எனது நோக்கில்.......

அறிவும் திறனும் இணைந்து தொழிற்படும் அற்புதமான ஒரு துறையாகக் கருதப்படுவது நூலக, தகவல் அறிவியல் துறை. உரு,வரி,வரைபு, அலை ஆகிய தகவல் வெளிப்பாட்டு வடிவங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட பதிவேடுகளின் உருவமைப்பில் அதிக கவனம்செலுத்தி அவற்றின் சேகரிப்பு,ஒழுங்கமைப்பு,சேமிப்பு, பகிர்வு, பராமரிப்புபோன்ற செய்முறைகள் ஊடாக வாசகனின் தகவல் தேவையைப் பூர்த்தி செய்கின்ற நூலகஅறிவியல் துறையும், இப்பதிவேடுகளின் உள்ளடக்கத்தில் மட்டும் அதிக கவனம் எடுத்து தகவல் உருவாக்கம், தகவல் பரவலாக்கம்,சேகரிப்பு, ஒழுங்கமைப்பு,மீள்பெறுகை, பொருள் விளக்கமளிப்பு, பயன்பாடு போன்ற செய்முறைகளினூடாக பயனரின் தகவல் தேவையைப் பூர்த்தி செய்கின்ற தகவல் அறிவியல் என்ற துறையும் இணைந்து உருவான இத்துறையானது தகவலின் பண்புகளும் நடத்தையும், தகவல் பாய்ச்சலை கட்டுப்படுத்தும் சக்திகள், தகவலிலிருந்து உச்ச அணுகுகையையும், பயன்பாட்டையும் பெறும்பொருட்டு தகவலைச் செய்முறைப்படுத்துவதற்கானவழிவகைகள்,தகவல் கையாள்கை மற்றும்பரவலாக்கம் போன்றவற்றில் நூலகங்கள்மற்றும் தகவல் நிலையங்கள் ஆகியவற்றின் பங்களிப்பு ஆகியவற்றைக் கூர்ந்து ஆராயும் ஒரு அறிவியலாக மட்டுமன்றிகணிதவியல்,தருக்கவியல், மொழியியல்,உளவியல், கணினித் தொழினுட்பம்;,நூலகவியல், தகவலியல்,முகாமைத்துவம் போன்ற துறைகளிலிருந்து பெறுவிக்கப்பட்டதாக அல்லது அவற்றுடன்தொடர்புடையதொன்றாகவும் உள்ள பெருமைக்குரியது.

யாழ்ப்பாணப் பிரதேசத்தில் நூலக அபிவிருத்தியை மையமாகக்கொண்டு இயங்கும்ஒரேயொரு அரசசார்பற்ற அமைப்பான'நூலக விழிப்புணர்வு நிறுவனம்' என்ற அமைப்பின் ஊடாக நடத்தப்பட்ட பொது நூலகர்கள், மற்றும் பாடசாலை நூலகர்களுக்கான கருத்தரங்குகள்,பயிற்சிப் பட்டறைகளில் இனங்காணப்பட்ட நூலகர்களின்தேவையும், கிராமம் தோறும் தனிநபர் நூலகங்களாகவோ, அமைப்பு சார்நூலகங்களாகவோ, கிராமிய நூலகங்களாகவோ இயங்கக் கூடிய வகையில் புதிய நூலக உருவாக்கத்தில் ஆலோசனை கோரி அணுகியவர்களின் தேவையும் இணைந்து உருவானதே இந்தவலைத்தளம்எனில் மிகையல்ல.

இந்த வலைத்தளத்தின் தேவையைத் திரும்பத்திரும்ப வலியுறுத்தி அதற்கான உந்துசக்தியைத் தந்த அனைவருக்கும் எனது நன்றிகள். வீட்டு நூலகம் முதற்கொண்டுசனசமூக நிலைய நூலகங்கள்,பாடசாலை நூலகங்கள் போன்ற கல்விநிறுவன நூலகங்கள், பொதுசன நூலகங்கள், சிறப்பு நூலகங்கள் அனைத்திற்கும் ஒரு அடிப்படையைத் தரவும், தாய்மொழி மூல கல்விமூலம் நூலகத்துறையைவளர்த்தெடுத்தல்,தமிழில் நூலகவியல் துறை சார்ந்த ஆய்வுகளை ஊக்குவித்தல் ஆகிய இரு இலக்குகளை முன்வைத்தும் இந்த வலைத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. அபிவிருத்தியின் அச்சாணி நூலகம் என்ற கருத்துநிலையையும் செயலுருப்பெற உதவுமெனில் அது நான் பிறந்த இந்த மண்ணுக்கும் நான் பேசும் மொழிக்கும்செலுத்துகின்ற நன்றிக்கடனாகும்.


அருளானந்தம் ஸ்ரீகாந்தலட்சுமி,
கல்விசார் நூலகர்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

13-09-2014


Saturday, September 13, 2014

இணையம் Vs நூலகம்

அறிமுகம்


இன்றைய உலகம் தகவல் உலகம். தகவல் உலகின் தனிப்பண்பு இணைய உருவாக்கம். தொடர்புத் தொழில்நுட்பத்தில் முன்னெப்போதும் கண்டிராத புரட்சியைக் கொண்டு வந்திருக்கும் உலகளாவிய வலைத்தளம், மின்னஞ்சல், மின்னியல் வர்த்தகம் ஆகியன உள்ளிட்ட இணையத்தின்  பரவலாக்கமானது மில்லியன் கணக்கான மக்களுக்கு புதிய தொழில்நுட்பத்தை அறிமுகஞ் செய்திருப்பதுடன் பெரும்பாலானோருக்கு அவற்றின் உண்மையான பயன்பாடு என்னவென்றே தெரியாதளவிற்கு அதன் ஆதிக்கம் உலகின் மூலைமுடுக்கெல்லாம் பரவி நிற்கிறது. பெரும்பாலானோர் இந்த ஊடகத்தின் ஆற்றல் தொடர்பாக தவறான நம்பிக்கையை வளர்த்துக் கொண்டிருப்பது மட்டுமன்றி இந்த ஊடகத்தின் உண்மையான பயன்பாடு என்பதை அறிவதைவிடவும் தமது கற்பனையின் அடிப்படையிலேயே அதனைப் பயன்படுத்துவதும் காணக்கூடியதாக உள்ளது.
தகவல் உலகின் தனிப்பெரும் சேமிப்பகங்களாகத் தொழிற்பட்ட நூலகங்களும் அது சார்ந்த தகவல் அமைப்புகளும் தமது தனித்தன்மையை இழந்து கொண்டு வரும் ஒரு தோற்றப்பாட்டை இந்த இணைய உருவாக்கம் ஏற்படுத்தியிருக்கும் இன்றைய காலகட்டத்தில் இவை இரண்டினதும் உண்மையான பயன்பாடு தொடர்பான தெளிவான புரிதல் தகவலைப் பயன்படுத்தும் தனிநபர் மட்டத்தில் மட்டுமன்றி தகவலை தேசியவளமாகக் கருதும் சமூக மட்டத்திலும் இன்றியமையாதது. 

இணையம்
கணினிப் பாவனையாளர் உள்ளுர் முறையிலோ அல்லது வலையமைப்பினூடாகவோ ஏனைய கணினிப் பயனருடன் தரவுகள், தகவல்கள், படங்கள், கோப்புகள் போன்றவற்றை உடனுக்குடன் பரிமாறிக்கொள்வதை அனுமதிக்கும் வகையில் ஒரு நாட்டிலுள்ள அனைத்துக் கணினி வலையமைப்புக்களும், பிற நாடுகளின் கணினி வலையமைப்புக்களுடன் இணைக்கப்படும் செய்முறையை குறிப்பிடப் பயன்படுத்தப்படும் Inter Connection Network என்ற ஆங்கிலப்பதத்தின் சுருக்கமே இணையம் எனப்படுகிறது. கணினியைக் கடிதம் எழுதுவதற்கும், கட்டுரை எழுதுவதற்கும், புத்தகம் அச்சடிப்பதற்கும் உதவும் ஒரு கருவியாக மட்டுமே பயன்படுத்திய மனித சமூகம் தகவல் யுகம் ஒன்றிற்குள் காலடி எடுத்து வைத்த கையுடனேயே கணினியைப் பயன்படுத்திக் கடிதம் அனுப்பவும், வர்த்தகம் செய்யவும், உடனுக்குடன் உலகின் எந்த மூலையிலும் நடக்கும் சம்பவங்களை அறிந்து கொள்ளவும் இயலக் கூடிய நிலைக்கு வளர்ந்து நிற்கின்றது. இந்த வளர்ச்சி நிலையே  இன்ரநெற் உலகம் எனக் குறிப்பிடப்படுகின்றது. கணினித் தொகுதி தொலைபேசி இணைப்பு, தொலைபேசிக்கும் கணினிக்கும் தொடர்பினை ஏற்படுத்துவதற்கு உதவும் நெற் காட் எனப்படும் இணைய அட்டை, கேபிள், மற்றும் கேபிளை இணைப்பதற்கான கிளிப் என்பன இணையத்துடன் இணைந்து கொள்வதற்கு அவசியமானவையாகும்.
இ-கொமர்ஸ்; எனப்படும் மின்னியல் வர்த்தகம், இ-மெயில் எனப்படும் மின்னியல் தபால், வெப் எனப்படும் இணையத் தளங்கள் ஆகிய மூன்று பிரதான வசதிகளை இணையம் கொண்டிருக்கிறது. இணைய வசதிகளைப் பயன்படுத்திப் பொருட்களை கொள்வனவு மற்றும் விற்பனை செய்யும் நடவடிக்கைகள் மின்னியல் வர்த்தகம், எனப்படுகிறது. இணையத்தில் எதிர்காலத்தில் அதிக தாக்கத்தை விளைவிக்கக்கூடியதும், பெரும் இலாபத்தை அளிக்கக்கூடியதுமான  தொழில்நுட்பம் எதுவென 2001ம் ஆண்டு நடந்த பத்திரிகையாளர் மாநாடு ஒன்றில் வைத்துக் கணினி உலகின் முதன்மை நிறுவனமான மைக்றோ சொவ்ற் நிறுவனத்தின் உரிமையாளர் பில் கேற்ஸிடம் கேட்டபோது அவர் அளித்த பதில் மின்னியல் வர்த்தகம் என்பதே. தகவல் தொழில்நுட்பத் துறையில் உயர்நிலை வகிக்கும் நாடுகளின் முதலீட்டின் பெரும்பகுதி இ-வர்த்தகத்துக்கே செலவிடப்படுகின்றது. புத்தகமோ, சீடீக்களோ, தங்கநகைகளோ, சாப்பாட்டுப் பொருட்களோ வீட்டிலிருந்து கொண்டே இணையத்தினூடாக வாங்கவும், விற்கவும் முடியும்.
அதாவது கால் நடை தொடக்கம் புகையிரதம், கப்பல், விமானம் வரை புதிய பரிமாறல்களின் உச்ச வெளிப்பாடே இந்த மின்னணுவியல் அஞ்சல்;. இவற்றின் செயற்பாடு அளப்பரியது, செய்தியையோ அல்லது படங்களையோ உரிய வடிவில் குறித்த நேரத்தில் உரியவர்களுக்குத் தெரிவிக்க முடியும். அனுப்பிய சில நிமிடங்களிலேயே தகவல் கிடைத்ததற்கான பதிலையும் பெறமுடியும். இதன் மூலம் செய்தியினைப் பரிமாறுவதற்கு மொழி ஒரு தடையல்ல. தெரிவிக்க வேண்டிய தகவலைத் தமிழில் வடிவமைத்து இ-மெயில் முகவரியினுடாக தகவல் சேரவேண்டியவர்களின் முகவரிக்கு அனுப்பி அதற்கான பதிலையும் உடனே பெறக்கூடியதாக இருக்கும். இடைவெளி எதுவுமற்ற  நியம வடிவத்தை இந்த முகவரி பின்பற்றுகின்றது.  இது பானையாளர் பெயர் ளூ னழஅயin யெஅந  நாடு அல்லது நிறுவனத்துக்கான குறியீடு ஆகியவற்றைக் கொண்டது.
இணையம் என்ற வலையமைப்பில் என்றும் எப்போதும் எங்கும் பெறத்தக்கவாறு தயார் நிலையிலிருக்கும் வரியுரு  படம், ஒலி நிலையில் அமைந்த பல்வேறு தகவல்களையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த தொகுதி வலைத்தளம் என்ற பெயரால் அறியப்படுகிறது.. உலகெங்கிலுமுள்ள நிறுவனங்கள், அரச அலுவலகங்கள், பல்கலைக்கழகங்கள், தனிப்பட்ட நபர்கள் போன்றோர் தத்தமது விவரங்களை இணையத்தில் தங்களுக்கெனத் திறந்துள்ள ஒரு பிரிவில் பதிந்து வைத்திருப்பார்கள். இப்பக்கங்களே வலைத்தளங்கள் எனப்படுகின்றது. உலகிலுள்ள அனைத்துத் தகவல்களையும் இணையத்துடன் இணைக்கும் வளமாகவும் இது கருதப்படுகிறது. இணையத்தின் நூலகம் எனப்படக்கூடியளவுக்கு பலதரப்பட்ட தகவல்களையும் இது சேமித்து வைத்திருக்கிறது.
உலகம் முழுவதும் பரந்து கிடக்கும் மிகைபாடக் குறியீட்டு மொழியில்(hவஅட) அமைந்த தகவல் வளங்களை இணைத்து நிற்கும் தொகுதியாக இது உள்ளது. இதன் மூலம் எழுத்துரு ஆக்கங்கள் மட்டுமன்றி அட்டவணைகள், படங்கள், வரியுருக்கள், அசையும் படங்கள், ஒலி, ஒளி நிலை, ஆக்கங்கள், ஏனைய கணினி ஆக்கங்கள் முதலிய பல்வேறு தகவல்களையும் பெறலாம். இணையத்தில் இத்தகைய ஆக்கங்களின் தொகை,  கணந்தோறும் மாறும் இதன் பருமன் என்பன அளவிடமுடியாதது. 
உலகளாவிய தகவல் வலை முதன் முதலி;ல் 1989ல் சுவிற்சர்லாந்திலுள்ள அணுத்துகள் ஆராய்ச்சி நிறுவனத்தில் (நுரசழிநயn உநவெசந கழச ரேஉடநயச சுநளநயசஉh (ஊநுசுN))  பணிபுரிந்த ரிம்-பேணர்ஸ்-லீ (வுiஅ – டீநசநெசள – டநந) என்ற அறிஞரால் உருவாக்கப்பட்டது. பின் 1990 களில் நுரசழிநயn டயடிழசயவழசல கழச pசயஉவiஉயட phலளiஉள என்ற ஆய்வு கூடத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு படிப்படியாக உலகம் முழுமைக்கும் பரவிய றறற ஆக உருவாகி உலகின் கோடிக் கணக்கான கணினிகளை இணைத்து வைத்தது. 

நூலகம்
குறிக்கப்பட்ட சில எதிர்பார்ப்புகளுடன் கட்டியெழுப்பப்படுகின்ற, குறிக்கப்பட்ட சில தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய வாய்ப்பை வழங்குகின்ற, குறிக்கப்பட்ட உண்மையானதும் உள்ளுறவுள்ளதுமான நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் ஒரு நிறுவனம் தான் நூலகம்.  இது தன்னிடத்தே உலக அறிவு   அனைத்தையும் தரும் நிலையில் எல்லாத்துறைகளுடனும் தொடர்பான நூல்களையும் அந்நூல்களைப் பயன்படுத்த வரும் வாசகர்களையும் வரும் வாசகர்களுக்;கு வழிகாட்டுகின்ற அல்லது அவர்களை நெறிப்படுத்தகின்ற நூலக அலுவலர்களையும் கொண்ட ஒரு மூலவுரு ஆகும். தகவல் வளங்களை வாசிப்பதற்கும், படிப்பதற்கும், கலந்தாலோசிப்பதற்கும் ஏற்ற வகையில் அவற்றைச் சேகரித்து, சேமித்து, பாதுகாத்து வைக்கும் முறைமைகள் இவையாகும். நூல்களைச் சேமித்து வைக்கின்ற  நூலகங்களைத் தகவல் முறைமைகளின் ஆரம்ப வடிவமாகக் கொள்ளலாம். இவற்றைக் கல்வி நிறுவன நூலகம், பொது நூலகம், சிறப்பு நூலகம், தேசிய நூலகம் என மேலும் வகைப்படுத்த முடியும்.


தகவல் உலகின் பண்புகள்
நூலகங்களா அல்லது இணையத்தளங்களா என்ற ஒப்பீட்டுக்கு வருமுன் இரண்டுக்கும் பொதுவானதாக உள்ள தகவல் உலகின் பண்புகளை நன்கு விளங்கிக் கொள்ளல் அவசியமானது.
•    தகவல் வெடிப்பு: தகவல் உலகின் முக்கிய பண்பாகக் கருதப்படுவது தகவல் கட்டுமீறல் என்ற கருத்துநிலையாகும். ஒரே துறைசார்ந்த ஆக்கங்கள் எண்ணிறந்த அளவில் வெளியீடு செய்யப்படுவதன் காரணமாக தகவல் ஒழுங்குபடுத்தலில் ஏற்படக்கூடிய சிரமங்கள் தகவல் வெடிப்பு அல்லது தகவற் கட்டுமீறல் என அழைக்கப்படுகின்றன. அச்சிடுதல் தொழினுட்ப வளர்ச்சி தந்த தொகை ரீதியான அதிகரிப்பால் தனிநபரோ ஏன் நூலகங்களோ கூட வெளியிடப்படும் அனைத்து நூல்களையும் விலை கொடுத்து வாங்க முடியாதிருப்பதும் தேவைப்படும் தகவலைத் தேடும் பணி சிக்கலாகியிருப்பதும் தகவல் அணுகுகையில் இடைவெளியை உருவாக்கியுள்ளது.
•    தகவலின் வழக்கற்றுப்போகும் தன்மை: தகவல் உலகின் இரண்டாவது முக்கிய பண்பாககக் கருதப்படுவது தகவலின் வழக்கற்றுப் போகும் தன்மையாகும். தொழில்நுட்ப அபிவிருத்தியின் விளைவாக மிகக் குறுகிய காலத்தில் தகவல் பயன்பாடற்றதாகவும் வழக்கற்றதாகவும் மாறிக்கொண்டு வருகிறது. எடுத்துக்காட்டாக மின்னணுவியல், கணினியியல் போன்ற துறைகளில் இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கிடையில் தகவலின் பெறுமதியில் வீழ்ச்சித்தன்மை நிலவுகிறது. அதேபோன்று மருத்துவத்துறையில் வருடாவருடம் புதிய பதிப்புகள் பழைய பதிப்புகளை வழக்கற்றதாக்கிக் கொண்டிருக்கின்றன. மனிதனின் இன்றைய ஆய்வுகள் நேற்று உண்மை என நிறுவியதை பொய்யாக்கிவிடும் சந்தர்ப்பங்கள் அதிகமாக இருப்பதனால் நூலக சாதனங்களுக்குள் உண்மையானவற்றையும் பொய்யானவற்றையும் பிரித்தறிய வேண்டிய அறிவு நூலகருக்கும் வாசகருக்கும் இன்றியமையாததாகிறது. குறிப்பிட்ட தகவல் தற்காலம் வரை பெறுமதிமிக்கதாக இருப்பினும் இவை அண்மைக்கால ஆய்வுகளுக்குள் சேர்க்கப்பட்டிருத்தல், அண்மைக்கால ஆக்கங்களினால் ஒன்றிணைக்கப்பட்டிருக்கும் தன்மை, இன்றுவரை பெறுமதி மிக்கதாகக் கருதப்படினும் ஆர்வம் குறைந்த பொருட்துறைகளாக மாறியிருக்கும் தன்மை, பெறுமதியை முற்றாக இழந்து விடும் தன்மை போன்ற காரணங்களால் இலக்கிய அதிகரிப்புக்கு இணையாகவோ அல்லது அதற்கும் அதிகமாகவோ துரிதமாகவும் தொடர்ச்சியாகவும் அதிகரித்துச் செல்லும் ஆய்வுச் செயற்திட்டங்களின் வழக்கற்றுப் போகும் தன்மையும் அதிகரித்துச் செல்கிறது. ஒரு விடயத்தையே திருப்பித் திருப்பி பேசும் நிலையில் தகவல் உற்பத்தி இருப்பதனால் தகவலில் தெளிவுத் தன்மை குறைவடைந்து இது வாசகனுக்கு மன ரீதியான களைப்பையும் விரக்தியையும் கொடுப்பது தவிர்க்கமுடியாததாகிறது.
•    தகவல் தெறிப்பு: தகவல் உலகின் மூன்றாவது பண்பாகக் கருதத்தக்கது தகவல் தெறிப்பு அல்லது சிதறல் கருத்துநிலையாகும். தகவல் தெறிப்பு என்ற கருத்துநிலையின் தோற்றப்பாட்டுக்கு பல காரணிகள் பங்களிப்புச் செலுத்துகின்றன. தகவல் தெறிப்பானது பொருட்துறை சார்ந்ததாகவோ, தகவல் சாதனங்களின் பௌதிக வடிவமைப்புச் சார்ந்ததாகவோ, மொழி சார்ந்ததாகவோ, இடம் சார்ந்ததாகவோ அதுவுமன்றி ஒரு ஆவணத்தின் உள்ளடக்கம் சார்ந்ததாகவோ ஏற்படலாம். இத்தகைய நிலையானது தகவல் சாதனத்துக்கும் அதன் பாவனையாளருக்குமிடையில் தகவல் இடைவெளியை உருவாக்கித் தகவல் மீள் பெறுகையில்; பாதிப்பை உருவாக்கும்.
•    தகவல் சுமை: தகவல் உகின் நான்காவது பண்பாககக் கருதத்தக்கது தகவல் சுமை என்ற கருத்துநிலையாகும். ஒரு பொருட்துறை சார்ந்து எண்ணற்ற தகவல் சாதனங்கள் வெளியிடப்படுவதன் காரணமாக தகவல் சுமையின்; தாக்கத்துக்கு வாசகன் உட்படுவது தவிர்க்க முடியாததாகிறது. இது சரியான தகவலை சரியான நேரத்தில் பெறுவதை தடை செய்கிறது. தகவல் வெடிப்பில் ஏற்பட்ட எண்ணற்ற அதிகரிப்பு முதல்நிலைப் பருவ இதழ்களுக்கு வித்திட்ட அதேசமயம் அதேயளவிற்குப் பல சாராம்சப் பருவ இதழ்களையும், கணினி வடிவ தரவுத் தளங்களையும் உருவாக்கியது. இதன் காரணமாகக் குறிப்பிட்ட ஒரு துறையில் ஆய்வை மேற்கொள்ளும் எவருக்குமே அதிகரித்துச் செல்லும் தகவல் வெள்ளத்துக்குள் தமக்குப் பொருத்தமானதைத் தெரிவு செய்தல் கடினமானதாக இருக்குமொரு நிலையில் தகவல் உத்தியோகத்தரும் சமாளிக்கத் திணறும் நிலையில் தகவற் சுமை ஏற்படுவது தவிர்க்க முடியாததாகும்.
•    மொழியின் பல்பயன்பாட்டுத் தன்மை: பல மொழிகளில் வெளியீடுகளின் அதிகரிப்பானது இந்த நூற்றாண்டின் சிறப்பம்சமாகும். அந்நிய மொழியில் உருவாக்கப்படும் தகவல்களின் மிகக் குறைந்தளவு வீதமே பயன்படுத்தப்படுவதை ஆய்வுகள் நிரூபிக்கின்றன. கிட்டத்தட்ட 65வீதத்துக்கும் அதிகமான உலக அறிவுப்பதிவேடுகள் ஆங்கில மொழியிலேயே வெளியிடப்படுகின்றன. உலகின் அறிவியல் சமூகங்களில் கூட இன்றும் அறிவை அணுகுவதில் தடையாக உள்ளது மொழியே. தரவுத்தளங்களில் பல ஆங்கில மொழியிலேயே உள்ளன. வேற்று மொழியில் பரிச்சியமின்மை தகவல் தேடும் ஆர்வத்தில் விரக்தி நிலையைத் தோற்றுவிப்பது மட்டுமன்றி தெளிவற்ற தன்மையையும் உருவாக்கும். கணினி யுகத்தில் மொழித் தடையானது மனிதனுக்கும் இயந்திரத்துக்குமிடையில், இயந்திரத்துக்கும் இயந்திரத்துக்குமிடையில், மனிதனுக்கும் மனிதனுக்குமிடையில், இயந்திரத்துக்கும் மனிதனுக்குமிடையில,; பொருத்தப்பாடின்மையையும் முரண்பாட்டையும்,; உருவாக்கும். இலக்கியங்களில் பயன்படுத்தப்படும் சொல்லலங்காரங்கள், கலைச்சொற்கள் போன்றன  தகவலை விளங்கிக் கொள்வதில் இடர்ப்பாடுகளை ஏற்படுத்துகின்றன.
•    தகவல் மாசடைதல்: தகவல் தொழிற்துறையின் உருவாக்கம் காரணமாக ஏனைய பண்டங்களை விடவும் தகவல் சாதனங்களின்; விலை ஒப்பீட்டளவில் குறைந்து கொண்டு போவதும், ஓரே நூலைத் தரங்குறைந்த தாளில் அச்சிட்டுப் பெருந்தொகையில் மலிவுப்பதிப்புகளாக விற்கக்கூடிய வசதியும், தகவல் வளத் தெரிவில் தகவல் அறிவியலாளரின் புலமை சார் அறிவைக் கோரி நிற்கின்றது. மலினப்பதிப்புகளின் உற்பத்தியானது சூழல் மாசடைதல் போல் தகவலிலும் மாசடைதலை உருவாக்கியிருப்பதன் காரணமாக தீயவற்றுக்குள் நல்லதைத் தேடிப்பிடிக்க வேண்டிய அறிவை வாசகனிடம் மட்டுமன்றி தகவலைக் கையாளும் அனைவரிடமும் வேண்டி நிற்கின்றது. மனிதனின் இன்றைய ஆய்வுகள் நேற்று உண்மை என நிறுவியதை பொய்யாக்கிவிடும் சந்தர்ப்பங்கள் அதிகமாக இருப்பதனால் நூலக சாதனங்களுக்குள் உண்மையானவற்றையும் பொய்யானவற்றையும் பிரித்தறிய வேண்டிய அறிவு தகவல் பாவனையாளருக்கு இன்றியமையாததாகிறது.

இணையம் Vs நூலகம்
தகவல் வளங்களின் தொகை, தரம், ஒழுங்கமைப்பு, அணுகுகை, முகாமைத்துவம் ஆகிய ஐந்து பரந்த பொருட்தலைப்புகளின் கீழ் இணையத்துக்கும் நூலகத்துக்குமான வேறுபாட்டை ஆராய முடியும்.

தொகை
தகவல் வெடிப்பு என்ற கருத்துநிலையானது நூலகங்களைவிட இணையத்தளங்களையே அதிகம் பாதித்திருக்கின்றது. நூலகங்கள் அவை பணிபுரியும் தாய் நிறுவனத்தின் தேவைக்கமைய பலதரப்பட்டதாக இருப்பதும், வரையறுக்கப்பட்ட நிதி, ஆளணி போன்ற அம்சங்களின் ஆதிக்கத்தில் இருப்பதன் காரணமாக உலகின் வெளியீடுகளில் தமக்குப் பொருத்தமானவற்றை மட்டுமே தெரிவு செய்து தமது இருப்பில் சேர்த்துக்கொள்ளவேண்டியிருப்பதன் காரணமாக தகவல் வெடிப்பின் தாக்கத்திற்கு பெரிதும் உட்படவில்லை என்றே கூறவேண்டும். மாறாக இணையத்தளங்களில் தகவலின் தொகை ரீதியான அதிகரிப்புக்கு எந்தவொரு காரணியும் தடையாக இல்லாததன் காரணமாக  தகவற் சுமையின் தாக்கத்திற்கு பயனர் உட்படும் அளவு அதிகமாகவே உணரப்பட்டிருக்கிறது.

தகவல் வளங்களின் தரம்
நூலகத்துக்கென்றே வடிவமைக்கப்பட்ட தெரிவுப் பிரமாணங்களின் அடிப்படையில்,  வெளியிடப்படுவதற்கு முதலே திருத்தப்பட்டு மீளாய்வு செய்யப்பட்ட தகவல் வளங்களின் கொள்;வனவை பின்பற்றுவனவாகவே நூலகங்களின் ஈட்டற் பணி அமைந்திருக்கிறது.  நூலகத்தின் இலத்திரனியல் தரவுத்தளங்களிலுள்ள பெரும்பாலான கட்டுரைகள் புலமைத்துவம் சார்ந்தவை என்பதுடன் தொடர்ச்சியான மீளாய்விலிருந்து உருவானவை. மாறாக தகவலின் துல்லியத்தன்மையை பரிசோதிப்பதற்கான வாய்ப்பு இணையத்தளங்களில் வெகு குறைவு. இணைய வசதியுள்ள எவருமே வலைத்தளத்தை உருவாக்கலாம். தகவலின் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை.  ஒரே பாடத்துறையில் மாணவன் ஒருவனால் எழுதப்படும் கட்டுரையும் நோபல் பரிசு பெற்ற புலமையாளரின் கட்டுரையும் ஒரே இடத்தில் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கும். பெருமளவு தகவல் உருவாக்கப்படுவதாலும் வர்த்தக ரீதியில் போட்டி அடிப்படையில் குறைவான பணப்பெறுமதியில் உருவாக்கப்படுவதாலும் தகவலின் தரம் குறித்து ஐயமேற்படுகிறது. பெரும்பாலான தளங்கள் இற்றைப்படுத்தப்படும்போது நடப்புத் தகவல்களை மாத்திரம் உள்ளடக்கி பழைய தகவல்களை அனுமதிக்க பின் நிற்கும் நிலை காணப்படுவதுடன் பயனாளி முதலில் தேடிப் பெற்ற தகவலை மீண்டும் சில காலம் பெற்ற பின் தேடும் போது கிடைக்காமற் போகின்ற நிலை உள்ளது. அது மட்டுமன்றி கிடைக்கும் தகவல் தொடர்பாக அல்லது அதன் வழங்குனர் தொடர்பாக தகவல் பயனாளி தவறான தகவல்களை இணையத்தில் பரப்புரை செய்யக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளதால் மதிப்பளிக்கும் பண்பும் குறைவடைகிறது. நூலக ஒழுக்க நெறி முறைகள் இணையத்திற்கும் உள்ளன இணையத்திலுள்ள தகவல்களை மாற்றியமைத்தல், மாற்றியமைக்கும் வைரசு செய்நிரல்களை உருவாக்குதல் முதலியன குறிப்பிடத்தக்க ஒழுக்க நெறி மீறல்களாகும்.

தகவல் வள ஒழுங்கமைப்பு
உலகளாவிய ரீதியில் விருத்திசெய்யப்பட்ட நியம பகுப்பாக்க ஒழுங்கமைப்பை நூலகங்கள் கொண்டிருக்கும் அதேசமயம் வலைத்தளங்களின் ஒழுங்கமைப்பு நியமமற்ற ஒழுங்கமைப்பாக வெறும் அகரவரிசை ஒழுங்கமைப்பே இன்றும் பின்பற்றப்படுகின்றது. தகவல் தேடுகையை மேற்கொள்பவர் தமக்குத் தேவைப்படும் தகவலை கண்டுபிடிப்பதற்கு  ஏற்ற வகையில் ஒழுங்குமுறைப்பட்ட வழியில் பகுப்பாக்கம் மற்றும் பட்டியலாக்க ஒழுங்கமைப்பை நூலகம் கொண்டிருக்கிறது. தூயி தசமப்பகப்புத் திட்டம், காங்கிரஸ் நூலகப்பகுப்புத் திட்டம் போன்ற உலகளாவிய ரீதியில் புலமையாளர்களால் அங்கீகரிக்கப்பட்ட பகுப்பாக்கத்திட்டங்களை நூலகங்கள் பின்பற்றுகின்றன. அதேபோன்று தேவைப்படும் தகவலை ஆசரியர், தலைப்பு, பொருட்துறை போன்ற பலதரப்பட்ட வகையிலும் தேடிக்கண்டுபிடிப்பதற்கான தேடுகைப் பொறிமுறைகளை நூலகம் கொண்டிருக்கிறது. மாறாக வலைத்தளங்களின் தகவல் தேடுகையில் கொள்கைமாறாத்தன்மையை பேணுவதற்கான எந்தவொரு வழிமுறையும் பின்பற்றப்படுவதில்லை. வௌ;வேறுபட்ட தேடுகைப் பொறிகள் வௌ;வேறுபட்ட வகையில் தமது தரவுத்தளங்களில் தகவலைச் சேர்த்துக்கொள்கின்றன.  1997இல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் கல்வியிற் தொழில்நுட்பம் என்ற பொருட்துறைசார்ந்த தகவலைத் தேடுவதற்கு யாகூ, இன்வோசீக், வெப்குறோளர் ஆகிய மூன்று தேடுகைப் பொறிகளில் மேற்கொள்ளப்பட்ட தேடுகையின் போது யாகூ பொருத்தப்பாட்டையும் தரவில்லை. இன்வோசீக் 100 பொருத்தப்பாடுகளையும் வெப்குறொளர் 87,987 பொருத்தப்பாடுகளையும் தந்திருந்தது.
நூலக தரவுத்தளங்கள் ஆசிரியர், தலைப்பு, பொருள் சார் தேடுதலை மேற்கொள்ளக்கூடிய வகையில் முன்ஒருங்கிணைவுச் சொல்லடைவுகளின் அடிப்படையில் ஒழுங்குபடுத்தப் பட்டிருக்கும். தலைச்சொல் அடிப்படையிலான தேடுகை ஒன்றுமட்டுமே இணையத் தள தேடுகைப் பொறிகளினூடான மேற்கொள்ளப்பட முடியும் என்பதுடன் இது பொருத்தமற்ற தகவல்களை தள்ளிவிடுவதற்கான ஆற்றலை மட்டுப்படுத்துகிறது. கிரடாரோவின் கருத்துப்படி பொது அணுகுகைக்கு அமைவான நாலு பில்லியனுக்கும் மேற்பட்ட வலைத்தளங்கள் இன்று காணப்படுகின்றன. இவற்றில் 6 வீதமானவை மட்டுமே கல்விசார் பொருளடக்கங்களைக் கொண்டுள்ளன. ஒரு வலைப்பக்கத்தின் சராசரி ஆயுள் 75 நாட்கள் மட்டுமே. மிகப் பெரிய தேடுகைப் பொறியான கூகுல் தேடுகைப்பொறியானது வலைப்பக்கங்களின் 18 வீதத்தை மட்டுமே சொல்லடைவுபடுத்தியிருக்கிறது. மரபுரீதியான தேடுகைப் பொறிகளினூடாக இணையத்தை சொல்லடைவுபடுத்தமுடியாது. வலைப்பக்கமொன்றை எவரும் வெளியிடலாம். அதேசமயம் அதிலுள்ள தகவல்களின் நம்பகத்தன்மையை அளவிடமுடியாது.

தகவல் அணுகுகை 
நூலகம் அல்லது வலைத்தளமொன்றில் வாசகன் ஒருவன் தனக்;குத் தேவையான ஆக்கம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்கான அல்லது தகவல் சேமிப்பு வழிமுறைகளான பட்டியல்கள், சொல்லடைவுகள், நூல்விவரப்பட்டியல்கள், கணினி மின்முனைகள் போன்றவற்றைப் பயன்படுத்துவதற்கான அல்லது சேமிப்பதற்கான அனுமதி, திறன்;, வாய்ப்பு போன்றவை தகவல் அணுகுகை என்ற பெயரால் குறிப்பிடப்படுகிறது.   தகவல் சாதனங்களை நூலக அலுவலர்களின் உதவியுடன் அணுகுவதற்கான வாய்ப்பும் ஆய்வின் தரத்தை கூட்டும் வாய்ப்பும் நூலகங்களில் உண்டு. ஆகக் குறைந்தளவு கணினி அறிவுடன் நூலகத்தைப் பயன்படுத்தமுடியும். மாறாக படங்கள் மற்றும் பாடங்களை பதிவிறக்கம் செய்து திருத்தக்கூடிய மின்னணுவியல் அணுகுகையை இணையத்தளங்கள் கொண்டிருக்கின்றன. சுய உதவியை மட்டுமே கொண்ட இணையத் தேடலானது தேவையற்ற தேடல்களுக்கு இட்டுச்செல்லக்கூடிய நிர்ப்பந்தத்தை பயனருக்கு ஏற்படுத்துவது தவிர்க்க முடியாதது.. அதிகார பூர்வ தளங்களின் தகவல்களைத் ஒத்த தவறான தகவற் தளங்கள் பயனரைப் பிழையான  வழியில் இட்டுச் செல்லும் வாய்ப்பு உள்ளது. பாதுகாப்பு மற்றும் பொருளாதார காரணிகளின் அடிப்படையிலும் பிரதேச ரீதியான அனுமதி நடைமுறைகளிலும் காணப்படும் வரையறுக்கப்பட்ட தகவற் பகிர்வு தகவலின் சுதந்திர பெறுகைக்கு தடையாகிறது.
நூலகங்கள் தரம் வாய்ந்த தகவல்களுக்கு அதிக முன்னுரிமை வழங்கும் அதேசமயம் மிகப்பழைய தகவல்களையும் கொண்டிருக்கின்றன. சில தகவல்களை அச்சுவடிவத்திலேயே பெறப்படக்கூடிய வாய்ப்பு இங்கு உண்டு.   இணையத்தளங்களோ புதிய தகவல்களைக் கொண்டிருப்பதுடன் சிறுபான்மை நோக்குகளுக்கு சம இடம் வழங்குகின்றன. சில வலைத்தளங்கள் அண்மைக்காலத் தகவல்களை மட்டுமே கொண்டிருக்கின்றன. வலைத்தளங்களின் பெரும்பாலான தகவல்கள் கடந்த 20 வருடங்களுக்குட்பட்டவை. தகவல் தேடலில் குறித்த தகவல் தொடர்பான மிகச் சிறிய தகவலையும் மிகப் பெரிய தகவலையும் ஒன்றாகத் தருவதால் தேடல் செய்வதிலும் தகவலைக் கண்டறிவதிலும் சிரமம் ஏற்படுகிறது.
நூலகங்கள் இற்றைப்படுத்தப்பட்ட தகவல்களைக் கொண்டிருக்கும் வகையில் சிறந்த நூல் நீக்கக் கொள்கையைக் கொண்டிருக்கும். உலகளாவியரீதியில் இற்றைப்படுத்தப்பட்ட தகவல்களை கொண்டிருப்பினும் நீக்கற் கொள்கை இல்லாத காரணத்தால் பெரும்பாலான வலைத்தளங்கள் சேமிப்புக் குதங்களாகவே இருப்பது தவிர்க்கமுடியாததாக உள்ளது. வரலாற்றுரீதியான தகவல் வளங்களை நூலகத்திலேயே பெறப்படக்கூடிய தன்மை உண்டு. அதேசமயம் பிரதேச ரீதியான ஆய்வு முயற்சிகளை உள்ளடக்கிய தகவல் இணையத்தில் மிகக் குறைவு.

முகாமைத்துவம்
தகவல் முறைமை ஒன்றிலிருந்து வாசகர் மிக உயர்ந்த நன்மையையும் பயன்பாட்டையும் பெறுவதற்கு ஏற்ற வகையில் பொருத்தமான தகவல் வளங்களைக் கட்டியெழுப்புதல் அவற்றைப் பராமரித்தல் ஆகிய இரு பெரும் தொழில்நுட்பங்களின் செயல்திறன் தகவல்வள முகாமைத்துவம் எனப்படுகிறது. தகவல் வள அபிவிருத்தி, தகவல் வள பராமரிப்பு ஆகிய இருபெறும் கூறுகளை இது உள்ளடக்குகின்றது. தகவல் வள அபிவிருத்தியானது தகவல் வள ஈட்டல், தகவல் வள நீக்கம் ஆகிய இருபெரும் நடவடிக்கைகளை உள்ளடக்கும் அதே சமயம் தகவல் வளப் பராமரிப்பானது தகவல் வளப் பாதுகாப்பில் கவனம் செலுத்துகின்றது.
நூலகம் என்பது திட்டமிட்ட கொள்கையின் அடிப்படையிலான ஈட்டற் செயற்பாடுகளைக் கொண்டது. பொதுவாக நூலகம் ஒன்று தனக்குத் தேவையான தகவல் சாதனங்களைக் கொள்வனவு செய்வதற்குத் தேவைப்படும் செயல்முறைகளே ஈட்டல் என வரைவிலக்கணப்படுத்தப்பட்டபோதும் உண்மையில் நூலகம் ஒன்றிற்கு கொள்வனவு, அன்பளிப்பு, பரிமாற்றம், அங்கத்துவம் போன்ற வழிமுறைகளுடாகத் தகவல் வளங்களைப் பெற்றுக் கொள்வதற்கு அவசியமான செயல்முறைகள் அனைத்தையும் குறிக்கும் பொதுப்பதமாகவே ஈட்டல் என்ற பதம் கருதப்படுகின்றது. தகவல் வள அபிவிருத்தி சிறப்பான முறையில் அமுல்படுத்தபட வேண்டுமாயின்; தகவல் வள ஈட்டலுக்கு நூலகத்தின்  பலதரப்பட்ட துணைப்பிரிவுகளின் ஒத்துழைப்பு மிக அவசியமாகும். அதே சமயம் புகழ் பெற்ற அல்லது இலாபம் தரக்கூடிய தகவல்களுக்கு மட்டும் முன்னுரிமை தரும் கொள்கையற்ற ஈட்டற் செயற்பாட்டை இணையம் கொண்டிருக்கிறது.
நூலகம் திறந்திருக்கும் நேரம் மற்றும் கடன் வழங்கும் கால எல்லை என்பவற்றுக்கு அமைவான மட்டுப்படுத்தப்பட்ட அணுகுகையை நூலகங்கள் கொண்டிருக்கின்றன. ஆனால் கம்பியில்லாக் கருவிகள் மூலமான அணுகுகை மூலம் வீடு வேலைத்தலம், பொது இடங்கள் என்று எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் அணுகுகை செய்யக்கூடிய வாய்ப்பை இணையத்தளங்கள் கொண்டிருக்கின்றன எனினும் நூலகத்தில் இணைய வசதியை ஏற்படுத்தலாம். ஆனால் இணையத்தில் நூலக வசதியை ஏற்படுத்த முடியாது என்பதையும் கருத்திற் கொள்ளுதல் அவசியமானது. நூலகத்தின் பொது ஈட்டற் கொள்கையில் அணுகுகைக்கு கட்டணம் இல்லை. விசேட தகவல்களுக்கு கட்டணம் அறவிடுந்தன்மை இணையத்தில் உண்டு.


பரந்த நோக்கில் நூலகத்துடன் ஒப்பிடுமிடத்து இணையத்தை நூலகத்திலுள்ள மிகப்பெரிய தகவல் தரவுத்தளமாகக் கொள்ளலாம். இணையம் என்பது மிகப் பெருமளவு தகவலை தன்னிடத்தே கொண்டிருக்கின்றதென்பதையோ அது காலத்துக்கேற்றவாறு இற்றைப்படுத்தப்படுகிறது என்பதையோ யாரும் மறுக்கமுடியாது. எனினும் நூலகம் போன்று இலகுவான தகவல் அணுகுகைக்கென தர்க்கரீதியில் ஒழுங்குபடுத்தப்பட்டதொன்றாக இணையம் இல்லை என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்வர். வலைத்தளம்; என்பது தொடர்பாடலுக்கான ஒரு வழிமுறையேயன்றி அது ஒரு நூலகம் அன்று. வலைத்தளங்களை ஒழுங்குபடுத்தப்படாத நூலகங்களுக்குச் சமமாகக் கொள்வதென்றாலும் கூட நூலகங்களுக்கென்றே உருவாக்கப்பட்ட தெளிவான வரையறுக்கப்பட்ட கொள்கைகளின் அடிப்படையில் வலைத்தளத் தகவல்களின் ஈட்டலைக் கொள்ளமுடியாது.
பெரும்பாலான எமது நூலகங்கள் இன்று வெறிச்சோடிக் கிடக்கின்றன. வாசிப்பற்ற சமூகத்தின் உருவாக்கத்திற்கு கடந்த முப்பது ஆண்டு காலப் போர் ஒரு பிரதான காரணமாகக் பேசப்படுகிறது. போர் காரணமா அல்லது தொழில்நோக்கத்தைப் பிரதான காரணமாகக் கொண்டு ஓடும் எமது மனப்பாங்கு காரணமா என்பது விவாதிக்கப்பட்டு தீர்வு காணப்படவேண்டியதொன்று.
இதற்கிடையில் இணையம் இருக்க நூலகம் எதற்கு? எமது ஆய்வை எந்தவொரு சிரமமுமின்றி இணையத்தினூடாகவே மேற்கொள்ளமுடியும் என்ற மனப்பாங்கு ஆய்வாளரிடையே ஆழமாக வோரோடுவது துல்லியமாகத் தெரிகிறது. சர்வதேச ரீதியில் நன்கு விருத்திசெய்யப்பட்ட ஒழுங்கமைப்புமுறைக்கு அமைவாக நூலக சாதனங்களை ஒழுங்குபடுத்தியும் கூட தேவைப்படும் தகவலைச் சரியான முறையில் அணுகுகை செய்வதற்கான தகவல் அறிதிறனை வளர்த்துக்கொள்ளாத எமது ஆய்வாளர்கள்   எந்தவித ஒழுங்கமைப்புமற்ற ஒரு வலைத்தளத்திலிருந்து வேண்டிய நேரத்தில் வேண்டிய தகவலை பெறக்கூடிய வாய்ப்பைக் கொண்டிருக்கின்றார்கள் என்பது முரண்நகைக்குரியது.

28-03-2012

No comments:

Post a Comment