எனது நோக்கில்.......
அறிவும் திறனும் இணைந்து தொழிற்படும் அற்புதமான ஒரு துறையாகக் கருதப்படுவது நூலக, தகவல் அறிவியல் துறை. உரு,வரி,வரைபு, அலை ஆகிய தகவல் வெளிப்பாட்டு வடிவங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட பதிவேடுகளின் உருவமைப்பில் அதிக கவனம்செலுத்தி அவற்றின் சேகரிப்பு,ஒழுங்கமைப்பு,சேமிப்பு, பகிர்வு, பராமரிப்புபோன்ற செய்முறைகள் ஊடாக வாசகனின் தகவல் தேவையைப் பூர்த்தி செய்கின்ற நூலகஅறிவியல் துறையும், இப்பதிவேடுகளின் உள்ளடக்கத்தில் மட்டும் அதிக கவனம் எடுத்து தகவல் உருவாக்கம், தகவல் பரவலாக்கம்,சேகரிப்பு, ஒழுங்கமைப்பு,மீள்பெறுகை, பொருள் விளக்கமளிப்பு, பயன்பாடு போன்ற செய்முறைகளினூடாக பயனரின் தகவல் தேவையைப் பூர்த்தி செய்கின்ற தகவல் அறிவியல் என்ற துறையும் இணைந்து உருவான இத்துறையானது தகவலின் பண்புகளும் நடத்தையும், தகவல் பாய்ச்சலை கட்டுப்படுத்தும் சக்திகள், தகவலிலிருந்து உச்ச அணுகுகையையும், பயன்பாட்டையும் பெறும்பொருட்டு தகவலைச் செய்முறைப்படுத்துவதற்கானவழிவகைகள்,தகவல் கையாள்கை மற்றும்பரவலாக்கம் போன்றவற்றில் நூலகங்கள்மற்றும் தகவல் நிலையங்கள் ஆகியவற்றின் பங்களிப்பு ஆகியவற்றைக் கூர்ந்து ஆராயும் ஒரு அறிவியலாக மட்டுமன்றிகணிதவியல்,தருக்கவியல், மொழியியல்,உளவியல், கணினித் தொழினுட்பம்;,நூலகவியல், தகவலியல்,முகாமைத்துவம் போன்ற துறைகளிலிருந்து பெறுவிக்கப்பட்டதாக அல்லது அவற்றுடன்தொடர்புடையதொன்றாகவும் உள்ள பெருமைக்குரியது.
யாழ்ப்பாணப் பிரதேசத்தில் நூலக அபிவிருத்தியை மையமாகக்கொண்டு இயங்கும்ஒரேயொரு அரசசார்பற்ற அமைப்பான'நூலக விழிப்புணர்வு நிறுவனம்' என்ற அமைப்பின் ஊடாக நடத்தப்பட்ட பொது நூலகர்கள், மற்றும் பாடசாலை நூலகர்களுக்கான கருத்தரங்குகள்,பயிற்சிப் பட்டறைகளில் இனங்காணப்பட்ட நூலகர்களின்தேவையும், கிராமம் தோறும் தனிநபர் நூலகங்களாகவோ, அமைப்பு சார்நூலகங்களாகவோ, கிராமிய நூலகங்களாகவோ இயங்கக் கூடிய வகையில் புதிய நூலக உருவாக்கத்தில் ஆலோசனை கோரி அணுகியவர்களின் தேவையும் இணைந்து உருவானதே இந்தவலைத்தளம்எனில் மிகையல்ல.
இந்த வலைத்தளத்தின் தேவையைத் திரும்பத்திரும்ப வலியுறுத்தி அதற்கான உந்துசக்தியைத் தந்த அனைவருக்கும் எனது நன்றிகள். வீட்டு நூலகம் முதற்கொண்டுசனசமூக நிலைய நூலகங்கள்,பாடசாலை நூலகங்கள் போன்ற கல்விநிறுவன நூலகங்கள், பொதுசன நூலகங்கள், சிறப்பு நூலகங்கள் அனைத்திற்கும் ஒரு அடிப்படையைத் தரவும், தாய்மொழி மூல கல்விமூலம் நூலகத்துறையைவளர்த்தெடுத்தல்,தமிழில் நூலகவியல் துறை சார்ந்த ஆய்வுகளை ஊக்குவித்தல் ஆகிய இரு இலக்குகளை முன்வைத்தும் இந்த வலைத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. அபிவிருத்தியின் அச்சாணி நூலகம் என்ற கருத்துநிலையையும் செயலுருப்பெற உதவுமெனில் அது நான் பிறந்த இந்த மண்ணுக்கும் நான் பேசும் மொழிக்கும்செலுத்துகின்ற நன்றிக்கடனாகும்.
அருளானந்தம் ஸ்ரீகாந்தலட்சுமி,
கல்விசார் நூலகர்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
13-09-2014
Sunday, September 14, 2014
நூல்கள்-----
• எண்ணங்களைச் சீர்செய்து கொள்வதற்கான கருவி.
• சிந்தனையைச் சரிபார்த்துக் கொள்வதற்கான களம்..
• வாழ்நாள் முழுவதும் கூட வரும் மறக்க முடியாத துணை.
• பற்றிப் பிடித்து ஏறுவதற்கு ஏற்ற கொழுகொம்பு
• கீழே விழுமுன் எச்சரித்துக் காப்பாற்றும் ஊன்றுகோல்.
• விழுந்துவிட்டாலோ தூக்கி நிறுத்தித் துணிவு தந்திடும் நல்ஆசான்.
• வழி தடுமாறும்போது இடித்துரைத்துத் திருத்தும் நல்ல நண்பன்.
நூல்கள்----
• வடிவம், எழுத்து இரண்டிலும் நெகிழ்வுத் தன்மை கொண்டதாக,
• சிறியதாக,
• பாரமற்றதாக,
• விரும்பிய இடத்துக்கு எடுத்துச் செல்லக் கூடியதாக,
• முக்கிய அம்சங்களை வெட்டிச் சேகரிக்கக் கூடியதாக,
• பல பிரதிகள் எடுக்கக்கூடியதாக,
• தேவை முடிந்ததும் தூக்கி வீசக் கூடியதாக இருக்கக் கூடிய ஒரேயொரு சாதனம்.
ஒவ்வொரு புத்தகமும் எம்முன்னே மக்களைப் பற்றியும், அவர்கள் ஆசாபாசங்கள் பற்றியும், அவர்கள் இதயம் பற்றியும், கருத்தோட்டங்கள் பற்றியும் அறிந்து கொள்ளத் திறந்து விடப்படும் சாளரங்கள்.
-மக்சிம்கோர்க்கி -
நூல் அழகுகள்
பத்து
சுருங்கச் சொல்லல்
விளங்கவைத்தல்
படிப்போர்க்கினிமை
நல்ல சொற்களை அமைத்தல்
இனிய ஓசையுடைமை
ஆழமுடைத்தாதல்
பொருள்களை முறையுடன் அமைத்தல்
உயர்ந்தோர் வழக்கத்துடன் மாறுபடாமை
சிறந்த பொருளுடைத்தாதல்
விளக்கமாய் உதாரணங்கள் கையாளுதல்
-நன்னூல்-
நூல் குற்றங்கள்
பத்து
கூறியது கூறல்
மாறுபட்டுக் கூறல்
குறைபடக் கூறல்
மிகைப்படக் கூறல்
பொருளில்லாமல் கூறல்
மயங்கக் கூறல்
இனிமையில்லாதன கூறல்
இழி சொற்களால்; புனைந்து கூறல்
ஆதாரமின்றித் தானே ஒரு பொருளைப் படைத்தும் கூறல்
எவ்வாறாயினும் படிப்போர் மனங் கொள்ளாதவாறு கூறல்
-நன்னூல்-
ஒரு புத்தகத்தை அழிப்பவன் ஒரு மனிதனைக் கொலை செய்வதற்குச் சமம். ஒரு மனிதனைக் கொல்பவன் ஒரு பகுத்தறிவுள்ள உயிரை, கடவுளின் மறு உருவைக் கொல்கின்றான். ஆனால் ஒரு நல்ல புத்தகத்தை அழிப்பவன் பகுத்தறிவை, கடவுளின் மறுஉருவை நம் கண்முன்னாலேயே கொல்கின்றான்.
-மில்ரன்-
சில புத்தகங்கள் சுவைக்கப்படவேண்டியவை. சில புத்தகங்கள் வெறுமனே விழுங்கப்படவேண்டியவை. சில புத்தகங்கள் சுவைத்துச் செரிமானம் செய்யப்பட வேண்டியவை.
-பிரான்சிஸ் பேகன்-
நூல்கள் தனிமையில் இருப்பவர்களுக்கு உற்ற நண்பர்கள். துக்கத்தைப் போக்கி மகிழ்வையும் சாந்தியையும் தருகின்றன. தடுமாற்றத்தைத் தெளிய வைத்து மன உறுதியைத் தருகின்றன. ஒருவர் தமது எதிர்காலத்தைத் தீர்மானிக்க வழிகாட்டியாகின்றன. ஒருவருடைய வாழ்வில் தன்னம்பிக்கையை விதைத்து மேம்பாடுகளை வளர்க்க உதவுகின்றன. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அறிஞர்கள், நல்ல மனிதர்கள் ஆகியோருடன் ஆத்மார்த்த நிலையில் சில மணிநேரம் வாழவைக்கின்றன.
-பேராசிரியர் நந்தி-
நூல் என்பது கல்வியறிவு தந்து, நடைமுறை நிலை தெரிவித்து கடமைகளைக் காட்டி, உரிமைகளைச் சேர்த்து பொருளாதாரத்தை வளர்த்து கலாசாரத்தைக் காக்கும் செயற்பண்பு கொண்டது.
-இந்திய நூலகவியல் அறிஞர் வே. தில்லை நாயகம்-
No comments:
Post a Comment