சார்ந்து இனங் காணப்படும் இன்னோர் முக்கிய அம்சமாகும். ஆரம்பத்தில் ஆய்வுத் தேவைக்கு உதவும் வகையில் பட்டப்படிப்பு இறுதி வருட மாணவர்களுக்கும் பட்டப்பின்படிப்பு மாணவர்களுக்குமே ஆய்வுக்கட்டுரைகளை பயன்படுத்துவதற்கான அனுமதி கொடுக்கப்பட்டிருந்தது. குறிப்பாகத் தத்துவம், சமயம்,  புவியியல் சார்ந்து இப்போக்கு இனங்காணப்பட்டிருக்கிறது. இத்தகைய தன்மையானது  எதிர்க்கணிய விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது. ஆய்வுக் கட்டுரைகளுக்கான மேலதிக பிரதிகளைப் பெற்றுக் கொள்வது சாத்தியமற்றதாகையால் அரிய நூலாகக் கருதப்பட்டுப் பாதுகாக்கப்படும் ஒரேயொரு பிரதியும் அதிக பாவனை காரணமாக விரைவிலேயே பழுதடைந்து அடுத்த சந்ததிக்குப் பயன்படாமல் போகும் ஆபத்துண்டு. ஷநூல்கள் பாவனைக்கேஷ என்ற நூலகவியல் விதியானது பிரதிகள் பெறப்படமுடியாத சாதனங்களுக்கும், மிகப் பழமை வாய்ந்த அரிய நூல்களுக்கும், உள்ளடக்கத்தில் பெறுமதி இழக்காமல் அதேசமயம் கால மாற்றத்தால்  உருவமைப்பில் உடைந்து போயிருக்கும் பெறுமதி மிக்க நூல்களுக்கும் எவ்வளவு தூரம் பொருத்தமானது என்பது மதிப்பீடு செய்யப்படவேண்டியதொன்றாகும்.

3.2 சிறு நூல்கள்
யாழ் பல்கலைக்கழக நூலகத்தில் சிறு நூல்களைப் பொறுத்து மிகப் பெறுமதி வாய்ந்த வளமாக கருதப்படும்; அதேசமயம் இவற்றுக்கான வாசகர்; பயன்பாட்டை விரல் விட்டு எண்ணக்கூடியளவிற்கு ஓரளவேனும்  அறியப்படாத வளமாகவே இவை இருக்கின்றன. வாசகரினால் ஒரு தடவை அறியப்பட்டுவிடின் பின்னர் தொடர்ந்து அவரால் பயன்படுத்தப்படும் அளவுக்கு இதன் ஆய்வுப் பெறுமதி அதிகமாகும்.   அரசியல் கட்சிகளின் சுவரொட்டிகள் முதற்கொண்டு முக்கியமான நூல்கள் வரை இவை பலதரப்பட்டதாக அமைகின்றன.

3.3 பருவ இதழ்கள்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்தின் மொத்த நிதி ஒதுக்கீட்டில் கிட்டத்தட்ட 90 வீதமானது பருவ இதழ் கொள்வனவுக்கே ஒதுக்கப்படுவதிலிருந்து இதன் முக்கியத்துவத்தை கண்டுகொள்ள முடியும். இவற்றில் வெளிவரும் தகவல்கள் நூல்களில் உள்ளவற்றிலும் பார்க்கப் புதியவையாகும். பல்கலைக்கழகத்தின் அனைத்து மட்ட வாசகரதும் பாடவிதானம், ஆராய்ச்சி, பொழுதுபோக்கு,  போன்றவை தொடர்பாக உடனடித் தகவலை வழங்கும் வளங்களாக இவை இருக்கின்றன. ஆய்வுத் தகவல்களை வழங்கும் முதல்நிலைப் பருவ இதழ்கள் என்ற வகையில் இங்கு வெளிநாட்டு ஆய்வு முயற்சிகளை வெளிக் கொணருகின்ற வெளியூர்ப் பருவ இதழ்களின் ஈட்டலே அதிகமாக உள்ளது. உள்ளுர் ஆய்வு முயற்சிகளுக்கு அடிப்படையை வழங்குதல், வழிகாட்டுதல் என்பவற்றுடன் இவற்றின் பயன்பாடு மட்டுப்படுத்தப்பட்டுவிடுகிறது. உள்ளுர் பருவ இதழ்களைப் பொறுத்து பெரும்பாலானவை ஆய்வு முயற்சிகளைப் பெரிதும் உள்ளடக்காத, தகவல்களைத் தொகுத்து வழங்குகின்ற இரண்டாம் நிலைப் பருவ இதழ்களாகவோ அல்லது இலக்கிய வெளியீடுகளாகவோ இருப்பதனால் ஆய்வு முயற்சிக்கு இவை வழங்கும் பங்களிப்பு என்பது மட்டுப்படுத்தப்பட்டதாகவே இனங்காணப்பட்டிருக்கிறது. செய்தித் தாள்கள் ஆய்வு முயற்சிகளுக்குப் பெரும் உறுதுணையாக இனங்காணப்பட்டிருக்கின்றன. ஆண்டு மலர்கள் பலதரப்பட்ட அறிஞர்களதும் கட்டுரைகளை உள்ளடக்கியிருப்பதனால் ஆராய்ச்சியாளருக்குப் பெரிதும் பயன்படுவதாய் உள்ளன. பெருந்தொகை செலவழித்து அச்சுவடிவில் கொண்டு வருவதற்கான பொருளாதார மார்க்கமோ அதைச் சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்போ குறைவாக இருக்கின்ற சமூகம் ஒன்றின் ஆய்வு முயற்சிகளில் கணிசமானளவைப் பதிவாக்கும் வாய்ப்பை இத்தகைய மலர் வெளியீடுகளே வழங்குகின்றமையால் இவை அதிக பயன்பாட்டுக்குரிய வளமாகவும் பேணிப் பாதுகாக்கவேண்டிய வளமாகவும் இனங்காணப்பட்டிருக்கின்றன.

3.4 அறிக்கைகள்
அறிக்கைகள் மிக முக்கியமான முதல் நிலைத் தகவல் வளமாகும். குறிப்பிட்ட நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படும் ஆய்வு நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களைப் பெற உதவுதல், குறிப்பிட்ட செயற்திட்டத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் மேற்கொள்ளப்பட்ட பணிகள் தொடர்பான விபரங்களை பெற உதவுதல், குறித்த துறையில் தோல்வியில் முடிவடைந்த செயற்திட்டங்களின் விபரங்களை வழங்குதல், குறித்த துறையில் அண்மைக்கால முன்னேற்றங்களை அறிய உதவுதல் போன்ற நன்மைகளை இவை வழங்குகின்றன. பொதுவாக அறிக்கைகள் புள்ளி விபரத் தகவலைப் பெற்றுக்கொள்ளுமுகமாகப் பயன்படுத்தப்படுவதனால் பெரும்பாலும் பொருளியல், புவியியல் ஆகிய துறைகளைச் சார்ந்த மாணவர்களே இதனை அதிகம் பயன்படுத்துகின்றனர்.

4. பராமரிப்பு
யாழ் பல்கலைக்கழக நூலகத்தின்; முதல்நிலைத் தகவல் வளங்களில் கிட்டத்தட்ட அனைத்துமே தாளை அடிப்படையாகக் கொண்டவையாகும். தகவல் வளங்களில், குறிப்பாக தாளை அடிப்படையாகக் கொண்ட நூலுருச்சாதனங்களில் ஏற்படும் பௌதிக ரீதியிலான பாதிப்பு அண்மைக்காலங்களில் நூலக தகவல் விஞ்ஞான துறையின் பிரதான தொழிற்றிறன்சார் விவகாரங்களில் ஒன்றாக மாறியிருக்கிறது. 20ம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியிலேயே தகவல் தொழினுட்ப உலகுக்குள் மனித சமூகம் நுழைந்துவிட்டபோதும் வடிவம், எழுத்து இரண்டிலும் நெகிழ்வுத் தன்மை கொண்டதாக, சிறியதாக, பாரமற்றதாக, விரும்பிய இடத்துக்கு எடுத்துச் செல்லக் கூடியதாக, முக்கிய அம்சங்களை வெட்டிச் சேகரிக்கக்கூடியதாக, பல பிரதிகள் எடுக்கக்கூடியதாக, தேவை முடிந்ததும் தூக்கி வீசக் கூடியதாக இருக்கக் கூடிய ஒரேயொரு சாதனம் நூலாகத் தான் இருக்க முடியும்15 என குறிப்பிடப்படும் அளவுக்குத் தாளை அடிப்படையாகக் கொண்ட சாதனங்களின் பயன்பாடு தகவல் யுகம் ஒன்றில் சுலபமாக மறைந்துவிடக் கூடிய அல்லது மறக்கப்பட்டு விடக்கூடிய வாய்ப்பு இல்லை என்றே சொல்ல முடியும்.  பொதுவாக தகவல் வளங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை உள்ளக காரணிகள், வெளியகக் காரணிகள் என இரு பெரும் பிரிவாக பிரிக்கலாம். உள்ளகக் காரணிகள் என்பவை தகவல் வளங்களின் பௌதிக வடிவமைப்புடன் தொடர்புடையது. வெளியகக் காரணிகளி;ல் உயிரியல் காரணிகள் பௌதிக இரசாயனக் காரணிகள், சூழல் காரணிகள், பேரழிவுகள் என்பவை முக்கியமானவை. 16

4.1 பௌதிக வடிவமைப்பு
.தாள்களுக்கு அழிவை ஏற்படுத்தும் பிரதான காரணி தாளில் செறிந்திருக்கும் அமிலத்தன்மையாகும். தாள்களின் நிரந்தரத்தன்மை தாளில் காணப்படும் அமிலத்தின் அளவில்ஜிர்ஸ தங்கியிருக்கிறது. வெளிறச் செய்தலுக்குப் பயன்படுத்தப்படும் இரசாயனங்கள், மை வகைகள், காற்று அசுத்தமாக்கிகள், அமிலப்பரவல் போன்றவற்றால் தாளில் அமிலத்தன்மை உருவாகிறது. இந்த அமிலம் இறுக்கமான செலுலோசை சாதாரண அணுத்திண்மங்களாக உடைத்துத் தாளைப் பலவீனப்படுத்துகிறது. இது தவிர உயர் அமிலத்தன்மை உள்ள பொருள்களிலிருந்து அமிலத்தன்மை குறைந்த அல்லது இல்லாத பொருட்களை நோக்கி அமிலம் நகரமுடியும் என்பதால் அமிலத்தன்மையற்ற தாள்கள் கூட காலநிலை மாறுபாடுகளாலும் அமிலப்பொருட்கள் அருகில் இருப்பதன் மூலமும் அமிலத்தன்மையுள்ளதாக மாறலாம். ஓரு நூலில் இணைக்கப்படுகின்ற செய்தித்தாள் துணுக்கு விரைவிலேயே தானும் நிறம் மாறி நூலையும் மண்ணிறமாக மாற்றிவிடுவது இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். இதுமட்டுமன்றி ஈரப்பத விகிதத்தின் ஏற்ற இறக்கத்தினால் தாள்கள் பலதரப்பட்ட வீதத்தில் நீரை உறுஞ்சும் போதும், வெளிவிடும் போதும், தாள்களில் உள்ள நார்ப்பொருட்கள் விரிந்து சுருங்கும் போதும் ஏற்படும் உள்ளக அழுத்தங்கள் சாதனங்களில் நீண்டகால விளைவை ஏற்படுத்துகின்றன. நன்கு கட்டப்பட்ட நூலொன்றின் கோணலடைந்த நூல் மட்டை இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
இங்கு காணப்படும் தாளை அடிப்படையாகக் கொண்ட சாதனங்களில் கணிசமானவை அமிலத் தன்மை கூடிய தரங்குறைந்த தாள்களாகவே உள்ளன. ஆவணக்காப்பகப்பகுதியில் பாதுகாக்கப்படும் சாதனங்களில் கணிசமானவை மஞ்சள் நிறமுள்ள, நொருங்கும் தன்மை வாய்ந்த நூல்களாகவே இனங்காணப்பட்டுள்ளன. சூரிய ஒளி, அதிக வெப்பம் போன்றவற்றிலிருந்து மர அலுமாரிகள் ஓரளவுக்குக் காப்பு வழங்குகின்ற போதும், சீற் கூரையிலிருந்து நேரடியாகத் தாக்கும் வெப்பமும் மழை ஒழுக்குகளும் ஈரப்பத விகிதத்தில் சடுதியான ஏற்ற இறக்கங்களை கொண்டு வந்து நூலின் அழிவை வேகப்படுத்துவது தவிர்க்க முடியாதாக மாறியிருக்கிறது. ஆவணக்காப்பகப்பகுதியின் சமநிலையற்ற ஈரப்பத விகிதத்தைக் கட்டுப்படுத்துவதற்கேற்ற வகையில் குளிரூட்டல் வசதி மிக அவசியமாகும். செய்தித்தாள் பகுதியிலுள்ள அனைத்து வளங்களும் அதிக வெப்பம் காரணமாகவும் தரங்குறைந்த தாளில் உருவாக்கப்பட்டமையாலும் மஞ்சள் நிறமடைந்து மிகப் பாதிப்புற்ற நிலையில் காணப்படுகின்றன.

4.2 உயிரியல் காரணிகள்:-
•    மனிதர்கள்:-ஆவண விரோதிகளில் மிகவும் ஆபத்தானதும், அறிவுசார் ரீதியில் அழிவை ஏற்படுத்தவல்லதுமான உயிரியாகக் காணப்படுவது ஆறறிவு படைத்த மனித உயிரி என்பதையே தகவல் விஞ்ஞானத் துறையின் அனுபவ அறிவு இனங்கண்டிருக்கிறது. மனித உயிரியால் ஏற்படுத்தப்படும் பாதிப்பு உற்பத்தியாளன், பாவனையாளன், பாதுகாவலன் என்ற மூன்று தன்மைகளின் அடிப்படையில் ஏற்படுகிறது. 17 இலாப நோக்கம் கருதிய மனிதனது உழைப்பும் முயற்சியும் இணைந்து நீண்ட நார்ப் பொருளைக் கொண்ட கனதியான நீடித்து உழைக்கக்கூடிய தாள்களின் உற்பத்தியிலிருந்து தரங்குறைந்த குறுங்கால வாழ்வுடைய தாள்களின் உற்பத்திக்கு வித்திட்டமை, தகவல் சாதனங்களுக்கு பொறிமுறை ரீதியிலும் இரசாயன ரீதியிலும் அழிவை ஏற்படுத்தும் ஒளிப்படப் பிரதியாக்கமுறை, நூலகங்களுக்குள்ளே வடிவமைக்கப்படும்; குடிநீர், வசதிகள் போன்றவை உற்பத்தி சார்ந்து ஏற்படும் மனிதப் பாதிப்பாக உள்ளது. இங்கும் கூட அமிலத் தன்மையைப் பரிசோதிப்பதற்கான தொழினுட்ப வசதியோ, அல்லது அவற்றை கூடிய விலை கொடுத்து வாங்கக்கூடிய நிதி வசதியோ இல்லாத காரணத்தால் தரங்குறைந்த தாள்களில் வெளியான நூல்களே அதிக இடத்தை நிரப்புகிறது. ஆவணக்காப்பகப்பகுதியிலுள்ள சாதனங்களும், பருவ இதழ்ப்பகுதியிலுள்ள சாதனங்களும் இரவல் எடுத்துச் செல்ல முடியாததாகையால் இவற்றுக்கான ஒளிப்படப் பிரதியாக்கப் பாவனை மிக அதிகமாகும்.
பாவனையாளர்கல்வி தொடர்பான போதிய அறிவின்மையால் நூலக இறாக்கைகளிலிருந்து நூலின் முதுகுப்புறத்தைப் பலவந்தமாக இழுத்து எடுத்தல், நூலை விரித்து வைத்து அதன் மேல் முழங்கைகளால் அழுத்தியபடி வாசித்தல், பக்க ஓரங்களை இறுதியாகப் படித்;த அடையாளத்துக்காக மடித்துவிடுதல், நூலின் பக்கங்களை கீழிருந்து மேலாக தட்டுவதன் மூலம் பக்கங்களைப் புரட்டுதல், படுத்திருந்து ஒரு கையால் பிடித்தபடி மறுகையால் பக்கங்களைப் புரட்டுதல் போன்ற கவனமற்ற கையாள்கையும் நூல் இரவல் பெறும் போது பிழையான பெயர்களைக் கொடுத்தல், அடையாள அட்டைகளைத் தவறான முறையில் பயன்படுத்தல், ஆவணங்களிலுள்ள பக்கங்கள், படங்கள், வரைபடங்கள் என்பவற்றை வெட்டியெடுத்தல், ஆவணங்களில் எழுத்துக்களின் கீழ்க் கோடிடுதல், பக்க ஓரங்களில் எழுதுதல், கொழுப்பு எண்ணெய்க்கறைகளை ஏற்படுத்துதல் போன்ற திட்டமிட்ட வகையில் ஏற்படுத்தும் பாதிப்புகளும் இங்கு அதிகமாகும்.
நூலின் பாதுகாவலர் என்ற வகையில் பணிநிலை அலுவலர்கள் நூல் தாங்கிகளுக்குள் நூல்களைப் பலவந்தமாகச் செலுத்த முனைதல், நூல் தாங்கிகள் இன்றி நூல்களைச் சாய்ந்த நிலையில் இறாக்கைப்படுத்தல்;, நூல்களை மிக நெருக்கமாக இறாக்கைப்படுத்துதல் போன்றன தாள்கள் கிழிவதற்கும், நூல் மட்டைகளின் கட்டுத் தளர்வதற்கும் ஏதுவாகிறது. நூல் வண்டிகள் இன்றி அல்லது மேல் மாடிகளுக்கு எடுத்துச் செல்வதற்கான வசதிகள் இன்றி நூல்களைக் கைகளில் காவிச் செல்லுதல் காரணமாக நூல்கள் கீழே விழுந்து கிழிபடுதல் தவிர்க்க முடியாததாக உள்ளது. நூல்களை இரவல் வழங்கும் செய்முறையில் நூல்களின் பின்புற அட்டைகளின் உட்பகுதியில் பின்புறப் பலம் கொடுக்காது திகதி முத்திரை இடும் போது ஆவணங்களின் கட்டு விட்டுப்போக வாய்ப்பு ஏற்படுகிறது.
தகவல் அமைப்பின் தலைமை அலுவலரினால் ஆவணங்களைப் பேணுதல் தொடர்பாக சரியான கொள்கை வகுப்போ, திட்டமிடலோ மேற்கொள்ளப்படாதுவிடின் அதுவும் திட்;டமிட்ட ஆவண விரோதச் செயலாகவே கருதப்படுகிறது. மிகக்குறைந்த கட்டுப்பாடுகளுடன் தகவல் வளங்கள்; வாசகரின் பாவனைக்கு விடப்படுமாயின் ஆவண மோசடியோ,  களவோ, தவறான பாவனையோ தவிர்க்கப்படமுடியாததாகவே இருக்கும்.
•    பேருயிரிகள்:-இலங்கை போன்ற வெப்பவலய நாடுகளில் ஆவணங்களுக்கு நேரடிப்பாதிப்பை உண்டு பண்ணும் காரணிகளாக இவை காணப்படுகின்றன. அடிக்கடி பாவனையில் இல்லாத நூல்களும், இருட்டறையில் வைக்கப்படும் நூல்களும் பேருயிரிகளின் தாக்கத்திற்கு அதிகம் உட்படுகின்றன. இந் நூலகத்தில் பேருயிரிகள் என்ற வகையில் இராமபாணம்;(ளுடைஎநசகiளா), அந்துப்பூச்சி(ஆழவாள), கறையான்(வுநசஅவைந)இ கரப்பான் (ஊழஉமசழயஉhநள) புத்தகப்புழு (டீழழமறழசஅ), புத்தகப்பேன்(டீழழம டiஉந) போன்றவற்றால் ஏற்படும் பாதிப்பு கூடுதல் இனங்காணப்படுகிறது. புகையூட்டல் போன்ற பாதுகாப்பு வசதிகளை மேற்கொள்ளாமை காரணமாக இராமபாணம், அந்துப்பூச்சி போன்றவற்றின் தாக்கத்தால் ஆரம்பகாலங்களில் சாதனங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டு போகின்றது. மர அலுமாரிகளும், தற்போது பயன்படுத்தப்படும் பூச்சி உரூண்டை, மலத்தியோன் போன்ற பூச்சி கொல்லிகளும் கட்டுப்படுத்த முடியாதளவுக்குப் பரவிச் செல்லும்  பேருயிரிகளின் தாக்கத்திலிருந்து பாதுகாப்பு கொடுப்பது என்பது சாத்தியமற்றது. தளப்பகுதியின் வெடிப்புகளிலிருந்து வெளிக்கிளம்பும் கறையான்களுக்கு எவ்வாறு ஈடு கொடுப்பது என்பது பருவ இதழ்ப்பகுதியின் பிரதான பிரச்சனைகளில் ஒன்றாக மாறியிருக்கிறது.
•    நுண்ணுயிரிகள்:-இவை ஒன்றில் பஞ்சு போன்ற படையாகவோ, மஞ்சள், பச்சை, கறுப்பு நிற வண்ணங்கள் நிறைந்த வடிவமைப்பாகவோ, தொப்பளங்கள் போன்றோ படர்ந்திருக்கும். இவை படர்ந்துவிட்டால் அகற்றுவது மிகவும் கடினமாகும். வெப்பநிலை, மிதமான ஈரப்பதன், பனி, கடும் இருட்டு, ஊட்டச் சத்துக்கள் போன்ற சூழல் காரணிகள் பூஞ்சண உருவாக்கத்திற்கும் வளர்ச்சிக்கும் துணை செய்கின்றன. நூலக சாதனங்களிற்குக் காலம் முழுவதும் நாசம் விளைவிக்கும் உயிரிகளாக இவை கருதப்படுகின்றன. தாள்களில் மண்ணிறப் புள்ளிகள் முதலில் உருவாகி பின் சாம்பல் நிறப்புள்ளிகளாக நிறமாற்றம் பெற்றிருப்பதைக் கொண்டு அவற்றை நுண்ணுயிரிகள் தாக்கியிருப்பதை அறியமுடியும்.

4..3 சூழல் காரணிகள் 
தகவல் அமைப்பு ஒன்று அமைந்திருக்கும் இடமும் ,அங்குள்ள காலநிலையும் ஆவண வளங்களின் அழிவுக்குக் கணிசமான பங்களிப்பை வழங்குகின்றன. மாசடைதலானது திண்ம, திரவ, வாயு, ஆவி வடிவில் உருவாகலாம். பலதரப்பட்ட கைத்தொழில் செய்முறைகள், விபத்துகள், தகவல் அமைப்பின் உள்ளக செயற்பாடுகள், மின்னல், பூகம்பம், காட்டுத்தீ போன்ற சடுதியான இயற்கை நிகழ்வுகள், விலங்குகள், தாவரங்களின் இறப்புப் போன்ற மெதுவாக நடைபெறுகின்ற தொடர் செய்முறைகள் போன்றவற்றால் மாசடைதல் உருவாகிறது. தூசி, அழுக்கு, புகை, காற்று, உப்புத் துணிக்கைகள் போன்ற அசுத்தமாக்கிகளும், வாயுப் பொருட்களும் ஈரத்தன்மை போன்ற சாதாரண காரணிகளும் அழிவை ஏற்படுத்துகின்றன.18
நூலக சாதனங்களில் அதிகம் பரவிக் கிடப்பது தூசியாகும்.; நூலக இறாக்கைகள், சாதனங்கள், தளபாடங்கள் அனைத்தையும் இது ஆக்கிரமித்திருக்கிறது. ஆவணக்காப்பகப் பகுதி, அரச ஆவணக் காப்பகப் பகுதி என்பவை மர அலுமாரிகளைப் பயன்படுத்துவதனூடாக அசுத்தமாக்கிகளிலிருந்து கூடுதல் பாதுகாப்பைப் பெற்றுக்கொள்கிறது. எனினும் தாளை அடிப்படையாகக் கொண்ட சாதனங்கள் தமக்குள்ளேயே தூசியை உருவாக்கும் வல்லமை கொண்டமையால் அடிக்கொருதரம் இவை துப்பரவு செய்யப்படாதுவிடின் இதுவே நூற் பாதிப்பின் பிரதான காரணியாக அமைந்து விடும் அபாயம் உண்டு. ஊழியர் பற்றாக்குறையானது திறந்த இறாக்கைகளில் வைக்கப்பட்டிருக்கும் எண்ணுக்கணக்கற்ற பருவ இதழ்களைக் கொண்ட  பருவ இதழ்ப்பகுதியினை தூசிப் படலமாக மாற்றியிருக்கிறது.

5. முடிவுரை
முதல்நிலைத் தகவல் வளங்கள் அனைத்தும் ஆய்வு முயற்சியில் ஈடுபட்டிருக்கும் எந்த நிறுவனத்துக்கும் ஆதாரமாக இருப்பவை. நூல் விநியோகஸ்தர் மூலமாகப் பணம் கொடுத்துப் பெற்றுக் கொள்ள முடியாதவை. தனிப்பட்ட ரீதியிலும் குழுவாகவும் சேகரிக்கப்படவேண்டியவை. பிரதேச முக்கியத்துவம்  மிக்கவை. தனிக் கவனம் எடுத்து பாதுகாக்கப்படவேண்டியவை. இந்த நூலகத்தில் முதல்நிலைத் தகவல் வளங்கள் பெரும்பாலும் அறியப்படாத வளமாகவே இருக்கின்றன. முதல் நிலைத் தகவல் வளங்களின் அளவையும் அதன் தரத்தையும் கொண்டே ஆய்வு நிறுவனம் ஒன்றின் தரம் அளவிடப்படுகிறது. எனவே இவற்றின் சேகரிப்பு எவ்வளவுக்கெவ்வளவு முக்கியமோ அவ்வளவுக்கு இவற்றின் பராமரிப்பும் முக்கியமானதாகும்..

அடிக்குறிப்புகள்


  1. Rajagopalan,T.S and Rajan,T.N. Agenda for National Information Policy.Handbook of Libraries,Archives & Information centres in India. vol.3-Information policies,systems and networks(1986),Information Technology Publications,New Delhi,p24.
  2. Krishankumar.(1984),Reference services,Vikas,New Delhi,p98-103.
  3. Library Statistics  of the Archives&Government documents(2004)
  4. Harrods,L.M.(1987).op.cit.
  5. Library Statistics  of the Archives&Government documents(2004)
  6. Philipps,Eva,(1990),Documentation made easy: Vieweg,Wiesbaden,p106
  7. Harrods,L.M(1987).opcit.,p580.
  8. Readers record (2003-4),Archives
  9. Harrods,L.M(1987).Ibid.,p596
  10. Gs;sptpgug; gjpNtL>gUt ,jo;g; gFjp
  11. Parker,C.C,and Turley,R.V(1975), Information sources in science and technology, Butterworths,London,p112.
  12. Ibid
  13. Readers record (2003-4),Archives
  14. Ibid.
  15. Licklider,J.C.R. (1965). Libraries of the future.Mass,MIT,Cambridge.
  16. Harvey,Ross. Preservation in Libraries: Principles,strategies and practices for Librarians. London: Bowker,1993.
  17. Ibid.
  18. Pasce,M.W. (1988),Impact of environmental pollution on the preservation of archives and records: a RAMP study:UNESCO,Paris,p27



                   (Primary Information resources available at Library, University of Jaffna. Arrangement, Use & maintenance. [Cinthanai.vol.xiv, no.3; Nov. 2004)

No comments:

Post a Comment