எனது நோக்கில்.......

அறிவும் திறனும் இணைந்து தொழிற்படும் அற்புதமான ஒரு துறையாகக் கருதப்படுவது நூலக, தகவல் அறிவியல் துறை. உரு,வரி,வரைபு, அலை ஆகிய தகவல் வெளிப்பாட்டு வடிவங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட பதிவேடுகளின் உருவமைப்பில் அதிக கவனம்செலுத்தி அவற்றின் சேகரிப்பு,ஒழுங்கமைப்பு,சேமிப்பு, பகிர்வு, பராமரிப்புபோன்ற செய்முறைகள் ஊடாக வாசகனின் தகவல் தேவையைப் பூர்த்தி செய்கின்ற நூலகஅறிவியல் துறையும், இப்பதிவேடுகளின் உள்ளடக்கத்தில் மட்டும் அதிக கவனம் எடுத்து தகவல் உருவாக்கம், தகவல் பரவலாக்கம்,சேகரிப்பு, ஒழுங்கமைப்பு,மீள்பெறுகை, பொருள் விளக்கமளிப்பு, பயன்பாடு போன்ற செய்முறைகளினூடாக பயனரின் தகவல் தேவையைப் பூர்த்தி செய்கின்ற தகவல் அறிவியல் என்ற துறையும் இணைந்து உருவான இத்துறையானது தகவலின் பண்புகளும் நடத்தையும், தகவல் பாய்ச்சலை கட்டுப்படுத்தும் சக்திகள், தகவலிலிருந்து உச்ச அணுகுகையையும், பயன்பாட்டையும் பெறும்பொருட்டு தகவலைச் செய்முறைப்படுத்துவதற்கானவழிவகைகள்,தகவல் கையாள்கை மற்றும்பரவலாக்கம் போன்றவற்றில் நூலகங்கள்மற்றும் தகவல் நிலையங்கள் ஆகியவற்றின் பங்களிப்பு ஆகியவற்றைக் கூர்ந்து ஆராயும் ஒரு அறிவியலாக மட்டுமன்றிகணிதவியல்,தருக்கவியல், மொழியியல்,உளவியல், கணினித் தொழினுட்பம்;,நூலகவியல், தகவலியல்,முகாமைத்துவம் போன்ற துறைகளிலிருந்து பெறுவிக்கப்பட்டதாக அல்லது அவற்றுடன்தொடர்புடையதொன்றாகவும் உள்ள பெருமைக்குரியது.

யாழ்ப்பாணப் பிரதேசத்தில் நூலக அபிவிருத்தியை மையமாகக்கொண்டு இயங்கும்ஒரேயொரு அரசசார்பற்ற அமைப்பான'நூலக விழிப்புணர்வு நிறுவனம்' என்ற அமைப்பின் ஊடாக நடத்தப்பட்ட பொது நூலகர்கள், மற்றும் பாடசாலை நூலகர்களுக்கான கருத்தரங்குகள்,பயிற்சிப் பட்டறைகளில் இனங்காணப்பட்ட நூலகர்களின்தேவையும், கிராமம் தோறும் தனிநபர் நூலகங்களாகவோ, அமைப்பு சார்நூலகங்களாகவோ, கிராமிய நூலகங்களாகவோ இயங்கக் கூடிய வகையில் புதிய நூலக உருவாக்கத்தில் ஆலோசனை கோரி அணுகியவர்களின் தேவையும் இணைந்து உருவானதே இந்தவலைத்தளம்எனில் மிகையல்ல.

இந்த வலைத்தளத்தின் தேவையைத் திரும்பத்திரும்ப வலியுறுத்தி அதற்கான உந்துசக்தியைத் தந்த அனைவருக்கும் எனது நன்றிகள். வீட்டு நூலகம் முதற்கொண்டுசனசமூக நிலைய நூலகங்கள்,பாடசாலை நூலகங்கள் போன்ற கல்விநிறுவன நூலகங்கள், பொதுசன நூலகங்கள், சிறப்பு நூலகங்கள் அனைத்திற்கும் ஒரு அடிப்படையைத் தரவும், தாய்மொழி மூல கல்விமூலம் நூலகத்துறையைவளர்த்தெடுத்தல்,தமிழில் நூலகவியல் துறை சார்ந்த ஆய்வுகளை ஊக்குவித்தல் ஆகிய இரு இலக்குகளை முன்வைத்தும் இந்த வலைத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. அபிவிருத்தியின் அச்சாணி நூலகம் என்ற கருத்துநிலையையும் செயலுருப்பெற உதவுமெனில் அது நான் பிறந்த இந்த மண்ணுக்கும் நான் பேசும் மொழிக்கும்செலுத்துகின்ற நன்றிக்கடனாகும்.


அருளானந்தம் ஸ்ரீகாந்தலட்சுமி,
கல்விசார் நூலகர்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

13-09-2014


Sunday, September 14, 2014

தூயி தசமப் பகுப்புத்திட்டம்


தூயி தசமப் பகுப்பாக்கத் திட்டம்: 
        பிரதேசரீதியான இலக்கியங்களுக்கு முன்னுரிமை கொடுக்கக்கூடிய  வகையில் 22ம் பதிப்பை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட புதிய மாற்றங்கள்


அறிமுகம்

சர்வதேச ரீதியில் புகழ்பெற்றதும் பெரும்பாலான நாடுகளால் தற்போதும் பின்பற்றப்பட்டு வருவதுமான தூயி தசமப்பகுப்புத் திட்டத்தின் 16ம் பதிப்புவரையில்  பிரதேசரீதியிலான நூல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்பது உண்மையாயினும் அதன் 18வது பதிப்பிலிருந்து இத்திட்டமானது பிரதேசரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த நூல்களுக்குத் தனியிடம் ஒதுக்கியிருக்கிறது என்பதை நாம் ஒன்றில் புரிந்து கொள்ளவில்லை அல்லது புரிந்துகொண்டபோதும் செயற்படுத்த முனையவில்லை என்றே கூறவேண்டும். இதனடிப்படையில் இந்த ஆய்வுக் கட்டுரையானது தூயி தசமப் பகுப்புத்திட்டம்;  22ம் பதிப்பை அடிப்படையாகக் கொண்ட  பரந்த பகுப்புத் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தும் அதேசமயம் பொருட்துறைகளுக்கான எண் கட்டுமானம் சார்ந்து நான்கு பிரதான மாற்றங்களை அறிமுகப்படுத்துகின்றது.

1.    பொதுத் துறை சார்ந்து நிறுவனங்கள், ஊடகவியல் ஆகிய துறைகளில் சீரமைவுத் தன்மை பேணப்படுகின்றது.
2.    சமயம் என்ற பொருட்துறையில் எமது பிரதேச நூலகங்களில் அதிகளவான நூல்களைக் கொண்டுள்ள இந்து சமய நூல்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.
3.    மொழி, இலக்கியம் ஆகிய பொருட்துறைகளில் தமிழ் மொழி நூல்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.
4.    இனக் குழுமம் என்ற வகையில்  தமிழர் என்ற இனக்குழுவுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.

பொதுத்துறை சார்ந்த மாற்றங்கள்

பொதுவாக பொருட்துறைகள் நாடு வாரியான ஒழுங்கமைப்பைப் பெறும் போது பிரதேச அட்டவணையைப் பயன்படுத்தியே எண் கட்டுமானம் மேற்கொள்ளப்படுவது இத்திட்டத்தின் பண்புகளில் ஒன்று. இதற்கு முரணாக நிறுவனங்கள் (060-069) ஊடகவியல்(070-079) ஆகிய இரு பொருட்துறைகளிலும் நாடு வாரியான ஒழுங்கமைப்புக்குப் பதில் மொழி அட்டவணையே பின்பற்றப்படுகின்றது. இதுகூட அமெரிக்க நிறுவனங்களுக்கும் ஊடகவியலுக்கும் முன்னுரிமை கொடுக்கும் முயற்சியின் ஒரு வெளிப்பாடே. எனவே பொருட்துறை ஒழுங்கமைப்பில் சரிசீரமைவுத் தன்மையைப் பேணும் வகையில் ஏனைய பொருட்துறைகளுக்குப் பின்பற்றப்படுவது போன்று இங்கும் பிரதேச அட்டவணையைப் பயன்படுத்தும் வகையில் எண்கள் மீளமைக்கப்பட்டுள்ளன.  எ-டு 069 என்ற வகுப்பெண் வழங்கப்பட்டிருக்கும் அரும்பொருளகவியல் துறையானது  061 என்ற வகுப்பெண்ணுக்கு மாற்றப்படும்போதுதான் நிறுவனங்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள 060 என்ற வகுப்பெண்ணிலிருந்து  பிரதேச அட்டவணையின் அடிப்படையில் நாடுகள் வாரியான நிறுவனங்களுக்கு வகுப்பெண்ணை ஒதுக்குவது சாத்தியப்படும்.
எ-டு
பொருட்துறைகள்                                                          வழங்கப்பட்ட எண்  
பொது நிறுவனமும் அரும்பொருளகவியலும்                 060              
வட அமெரிக்க நிறுவனங்கள்                                                  061          
பிரித்தானிய  நிறுவனங்கள்                                                     062          
மத்திய ஐரோப்பிய  நிறுவனங்கள்                                        063          
பிரெஞ்சு நிறுவனங்கள்                                                             064           
இத்தாலிய நிறுவனங்கள்                                                        065      
ஸ்பானிய  நிறுவனங்கள்                                                        066          
கிழக்கு ஐரோப்பிய நிறுவனங்கள்                                         067
ஏனைய நாடுகளின் நிறுவனங்கள்                                      068
அரும்பொருளகவியல்                                                             069

மேற்குறிப்பிட்ட அட்டவணையின்படி ஆசிய ஆபிரிக்க நாடுகளுக்குரிய நிறுவனங்களை பிரதேச அட்டவணையில் அந்தந்த நாடகளக்கு ஒதுக்கப்பட்டுள்ள எண்களை இணைப்பதனூடாக வகுப்பெண்ணை உருவாக்குமாறு அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய அமெரிக்க நாடகள் மட்டும் மொழி அட்டவணையை பயனபடுததி எண் கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டிருக்க ஏனையவற்றுக்கு பிரதேச அட்டவணை பயனபடுத்தப்பட்டிருப்பது நிறுவனங்கள் தொடர்பான வகுப்பெண்ணில் சீரமைவுத் தன்மையை குழப்புவது மட்டுமன்றி மிக நீண்ட வகுப்பெண்கள் உருவாக்கப்படுவதற்கும் வழிகோலுகின்றது. எடுத்துக்காட்டாக இலங்கை நிறுவனங்கள்  பத்திரிகைகள் என்ற பொருட்தலைப்புக்கு எண் கட்டுமானம் மேற்கொள்ளப்படும்போது அது பின்வருமாறு அமைகிறது.
06810 5493  யை

சமயம் சார்ந்த மாற்றங்கள்
எமது பிரதேச நூலகங்களில் அதிகமான இடத்தை நிரப்பிக் கொண்டிருப்பவை இந்து சமய நூல்களும் இலக்கிய நூல்களுமாகும். இதனைக் கருத்தில் கொண்டு இதுவரை ஏனைய சமயங்கள் என்ற பிரிவுக்குள் 294.5 என்ற வகுப்பெண்ணில் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்த இந்து சமய நூல்கள் அனைத்தும் 230 - 280 வரையான வகுப்பெண்ணுக்குள் ஒழுங்குபடுத்தும் வகையில் வசதி செய்து தரப்பட்டிருக்கிறது. வேதங்கள், ஆகமங்கள், உபநிடதங்கள், இதிகாசங்கள், புராணங்கள், போன்றவை புனித நூல்களாகக் கருதப்பட்டு அவை 220 வகுப்பெண்ணில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. பக்தி இலக்கியங்கள் யாவும்  ஓரிடத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. ஓரளவிற்கு கிறிஸ்தவம் சார்ந்த வகுப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு இந்து சமய உட்பிரிவுகளுக்கு எண்கள் வழங்கப்பட்டுள்ளதெனினும் புதிய மாற்றங்கள் பல அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. தத்தம் சமயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க விரும்புவோர்  இந்து சமயம் என்ற பொருட் துறை ஒழுங்கமைக்கப்பட்டுள்ள அதே விதத்தில் ஒழுங்குபடுத்தல் அவசியம்.
 
இலக்கியம் சார்ந்த மாற்றங்கள்

பொதுவாகவே இலக்கியங்கள் அவை படைக்கப்படும் மொழிகளின் அடிப்படையிலேயே அதற்குரிய வகுப்பெண்ணைப் பெறுகின்றது. அமெரிக்காவுக்கும் பிரித்தானியாவுக்கும் பொதுமொழி ஆங்கில மொழியே என்ற அம்சத்துக்கு முரணாகத் தூயி தசமப் பகுப்புத் திட்டம் அமெரிக்க சார்பு நிலைப்பட்டது என்பதைத் தெளிவாக வெளிக்காட்டும் வகையில் அமெரிக்க இலக்கியங்கள் ஆங்கில மொழியில் படைக்கப்பட்டபோதும் அவற்றுக்குரிய இடத்தில் ஒழுங்குபடுத்தாது அவற்றுக்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில் இலக்கியத்துக்கான அடிப்படை எண்ணில் (800) முதலாவது எண்ணை (810) ஒதுக்கியிருக்கிறது. அதே சமயம் ஆங்கில மொழியில் படைக்கப்பட்ட ஏனைய இலக்கியங்கள் அனைத்துக்கும் 820 ஒதுக்கப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட  ஆசிய இலக்கியங்கள் அனைத்துமே ஏனைய இலக்கியங்கள் என்ற வகையில் இலக்கிய வகுப்புக்கென ஒதுக்கப்பட்ட இறுதி எண்ணான 890 என்பதைப் பெறுகின்றது. இத்தகைய வகைப்பாடு பிரதேச மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற நூலகங்களுக்கு பின்வரும் சிரமங்களை ஏற்படுத்துவது தவிர்க்க முடியாததாகின்றது.

•    வாசகருக்குப் பரிச்சயமற்ற நூல்கள் முன்னுரிமை கொடுக்கப்பட்டு முதலாவதாக வைக்கப்பட்டிருக்க, அவர்களுக்குத் தேவைப்படும் முக்கியமான இலக்கியங்கள் இலகுவில் தேடியெடுக்க முடியாதளவிற்கு ஏனைய இலக்கியங்களுக்குள் புதையுண்டுள்ளன.      
எ-டு
            ஜேர்மானியக் கவிதைகள்    831
            தமிழ்க் கவிதைகள்        894.8111
•    வாசகரைப் பொறுத்து அவர்களுக்கு அதிகம்; பரிச்சயமற்ற நூல்கள் இலகுவில் எடுக்கக்கூடிய வகையில் சுருக்க எண்களையும் மிகத் தேவையான நூல்கள் நினைவில் பதிக்க முடியாதளவிற்கு மிக நீண்ட எண்களையும் கொண்டிருக்கின்றன.    
எ-டு
             ஆங்கிலச் சிறுகதைத் தொகுப்புகள்    823.0108
             தமிழ்ச் சிறுகதைத் தொகுப்புகள்    894.81130108
•    தேவையான இலக்கியங்கள் ஏனைய இலக்கியங்களுக்குள் வகைப்படுத்தப்படுவதன் காரணமாக மிக நீண்ட அடிப்படை எண்களைப் பெறுவதனால் வாசகர் இலகுவில் நினைவில் வைத்திருக்கக் கூடிய வகையில் சுருக்க எண்களைக் கருத்தில் கொண்டு உருவப் பிரிவுகள் தவிர்நத ஏனைய அம்சங்களை இணைக்கும் வாய்ப்பு இல்லாமல் போவதனால் தமக்குத் தேவைப்படும் இலக்கியங்களை ஒரே எண்ணில் வகைப்படுத்தப்பட்டிருக்கும் பெருந்தொகையான இலக்கியங்களுக்குள் தேடியெடுக்கவேண்டிய சிரமத்தை வாசகர் எதிர்நோக்குகின்றனர். எடுத்துக்காட்டாக 'தமிழில் உள்ள சரித்திர நாவல்களின் தொகுப்புகள்' என்ற நூலின் முழுமையான வகுப்பெண் 894.811308108 என்பதாகும். இத்தகைய ஒரு எண் நினைவில் வைத்திருக்கச் சிரமம் உள்ள அளவிற்கு விரிவான எண்ணாகையால் பொதுவாக உருவப் பிரிவு மட்டும் இணைந்த வகுப்பெண்ணான 894.8113 என்ற எண்ணே இந் நூலுக்குக் கொடுக்கப்பட்டு பெருந்தொகையான நாவல் இலக்கியங்களுடன் வகைப்படுத்தப்படும்போது இந்நூலைத் தேடியெடுப்பது என்பது மிகவும் சிரமம் வாய்ந்ததொன்றாக மாறுகின்றது.

தூயி தசமப்பகுப்புத் திட்டம் அமெரிக்க இலக்கியத்துக்கு அது ஏற்கனவே ஒதுக்கிய 810 என்ற எண்ணை அதன் 18ம் பதிப்பில் இருந்து பிரதேச முக்கியத்துவம் பெறும் மொழிகளுக்கு மாற்றி ஒதுக்கியதன் காரணமாக மேற்குறிப்பிட்ட குறைபாடுகளை ஓரளவுக்கு நிவர்த்தி செய்ய முனைந்திருக்கின்றது. இப்பகுப்புத்திட்டம் அறிமுகப்படுத்திய இந்த வசதிகளின் அடிப்படையில் இங்கு தமிழ் இலக்கியம் 810 என்ற வகுப்பெண்ணில் ஒழுங்குபடுத்தப்படுவதுடன் அதனுடன் தொடர்பான திராவிட இலக்கியங்கள் அனைத்தும் 819 என்ற எண்ணுக்குள் உள்ளடக்கப்படுகின்றன. இதனடிப்படையில் உள்ளுர் பிரதேச மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க விரும்புபவர்கள் அமெரிக்க இலக்கியத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள அடிப்படை எண்ணாண 810 என்பதைத் தமது மொழிகளுக்குப் பிரயோகிக்க முடியும் அவ்வாறு பின்பற்றும்போது அமெரிக்க இலக்கியங்களை ஆங்கில இலக்கியத்துக்குரிய எண்ணான 820 க்குள் உள்ளடக்கலாம்.

மொழி சார்ந்த மாற்றங்கள்
இலக்கியத்தைப் போன்றே மொழிக்குரிய எண் கட்டுமானமும் 491.811 என்ற வகுப்பிலிருந்து 410 என மாறுகின்றது. மொழியியலுக்கென ஒதுக்கப்பட்டிருந்த 410 என்ற வகுப்பெண் தூயி தசமத் திட்டத்தின் பரிந்துரையின் அடிப்படையில் 400 என்ற வகுப்பில் உள்ளடக்கப்பட்டிருக்கிறது.

துணை அட்டவணை 5

இலக்கியம், மொழி ஆகிய இரண்டு பிரதான வகுப்புகளுடனும் பிரிக்க முடியாதளவுக்கு இணைந்திருப்பது  மொழி அட்டவணை ஆகும். அதுமட்டுமன்றி அந்த மொழியைப் பேசுகின்ற இனக்குழுமங்களுக்கும் அதே எண்ணே பயன்படுத்தப்படுகின்றது. இதனடிப்படையில் இனக்குழும அட்டவணைக்கும், மொழி அட்டவணைக்கும் பெரிதாக எந்த வேறுபாடும் இல்லை. இதைக் கீழேயுள்ள எடுத்துக்காட்டு தெளிவுபடுத்துகின்றது.


                                                  அடிப்படை எண்            துணை அட்டவணை                  வகுப்பெண்
சீன மொழி                       400                 951(மொழி அட்டவணை)       495.1
சீன இலக்கியம்             800                   951    '                                              895.1
சீனர்                                  305.8                  951(இன அட்டவணை)      305.8951  

மேற்குறித்த எடுத்துக்காட்டில் சீன மொழி இலக்கியத்துக்கான -951 என்ற எண்ணே சீனர் என்ற இனக்குழுமத்துக்கான எண்ணாகத் துணை அட்டவணை 5இல் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனடிப்படையில் நோக்கின் தமிழ் இலக்கியம் மொழி ஆகிய இரு துறைகளும் முறையே 810, 410 என்ற எண்களைப் பெறும் போது தமிழர் என்ற இனக் குழுமத்துக்கான மிக நீண்ட எண்ணான -94811 தன்னிச்சையாகவே   -1 ஆக மாறுகிறது.


எண் கட்டுமானம்

தூயி தசமப்பகுப்புத் திட்டத்துக்குள் இரு வகையில் நுழையலாம்.ஜஊழஅயசழஅiஇ1990ஸ
1.    பகுப்புத் திட்டத்தின் அமைப்பு சார் படிமுறைகளுக்கூடாக நகர்தல்.
2.    தசமப் பகுப்புத் திட்டத்தின் சொல்லடைவுக்கூடாக நகர்தல்

அமைப்புசார் படிமுறைகளுக்கூடாக நகர்தல்

தசமப் பகுப்புத் திட்டத்துக்குள் நுழையும் மிகச் சிறந்த வழி இதுதான். இதற்குப் பரந்த அறிவும் அனுபவமும் அவசியமாகும். தூயி தசமப் பகுப்புத் திட்டம் 10 பிரதான வகுப்புகளையும் 100 பிரிவுகளையும் 1000 பகுதிகளையும் கொண்டிருப்பது ஏற்கனவே குறிப்பிடப்பட்டதொன்று. இந்த 1000 பகுதிகளிலும் 85 பகுதிகள் வெறுமையாக விடப்பட்டுள்ளன. மீதி 915 பகுதிகளையும் விரல் நுனியில் வைத்திருக்கும் வல்லமையை அனுபவமிக்க பகுப்பாளர் கொண்டிருப்பார் என்பதில் சந்தேகமில்லை. பகுதிகளை நினைவில் வைத்திருப்பதில் சிரமங்களை எதிர் கொள்ளும் பகுப்பாளருக்கு உதவும் வகையில் தொகுதி இரண்டின் ஆரம்பத்தில் முதலாம், இரண்டாம், மூன்றாம் சாராம்சங்களின் அட்டவணை தரப்பட்டிருக்கிறது. அது மட்டுமன்றி ஒவ்வொரு பிரதான வகுப்பிலும் ஆங்காங்கே பகுதிகளுக்குரிய அட்டவணை தரப்பட்டிருக்கிறது.
அனுபவம் வாய்ந்த பகுப்பாளர் தனது அனுபவங்களினூடாகக் குறிப்பிட்ட ஆவணத்தின் பிரதான வகுப்பெண்ணை அடையாளம் காணும் திறன் பெற்றவராக இருப்பது மட்டுமன்றிக் குறிப்பிட்ட ஆவணம் எந்தப் பிரிவைச் சார்ந்தது என்பதையோ அல்லது எந்தப் பகுதியைச் சார்ந்தது என்பதையோ இனங்காணத் தெரிந்திருப்பார்.  அமைப்பு சார் படிமுறைகளுக்கூடாக நகர்தல் என்பது தசமப் பகுப்புத் திட்டத்தின் பிரதான தொகுதிகளின் உதவியுடன் ஆவணத்தின் பொருட்துறையை இனங்காணும் முயற்சியைக் குறிக்கும். எடுத்துக்காட்டாக 'தொலைக்காட்சி' சம்பந்தப்பட்ட ஆவணம் ஒன்றை எடுத்துக் கொள்வோம். தூயி தசமப் பகுப்புத் திட்டத்தில் தொலைக்காட்சி என்ற பொருட்துறை கீழே குறித்துக் காட்டப்பட்டுள்ளவாறு ஒன்றுக்கு மேற்பட்ட பொருட்துறைகளுடன் இணைந்து வருகிறது.

தொலைக்காட்சி
 தொடர்புத் தொழினுட்பம்    384.85
 ஊடகவியல்            070.195
     சமூகவியல்            302.2345
     தொழினுட்பம்            621.388
     பொதுசன ஆற்றுகை        791.45
     சட்டம்                343.09946  

முதல் கட்டமாக  குறிப்பிட்ட ஆவணமானது பொதுசனத் தொடர்பு ஊடகங்களில் ஒன்றாகப் பேசப்படுகின்றதா, அல்லது தொலைக்காட்சித் தொழினுட்பம் தொடர்பான ஒன்றா, அதுவுமன்றித் தொலைக்காட்சிச் செய்நிரல்கள் பற்றியதா என்பது பரிசோதிக்கப்படல் வேண்டும். தொலைக்காட்சிச் செய்நிரல்கள் சம்பந்தப்பட்டதாயின் அனுபவம் வாய்ந்த பகுப்பாளர் குறிப்பிட்ட ஆவணமானது கலை என்ற பிரதான வகுப்புக்குரியது என்பதை இனங்காண்பார் என்பதுடன் தொடர்ந்தும் மேலே சென்று தசமப் பகுப்புத் திட்டத்தின் மூன்றாம் சாராம்சத்தில் பொதுசன ஆற்றுகை என்ற பகுதிக்குள் சேரும் என்பதையும் அறிந்திருப்பார். பொது சன ஆற்றுகையின் உப பிரிவில் தொலைக் காட்சிக்குரிய வகுப்பெண் 791.43 என்பதாகும். இதற்கும் அப்பால் சென்று குறிப்பிட்ட ஆவணமானது உசாத்துணை நூலா அல்லது தொலைக் காட்சியின் தத்துவம் பற்றியதா போன்ற அம்சங்கள் ஆராயப்படல் அவசியம். தொலைக்காட்சி தொடர்பான அகராதியாகக் குறிப்பிட்ட ஆவணம் இருப்பின் துணை அட்டவணையின் நியம உப பிரிவுகளில் அகராதிக்கென வழங்கப்பட்டுள்ள - 03 என்ற எண்ணை மேற் குறிப்பிட்ட பிரதான வகுப்பெண்ணுடன் இணைப்பதனூடாக 791.4303 என்ற முழுமையான வகுப்பெண்; கட்டியெழுப்பப்படுகின்றது. மேற்குறிப்பிட்ட படிமுறைகளின் மூலம் குறிப்பிட்ட ஆவணத்திற்கான வகுப்பெண் வழங்கும் பணி மிக விரைவாகவும் சுலபமாகவும் முற்றுப் பெற்றுவிடும்.

சார்பு அட்டவணைக்கூடாக நகர்தல்

தூயி தசமப் பகுப்புத் திட்டத்தின் தொகுதி 4 சார்பு அட்டவணையைக் (சுநடயவiஎந ஐனெநஒ) கொண்டது. கடந்த பதிப்புகளில் வழிகாட்டியுடன் இணைந்து ஒரு பகுதியாக வெளியிடப்பட்டது. ஆனால் 22ம் பதிப்பில் முழுத் தொகுதியுமே சார்பு அட்டவணைக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. சொற்களை வெறும் அகரவரிசையில் ஒழுங்குபடுத்தித் தரும் அகரவரிசை அட்டவணையாக இல்லாது பொருட்துறைகளை அறிவின் ஏனைய துறைகளுடன் (னுளைஉipடiநௌ) தொடர்புபடுத்தும் ஒன்றாக இது இருப்பதனால் இது சார்பு அட்டவணை எனப்படுகின்றது. பின்வரும் எடுத்துக் காட்டு மூலம் இதனைப் பார்க்கலாம்.

கட்டிடங்கள்                720
    பிரதேசத் திட்டமிடல்        711.6
    கட்டுமானம்            690
    பொருளியல்            333.338
    சக்திப் பொருளியல்        333.7962
    முதலீட்டுப் பொருளியல்    332.63243
    முகாமைத்துவம்        658.2
    பொது நிர்வாகம்        352.56

கட்டிடம் என்ற பொருட்துறை மற்றும் ஏழு துறைகளுடன் இணைந்து போகின்றது என்பதையே மேற்குறிப்பிட்ட எடுத்துக்காட்டு குறித்து நிற்கிறது. சார்பு அட்டவணையில் பொருட்துறைகள் அனைத்தும் அகரவரிசையில் ஒழுங்குபடுத்தப்பட்டிருப்பதுடன் ஒவ்வொரு பொருட்துறையுடனும் இணைந்து போகும் துறைகள் அப் பொருட்துறையின் கீழ் அகரவரிசையில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன. தூயி தசமப்பகுப்புத் திட்டத்திற்கு ஒரு சொல்லடைவாகத் தொழிற்படும் இது பிரதான பொருட்துறைகளை மட்டுமன்றித் தொகுதி 1இல் தரப்பட்டிருக்கும் துணை அட்டவணைகளிலுள்ள சொற்களையும் உள்ளடக்குகிறது.

வகுப்பெண் உருவாக்கம்

வகுப்பெண்ணை உருவாக்கும் செய்முறை இருவகைப்படும். பகுப்பாளர் தமது அனுபவத்தினூடாகப் பிரதான தொகுதியை நேரடியாக அணுகுவதன் மூலமோ அல்லது சார்பு அட்டவணைக்கூடாகவோ சென்று பிரதான தொகுதிகளில் பகுப்பாக்கவியலாளரால் ஏற்கனவே வடிவமைக்கப்பட்டுத் தயார்நிலையில் உள்ள வகுப்பெண்ணைக் (சுநயனலஅயனந ரெஅடிநசள) கண்டுபிடித்து அதனைப் பயன்படுத்தல் ஒரு வகை. சாதாரண பொருட்துறை ஒன்றுக்கு இது பொருந்தக் கூடியது . அத்துடன் பகுப்பாளரிடம் எந்தவொரு திறனையும் பெரிதாக இது கோராது. இந்த வகுப்பெண்கள் வெறும் மூன்று இலக்கத்துடன் முடிவடையும் சுருக்க எண்களாகவோ அன்றி அதிகமான இலக்கங்களைக் கொண்ட நீண்ட எண்களாகவோ கூட இருக்கலாம்.  எண்கட்டுமானத்துக்கான எந்தவொரு தேவையுமின்றிப் பிரதான தொகுதியில் ஏற்கனவே கொடுக்கப்பட்ட எண்களாகவே இவை இருக்கும். பின்வரும் எடுத்துக்காட்டானது 'கணினிமயமாக்கமும் வேலையின்மையும்' என்ற தலைப்பிலான ஆவணம் ஒன்றுக்குப் பகுப்பாக்கத்திட்டத்தில் வழங்கப்பட்டிருக்கும் தயார் நிலை எண்கள் பொருளாதாரம் என்ற பிரதான பொருட்துறையின் இரண்டாம் சாராம்சத்திலிருந்து எவ்வாறு நீண்டு செல்கிறது என்பதைக் காட்டுகிறது. அமைப்பு சார் படிமுறைளுக்கூடாக நகர விரும்பும் அனுபவம் வாய்ந்த பகுப்பாளர் பிரதான தொகுதியை நேரடியாகவே அணுகி இதனைப் பெறுவார்.

330    பொருளாதாரம்                  
331    உழைப்புப் பொருளாதாரம்          
331.1            உழைப்புச் சக்தியும் உழைப்புச் சந்தையும்
    331.13            கீழுழைப்பு
    331.137            வேலையின்மை
    331.13704        வேலையின்மையின் வகைகள்
    331.137042        தொழினுட்பம் சார் வேலையின்மை
  
சிக்கல் வாய்ந்த பொருட்துறைகளுக்குத் தயார்நிலை எண்கள் பகுப்புத் திட்டத்தில் இல்லை என்பதால் எண்களைக் கட்டியமைக்கும் செய்முறையைப் பகுப்பாளரே மேற்கொள்ள வேண்டிய அவசியம் உண்டு. இது எண் கட்டுமானத்துக்கூடான வகுப்பெண் உருவாக்கமாக அமையும் என்பதுடன் பகுப்பாளரிடம் அறிவையும் திறனையும் அதிகம் வேண்டிநிற்கும் செய்முறையாகவும் இது காணப்படும்.

எண் கட்டுமானம்

பொதுவாக தூயி தசமப் பகுப்புத் திட்டத்தில் பின்வரும் வழிமுறைகளில் எண் கட்டுமானம் மேற்கொள்ளப்படுகின்றது. அடிப்படை எண்ணுடன்

•    இன்னொரு பொருட்துறையை முழுமையாக இணைத்தல்
•    பகுதிகள் பிரிவுகளை இணைத்தல்
•    ஒரு பிரிவுக்குள்ளேயே ஒரு பிரிவுடன் இன்னொரு பிரிவை இணைத்தல்
•    துணை அட்டவணைகளிலிருந்து இணைத்தல்
•    சிறப்பு இணைப்பெண்களை இணைத்தல்

மேலே குறிப்பிட்டவற்றில் முதல் மூன்று அம்சங்களும் ஒன்றுக்கு மேற்பட்ட பொருட்துறைகளைத் தனக்குள் உள்ளடக்கியிருக்கும் ஆவணங்களுக்கான எண்கட்டுமானத்துடன் தொடர்புடையவையாகும். இறுதி இரு அம்சங்களும் உருவத்திலோ, உள்ளடக்கத்திலோ பொதுத் தன்மையைக் கொண்டிருக்கும் ஆவணங்களுக்கான எண்கட்டுமானத்துடன் தொடர்புடையவையாகும்.
குறிப்பிட்ட ஆவணமானது ஒன்றுக்கு மேற்பட்ட பொருட்துறைகளைத் தனக்குள் உள்ளடக்கியிருக்கும் சந்தர்ப்பங்களில்  பிரதான பொருட்துறை சார்ந்த எண்ணுடன் பகுப்புத் திட்டத்தின் வேறு பொருட்துறைகளிலிருந்தும் எண்களை எடுத்து எண் கட்டுமானம் மேற்கொள்ள வேண்டிய தேவை உண்டு. பிரதான வகுப்பு முழுவதையுமோ அல்லது பிரதான வகுப்பின் பகுதிகள் அல்லது பிரிவுகளையோ இவை எடுத்தாளலாம். இவற்றைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

பிரதான பொருட்துறையை முழுமையாக இணைத்தல்

பகுப்புத் திட்டம் முழுவதும் உள்ள 000- 999 வரையான எண்களிலிருந்து தேவையைப் பொறுத்து இணைக்கும் வழிமுறையை இது குறிக்கும். இம் முறையில் குறிப்பிட்ட தலைப்பானது ஒன்றுக்கு மேற்பட்ட பொருட்துறைகளைத் தனக்குள்; உள்ளடக்கியிருக்கும் சமயங்களில் ஆவணத்துக்கான அடிப்படை எண்ணை முதலில் தீர்மானித்த பின்னர் அதனுடன் தொடர்பான பொருட்துறை சார்ந்த எண்ணைப் பகுப்புத் திட்டத்தின் எந்தவொரு பிரிவிலிருந்தும் எடுத்தாள முடிகிறது. எடுத்துக் காட்டாக 'அறிவியல் நூலகங்கள்' என்ற தலைப்பில் அடிப்படை எண்ணாகக் கருதப்படுவது நூலகவியல் ஆகும். எனவே நூலகங்கள் எண்ற துறைக்குரிய எண்ணான 026 என்பதுடன் அறிவியல் என்ற பொருட் துறைக்கான 500 என்ற எண் இணைக்கப்படும் போது கிடைக்கும் முழுமையான வகுப்பெண் பின்வருமாறு அமையும். தசமத்துக்குப் பின்னால் வருகின்ற எண்கள் எப்போதும் பூச்சியத்தில் முடிவதில்லை என்பதை மனதில் கொள்ளவும்.

நூலகங்கள்    026
அறிவியல்     500
அறிவியல் நூலகங்கள்     026 10 500   =  026.5

'நூலகவியல் பாடத்திட்டம்' என்ற பொருட்துறையில் அடிப்படை எண் பாடத்திட்டமாகும். இதற்குரிய வகுப்பெண் 375 ஆகும். இதனுடன் நூலகவியல்
எண்ணான 020 ஐ இணைக்கும் போது கிடைக்கும் முழுமையான எண் 375.02 ஆக அமையும்.

மேலதிக எடுத்துக்காட்டுகள்


தலைப்பு                                                                                    பிரதான வகுப்பெண்    இணைப்பு 000-999    முழுமையான வகுப்பெண்
கையெழுத்துப் பிரதிகளுக்கான நூல்விபரப்பட்டியல்    016                 091                                    016.091
அறிவியல் நூல்களுக்கான நூல்விபரப்பட்டியல்              016                 500                                      016.5
கல்வித் துறையில் வேலைவாய்ப்புகள்                                 331.1241        370                                     331.124137
அறிவியல் நூலகங்கள்                                                                      026                 500                                      026.5
கணினியியல் பாடத்திட்டம்                                                           375                 004                                      375.004
சமயமும் அறிவியலும்                                                                    201.6              500                                      201.65
பெண் தொழிலாளரும் விளம்பரமும்                                        331.481          659.1                             331.4816591
 

பகுதிகள் பிரிவுகளிலிருந்து இணைத்தல்
இம்முறையில் நூலின் தலைப்புக்கான அடிப்படை எண்ணுடன் அது உள்ளடக்கும் இன்னொரு பொருட் துறையிலிருந்து பிரதான எண் முழுவதையும் இணைக்காது அதன் ஒரு சிறு பகுதியை இணைத்தலாகும்..

எ-டு
'புத்த தத்துவம்' என்ற நூலின் அடிப்படை எண்ணாக இருப்பது கீழைத்தேசத் தத்துவம் என்ற பொருட் துறைக்கான எண்ணான 181 ஆகும். இதனுடன் புத்தசமயத்துக்கான எண்ணான 294.3 என்பதிலிருந்து சமயம் என்ற பொருட் துறையைக் குறிக்கும் 2 ஏனைய சமயங்கள் என்ற பொருட்துறையைக் குறிக்கும் 9 இரண்டையும் விலத்திவிட்டு புத்த சமயத்தைக் குறிக்கும் 43 எண்ணை மட்டும் எடுத்துப் பிரதான எண்ணுடன் இணைத்துப் பெறப்படும் 181.43 என்ற வகுப்பெண்ணே புத்த தத்துவத்துக்கான வகுப்பெண்ணாக அமைகிறது.
'விவசாயத் தொழிலாளருக்கான சம்பளம்;' என்ற பொருட் துறைக்கான எண் கட்டுமானம் எப்படி அமைகின்றது எனப் பார்க்கலாம். இங்கு அடிப்படை எண்ணாக இருப்பது கூலித் தொழிலாளர். இதற்குரிய வகுப்பெண் 331.2 என்பதாகும். இதனுடன் விவசாயம் என்ற பொருட் துறைக்கான வகுப்பெண்ணில்(630) தொழினுட்பத்தைக் குறிக்கும் 6 என்ற எண்ணை விலத்தி 30 என்பதை மட்டும் இணைக்கும் போது பெறப்படும் எண்ணான 331.23 என்பதே விவசாயத் தொழிலாளருக்கான சம்பளம் என்ற தலைப்புக்குரிய எண்ணாகும்.

பிரிவிலிருந்து பிரிவுக்கு இணைத்தல்

குறிப்பிட்ட பிரதான வகுப்பில் ஒரு பிரிவுக்குள்ளிருந்தே இன்னொரு பிரிவுடன் இணைத்தலை இது குறிக்கும். எ-டு
'பொதுநூலகங்களில் நூல் தெரிவு' என்ற ஆவணத்தின்; அடிப்படை எண்  025.218 என்பதாகும் இதனுடன் பொது நூலகங்கள் என்ற பொருட்துறைக்கான எண் நூலகவியல் என்ற பொருட்துறைக்குள் இருந்தே எடுக்கப்படல் வேண்டும். அதற்குரிய எண்ணான 027.4 என்பதில் நூலகத்துக்குரிய அடிப்படை எண்ணான 02 என்பதை விலத்தி மீதி எண்ணை இணைப்பதனூடாக மேற்குறிப்பிட்ட நூலுக்கான முழுமையான வகுப்பெண்ணைப் பெறலாம்.
'தொழிற்சங்கங்களில் பெண்கள்' என்ற ஆவணத்தின் அடிப்படை எண் பெண் தொழிலாளர் என்ற பொருட்துறைக்கான 331.47 என்பதாகும். இதே பிரிவிலேயே தொழிற்சங்கங்கள் என்ற பொருட்துறைக்குரிய எண்ணான 331.88 என்பதில் இறுதி எண்ணான 8 என்பதை இணைப்பதனூடாக மேற்குறிப்பிட்ட ஆவணத்துக்கான முழுமையான வகுப்பெண்ணான 331.478 என்ற வகுப்பெண் பெறப்படுகின்றது.

துணை அட்டவணைகளிலிருந்து இணைத்தல்

தொகுதி ஒன்றிலுள்ள துணை அட்டவணைகளைப் பிரதான வகுப்பெண்ணுடன் இணைப்பதனூடாக எண் கட்டுமானம் மேற்கொள்ளப்படல். தூயி தசமப் பகுப்புத் திட்டத்தின் 22ம் பதிப்பின் படி தொகுதி ஒன்று ஆறு அட்டவணைகளைக் கொண்டுள்ளது. அவை பின்வருமாறு:
அட்டவணை     1  நியம உப பிரிவுகள்
அட்டவணை  2  பிரதேச அட்டவணை
அட்டவணை     3  இலக்கியங்களுக்கான உருவப்பிரிவுகள்
அட்டவணை    4  மொழியின் உட்பிரிவுகள்
அட்டவணை     5  இனங்களுக்கான அட்டவணை
அட்டவணை    6  மொழிகளுக்கான அட்டவணை

21ம் பதிப்பு வரை அமுலில் இருந்த நபர்களுக்கான துணை அட்டவணை 7 22ம் பதிப்பில் நீக்கப்பட்டு அவை நியம உப பிரிவின் -08 இல் இணைக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. [Dewey,2003]

சிறப்பு இணைப்பெண்களை இணைத்தல்

குறிப்பிட்ட சில பொருட்துறைகளுக்கெனச் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட இவ்வெண்கள்  நேரடியாகவோ அல்லது நியம உப பிரிவுகளுக்கூடாகவோ பிரதான வகுப்பெண்ணுடன் இணைக்கப்படுகிறது. நியம உப பிரிவிலுள்ள -4 என்ற துணை சிறப்புப் பொருட்துறைகளுக்கென ஒதுக்கப்பட்டிருக்கும் ஒன்றாகும். பிரதான பொருட்துறைகளில் இதற்குரிய அறிவுறுத்தல் வழங்கப்படும் இடங்களில் மட்டுமே இதனைப் பயன்படுத்தலாம் என்பதுடன் பகுப்புத் திட்டத்தின் பொருட்துறைகள் சிலவற்றில் இவ்வெண்ணும் இதன் உப பிரிவுகளும் தனித்துவமாக அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன. இச் சிறப்பு இணைப்பெண்களை இணைப்பதனூடாக எண் கட்டுமானம் எவ்வாறு மேற்கொள்ளப்படலாம் என்பது இப் பகுப்புத் திட்டத்தில் போதுமானளவு விளக்கப்பட்டுள்ளது.



குறிப்புகளுக்கான நூல் விபரப் பட்டியல்


1)      Camaromi (John.P) and Satiya (M.P). Exercises in the 20th edition of Dewey decimal Classification. New Delhi: Sterling publishers, 1994.
2)      Dewey (Melvil) Dewey Decimal Classification.20th edition. In four volumes. New York: OCLC, 1989.
3)      Dewey (Melvil) Dewey Decimal Classification.22nd edition. In four volumes. New York: OCLC, 2003.
4)      Fosket (A.C) Subject approach to information, 3rd ed. London: Clive, 1977.
5)      Harrods, (L. M). Harrods’ Librarians glossary and reference book. Compiled by Ray Prytherch, 6th ed..- London: Gower, 1987.
6)      Krishan Kumar. Library classification. New Delhi: vikas publishing house, 1979.
.



No comments:

Post a Comment